Tuesday, November 22, 2022

06.02.174 – குறுக்கை வீரட்டம் - மயக்க மாசுற்ற - (வண்ணம்)

06.02.174 – குறுக்கை வீரட்டம் - மயக்க மாசுற்ற - (வண்ணம்)

2013-09-28

06.02.174 - மயக்க மாசுற்ற - குறுக்கை வீரட்டம் (இக்காலத்தில் "கொருக்கை")

-------------------------

(வண்ணவிருத்தம்;

தனத்த தானத்த தனத்த தானத்த

தனத்த தானத்த .. தனதான )


மயக்க மாசுற்ற மனத்தி னால்நித்தம்

.. .. வருத்த மேயுற்று .. மரியாமல்

.. மணக்கும் ஆரத்தை நிகர்த்த பாவிட்டு

.. .. வழுத்து ஞானத்தை .. அருளாயே

இயக்கம் யாவைக்கும் இயக்கும் ஓர்சத்தி

.. .. எனப்ப ராவற்கும் .. உரியானே

.. எடுத்த ஓர்வெற்பை அழுத்தி மாதுட்டன்

.. .. இசைத்த கீதத்தை .. மகிழ்வோனே

கயத்தை யேபற்றி உரித்த வீரத்த

.. .. கயத்தை வேணிக்க .. ணுடையானே

.. கடுத்த ஆலத்தை மடுத்த ஏருற்ற

.. .. கழுத்தில் நீலத்தை .. அணிவோனே

பெயர்ச்சி தானற்ற குறுக்கை வீரட்ட

.. .. பிழைத்த வேளட்ட .. விழியானே

.. பெணைத்தன் வாமத்தில் இணைத்த கோலத்த

.. .. பிறப்பு சாவற்ற .. பெருமானே.


பதம் பிரித்து:

மயக்கம் மாசு உற்ற மனத்தினால் நித்தம்

வருத்தமே உற்று மரியாமல்,

மணக்கும் ஆரத்தை நிகர்த்த பா இட்டு

வழுத்து ஞானத்தை அருளாயே;


இயக்கம் யாவைக்கும் இயக்கும் ஓர் சத்தி

எனப் பராவற்கும் உரியானே;

எடுத்த ஓர் வெற்பை அழுத்தி மா-துட்டன்

இசைத்த கீதத்தை மகிழ்வோனே;


கயத்தையே பற்றி உரித்த வீரத்த;

கயத்தை வேணிக்கண் உடையானே;

கடுத்த ஆலத்தை மடுத்த ஏர் உற்ற

கழுத்தில் நீலத்தை அணிவோனே;


பெயர்ச்சிதான் அற்ற குறுக்கை வீரட்ட;

பிழைத்த வேள் அட்ட விழியானே;

பெணைத் தன் வாமத்தில் இணைத்த கோலத்த;

பிறப்பு சாவு அற்ற பெருமானே.


மயக்கம் மாசுற்ற மனத்தினால் நித்தம் வருத்தமேற்று மரியாமல், - அறியாமையும் அழுக்குகளும் இருக்கும் மனத்தால் தினமும் நான் வருத்தமே அடைந்து, வாழ்நாளும் முடிந்து இறந்தொழியாமல்; (மயக்கம் - அறியாமை); (மாசு - அழுக்கு); (மரித்தல் - சாதல்);

மணக்கும் ஆரத்தை நிகர்த்த பாட்டு வழுத்து ஞானத்தை அருளாயே - மணம் கமழும் பூமாலை போன்ற பாமாலைகள் சாத்தி உன்னை வழிபடும் அறிவை அருள்வாயாக; (ஆரம் - ஹாரம் - மாலை);


இயக்கம் யாவைக்கும் இயக்கும் ஓர் சத்தி எனப் பராவற்கும் உரியானே - "இயங்கும் அனைத்திற்கும் இயக்குகின்ற ஒரு சக்தி நீ" என்று புகழத்தக்கவனே ; (இயக்கம் - இயங்குதல்); (பராவற்கு - பராவல்+கு - பராவுதற்கு); (பராவல் - பராவுதல் = பரவுதல் = புகழ்தல்; துதித்தல்; வணங்குதல்); (பராவற்கும் - உம் - எச்சவும்மை; அசை என்றும் கொள்ளல் ஆம்); (திருவாசகம் - திருவம்மானை - 8.8.12 - "எப்பொருட்குந் தானேயாய் யாவைக்கும் வீடாகும்")

எடுத்த ஓர் வெற்பை அழுத்தி மா-துட்டன் இசைத்த கீதத்தை மகிழ்வோனே - ஒப்பற்ற கயிலைமலையைப் பெயர்த்த பெரிய துஷ்டனான இராவணனை அந்த மலைமேல் விரலை ஊன்றி அழுத்தி நசுக்கிப், பின் அவன் பாடிய இசையைக் கேட்டு மகிழ்ந்தவனே; (வெற்பு - மலை); (துட்டன் - துஷ்டன்);


கயத்தையே பற்றி உரித்த வீரத்த - போர்செய்த யானையைப் பற்றி அதன் தோலை உரித்த வீரம் உடையவனே; (கயம் - யானை); (- அசை); (வீரத்தன் - வீரத்தனே - வீரம் உடையவனே; "வீர அத்தனே" என்று அகரம் தொகுத்தல் விகாரமாகவும் கருதலாம்); (கண்டம் - கண்டத்தன், என்று வருவதுபோல், வீரம் - வீரத்தன்); (திருவாசகம் - திருப்பொன்னூசல் - 8.16.4 - "நஞ்சமர் கண்டத்தன்"); (அத்தன் - தந்தை);

கயத்தை வேணிக்கண் உடையானே - கங்கையைச் சடையில் உடையவனே; (கயம் - நீர்நிலை; நீர்); (வேணி - சடை); (கண் - ஏழாம் வேற்றுமையுருபு);

கடுத்த ஆலத்தை டுத் ர் உற்ற ழுத்தில் நீலத்தை அணிவோனே - விரைந்து பரவிய, உண்ணலாகாத ஆலாகாலத்தை உண்ட அழகிய கழுத்தில் கருமையை அணிந்தவனே; (கடுத்தல் - விரைந்து ஓடுதல்; உறைத்தல்); (மடுத்தல் - உண்ணுதல்); (ஏர் - அழகு);


பெயர்ச்சிதான் அற்ற குறுக்கை வீரட்ட - நீங்காமல் குறுக்கை வீரட்டத்தில் எழுந்தருளியவனே; (பெயர்ச்சி - நீங்குதல்; பிரிதல்; இடமாறுகை);

பிழைத்த வேள் அட்ட விழியானே - குற்றம் செய்த மன்மதனைச் சுட்டெரித்த நெற்றிக்கண் உடையவனே; (பிழைத்தல் - குற்றம்செய்தல்); (வேள் - மன்மதன்); (அடுதல் - எரித்தல்; அழித்தல்);

பெணைத் தன் வாமத்தில் இணைத்த கோலத்த - உமையைத் திருமேனியில் இடப்பாகமாக உடையவனே; (பெணை - பெண்ணை; இடைக்குறையாக வந்தது); (வாமம் - இடப்பக்கம்);

பிறப்பு சாவு அற்ற பெருமானே - பிறப்பும் இறப்பும் இல்லாத பெருமானே; (பிறப்பு சாவு - பிறப்பும் சாவும்; உம்மைத்தொகையில் வல்லெழுத்து மிகாது);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment