Sunday, December 25, 2022

05.42 – கள்ளில் - (திருக்கண்டலம்)

05.42 – கள்ளில் - (திருக்கண்டலம்)

2015-07-14

கள்ளில் - (இக்காலத்தில் "திருக்கண்டலம்")

(சென்னைக்கு வடமேற்கே உள்ள தலம்)

------------------

(அறுசீர்ச் சந்தவிருத்தம் - தானன தானன தானன தானன தானா தனதானா )

(சம்பந்தர் தேவாரம் - 1.1.9 - "தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும்")


1)

சந்ததம் நெஞ்சினில் எண்ணிஅ ருந்தமிழ் தாளிற் புனைவார்தம்

முந்தைவி னைத்தொடர் தன்னைய றுத்திடும் முக்கட் பரமேட்டி

அந்தமும் ஆதியும் அற்றவன் வேணியில் ஆற்றன் பதியென்பர்

கந்தம லர்ப்பொழி லிற்சிறை வண்டறை கள்ளில் நகர்தானே.


சந்ததம் நெஞ்சினில் எண்ணி அரும் தமிழ் தாளில் புனைவார்தம் - எப்பொழுதும் நெஞ்சில் தியானித்து அரிய தமிழ்ப்பாமாலைகளைத் திருவடியில் சூட்டும் பக்தர்களது; (சந்ததம் - எப்பொழுதும்); (அரும் தமிழ் - தேவாரம், திருவாசகம் முதலியன); (புனைதல் - அலங்கரித்தல்; அணிதல்);

முந்தை வினைத்தொடர் தன்னைறுத்திடும் முக்கட் பரமேட்டி - பழவினையைத் தீர்க்கும் மூன்று கண்களுடைய பரம்பொருள்; (அறுத்தல் - நீக்குதல்);

அந்தமும் ஆதியும் அற்றவன் - முடிவும் முதலும் இல்லாதவன்;

வேணியில் ஆற்றன் பதின்பர் - சடையில் கங்கையைத் தரித்தவன் உறையும் தலம்;

கந்த மலர்ப்பொழிலில் சிறை வண்டு அறை கள்ளில் நகர்தானே - வாசமலர்கள் நிறைந்த சோலையில் சிறகுகளை உடைய வண்டுகள் ரீங்காரம் செய்யும் திருக்கள்ளில் (திருக்கண்டலம்) ஆகும்;


2)

நாவினில் நற்பெயர் தன்னைய ணிந்தொரு நாளும் தவறாமல்

பூவிடு வார்மகி ழும்படி பொன்னொடு போகம் தருமீசன்

மாவிடை ஊர்தியி னான்புரம் மூன்றெரி மைந்தன் பதியென்பர்

காவிடை வண்டினம் இன்னிசை ஆர்த்திடு கள்ளில் நகர்தானே.


நாவினில் நற்பெயர் தன்னைணிந்து - திருவைந்தெழுத்தை ஓதி;

ஒரு நாளும் தவறாமல் பூ இடுவார் மகிழும்படி - தினமும் பூக்களைத் திருவடியில் இட்டு வழிபடும் பக்தர்கள் இன்புறும்படி;

பொன்னொடு போகம் தரும் ஈசன் - செல்வமும் போகமும் அருளும் ஈசன்; (சுந்தரர் தேவாரம் - 7.59.1 - "பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப் போகமும் திருவும் புணர்ப்பானை");

மா விடை ஊர்தியினான் - பெரிய இடப வாகனம் உடையவன்;

புரம் மூன்று எரி மைந்தன் பதின்பர் - முப்புரங்களை எரித்த வீரன் உறையும் தலம்;

காடை வண்டு இனம் இன்னிசை ஆர்த்திடு கள்ளில் நகர்தானே - சோலையில் வண்டுகள் இன்னிசை ஒலிக்கின்ற திருக்கள்ளில் (திருக்கண்டலம்) ஆகும்;


3)

நாமரு வுந்திரு நாமமு ரைத்தொரு நாளும் தவறாமல்

பூமரு வும்பதம் ஏத்திடு வார்வினை போக்கும் திருவாளன்

நீர்மரு வுஞ்சடை யன்சுடு காடமர் நித்தன் பதியென்பர்

காமரு தேம்பொழி லிற்களி வண்டறை கள்ளில் நகர்தானே.


மருவுதல் - பொருந்துதல்;

பதம் - திருவடி;

ஏத்துதல் - துதித்தல்;

சுடுகாடு அமர் நித்தன் - சுடுகாட்டை விரும்புகின்ற, அழியாதவன்; (அமர்தல் - விரும்புதல்);

காமரு - அழகிய;

தேம்பொழில் - தேனையுடைய சோலை;

களி வண்டு அறை கள்ளில் நகர்தானே - களிக்கின்ற வண்டுகள் ஒலிக்கின்ற திருக்கள்ளில்;


4)

வேலனை ஈன்றவன் விண்ணவர் வாழ்ந்திட மேவார் புரமெய்தான்

நூலணி மார்பினன் நாமநு வன்றிடில் நோவா நிலையீவான்

பாலன நீறணி நெற்றிய னாய்த்தொழு பாலற் கிடர்செய்த

காலனை வீட்டிய காலுடை யான்பதி கள்ளில் நகர்தானே.


வேலனை ஈன்றவன் - முருகனைப் பெற்றவன்;

விண்ணவர் வாழ்ந்திட - தேவர்கள் உய்யும்படி;

(இலக்கணக் குறிப்பு - "விண்ணவர் வாழ்ந்திட" என்ற சொற்றொடரை இடைநிலைத் தீவகமாக இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ளலாம்);

மேவார் புரம் எய்தான் - பகைவர்களது முப்புரங்களை எய்தவன்;

நூல் அணி மார்பினன் - மார்பில் முப்புரிநூல் அணிந்தவன்;

நாமம் நுவன்றிடில் நோவா நிலை ஈவான் - அவன் திருநாமத்தைச் சொன்னால் வருத்தமற்ற நிலையைத் தருவான்; (நுவல்தல் - சொல்லுதல்); (நோதல் - வருந்துதல்); (அப்பர் தேவாரம் - 6.38.2 - "நோவாமே நோக்கருள வல்லாய் நீயே" - நோவாமே - வருந்தாதபடி; வருத்தம். பசி பிணி முதலியவற்றாலும், பிறப்பினாலும் வருவன);

பால் அன நீறு அணி நெற்றியனாய்த் தொழு - பால் போல வெண்மையாக இருக்கும் திருநீறு பூசிய நெற்றியன் ஆகித் தொழுத;

பாலற்கு இடர் செய்த காலனை வீட்டிய காலுடையான் பதி கள்ளில் நகர்தானே - பாலனுக்கு (மார்க்கண்டேயருக்கு) துன்பம் விளைத்த எமனை அழித்த திருக்காலை உடையவன் உறையும் தலம் திருக்கள்ளில்; (சுந்தரர் தேவாரம் - 7.59.2 - "காலற் சீறிய காலுடையானை");


5)

வேதனை யைத்தரு வெவ்வினை தீர்ந்திட வேண்டிப் பிறைசூடும்

நாதனை வாழ்த்திய நற்றமிழ் ஓதிடு நாவர்க் கருளெம்மான்

வேதன தோர்சிரம் உண்கலன் ஆகிய வேந்தன் குழைதோடு

காதணி கின்றபி ரானுறை யும்பதி கள்ளில் நகர்தானே.


வேதனையைத் தரு வெவ்வினை தீர்ந்திட வேண்டிப் - துன்பத்தைத் தருகின்ற கொடிய வினைகள் தீர்வதற்காக;

பிறைசூடும் நாதனை வாழ்த்திய நற்றமிழ் ஓதிடு நாவர்க்கு அருள் எம்மான் - சந்திரனைச் சூடிய தலைவனை வாழ்த்தும் நல்ல தமிழான தேவாரம் திருவாசகம் இவற்றை ஓதுகின்ற நாக்கை உடையவர்களுக்கு அருளும் எம்பெருமான்;

வேதனது ஓர் சிரம் உண்கலன் ஆகிய வேந்தன் - பிரமனுடைய ஒரு தலையைப் பிச்சைப்பாத்திரமாக ஏந்திய அரசன்;

குழை தோடு காது அணிகின்ற பிரான் உறையும் பதி கள்ளில் நகர்தானே - காதில் குழையையும் தோட்டையும் அணிகின்ற தலைவன் உறைகின்ற தலம் திருக்கள்ளில் ஆகும்;


6)

மண்ணவர் விண்ணவர் வேண்டுவ ரந்தரு வள்ளல் கயிலாயன்

வெண்ணில வைச்சடை வைத்தவன் ஏறமர் வேந்தன் கணையொன்றால்

நண்ணலர் ஊரொரு மூன்றையும் எய்தவன் நாரிக் கிடமீந்த

கண்ணுத லான்கரு தும்பதி காமரு கள்ளில் நகர்தானே.


று அமர் வேந்தன் - இடபத்தை வாகனமாக விரும்பும் அரசன்;

கணைன்றால் நண்ணலர் ஊர் ஒரு மூன்றையும் எய்தவன் - ஓர் அம்பால் பகைவர்களது முப்புரங்களையும் எய்தவன்; (நண்ணலர் - நண்ணார் - பகைவர்);

நாரிக்கு இம் ஈந்த கண்ணுதலான் கருதும் பதி காமரு கள்ளில் நகர்தானே - உமைக்கு இடப்பாகம் தந்தவனும், நெற்றிக்கண்ணனும் ஆன பெருமான் விரும்பி உறையும் தலம் அழகிய திருக்கள்ளில் ஆகும். (நாரி - பெண்); (காமரு - அழகிய);


7)

பொய்த்தலை யாதடி போற்றிடு வார்வினை போக்கும் திருவாளன்

நெய்த்தலை மூவிலை வேலினன் நீள்மதி நீரார் சடையீசன்

எய்த்தடை வானவர் இன்புற இன்னமு தீந்தான் கனிவோடு

கைத்தவி டத்தினை உண்டபி ரான்பதி கள்ளில் நகர்தானே.


பொய்த்து அலையாது அடி போற்றிடுவார் வினை போக்கும் திருவாளன் - பொய்ம்மையை நீங்கி என்றும் திருவடியைத் துதிக்கும் மெய்யன்பர்களது வினைகளைத் தீர்த்து அருளும் திருவுடையவன்; (பொய்த்தல் - வஞ்சித்தல்);

நெய்த்தலை மூ இலை வேலினன் - நெய் பூசப்பெற்ற நுனிகளை உடைய திரிசூலப் படையை உடையவன்; (நெய் - எண்ணெய்); (தலை - நுனி); (மூ இலை வேல் - திரிசூலம்); (சம்பந்தர் தேவாரம் - 1.106.4 - "நெய்யணி மூவிலைவேல்"); (ஆயுதங்கள் துருப்பிடியாதிருக்க அவற்றின்மேல் நெய் பூசுவார்கள்);

நீள் மதி நீர் ஆர் சடை ஈசன் - வளைவாக நீண்ட பிறைமதியும் கங்கையும் பொருந்துகின்ற சடையை உடைய ஈசன்; (ஆர்தல் - பொருந்துதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.109.4 - "நீண்மதியோடு ஆறணி சடையினன்");

எய்த்து அடை வானவர் இன்புற இன்னமுது ஈந்தான் - வருந்தி வந்து சரண் புகுந்த தேவர்கள் மகிழ அவர்களுக்கு இனிய அமுதத்தைக் கொடுத்தவன்;

கனிவோடு கைத்த விடத்தினை உண்ட பிரான் பதி கள்ளில் நகர்தானே - கசப்புத் தன்மை உடைய விஷத்தைத் தேவர்களுக்கு இரங்கி உண்ட தலைவன் உறையும் தலம் திருக்கள்ளில் ஆகும்; (கனிவு - இரக்கம்);


8)

முந்தரு வெற்பெறி மூடன தாற்றலை முற்றும் தொலைவித்து

வந்தனை செய்திசை பாடம கிழ்ந்தொரு வாளும் தருதேவன்

வந்தடி யிற்பல நன்மலர் தூவிய வானோர் இடர்தீரக்

கந்தனை நல்கிய கண்ணுத லான்பதி கள்ளில் நகர்தானே.


முந்து அரு-வெற்பு றி மூடனது ஆற்றலை முற்றும் தொலைவித்து - முன்பு கயிலைமலையைப் பெயர்த்த அறிவிலியான இராவணனது வலிமையை முழுதும் அழித்து; (வெற்பு - மலை); (மூடன் - அறிவிலி); (சம்பந்தர் தேவாரம் - 2.122.8 - "அரக்கன் உரத்தைத் தொலைவித்தவன்");

வந்தனை செய்து இசை பாட மகிழ்ந்து ஒரு வாளும் தரு தேவன் - பின்னர் அவன் அழுது போற்றி இசைபாடி வணங்க, அதற்கு மகிழ்ந்து அவனுக்குச் சந்திரஹாஸம் என்ற ஒரு வாளையும் கொடுத்த தேவன்;

வந்து அடியிற் பல நன்மலர் தூவிய வானோர் இடர் தீரக் - வந்து பல சிறந்து பூக்களைத் திருவடியில் தூவி வழிபட்ட தேவர்களுடைய துன்பம் தீரும்படி;

கந்தனை நல்கிய கண்ணுதலான் பதி கள்ளில் நகர்தானே - முருகனைத் தந்த நெற்றிக்கண்ணன் உறையும் தலம் திருக்கள்ளில் ஆகும்;


9)

வாமனன் நான்முகன் நேடிஅ யர்ந்தடி வாழ்த்தத் தழலானான்

தூமனம் உள்ளவர் தொண்டினை ஏற்றவர் துன்பம் துடையீசன்

மாமணம் நாறிடு கொன்றைய ணிந்தவன் வாசச் சரமெய்த

காமனை நீறது வாக்கிய வன்பதி கள்ளில் நகர்தானே.


வாமனன் நான்முகன் நேடி அயர்ந்து அடி வாழ்த்தத் தழல் ஆனான் - வாமன அவதாரம் உடைய திருமாலும் பிரமனும் தேடித் தளர்ந்து திருவடியை வாழ்த்தும்படி சோதி ஆனவன்;

தூ மனம் உள்ளவர் தொண்டினை ஏற்று, அவர் துன்பம் துடை ஈசன் - தூய மனம் உடைய பக்தர்கள் செய்யும் தொண்டுகளை ஏற்று, அவர்களுடைய துன்பங்களைப் போக்கும் ஈசன்; (துடைத்தல் - நீக்குதல்; அழித்தல்);

மா மணம் நாறிடு கொன்றை அணிந்தவன் - அழகிய, மிகுந்த மணம் கமழும் கொன்றைமலரை அணிந்தவன்;

வாசச் சரம் எய்த காமனை நீறது ஆக்கியவன் பதி கள்ளில் நகர்தானே - மணமுடைய அம்பை எய்த மன்மதனைச் சாம்பல் ஆக்கியவன் உறையும் தலம் திருக்கள்ளில் ஆகும்; (சம்பந்தர் தேவாரம் - 1.112.6 - "மாறெதிர் வருதிரி புரமெரித்து நீறது வாக்கிய நிமலனகர்");


10)

மெய்யினில் நீறணி யாதவர் வாயுரை பொய்யில் விழவேண்டா

கொய்யணி பூக்கொடு போற்றிடு வார்க்கருள் கொன்றைச் சடையெந்தை

செய்யநி றத்தினன் அம்புலி சூடிய சேவார் கொடியண்ணல்

கையினில் ஒண்மழு வாளுடை யான்பதி கள்ளில் நகர்தானே.


மெய்யினில் நீறு அணியாதவர் வாய் உரை பொய்யில் விழவேண்டா - உடலில் திருநீறு பூசாதவர்களுடைய வாய்கள் சொல்லும் பொய்களில் விழுந்து அழிய வேண்டா;

கொய் அணி பூக்கொடு போற்றிடுவார்க்கு அருள் கொன்றைச் சடை எந்தை - கொய்த அழகிய பூக்களால் வழிபடும் பக்தர்களுக்கு அருள்கின்றவனும், கொன்றையைச் சடையில் அணிந்தவனுமான எம் தந்தை;

செய்ய நிறத்தினன் - செம்மேனியன்; (செய்ய - சிவந்த);

அம்புலி சூடிய, சே ஆர் கொடி அண்ணல் - சந்திரனைச் சூடியவனும் இடபச் சின்னம் பொறித்த கொடியை உடையவனுமான பெருமான்;

கையினில் ஒண் மழுவாள் உடையான் பதி கள்ளில் நகர்தானே - கையில் ஒளிவீசும் மழுவாயுதத்தை உடையவன் உறையும் தலம் திருக்கள்ளில் ஆகும்;


11)

நீர்பனி ஆர்மலர் கொண்டடி ஏத்திடும் நேயர்க் கருளெம்மான்

ஓர்பணி கச்சென வீக்கிய உத்தமன் ஒண்ணீ றணிதோளன்

மார்பணி தாரென மாசுணம் ஆடிட வன்னஞ் சமுதுண்டு

கார்மணி காட்டிய கண்டனி ருப்பது கள்ளில் நகர்தானே.


நீர், பனி ஆர் மலர் கொண்டு அடி ஏத்திடும் நேயர்க்கு அருள் எம்மான் - நீரும், குளிர்ந்த பூக்களும் கொண்டு திருவடியைப் போற்றும் அன்பர்களுக்கு அருளும் எம்பெருமான்; (சம்பந்தர் தேவாரம் - 1.74.4 - "நினைவார் நினைய இனியான் பனியார் மலர்தூய் நித்தலும்");

ஓர் பணி கச்சு என வீக்கிய உத்தமன் - ஒரு நாகப்பாம்பை அரையில் கச்சாகக் கட்டிய உத்தமன்; (பணி - நாகப்பாம்பு); (வீக்குதல் - கட்டுதல்);

ள் நீறு அணி தோளன் - ஒளிவீசும் திருநீற்றைப் புஜங்களில் பூசியவன்;

மார்பு அணி தார் என மாசுணம் ஆடிட - மார்பில் அணியும் மாலையாக ஒரு பாம்பு ஆடும்படி அணிந்து;

வன் நஞ்சு அமுதுண்டு கார் மணி காட்டிய கண்டன் இருப்பது கள்ளில் நகர்தானே - கொடிய விடத்தை அமுதமாக உண்டு கரிய மணியைக் காட்டும் நீலகண்டன் உறையும் தலம் திருக்கள்ளில் ஆகும்; (கார் மணி - கரிய மணி; "கார்மலர் = கரிய மலர்" என்பது போல் 'கார்மணி'); (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.13 - "பைங்குவளைக் கார்மலரால்");


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


No comments:

Post a Comment