Tuesday, December 13, 2022

06.03.060 - அம்மை - உடனிற்கும் - மடக்கு

06.03 – மடக்கு

2014-07-25

06.03.060 - அம்மை - உடனிற்கும் - மடக்கு

-------------------------

அம்மை திகழ்கண்டன் அன்பருக் கப்பனாய்

அம்மை எனவானான் இம்மையோ - டம்மை

உடனிற்கும் நற்றுணை ஒண்பொடிசாந் தம்போல்

உடனிற்கும் கோன்புகழ் ஓது.


அம்மை - 1. அம் மை (a. அந்தக் கருமை; b. அழகிய கருமை); 2. தாய்; 3. மறுமை;

உடனிற்கும் - 1. உடன் நிற்கும்; 2. உடல் நிற்கும்;

நிற்றல் - தங்குதல்;

பொடி - திருநீறு;

சாந்தம் - சந்தனம்;

கோன் - தலைவன்;


அம் மை திகழ் கண்டன் - அந்த அழகிய கருமை திகழ்கின்ற கண்டத்தை உடையவன்;

அன்பருக்கு அப்பன் ஆய் அம்மை எனனான் - பக்தர்களுக்குத் தந்தை ஆகித் தாயும் ஆனவன்; (அம்மை - அம்மையும் - உம்மைத்தொகை); (அப்பர் தேவாரம் - 6.95.1 - "அப்பன்நீ அம்மைநீ")

இம்மையோடு அம்மை உடன் நிற்கும் நல் துணை - இம்மை மறுமையில் அடியார்கள் கூடவே இருந்து காக்கும் நல்ல துணை;

ஒண்பொடி சாந்தம்போல் உடல் நிற்கும் கோன் புகழ் ஓது - ஒளியுடைய திருநீறு சந்தனம்போல் திருமேனியில் நிலைபெற்ற தலைவன் புகழைப் பாடு; (அப்பர் தேவாரம் - 4.80.5 - "மைஞ்ஞின்ற வொண்கண் மலைமகள்" - கருமை நிலைபெற்ற ஒளிமிக்க கண்களை உடைய சிவகாமி);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment