05.49 – கருவிலிக் கொட்டிட்டை - (கருவேலி)
2015-08-31
கருவிலிக் கொட்டிட்டை - (இக்காலத்தில் - கருவேலி)
------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்")
1)
அழனிகர்செம் மேனியினான் அலைகடலின் நஞ்சுண்டு
மழைநிகர்மா மிடறுடையான் மறவாது மலர்தூவிக்
கழனினையும் அடியார்கள் கருதுவரம் தந்தருள்வான்
கழனிமலி கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே.
அழல் நிகர் செம்-மேனியினான் - தீப்போன்ற செம்மேனி உடையவன்; (அழனிகர் - அழல் நிகர்);
அலைகடலின் நஞ்சு உண்டு மழை நிகர் மா மிடறு உடையான் - பாற்கடல் விடத்தை உண்டு மேகம் போன்ற அழகிய கண்டம் உடையவன்; (மழை - மேகம்);
மறவாது மலர் தூவிக் கழல் நினையும் அடியார்கள் கருது வரம் தந்தருள்வான் - தினமும் பூத் தூவித் திருவடியை நினைக்கும் பக்தர்கள் விரும்பிய வரத்தைத் தந்து அருள்பவன்; (கழனினையும் - கழல் நினையும்);
கழனி மலி கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே - வயல்கள் நிறைந்த கருவிலி என்னும் ஊரிலுள்ள கொட்டிட்டை என்னும் கோயிலில் உறைகின்ற நெற்றிக்கண்ணன்; (கழனி - வயல்); (சம்பந்தர் தேவாரம் - 3.113.9 - "வயன்மலி சண்பையதே" - வயல் வளமும் உடைய சண்பை நகர்);
2)
அவிர்வேணி தனிலாற்றை அணியண்ணல் அங்கையைக்
குவிவானோர் தமக்கிரங்கிக் குன்றவில்லை ஏந்தியவன்
செவியாரச் சீர்நாமம் தினம்கேட்பார் வினைதீர்ப்பான்
கவினாரும் கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே.
அவிர் வேணி - ஒளிவீசும் சடை;
அங்கையைக் குவி வானோர் - கரம் குவித்து வணங்கும் தேவர்கள்;
குன்றவில் - மேருமலை என்ற வில்;
செவியாரச் சீர் நாமம் தினம் கேட்பார் வினை தீர்ப்பான் - ஈசனது புகழையும் திருப்பெயரையும் காதாரத் தினமும் கேட்கும் பக்தர்களது வினையைத் தீர்ப்பவன்; (சம்பந்தர் தேவாரம் - 2..41.3 - "பூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமஞ் செவிகேட்ப நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே");
கவின் ஆரும் - அழகிய;
3)
பிடியனைய நடையுடைய பெண்ணையிடம் பேணுமரன்
கொடியவிட நாகத்தைக் குளிர்மதியின் அயல்புனைந்தான்
அடிபணியும் அன்பரவர் அருவினையைத் தீர்த்தருள்வான்
கடிபொழில்சூழ் கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே.
பிடி அனைய நடை உடைய பெண்ணை இடம் பேணும் அரன் - பெண்யானை போன்ற நடையை உடைய உமையை இடப்பக்கம் ஒரு பாகமாக விரும்பிய ஹரன்;
கடி பொழில் சூழ் - மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த;
4)
நேத்திரமிட் டரிவாழ்த்த நேமியருள் செய்தசிவன்
பாத்திரமாம் அயன்சிரத்தில் பலிதேரும் பரமேட்டி
பூத்திரள்கொண் டடியிணையைப் போற்றிசெயும் அடியவரைக்
காத்தருளும் கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே.
நேத்திரம் - கண்;
அரி - ஹரி - திருமால்;
நேமி - சக்கராயுதம்;
பாத்திரம் ஆம் அயன்-சிரத்தில் பலி தேரும் பரமேட்டி - உண்கலனாகும் பிரமன் மண்டையோட்டில் பிச்சையேற்கும் பரம்பொருள்;
பூத்திரள்கொண்டு அடியிணையைப் போற்றிசெயும் அடியவரைக் - மிகுந்த பூக்களால் இரு திருவடிகளை வழிபடும் அடியார்களை;
காத்து அருளும் - காத்து அருள்வான்; (செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று); ("காத்து அருள்கின்ற" என்று வினையெச்சமாகவும் கொண்டு பொருள் கொள்ளல் ஆம்);
5)
அரையாகாத் தருளாயென் றமரரெலாம் அடிபோற்ற
வரையேந்தி ஒருகணையால் மதில்மூன்றைச் சுட்டபிரான்
விரையாரும் மலர்தூவி வேண்டுகின்ற அடியவரைக்
கரையேற்றும் கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே.
"அரையா காத்து அருளாய்" என்று அமரர்எலாம் அடிபோற்ற - "அரசனே! காப்பாயாக" என்று தேவர்கள் எல்லாரும் வணங்க;
வரை ஏந்தி ஒரு கணையால் மதில்மூன்றைச் சுட்ட பிரான் - மேருமலையை ஏந்தி ஓரம்பால் முப்புரங்களை எய்த பெருமான்; (வரை - மலை);
விரை ஆரும் மலர் தூவி வேண்டுகின்ற அடியவரைக் - வாசம் மிக்க பூக்களைத் தூவி வழிபடும் பக்தர்களை;
கரையேற்றும் - கரையேற்றுவான்; (செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று); ("கரையேற்றுகின்ற" என்று வினையெச்சமாகவும் கொண்டு பொருள் கொள்ளல் ஆம்);
6)
பரங்கருணைப் பெருமான்முன் பார்த்தனுக்குப் பாசுபதம்
வரங்கொடுக்க வேட்டுவனாய் வனத்திடையே சென்றசிவன்
சரங்கொடுதாள் இணைபோற்றும் தன்னடியார் கரையேறக்
கரங்கொடுக்கும் கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே.
சரங்கொடு தாள்இணை போற்றும் தன் அடியார் கரையேறக் கரம் கொடுக்கும் - பூமாலைகளால் இருதிருவடிகளை வணங்கும் தனது அடியவர்கள் உய்யும்படி கைகொடுத்துக் காப்பான்; ("காக்கின்ற" என்று வினையெச்சமாகவும் கொண்டு பொருள் கொள்ளல் ஆம்);
7)
பிறைத்துண்டன் அடியிணையில் பிரசமலர் பலதூவி
மறப்பின்றிப் பணிந்தேத்து மார்க்கண்டர்க் கரணாகி
இறப்பின்றி அவர்வாழ இன்னருள்செய் எம்பெருமான்
கறைக்கண்டன் கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே.
பிறைத்துண்டன் அடியிணையில் பிரசமலர் பல தூவி - பிறைச்சந்திரனைச் சூடிய பெருமானது இருதிருவடிகளில் தேன்மலர்கள் பல தூவி; (பிரசம் - தேன்);
மறப்பு இன்றிப் பணிந்தேத்து மார்க்கண்டர்க்கு அரண் ஆகி - மறத்தல் இல்லாமல் வழிபடும் மார்க்கண்டேயருக்குக் காவல் ஆகி;
இறப்பு இன்றி அவர் வாழ இன்னருள்செய் எம்பெருமான் - சாவாமல் அவர் என்றும் வாழும்படி இனிதே அருளிய எம்பெருமான்;
கறைக்கண்டன் - நீலகண்டன்;
8)
சினந்துமலை அசைத்தவன்றன் சிரம்பத்தை நசுக்கியவன்
மனந்திருந்தி அவன்பாடி வணங்கமகிழ்ந் தருள்புரிந்தான்
நினைந்துருகும் அடியார்கள் நீள்விசும்பில் நிலைத்திருக்கக்
கனிந்தருளும் கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே.
சினந்து மலை அசைத்தவன்-தன் சிரம் பத்தை நசுக்கியவன் - கோபித்துக் கயிலைமலையைப் பெயர்க்க அசைத்த இராவணனது பத்துத் தலைகளையும் நசுக்கியவன்;
நினைந்து உருகும் அடியார்கள் நீள்விசும்பில் நிலைத்திருக்கக் கனிந்தருளும் - மனம் உருகிடத் தியானிக்கும் பக்தர்கள் என்றும் வானுலகில் வாழ இரங்கி அருள்வான்; (செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று); ("இரங்கி அருள்கின்ற" என்று வினையெச்சமாகவும் கொண்டு பொருள் கொள்ளல் ஆம்);
9)
பலியிடம்மண் இரந்தவனும் நான்முகனும் பறந்தகழ்ந்து
மெலியஅழல் உருக்கொண்டு விண்மண்ணைக் கடந்துநின்ற
புலியதளன் பொன்னடியே போற்றிசெயும் அன்புடையார்
கலியகற்றும் கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே.
பலியிடம் மண் இரந்தவனும் - மஹாபலியிடம் மூன்றடி நிலம் யாசித்த திருமாலும்;
மெலிய - வருந்த;
அழல் உருக்கொண்டு - சோதி வடிவாகி;
புலி அதளன் - புலித்தோலை அணிந்தவன்;
அன்புடையார் கலி அகற்றும் - பக்தர்களது துன்பத்தைத் தீர்ப்பான்; (அகற்றுதல் - நீக்குதல்); ("தீர்க்கின்ற" என்று வினையெச்சமாகவும் கொண்டு பொருள் கொள்ளல் ஆம்);
10)
கைதவமே தவமாகக் கைக்கொண்ட கல்நெஞ்சர்
பொய்தவிராப் பிரட்டருரை புரட்டுகளில் மயங்காதே
கொய்தமலர் தூவிநிதம் கும்பிடுவார்க் கன்போடு
கைதருவான் கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே.
கைதவமே தவமாகக் கைக்கொண்ட கல்நெஞ்சர் - வஞ்சனையையே தவம் போலச் செய்கின்ற கல்மனம் உடையவர்கள்; (கைதவம் - வஞ்சனை); (கைக்கொண்ட - மேற்கொண்ட);
பொய் தவிராப் பிரட்டர் உரை புரட்டுகளில் மயங்காதே - பொய்யை நீங்காத பிரஷ்டர்கள் சொல்கின்ற வஞ்சகப் பேச்சில் மயங்கவேண்டா; (பிரட்டர் - நெறியிலிருந்து வழுவியவர்கள்); (மயங்காதே - முன்னிலை ஏவல் வினைமுற்று; 'மயங்காமல்' என்று வினையெச்சமாகக் கொண்டும் பொருள்கொள்ளல் ஆம்);
கொய்த மலர் தூவி நிதம் கும்பிடுவார்க்கு - பறித்த மலர்களைத் தூவித் தினமும் வணங்கும் பக்தர்களுக்கு;
அன்போடு கைதருவான் கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே - அன்போடு காத்து அருள்பவன் கருவிலிக் கொட்டிட்டையில் உறைகின்ற நெற்றிக்கண்ணனான சிவபெருமான்; ("அன்போடு காத்து அருள்செய்வான்" என்று வினைமுற்றாகவும் கொண்டு பொருள்கொள்ளல் ஆம்); (கைதருதல் - உதவுதல்);
11)
முனமலையே வில்லாக முப்புரங்கள் விழவெய்தான்
வனமுலையாள் ஒருபங்கன் மலரடியை மறவாமல்
தினமலரால் வழிபாடு செய்வார்தம் தீவினைதீர்
கனவிடையான் கருவிலிக் கொட்டிட்டைக் கண்ணுதலே.
முனம் மலையே வில்லாக முப்புரங்கள் விழ எய்தான் - முன்பு ஒரு மலையையே வில்லாகக்கொண்டு முப்புரங்களும் சம்பலாகி விழும்படி கணை எய்தவன்; (முனம் - முன்னம் என்பது இடைக்குறையாக வந்தது);
வன முலையாள் ஒரு பங்கன் - அழகிய முலையை உடைய உமையை ஒரு பங்கில் உடையவன்; (வனம் - அழகு);
தினமலரால் - 1. நாண்மலரால்; (அன்று பூத்த புது மலர்); 2. தினமும் மலரால்;
தீவினைதீர் - தீவினைகளைப் போக்குகின்ற;
கனவிடையான் - பெரிய இடபத்தை வாகனமாக உடையவன்; (கனம் - பெருமை); (அப்பர் தேவாரம் - 5.3.9 - "காழியானைக் கனவிடை யூருமெய் வாழியானை");
வி. சுப்பிரமணியன்
-------------- --------------
No comments:
Post a Comment