Saturday, July 9, 2022

S.129 - சிவன் - சோலை - சிலேடை

2011-03-18

S.129 - சிவன் - சோலை - சிலேடை

----------------

பைங்கிளி சேருமிடம் வான்மதி தீண்டுமுடி

அங்கயல் ஓடுமோர் ஆறிருக்கும் - தங்கநிழல்

கொண்டிருக்கும் கூவிளம் கொன்றை திகழ்ந்திருக்கும்

வண்டறை சோலையரன் மாண்பு.


சொற்பொருள்:

பைங்கிளி - 1. பச்சைக்கிளி; / 2. அழகிய இளம்பெண்;

வான்மதி - வான் மதி; வால் மதி;

வான் - ஆகாயம்; அழகு;

வால் - வெண்மை; தூய்மை;

இலக்கணக் குறிப்பு: "ல்+" = "ன்ம" என்று புணர்ச்சியில் மாறும்;

முடி - 1. உச்சி; / 2. தலை;

அங்கயல் - 1. அம் கயல்; / 2. அங்கு அயல்;

அம் - அழகு;

அயல் - அருகு;

தங்கநிழல் - 1. தங்குவதற்கு நிழல் (சாயை; Shade); / 2. பொன் போன்ற ஒளி; (நிழல் - ஒளி);

கூவிளம் - வில்வம்;

மாண்பு - பெருமை;


சோலை:

பைங்கிளி சேரும் இடம் - பச்சைக்கிளிகள் கூடும் இடம்;

வான்-மதி தீண்டும் முடி - வானத்துச் சந்திரனை அதன் உச்சி தொடும்;

அம் கயல் ஓடும் ஓர் ஆறு இருக்கும் - அழகிய கயல் மீன்கள் ஓடும் நதி இருக்கும்;

தங்க நிழல் கொண்டிருக்கும் - (மக்களும் விலங்குகளும்) தங்கி இளைப்பாற நிழல் இருக்கும்;

கூவிளம் கொன்றை திகழ்ந்திருக்கும் - வில்வம், கொன்றை போன்ற மரங்கள் இருக்கும்;

வண்டு அறை சோலை மாண்பு - வண்டுகள் ரீங்காரம் செய்யும் சோலையின் பெருமை (/அழகு);


சிவன்:

பைங்கிளி சேரும் இடம் - அழகிய உமாதேவி இடப்பக்கம் பாகமாக இருப்பாள்;

வால்-மதி தீண்டும் முடி - வெண்திங்கள் தலைமேல் இருக்கும்; ("வான் மதி = அழகிய திங்கள்" என்றும் பொருள்கொள்ளலாம்);

அங்கு அயல் ஓடும் ஓர் ஆறு இருக்கும் - அங்கு அந்தச் சந்திரன் அருகே கங்கையும் ஓடும்;

தங்கநிழல் கொண்டிருக்கும் - பொன்னொளி திகழும்; (பொற்சடை); (சம்பந்தர் தேவாரம் - 1.86.3 - "சூடும் இளந்திங்கட் சுடர்பொற்சடை தாழ"; சுடர்-பொற்சடை - ஒளிவிடுகின்ற பொன் போன்ற திருச்சடை);

கூவிளம் கொன்றை திகழ்ந்திருக்கும் - வில்வ இலையும், கொன்றை மலரும் திருமுடிமேல் இருக்கும்;

அரன் மாண்பு - ஹரனது பெருமை (/அழகு);


வி. சுப்பிரமணியன்

----------- -----------

No comments:

Post a Comment