Tuesday, December 27, 2022

05.48 – மருகல்

05.48மருகல்

2015-08-09

மருகல்

----------------------------------

(கலிவிருத்தம் - காய் காய் மா தேமா - என்ற வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.119.1 - "முள்ளின்மேன் முதுகூகை முரலுஞ் சோலை")


1)

பணியொன்றை அரையார்த்த பரமன் போற்றிப்

பணியும்பர் பயம்தீரப் படுநஞ் சுண்ட

மணிகண்டன் வயலாரும் மருகல் மேய

அணிகொன்றைச் சடையான்பேர் அணியென் நாவே.


பணி ஒன்றை அரை ஆர்த்த பரமன் - ஒரு பாம்பை அரையில் நாணாகக் கட்டிய கடவுள்;

போற்றிப் பணி உம்பர் பயம் தீர - துதித்து வணங்கிய தேவர்களின் அச்சம் தீரும்படி;

படு நஞ்சு உண்ட மணிகண்டன் - கொடிய, கொல்லும் விடத்தை உண்ட நீலகண்டன்; (படு - கொடிய; பெரிய); (படுத்தல் - அழித்தல்);

வயல் ஆரும் மருகல் மேய - வயல் சூழ்ந்த திருமருகலில் உறையும்;

அணி கொன்றைச் சடையான் பேர் - அழகிய கொன்றைமலரைச் சடையில் அணிந்த சிவபெருமான் திருநாமத்தை;

அணி என் நாவே - என் நாவே, நீ அணிவாயாக;


2)

துதிமாணி உயிர்கொல்லத் தொடர்ந்த டைந்த

கொதிகூற்றை உதைகாலன் குஞ்சி மீது

மதிசூடி வயலாரும் மருகல் மேய

பதிசீரைத் தினந்தோறும் பாடு நாவே.


துதி மாணி உயிர் கொல்லத் - சிவனைத் துதித்த மார்க்கண்டேயரது உயிரைக் கொல்வதற்கு;;

தொடர்ந்து அடைந்த கொதி கூற்றை உதை காலன் - நெருங்கிய சினந்த நமனை உதைத்த திருத்தாளினன்; (கொதித்தல் - கோபித்தல்); (கொதி - கோபம்); (கொதிகூற்றை - கொதித்த கூற்றுவனை; கொதிக்கூற்றை - சினம் உடைய கூற்றுவனை - என்பது எதுகைநோக்கிக் கொதிகூற்றை என்று க் மிகாது வந்தது என்றும் கொள்ளல் ஆம்); (பெரியபுராணம் - 12.29.146 - "திருவீரட் டானத்துத் தேவர்பிரான் சினக்கூற்றின் பொருவீரந் தொலைத்தகழல்"); (சம்பந்தர் தேவாரம் - 1.82.7 - "மதியால் வழிபட்டான் வாணாள் கொடுபோவான் கொதியா வருகூற்றைக் குமைத்தா னுறைகோயில்");

குஞ்சி மீது மதிசூடி - தலைமேல் பிறைச்சந்திரனைச் சூடியவன்; (குஞ்சி - தலை); (அப்பர் தேவாரம் - 5.23.9 - "குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே");

பதி சீரை - தலைவன் புகழை;


3)

உழைக்கன்றைக் கரத்தேந்தும் ஒருவன் அன்பால்

அழைக்கின்ற அடியார்கட் கருளும் அண்ணல்

மழைக்கண்டன் வயலாரும் மருகல் மேய

குழைக்காதன் புகழ்நாமம் கூறு நாவே.


உழைக்-கன்றைக் கரத்து ஏந்தும் ஒருவன் - மான்கன்றைக் கையில் ஏந்திய ஒப்பற்றவன்;

மழைக்கண்டன் - மேகம் போன்ற கரிய நிறத்தைக் கண்டத்தில் உடையவன்; (மழை - மேகம்; கருமை);

குழைக்காதன் - காதில் குழை அணிந்தவன்;

புகழ் நாமம் - புகழையும் திருநாமத்தையும்;


4)

பொறையாளன் இடுகாட்டிற் பூதம் சூழ்ந்து

பறையார்க்க நடமாடும் பாதன் நாலு

மறையோதி வயலாரும் மருகல் மேய

பிறைசூடி புகழ்என்றும் பேசு நாவே.


பொறையாளன் - பொறுப்பவன்; கருணையுடையவன்; (பொறை - கருணை; சுமத்தல்);

இடுகாட்டிற் பூதம் சூழ்ந்து பறை ஆர்க்க நடம் ஆடும் பாதன் - சுடுகாட்டில் பூதகணங்கள் சூழ்ந்து பறைகளை ஒலிக்கக் கூத்து ஆடும் திருவடியினன்;

நாலு மறை ஓதி - நால்வேதம் ஓதுபவன்;

பிறைசூடி - சந்திரனை அணிந்தவன்;


5)

தளைக்கின்ற வினைதீரச் சார்ந்தார் இன்பில்

திளைக்கின்ற நிலைநல்கும் செல்வன் ஓர்பால்

வளைக்கையான் வயலாரும் மருகல் மேய

துளக்கில்லான் திருநாமம் சொல்லு நாவே.


தளைக்கின்ற வினை தீரச் சார்ந்தார் இன்பில் திளைக்கின்ற நிலை நல்கும் செல்வன் - தன்னை அடைந்த பக்தர்களைப் பிணித்துள்ள, சுடுகின்ற வினையெல்லாம் தீர, அவர்கள் இன்பத்தில் திளைக்கின்ற நன்னிலையை அருளும் செல்வன்; (தளைத்தல் - கட்டுதல்; கொதித்தல்);

ஓர்பால் வளைக்கையான் - ஒரு பக்கம் வளை அணிந்த கையை உடையவன் - உமைபங்கன்;

துளக்கு இல்லான் - அச்சம் இல்லாதவன் / அசைவு இல்லாதவன்;


6)

அழகன்வெள் விடையன்வெற் பரையன் பாவை

கொழுநன்கொல் புலித்தோலன் கூரி லங்கு

மழுவன்தண் வயலாரும் மருகல் மேய

குழகன்தன் புகழ்நாமம் கூறு நாவே.


வெள் விடையன் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவன்;

வெற்பு அரையன் பாவை கொழுநன் - இமவான் மகள் கணவன்; (அரையன் - அரசன்); (கொழுநன் - கணவன்);

கொல்புலித்தோலன் - கொல்லும் தன்மையையுடைய புலியின் தோலை ஆடையாகக் கட்டியவன்; ('கொல்' என்ற சொல்லை அசையாகக் கொண்டு, "பாவை கொழுநன்கொல்", "புலித்தோலன்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

கூர் இலங்கு மழுவன் - கூர்மை பொருந்திய மழுவை ஏந்தியவன்;

குழகன் - இளைஞன்;

புகழ் நாமம் - புகழையும் திருநாமத்தையும்;


7)

சரம்வெல்லும் எனவெய்த காமன் தன்னை

உருவில்லி எனவாக்கி ஊர்மூன் றெய்த

வரைவில்லி வயலாரும் மருகல் மேய

வரையில்லி கழல்நாளும் வாழ்த்து நாவே.


சரம் வெல்லும் என எய்த காமன் தன்னை உரு இல்லி என ஆக்கி - தன் மலரம்புகள் வெல்லும் என்று எண்ணி எய்த மன்மதனை உருவம் அற்றவன் என்று ஆக்கியவன்;

ஊர் மூன்று எய்த வரைவில்லி - முப்புரங்களை மேருமலை என்ற வில்லை ஏந்தி எய்தவன்; (வரை - மலை);

வரையில்லி - அளவு இல்லாதவன்; (வரை - எல்லை; அளவு);


8)

அடியோடு மலைபேர்த்த அரக்கன் பத்து

முடிதோள்கள் நெரிசெய்த முக்கண் மூர்த்தி

வடியாரும் திரிசூலன் மருகல் மேய

பொடிபூசி திருநாமம் புகலென் நாவே.


அடியோடு மலைபேர்த்த அரக்கன் பத்து முடி தோள்கள் நெரிசெய்த முக்கண் மூர்த்தி - கயிலைமலையை வேரோடு பெயர்த்த இராவணனது பத்துத் தலைகளையும் புஜங்களையும் நசுக்கிய முக்கட்பெருமான்; (நெரிசெய்த - நெரித்த; நசுக்கிய;); (சம்பந்தர் தேவாரம் - 1.50.8 - "பொன் மலையை வேரொடும்பீழ்ந் தேந்தலுற்ற வேந்தனிரா வணனைத் தேரொடும்போய் வீழ்ந்தலறத் திருவிரலா லடர்த்த")

வடி ஆரும் திரிசூலன் - கூர்மை பொருந்திய திரிசூலத்தை ஏந்தியவன்;

பொடிபூசி - திருநீற்றைப் பூசியவன்;

புகல்தல் - சொல்லுதல்;


9)

அன்றிருவர் அறியாத அளவில் சோதி

ஒன்றிநினை அடியார்தம் உள்ளி ருப்பான்

மன்றினடம் புரிபாதன் மருகல் மேய

வென்றிவிடைக் கொடியான்சீர் விளம்பு நாவே.


அன்று இருவர் அறியாத அளவு இல் சோதி - முற்காலத்தில் பிரமனும் திருமாலும் அறிதற்கு அரியவனாய் அளவு இல்லாத சோதியாய் நின்றவன்;

ஒன்றி நினை அடியார்தம் உள் இருப்பான் - மனம் ஒன்றி நினைக்கும் பக்தர்களின் நெஞ்சில் உறைபவன்;

மன்றில் நடம் புரி பாதன் - சபையில் ஆடுகின்ற திருப்பாதன்;

மருகல் மேய வென்றிவிடைக் கொடியான் சீர் விளம்பு நாவே - திருமருகலில் உறைகின்ற, வெற்றியுடைய இடபக்கொடி உடைய சிவபெருமான் புகழை, நாவே நீ சொல்வாயாக.


10)

சலமுங்கிப் பலபொய்சொல் சழக்கர்க் கென்றும்

இலனங்கம் புனையண்ணல் எரியின் வண்ணன்

மலைமங்கை ஒருபங்கன் மருகல் மேய

கலையங்கை உடையான்சீர் கழறு நாவே.


சலம் முங்கிப் பல பொய் சொல் சழக்கர்க்கு என்றும் இலன் - வஞ்சனையில் மூழ்கிப் பல பொய்கள் சொல்லும் தீயோர்க்கு இல்லாதவன்; அவர்களால் அறியப்படாதவன்; அவர்களுக்கு அருள் இல்லாதவன்; (சலம் - வஞ்சனை; பொய்ம்மை); (முங்குதல் - மூழ்குதல்); (சழக்கர் - தீயவர்); (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலமிலன்");

அங்கம் புனை அண்ணல் - எலும்பை அணிபவன்; (அங்கம் - எலும்பு);

எரியின் வண்ணன் - தீப்போன்ற செந்நிறம் உடையவன்;

கலை அங்கை உடையான் - மானைக் கையில் ஏந்தியவன்;

சீர் கழறு நாவே - நாவே, நீ அப்பெருமானது புகழைச் சொல்; (கழறுதல் - சொல்லுதல்);


11)

பங்கமற மலர்க்கண்ணைப் பறித்துப் போற்று

சங்குதரி அரிக்காழி தந்த சம்பு

மங்கையிடம் மகிழண்ணல் மருகல் மேய

கங்கையடை சடையான்சீர் கழறு நாவே.


பங்கம் அற மலர்க்கண்ணைப் பறித்துப் போற்று சங்கு தரி அரிக்கு ஆழி தந்த சம்பு - (ஆயிரம் தாமரைகளில் ஒரு பூக் குறையவும்) பூசையில் குற்றம் இல்லாதபடி தன்னுடைய மலர் போன்ற கண்ணை இடந்து இட்ட, சங்கு ஏந்துகின்ற திருமாலுக்குச் சக்கராயுதம் அருள்செய்த சம்பு; (பங்கம் - குற்றம்); (பறித்தல் - தோண்டுதல்); (ஆழி - சக்கரம்); (சம்பு - சுகத்தைத் தருபவன் - சிவன்); (மாலுக்குச் சக்கரம் அளித்தது திருவீழிமிழலைத் தலவரலாறு);

மங்கை இடம் மகிழ் அண்ணல் - உமையை இடப்பக்கம் ஒரு கூறாக விரும்புகின்றவன்;

மருகல் மேய - திருமருகலில் உறைகின்ற;

கங்கை அடை சடையான் - கங்கையை அடைத்த சடையை உடையவன்;

சீர் கழறு நாவே - நாவே, நீ அப்பெருமானது புகழைச் சொல்; (கழறுதல் - சொல்லுதல்);


பிற்குறிப்பு :

இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு : இப்பதிகம், "சம்பந்தர் தேவாரம் - 1.119.1 - முள்ளின்மேன் முதுகூகை முரலுஞ் சோலை" என்ற பதிகப் பாடல்களின் அமைப்பை ஒட்டி அமைந்தது. அந்தத் தேவாரப் பதிகத்தின் அமைப்பை -

  • வெள்ளைவாரணனார் "கொச்சக ஒருபோகு" என்கின்றார்.

  • தி.வே.கோபாலையர் "கலிவிருத்தம்" என்கின்றார்.


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment