Tuesday, December 13, 2022

06.01.146 - சிவன் - கொழுக்கட்டை - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

(பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி)

2014-08-29

06.01.146 - சிவன் - கொழுக்கட்டை - சிலேடை

-------------------------------------------------------

வெந்தபொடி மேல்மிளிரும் விண்டால் இனிமைதரும்

சிந்தைமகிழ் பூரணம் தென்படுமே - கந்தனுக்

கண்ணன் கரங்கூடும் அன்பரையஞ் சேலெனும்முக்

கண்ணன் கொழுக்கட்டை காண்.


சொற்பொருள்:

பொடி - 1. மாவு; / 2. திருநீறு;

விள்ளுதல் - 1. பிளத்தல்; / 2. சொல்லுதல்;

பூரணம் - 1. கொழுக்கட்டையினுள் இருக்கும் தேங்காய்ப்பூரணம்; / 2. நிறைவு; முழுமை;

அண்ணன் - தமையன்;

கரம் கூடுதல் - 1. கையில் பொருந்துதல்; / 2. கரங்கள் ஒன்றாக இணைதல் - வணங்குதல்;

அஞ்சேல் எனும் - 1. அஞ்சு ஏல் எனும்; / 2. அஞ்சேல் எனும் (அஞ்சாதே என்னும்);

ஏல் - 1. ஏற்றுக்கொள்; / 2. எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி;


கொழுக்கட்டை:

வெந்தபொடி மேல் மிளிரும் - வெளியே வெந்த மாவு இருக்கும்;

விண்டால் இனிமை தரும் சிந்தை மகிழ் பூரணம் தென்படுமே - பிளந்தால் இனிமை தருவதும் மனத்திற்கு மகிழ்ச்சியைத் தருவதுமான பூரணம் புலப்படும்;

கந்தனுக்கு அண்ணன் கரம் கூடும் - விநாயகர் கையில் சேரும்;

அன்பரை அஞ்சு ஏல் எனும் - பிரியர்களை (ஒன்றிரண்டு கொழுக்கட்டையே போதும் என்று எண்ணவிடாமல்) ஐந்து ஏற்றுக்கொள் என்னும்;


சிவன்:

வெந்த பொடி மேல் மிளிரும் - சுட்ட திருநீறு மேனிமேல் திகழும்;

விண்டால் இனிமை தரும் சிந்தை மகிழ் பூரணம் தென்படுமே - (திருப்பெயரையும் திருப்புகழையும்) சொன்னால் இனிமை தருகின்ற, மனம் மகிழ்கின்ற நிறைவு புலப்படும்; ("பூரணம் தென்படுமே" - "பூரணனாகிய சிவபெருமான் காட்சி தருவான்" என்றும் பொருள்படும்);

கந்தனுக்கு அண்ணன் கரம் கூடும் - விநாயகன் கரம்சேர்த்து வணங்கும் தந்தை;

கரம் கூடும் அன்பரை அஞ்சேல் எனும் முக்கண்ணன் - கைகளைச்சேர்த்து வணங்கும் பக்தர்களை அஞ்சேல் என்று அபயம் தரும் நெற்றிக்கண்ணன்; ("கரம் கூடும்" என்ற சொற்றொடரை இடைநிலைத்தீவகமாக இப்படி இருபக்கமும் இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்);


பிற்குறிப்புகள் :

1) ஈசனை "நிறைவு" என்று சுட்டும் பிரயோக உதாரணம்: - திருவாசகம் - 8.22.5 - "குறைவிலா நிறைவே கோதிலா அமுதே";


2) "விண்டால் இனிமைதரும் சிந்தைமகிழ் பூரணம் தென்படுமே" - "பூரணனாகிய சிவபெருமான் காட்சி தருவான்" என்றும் பொருள்படும்;

அப்பர் தேவாரம் - 4.112.9 -

சிவனெனு நாமம் தனக்கே உடையசெம் மேனிஎம்மான்

அவனெனை ஆட்கொண் டளித்திடு மாகில் அவன்றனையான்

பவனெனு நாமம் பிடித்துத் திரிந்துபன் னாளழைத்தால்

இவனெனைப் பன்னாள் அழைப்பொழி யானென் றெதிர்ப்படுமே.

-- சிவனை அடியேன் 'பவன்' என்னும் திருப்பெயர் முதலியவற்றை உள்ளத்திலும் சொல்லிலும் பற்றிப் பலநாளும் அழைத்தால், இவன் என்னைப் பலநாளாக அழைத்தலைத் தவறாது செய்கிறான் என்று திருவுள்ளம் பற்றி அடியேற்குக் காட்சி வழங்குவான்.


3) "ஏல்" என்ற பிரயோகத்தின் உதாரணம்: - ஔவையார் - நல்வழி -

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்

இருநாளுக் கேலென்றால் ஏலாய் - ஒருநாளும்

என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே

உன்னோடு வாழ்தல் அரிது."

-- இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - (கிடைத்தபோது) இரண்டு நாளுக்கான உணவை ஏற்றுக்கொள்ளென்றால் ஏற்றுக்கொள்ளாய்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment