Saturday, July 16, 2022

N.017 - திருஞான சம்பந்தர் துதி - மண்ணுலகு வாழ

2011-05-02

N.017 - திருஞான சம்பந்தர் துதி - சம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - 2011

----------------

(வெண்பா)

(11 பாடல்கள் - எல்லாம் ஒரே ஈற்றடி)


1)

மண்ணுலகு வாழ மலர்வாய் திறந்தழுது

வெண்ணிலவு சூடியும் வெற்பரையன் - பெண்ணும்

புகட்டியமெய்ஞ் ஞானமாம் போனகம் உண்ட

புகலியர்கோன் பொற்றாள் புகல்.


* அம்மையப்பரால் ஞானப்பால் உண்பிக்கப்பெற்றதைச் சுட்டியது.

வெற்பு-அரையன் பெண் - இமவான்மகள் - பார்வதி; (வெற்பு - மலை); (அரையன் - அரசன்);

புகட்டுதல் - ஊட்டுதல்;

ஞானமாம் போனகம் - ஞானப்பால்; (போனகம் - உணவு); (பெரிய புராணம்; "பொங்கு கொங்கையிற் கறந்த மெய்ஞ்ஞானமாம் போனகம் பொற்குன்ற மங்கை செங்கையால் ஊட்ட உண்டருளிய மதலையார்")

புகலியர்கோன் பொற்றாள் புகல் - 1. ஞானசம்பந்தரது பொன்னடி எம் துணை; 2. ஞானசம்பந்தரது பொன்னடியைப் போற்றிச் சொல்; (புகலியர்கோன் - திருஞான சம்பந்தர்; புகலி - சீகாழி); (பொற்றாள் - பொன்னடி); (புகல் - சரண்; துணை); (புகல்தல் - சொல்லுதல்);


2)

பாங்குறக் கையிரண்டால் ஒத்தறுத்துப் பாடும்போ

தாங்கையன் இன்னருளால் அஞ்செழுத்துத் - தாங்கித்

தகதகக்கும் தாளமொன்று தம்கையில் பெற்ற

புகலியர்கோன் பொற்றாள் புகல்.


பதம் பிரித்து:

பாங்கு-உறக் கை-இரண்டால் ஒத்தறுத்துப் பாடும்போது

அங்கு ஐயன் இன்-அருளால் அஞ்செழுத்துத் - தாங்கித்

தகதகக்கும் தாளம்-ஒன்று தம் கையில் பெற்ற

புகலியர்கோன் பொற்றாள் புகல்.


* திருக்கோலக்காவில் பொற்றாளம் பெற்றதைச் சுட்டியது.

பாங்கு - அழகு; தகுதி;

ஒத்தறுத்தல் - தாளவரையறை செய்தல்;

தாளம் - கைத்தாளக்கருவி;


3)

இறையும் எமபயம் இல்லை வினையும்

பறையும் இரவும் பகலும் - இறைவன்

புகழ்நாமம் போற்றும் அகத்தினர்க் கென்ற

புகலியர்கோன் பொற்றாள் புகல்.


* பஞ்சாக்கரப் பதிகத்தைச் சுட்டியது.

இறையும் - சிறிதும்;

பறைதல் - அழிதல்;

அகத்தினர் - மனத்தினர்;

(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "வந்த கூற்று அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே");

(சம்பந்தர் தேவாரம் - 3.22.4 - "நல்லவர் தீயர் எனாது நச்சினர் செல்லல் கெடச் சிவமுத்தி காட்டுவ ... ... அஞ்செழுத்துமே");


4)

மழைமிடறா மங்கையை வாடமயல் செய்வ

தழகா அருளென்று கொல்லி - மழவன்

மகளின்நோய் தீர்தமிழ் மாலை உரைத்த

புகலியர்கோன் பொற்றாள் புகல்.


பதம் பிரித்து:

"மழை-மிடறா! மங்கையை வாட மயல் செய்வது

அழகா? அருள்!" என்று கொல்லி மழவன்

மகளின் நோய் தீர் தமிழ்மாலை உரைத்த

புகலியர்கோன் பொற்றாள் புகல்.


* திருப்பாச்சிலாச்சிராமத்தில் கொல்லி-மழவன் மகளின் முயலகன்-நோயைத் தீர்த்ததைச் சுட்டியது.

மழைமிடறா - நீலகண்டனே; (மழை - கருமை; மேகம்); (மிடறு - கழுத்து);

மயல் - மயக்கம்;

(சம்பந்தர் தேவாரம் - 1.44.1 - "மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே");


5)

வாள்விழிமா தோர்பால் மகிழ்எந்தை மாதேவன்

தாள்பணியும் அன்பர்க்குக் கோள்களொடு - நாள்கள்

மிகநல்ல என்றுதமிழ் வேதம் மொழிந்த

புகலியர்கோன் பொற்றாள் புகல்.


* திருமறைக்காட்டில் கோளறுபதிகம் பாடியருளியதைச் சுட்டியது.

வாள்விழி மாது ஓர்பால் மகிழ் எந்தை - ஒளி திகழும் கண்களையுடைய உமையை ஒரு பாகமாக விரும்பிய எம் தந்தை; (வாள் - ஒளி);

(சம்பந்தர் தேவாரம் - 2.85.1 - "ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே);


6)

தீயை அடியார் திருமடத்தில் இட்டஅத்

தீயரொடு தென்னாட்டைப் பீடித்த - மாயை

அகலப் பதிகம் அருளிப் புரந்த

புகலியர்கோன் பொற்றாள் புகல்.


* மதுரையில் சமணர்களை வாதில் வென்றதைச் சுட்டியது.

மாயை - வஞ்சகம்; பொய்த்தோற்றம்;

பீடித்தல் - துன்புறுத்துதல்;

அகல்தல் - நீங்குதல்;

புரந்த - காத்த; (புரத்தல் - காத்தல்);

(சம்பந்தர் தேவாரம் - 3.51.1 - "பொய்யராம் அமணர் கொளுவும் சுடர் பையவே சென்று பாண்டியற்கு ஆகவே");

(சம்பந்தர் தேவாரம் - 3.54.1 - "வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்");


7)

பூவையுயிர் பெற்றுப் பொடியினின்று மீண்டெழப்

பாவையொரு பங்கனைப் பண்டெயில்கள் - வேவ

நகைசெய்த நம்பனை நற்றமிழால் போற்று

புகலியர்கோன் பொற்றாள் புகல்.


* மயிலாப்பூரில் குடத்திலிருந்த அஸ்தியிலிருந்து பூம்பாவையை எழச்செய்ததைச் சுட்டியது.

பூவை - பெண்; இங்கே பூம்பாவை;

பொடியினின்று - சாம்பலிலிருந்து; (பொடி - சாம்பல்; இங்கே, அஸ்தி);

பண்டு - முற்காலம்;

எயில் - கோட்டை;

நகைசெய்த - சிரித்த;

நம்பன் - சிவன்;

(சம்பந்தர் தேவாரம் - 2.47.1 - "மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்");


8)

தகவின்றி வெற்பு தனையிடந்த பத்து

முகத்தன்தன் தோள்வலியை முன்பு - நகத்தால்

துகள்செய்த தூமதி சூடி மகனார்

புகலியர்கோன் பொற்றாள் புகல்.


* கயிலையைப் பெயர்க்க முயன்ற இராவணனைச் சிவபெருமான் தன் கால்விரல் நுனியால் நசுக்கியதைச் சுட்டியது.


தகவின்றி வெற்புதனைடந்த - அறிவின்றிக் கயிலைமலையைப் பெயர்த்த; (தகவு - தகுதி; பொருத்தம்; அறிவு); (வெற்பு - மலை); ( இடத்தல் - பெயர்த்தல்);

பத்துமுகத்தன் - பத்துத் தலைகள் உடைய இராவணன்;

தோள்வலி - புஜபலம்;

நகத்தால் துகள்செய்த - விரல்நகத்தால் பொடிசெய்த (அழித்த);

தூமதிசூடி மகனார் - தூய வெண்திங்களைச் சூடும் சிவபெருமானுக்குத் திருமகனாரான ஞானசம்பந்தர்;

(சம்பந்தர் தேவாரம் - 3.92.8 - "முந்தி மா-விலங்கல் அன்றெடுத்தவன் முடிகள்தோள் நெரிதரவே உந்தி மா-மலரடி ஒருவிரல் உகிர்நுதியால் அடர்த்தார்" - ஒரு விரலின் நகத்தின் நுனியால் அடர்த்தார்);


9)

அரியும் அயனும் அடிமுடி காணா

எரியின் உருவன் கரியின் - உரியன்

பகவன் கழலைப் பரவு மகனார்

புகலியர்கோன் பொற்றாள் புகல்.


எரி - ஜோதி;

கரி - யானை;

உரி - தோல்;

பகவன் - பகவான்; சிவன்;

பரவுதல் - புகழ்தல்; துதித்தல்; பாடுதல்;


10)

பரசமயப் புல்நீக்கிப் பைந்தமிழ்நீர் பாய்ச்சித்

தரையினில் சைவம் தழைக்க - அரவம்

திகழ்முடியன் சீர்பாடித் தேசமெங்கும் சென்ற

புகலியர்கோன் பொற்றாள் புகல்.


பரசமயம் - புறமதம்;

புல் - திரணம் (grass); இழிவு; அற்பம்;

தரை - உலகம்;

அரவம் - பாம்பு; ஒலி; (இரைக்கும் பாம்பு, கங்கை அலை ஓசை);

சீர் - புகழ்;


11)

தேசன் திருக்கயிலை வாசன் மலைமங்கை

நேசன் வினைநாசன் நெற்றிக்கண் - ஈசன்

புகழைத் தமிழ்பாடிப் போற்றிப் பணிந்த

புகலியர்கோன் பொற்றாள் புகல்.


தேசன் - ஒளியுருவினன்; (தேசு - ஒளி);

திருக்கயிலை வாசன் - கயிலைமலையில் வீற்றிருப்பவன்;

மலைமங்கை நேசன் - உமை மணாளன்;

வினைநாசன் - நம் வினைகளை அழிப்பவன்;

நெற்றிக்கண் ஈசன் - முக்கண்ணுடைய ஈசன்;

புகழைத் தமிழ்பாடிப் போற்றிப் பணிந்த - அப்பெருமானது புகழைத் தமிழ்ப்பாமாலைகள் (தேவாரம்) பாடிப் போற்றி வணங்கிய;

புகலியர்கோன் பொற்றாள் புகல் - 1. திருஞானசம்பந்தரது பொன்னடி எம் துணை; 2. திருஞானசம்பந்தரது பொன்னடியைப் போற்றிச் சொல்;


வி. சுப்பிரமணியன்

----------- -----------

No comments:

Post a Comment