Saturday, July 16, 2022

T.148 - காழி - இக்குச் சாறென

2011-05-29

T.148 - காழி - இக்குச் சாறென

-----------------

(வண்ணவிருத்தம்;

தத்தத் தானன தானன தானன

தத்தத் தானன தானன தானன

தத்தத் தானன தானன தானன .. தனதான)

(அக்குப் பீளைமு ளாவிளை - திருப்புகழ் - சிதம்பரம்)


இக்குச் சாறென ஆரமு தேயென

.. .. இட்டத் தோடுச தாமனை வாழ்வெனும்

.. .. எட்டிச் சாறதில் வீழ்மட மேமலி .. அடியேனும்

.. இக்குப் பாயம்வி ழாமுனம் ஓவென

.. .. இச்சித் தார்கள ழாமுன(ம்) மாசுணம்

.. .. எற்புத் தாரணி வாயுனை நாடிட .. அருளாயே

பொக்கத் தார்புரி பூசனை ஆயின

.. .. நக்குக் காணிறை வாஅடி யேநினை

.. .. பொற்புற் றாரிடர் ஆழியில் ஏறிடு .. புணையானாய்

.. பொய்ப்பற் றேதுமில் மாணிதன் ஆருயிர்

.. .. பற்றப் பாலடை வானுதை சேவக

.. .. புற்றுக் கோளர வோடிள வான்மதி .. புனைவோனே

பக்கத் தாயிழை சேர்திரு மேனிய

.. .. பற்றற் றார்பணி பூதிய சேவடி

.. .. பற்றித் தேவர்கள் காவென மூவெயில் .. எரியீசா

.. பத்திச் சீரிலி தேர்விட வானுயர்

.. .. வெற்பைத் தோள்கொடு பேர்தின(ம்) மூடன

.. .. பத்துச் சீர்மணி ஆர்முடி நூறிட .. நெரிபாதா

நக்கக் கோலம தாய்மட வாரிடு

.. .. பிச்சைக் கேயுழல் வீறுடை யாய்அரு

.. .. நட்டத் தாயிடு காடிட மாகிய .. திருவாளா

.. நக்கித் தேனுண மாமல ரார்பொழில்

.. .. நச்சிச் சேரளி பாடிடு காழியில்

.. .. நற்பொற் றாளடி யார்தொழ மேவிய .. பெருமானே.


பதம் பிரித்து:

இக்குச்-சாறு என, ஆரமுதே என,

.. .. இட்டத்தோடு சதா மனை-வாழ்வு எனும்

.. .. எட்டிச்-சாறு-அதில் வீழ் மடமே மலி .. அடியேனும்,

.. இக்-குப்பாயம் விழாமுனம், ""வென

.. .. இச்சித்தார்கள் அழாமுனம், மாசுணம்

.. .. எற்புத்-தார் அணிவாய், உனை நாடிட .. அருளாயே;

பொக்கத்தார் புரி- பூசனை ஆயின

.. .. நக்குக் காண்-இறைவா; அடியே நினை

.. .. பொற்பு-உற்றார் இடர்-ஆழியில் ஏறிடு .. புணை ஆனாய்;

.. பொய்ப்பற்று ஏதும் இல் மாணிதன் ஆருயிர்

.. .. பற்றப் பால் அடைவான் உதை- சேவக;

.. .. புற்றுக் கோளரவோடு இள-வான்மதி .. புனைவோனே;

பக்கத்து ஆயிழை சேர் திருமேனிய;

.. .. பற்றற்றார் பணி பூதிய; சேவடி

.. .. பற்றித் தேவர்கள் "கா"வென மூவெயில் .. எரி-ஈசா;

.. பத்திச்-சீரிலி தேர்விட வான் உயர்

.. .. வெற்பைத் தோள்கொடு பேர்-தின(ம்), மூடன

.. .. பத்துச் சீர்-மணி ஆர் முடி நூறிட .. நெரி-பாதா;

நக்கக்-கோலமதாய் மடவார் இடு

.. .. பிச்சைக்கே உழல் வீறு-உடையாய்; அரு

.. .. நட்டத்தாய்; இடுகாடு இடம் ஆகிய .. திருவாளா;

.. நக்கித் தேன் உண மாமலர் ஆர் பொழில்

.. .. நச்சிச் சேர் அளி பாடிடு காழியில்,

.. .. நற்பொற்றாள் அடியார் தொழ மேவிய .. பெருமானே.


இக்குச்-சாறு என, ஆரமுதே என, - இனிக்கும் கருப்பஞ்சாறு என்றும், அரிய அமுதம் என்றும் எண்ணி; (இக்கு - கரும்பு);

இட்டத்தோடு சதா மனை-வாழ்வு எனும் எட்டிச்-சாறு-அதில் வீழ் மடமே மலி அடியேனும் - விருப்பத்தோடு எப்பொழுதும் மனைவாழ்க்கை என்ற (கசக்கின்ற) எட்டிச்சாற்றில் போய் விழுகின்ற அறியாமையே மிகும் நானும்; (எட்டி - எட்டிக்காய்); (மடம் - அறியாமை); (மலிதல் - மிகுதல்);

இக்-குப்பாயம் விழாமுனம், ""வென இச்சித்தார்கள் அழாமுனம் - சட்டை போன்ற இவ்வுடல் விழுந்துவிடுவதன்முன்னே, குடும்பத்தினர் எல்லாம் "" என்று அழுவதன்முன்னே; (குப்பாயம் - சட்டை; உடல்); (திருவாசகம் - ஆசைப்பத்து - 8.25.2 - "தோல்போர்த்த குப்பாயம் புக்கிருக்ககில்லேன்"); (இச்சித்தார்கள் - விரும்பியவர்கள்);

மாசுணம் எற்புத்-தார் அணிவாய், உனை நாடிட அருளாயே - பாம்பையும் எலும்பால் ஆன மாலையையும் அணிபவனே, உன்னை விரும்பி அடைய அருள்புரிவாயாக; (மாசுணம் - பாம்பு); (எற்புத்தார் - என்பு+தார் - எலும்பால் ஆன மாலை);

பொக்கத்தார் புரி- பூசனை ஆயின நக்குக் காண்-இறைவா - பொய்யாகச் செய்கின்ற பூசனையைக் கண்டு சிரிக்கும் இறைவனே; (போலிப் பூசனைக்கு அருளாதவனே); (பொக்கம் - பொய்); (நகுதல் - சிரித்தல்); (அப்பர் தேவாரம் - 5.90.9 - "பொக்க(ம்) மிக்கவர் பூவு(ம்) நீருங் கண்டு நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே");

அடியே நினை பொற்பு-உற்றார் இடர்-ஆழியில் ஏறிடு புணை ஆனாய் - உன் பாதத்தையே தியானிக்கும் தன்மையுடையவர்கள் துன்பக்கடலில் ஏறும் தெப்பம் ஆனவனே; (ஆழி - கடல்); (புணை - தெப்பம்; மரக்கலம்); (அப்பர் தேவாரம் - 4.92.6 - "துன்பக் கடலிடைத் தோணித்தொழில் பூண்ட தொண்டர்தம்மை இன்பக்கரை முகந்தேற்றுந் திறத்தன"); (திருவாசகம் - அடைக்கலப்பத்து - 8.24.4 - "பொழிகின்ற துன்பப்புயல் வெள்ளத்தில் நின் கழற்புணைகொண்டு இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்");

பொய்ப்பற்று ஏதும் இல் மாணிதன் ஆருயிர் பற்றப் பால் அடைவான் உதை- சேவக - வேறு பற்றுகள் எவையும் இல்லாத மார்க்கண்டேயரின் அரிய உயிரைக் கவரப் பக்கத்தில் வந்த காலனை உதைத்த வீரனே; (மாணி - மார்க்கண்டேயர்); (பால் - பக்கம்; அருகு); (சேவகன் - வீரன்);

புற்றுக் கோளரவோடு இள-வான்மதி புனைவோனே - புற்றில் வாழும் இயல்புடைய கொடிய பாம்போடு இள-வெண்திங்களை அணிந்தவனே; (கோள் - கொடிய); (வால் - வெண்மை; வான் - அழகு; வானம்); (வால்+மதி = வான்மதி);

பக்கத்து ஆயிழை சேர் திருமேனிய - ஒரு பக்கத்தில் பார்வதி கூறாகச் சேர்கின்ற திருமேனி உடையவனே; (ஆயிழை - பெண்);

பற்றற்றார் பணி பூதிய - பற்றற்றவர்கள் வணங்கும் திருநீறு பூசிய பெருமானே; (பூதிய - பூதியனே); (பூதி - சாம்பல்; திருநீறு; செல்வம்);

சேவடி பற்றித் தேவர்கள் "கா"வென மூவெயில் எரி-ஈசா - உன் சிவந்த திருவடியைப் பிடித்துக்கொண்டு, "காத்தருள்" என்று தேவர்கள் வேண்டவும், முப்புரங்களை எரித்த ஈசனே;

பத்திச்-சீரிலி தேர்விட வான் உயர் வெற்பைத் தோள்கொடு பேர்-தின(ம்), மூடன பத்துச் சீர்-மணி ஆர் முடி நூறிட நெரி-பாதா - பக்திப்பண்பு இல்லாதவனான இராவணன், தரையில் இறங்கிய தன் தேரைச் செலுத்தும் பொருட்டு, வானில் ஓங்கிய கயிலைமலையைத் தன் புஜங்களால் பேர்த்தபொழுது, அந்த அறிவிலியின் அழகிய மணிகள் திகழும் கிரீடம் அணிந்த பத்துத்தலைகளும் நொறுங்கும்படி அவனை நசுக்கிய திருப்பாதனே; (சீர் - அழகு; இயல்பு); (வெற்பு - மலை); (மூடன - மூடனது; - ஆறாம்வேற்றுமை உருபு); (நூறுதல் - அழித்தல்; பொடியாக்குதல்);

நக்கக்-கோலமதாய் மடவார் இடு பிச்சைக்கே உழல் வீறு-உடையாய் - திகம்பரனாகிப் பெண்கள் இடும் பிச்சைக்கே உழலும் பெருமை உடையவனே; (நக்கம் - ஆடை அணியாமை); (வீறு - தனிப்பட்ட சிறப்பு);

அரு-நட்டத்தாய் - அருங்கூத்து ஆடுபவனே; (நட்டம் - கூத்து);

இடுகாடு இடம் ஆகிய திருவாளா - சுடுகாடே இருக்கும் இடம் ஆகிய செல்வனே;

நக்கித் தேன் உண மாமலர் ஆர் பொழில் நச்சிச் சேர் அளி பாடிடு காழியில் - நக்கித் தேன் உண்பதற்காக வண்டுகள் அழகிய மலர்கள் நிறைந்த சோலைகளை விரும்பிச் சேர்ந்து ரீங்காரம் செய்து பாடுகின்ற சீகாழிப்பதியில்; (ஆர்தல் - நிறைதல்); (நச்சுதல் - விரும்புதல்); (அளி - வண்டு);

நற்பொற்றாள் அடியார் தொழ மேவிய பெருமானே - நல்ல பொன்னடியை அடியார்கள் தொழ எழுந்தருளிய பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- -----------

No comments:

Post a Comment