Thursday, November 17, 2022

06.01.141 - சிவன் - வேட்டி - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2013-09-06

06.01.141 - சிவன் - வேட்டி - சிலேடை

-----------------------------------------------

அற்ற மறைக்கும் பணியே அரையினில்

சுற்று முலகுமிகு தொன்மையுடைப் - பெற்றியுண்

டேறும்வெள் வண்ணம்நாம் வேண்டில் எளிதிலடை

ஆறுபுனைந் தான்வேட்டி ஆங்கு.


சொற்பொருள்:

அற்றம் - மறைக்கத்தக்கது (That which should be covered);

பணி - 1. செயல்; தொழில்; / 2. நாகப்பாம்பு;

சுற்றுதல் - 1. உடுத்துதல் - சுற்றி அணிதல்; / 2. வலம்செய்தல்;

உடை - 1. உடுக்கின்ற உடை; / 2. உடைய;

பெற்றி - 1. தன்மை; / 2. பெருமை;

ஏறுதல் - மிகுதல்;

ஏறு - இடபம்;

வேண்டுதல் - 1. விரும்புதல்; / 2. பிரார்த்தித்தல்;

ஆங்கு - உவம உருபு (A word of comparison); அப்படி (thus); அசைச்சொல்;


வேட்டி:

அற்றம் மறைக்கும் பணியே; அரையினில்

சுற்றும் உலகு; மிகு தொன்மை உடைப் பெற்றி உண்டு;

ஏறும் வெள் வண்ணம்; நாம் வேண்டில் எளிதில் அடை

ஆறு புனைந்தான் வேட்டி ஆங்கு.


அற்றம் மறைக்கும் பணியே - மறைக்கத்தக்க உறுப்புகளை மறைக்கும் தொழில் செய்யும்;

அரையினில் சுற்றும் உலகு - மக்கள் இடுப்பில் சுற்றி உடுத்துவார்கள்;

மிகு தொன்மை உடைப் பெற்றி உண்டு - தொன்மை மிகு உடைப் பெற்றி உண்டு - பழமை மிகுந்த உடை என்ற பெருமை உண்டு;

ஏறும் வெள் வண்ணம் - வெண்மையாக இருக்கும்;

நாம் வேண்டில் எளிதில் அடை - நாம் விரும்பினால் எளிதில் பெறப்படுகின்ற;

வேட்டி.



சிவன்:

அற்றம் மறைக்கும் பணியே அரையினில்;

சுற்றும் உலகு; மிகு தொன்மையுடைப் பெற்றி உண்டு;

ஏறும் வெள் வண்ணம்; நாம் வேண்டில் எளிதில் அடை

ஆறு புனைந்தான் வேட்டி ஆங்கு.


அற்றம் மறைக்கும் பணியே அரையினில் - (பிட்சாடனர் கோலத்தில்) அரையில் கட்டியிருக்கும் நாகப்பாம்பே மானத்தைக் காக்கும்; (சம்பந்தர் தேவாரம் - 3.113.1 - "அற்ற மறைப்பது முன்பணியே" - அற்றம் மறைப்பது - உனது மானத்தைக் காப்பது. பணியே - பாம்பே.);

சுற்றும் உலகு - மக்கள் வலம்செய்வார்கள்;

மிகு தொன்மையுடைப் பெற்றி உண்டு - எல்லாவற்றினும் பழையவன் ஆன பெருமை உடையவன்;

ஏறும் வெள் வண்ணம் - 1. உடல்முழுதும் வெண்ணீறு பூசியதால் மேனிமேல் வெண்ணிறம் திகழும்; 2. ஊர்தியான இடபமும் வெண்ணிறம்; (உம் - எச்சவும்மை);

நாம் வேண்டில் எளிதில் அடை - நாம் விரும்பிப் பிரார்த்தித்தால் நம்மால் எளிதில் அடையப்படுகின்ற;

ஆறு புனைந்தான் - கங்காதரன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment