2011-08-05
N.018 - சுந்தரர் துதி - சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - 2011
----------------
(வெண்பா)
(10 பாடல்கள் - எல்லாம் ஒரே ஈற்றடி)
1)
வாடும் மனமே வழியறிவாய் மன்றினுள்
ஆடும் பரமன் அடிமையெனத் - தேடியிடம்
வந்து வழக்காடி ஆட்கொண்ட மாபத்தர்
சுந்தரர் சொல்லே துணை.
தேடியிடம் - இடம் தேடி;
மா-பத்தர் - பெரும்பக்தர்;
2)
மனமே மகிழ வழியிது கேளாய்;
வினைதீர்ந்து செல்வம் விளையும்; - புனற்சடையன்
தந்தபொன்னை ஆற்றிலிட்(டு)ஆ ரூர்க்குளத்தில் தானெடுத்த
சுந்தரர் சொல்லே துணை.
3)
காலனுக்(கு) அஞ்சிக் கலங்கும் மனமேஓர்
பாலனுக்கா அன்றவன்மேல் பாய்ந்தவெஞ் - சூலனுக்குச்
சந்ததம் சந்தத் தமிழ்மாலை சாத்திய
சுந்தரர் சொல்லே துணை.
பாய்ந்தவெஞ்சூலன் - பாய்ந்த எம் சூலன்; பாய்ந்த வெம் சூலன்; (வெம்மை - கொடுமை; கோபம்; பராக்கிரமம்);
சந்ததம் - எப்பொழுதும்;
சாத்துதல் - அணிதல்;
4)
முன்பு முதலையுண்ட பாலகனைப் பெற்றவர்கள்
இன்புற இங்(கு)எமனை ஈயச்சொல் - அன்புருவாம்
தந்தையே என்றுதமிழ் பாடித் தருவித்த
சுந்தரர் சொல்லே துணை.
தருவித்தல் - வருவித்தல்;
(* சுந்தரர் தேவாரம் - 7.92.4 - "புக்கொளியூர் அவினாசியே கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே");
5)
சங்கிலிக்குச் செய்த சபதத்தை மீறியதால்
தங்கண் இழந்து தடுமாறி - அங்கணன்முன்
நொந்தழு(து) ஆரூரில் நோக்கமடைந்(து) இன்புற்ற
சுந்தரர் சொல்லே துணை.
நோக்கம் - பார்வை;
(* சுந்தரர் தேவாரம் - 7.95.2 - "என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் மற்றைக் கண்தான் தாராதொழிந்தால் வாழ்ந்துபோதீரே");
6)
மனைவியின் கோபத்தை மாற்ற எனக்கிங்
குனையன்றி உற்றார்ஆர் உள்ளார் - எனவிரவில்
நந்தியவன் தூது நடந்துதவும் நல்லடியார்
சுந்தரர் சொல்லே துணை.
பதம் பிரித்து:
"மனைவியின் கோபத்தை மாற்ற, எனக்கு இங்கு
உனை அன்றி உற்றார் ஆர் உள்ளார்?" - என, இரவில்
நந்தி-அவன் தூது நடந்து உதவும் நல்-அடியார்
சுந்தரர் சொல்லே துணை.
என - என்று சொல்ல;
நந்தி - சிவபெருமான்; (7.92.7 - "நந்தி உனை வேண்டிக்கொள்வேன் நரகம் புகாமையே" - "நந்தி" என்னும் வடசொல், "இன்பம் உடையவன்" எனப் பொருள்படும்);
7)
போவாரைக் கொள்ளைகொள் இம்முருகன் பூண்டியில்
மேவாமல் வேறூர் விரும்பாயோ - நாவார
வந்தித்(து) அரனருளால் மாண்பொருளைப் பெற்றுமகிழ்
சுந்தரர் சொல்லே துணை.
"என்று" நாவார வந்தித்து - "என்று" என்ற சொல்லை வருவித்துப் பொருள்கொள்க.
மேவுதல் - உறைதல்;
மாண்பொருள் - மிகுந்த பொருள்;
(* சுந்தரர் தேவாரம் - 7.49.1 - "முருகன்பூண்டி மாநகர்வாய் இடுகு நுண்ணிடை மங்கைதன்னொடும் எத்துக் கிங்கிருந்தீர் எம்பிரானீரே");
8)
காவிரி வெள்ளத்தை நீந்திக் கடக்ககில்லேன்
பூவிரிகா ஐயாறா ஓவெனக் - கூவியழை
செந்தமிழால் நீர்விலகிச் செல்வழி நல்கமகிழ்
சுந்தரர் சொல்லே துணை.
கடக்ககில்லேன் - கடக்கும் ஆற்றல் இல்லேன்;
"பூ-விரி-கா ஐயாறா ஓ" எனக் கூவி அழை - பூக்கள் மலரும் சோலை திகழும் திருவையாற்றுப் பெருமானே! ஓலம்" என்று கூவி அழைத்த;
(* சுந்தரர் தேவாரம் - 7.77.9 - "எதிர்த்து நீந்தமாட்டேன் நான் .. .. ஐயாறுடைய அடிகேளோ!");
9)
அந்தமில் ஐயன் அருந்துணைவன் என்றுதனைத்
தந்தருள் செய்த தகைமையினால் - நிந்தையைப்போல்
கந்தமலி பாவால் கழலிணையைப் பாடியருள்
சுந்தரர் சொல்லே துணை.
அந்தம் இல் ஐயன் - முடிவு இல்லாத தலைவன்;
அரும் துணைவன் - அரிய தோழன்;
கந்தமலிபா - கந்தம் மலி பா - மணம் மிகுந்த பாமாலை;
10)
முனிவரெலாம் மால்நான் முகன்வர வேற்கும்
இனியவன்ஆர் என்றுவியப் பெய்தத் - தனிவிடையார்
நந்தமர் ஊரனெனும் நம்பி நலந்திகழும்
சுந்தரர் சொல்லே துணை.
தனி விடையார் - ஒப்பற்ற இடபத்தை ஊர்தியாகக் கொண்டவர்;
நந்தமர் ஊரன் - நம் தமர் ஊரன் - நம் தோழன், "ஆரூரன்" என்னும் பெயரினன்;
நம்பி - ஆணிற் சிறந்தோன்;
(* சுந்தரர் தேவாரம் - 7.100.9 -
இந்திரன் மால்பிரமன் எழிலார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன்னை மத்தயானை அருள்புரிந்து,
மந்திர மாமுனிவர் "இவன் ஆர்" என, எம்பெருமான்
"நந்தமர் ஊரண்" என்றான் நொடித்தான்மலை உத்தமனே.)
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment