Saturday, July 9, 2022

V.019 - இரவில் - மடக்கு

2011-03-01

V.019 - இரவில் - மடக்கு

----------------

(இன்னிசை வெண்பா;

அடிகள்தோறும் முதற்சீர் மடக்குப் பெற்று வருமாறு அமைந்தது)


இரவில் எரியேந்தி ஆடும் இறைவன்

இரவில் வரும்பலிக் கெவ்வூரும் செல்வான்

இரவில் பொழுதும் இரவும்பேர் எண்ணின்

இரவில் நிலைதருவான் இங்கு.


சொற்பொருள்:

இரவு - 1. ராத்திரி; 2. பிச்சை;

இரவில் - 1. ராத்திரியில்; 2. பிச்சையில்; 3. ராத்திரி இல்லாத (இரவு இல்); 4. யாசிப்பு இல்லாத (இரவு இல்);


* இப்பாடல் 2011 மார்ச் மாதத்தில் மகாசிவராத்திரியை ஒட்டி எழுதப்பெற்றது.

இரவில் எரிந்தி ஆடும் இறைவன் - நள்ளிருளில் தீயை ஏந்தி ஆடுகின்ற இறைவன்;

இரவில் வரும் பலிக்கு எவ்வூரும் செல்வான் - பிச்சையில் வரும் உணவுக்காகப் பல ஊர்களில் திரிபவன்; (பலி - உணவு);

இரவு-இல் பொழுதும் இரவும் பேர் எண்ணின், இரவு-இல் நிலை தருவான் இங்கு - பகலும் இரவும் அவன் திருநாமத்தைத் தியானித்தால், நமக்கு ஒரு குறையுமில்லாத நன்னிலையை அளிப்பான்; (நாம் விரும்பிய எல்லாம் தந்து அருள்வான்); (எண்ணின் - எண்ணினால்); (சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்"); (சுந்தரர் தேவாரம் - 7.34.1 - "எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்; இம்மையே தரும் சோறும் கூறையும்");


வி. சுப்பிரமணியன்

----------- -----------

No comments:

Post a Comment