Sunday, December 4, 2022

06.02.181 – மாந்துறை (வடகரை) - படியா மனம் இதனால் - (வண்ணம்)

06.02.181 – மாந்துறை (வடகரை) - படியா மனம் இதனால் - (வண்ணம்)

2014-05-03

06.02.181 - படியா மனம் இதனால் - மாந்துறை (வடகரை)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந்

தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந்

தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந் .. தனதான )

(தமிழோதிய குயிலோமயி லாண்டலை யாம்புறவங் - திருப்புகழ் - திருவண்ணாமலை)


படியாமன மிதனாலுனை நான்றொழு தோம்புதலும்

.. பயிலேனிடர் மிகுமாழ்கட னீந்தகி லேன்றினமும்

.. பதமேபணி நினைவாகவு மான்றகு ழாம்புகவும் .. பணியாயே

பிடிநாணென அரவாகிட வான்கடை ஞான்றுவிடம்

.. பெருவாரியி லுருவாகிட ஆங்கவர் பாம்பணியும்

.. பெருமானருள் புரியாயெயன வேண்டவு மார்ந்தகருங் .. களநேயா

துடிபோலிடை உடையாளொரு பூங்கொடி போன்றவளந்

.. துவர்வாயளை ஒருபாதியி லேந்தியும் வான்பிறையுந்

.. துணையாகிட நதிவேணியி லேந்திய ஏந்தலெனும் .. புகழோனே

கடிமாமலர் சொரிதேனினை மாந்திட வேண்டிவிதந்

.. தறுகாலின மிசைபாடுத லோங்கிட வான்றடவுங்

.. கவினார்பொழில் மணிநீர்வயல் சூழ்ந்திடு மாந்துறையெம் .. பெருமானே.


பதம் பிரித்து:

படியா மனம் இதனால் உனை நான் தொழுது ஓம்புதலும்

.. பயிலேன்; இடர் மிகும் ஆழ்கடல் நீந்தகிலேன்; தினமும்

.. பதமே பணி நினைவு ஆகவும், ஆன்ற குழாம் புகவும் பணியாயே;

பிடி நாண் என அரவு ஆகிட, வான் கடை ஞான்று, விடம்

.. பெரு வாரியில் உருவாகிட, ஆங்கு அவர், "பாம்பு அணியும்

.. பெருமான்! அருள்புரியாய்" என வேண்டவும், ஆர்ந்த கரும் கள நேயா;

துடி போல் இடை உடையாள், ஒரு பூங்கொடி போன்றவள், அம்

.. துவர் வாயளை ஒரு பாதியில் ஏந்தியும், வான் பிறையும்

.. துணை ஆகிட நதி வேணியில் ஏந்திய ஏந்தல் எனும் புகழோனே;

கடி மா மலர் சொரி தேனினை மாந்திட வேண்டி, விதந்து

.. அறுகால் இனம் இசைபாடுதல் ஓங்கிட வான் தடவும்

.. கவின் ஆர் பொழில், மணி நீர் வயல் சூழ்ந்திடு மாந்துறை எம் பெருமானே.


படியா மனம் இதனால் உனை நான் தொழுது ஓம்புதலும் பயிலேன் - அடங்காத இந்த மனத்தால் உன்னைத் தொழுது போற்றி வாழமாட்டேன்; (படிதல் - அடங்குதல்); (பயிலுதல் - ஒழுகுதல்);

இடர் மிகும் ஆழ்கடல் நீந்தகிலேன் - துன்பம் மிக்க ஆழமான வினைக்கடலை கடக்கமாட்டேன்; (கிற்றல் - இயலுதல்; கில்லேன் - மாட்டேன்);

தினமும் பதமே பணி நினைவு ஆகவும், ஆன்ற குழாம் புகவும் பணியாயே - (அத்தகைய எனக்கும்) நாள்தோறும் உன் திருவடியையே பணியும் எண்ணம் தோன்றவும், (நான்) மேன்மையுடைய அடியார் குழாத்திற் சென்று சேரவும் அருள்புரிவாயாக; (ஆன்ற - மாட்சிமை பொருந்திய); (குழாம் - குழு; கூட்டம்); (பணித்தல் - அருளிச்செய்தல்; ஆணையிடுதல்; கொடுத்தல்);


பிடி நாண் என அரவு ஆகிட, வான் கடை ஞான்று, விடம் பெரு வாரியில் உருவாகிட - பிடிக்கும் கயிறாக வாசுகி என்ற பாம்பைக்கொண்டு தேவர்கள் கடைந்தபோது, பெரிய பாற்கடலில் நஞ்சு தோன்றவும்; (நாண் - கயிறு); (ஞான்று - சமயத்தில்);

ஆங்கு அவர், "பாம்பு அணியும் பெருமான்! அருள்புரியாய்" என வேண்டவும், ஆர்ந்த கரும் கள நேயா - அங்கே தேவர்கள், "பன்னக பூஷணா! காத்தருளாய்" என்று வேண்டவும், அந்த விடத்தை உண்ட கரிய கண்டம் உடைய அன்பனே; (ஆர்தல் - உண்ணுதல்); (களம் - கழுத்து; கண்டம்);


துடி போல் இடை உடையாள், ஒரு பூங்கொடி போன்றவள், அம் துவர் வாயளை ஒரு பாதியில் ஏந்தியும் - உடுக்கை போன்ற இடையை உடையவளும், ஒரு பூங்கொடி போன்றவளும், அழகிய பவளம் போன்ற வாயை உடையவளுமான உமையம்மையைத் திருமேனியில் ஒரு பாதியாகக் கொண்டும்; (அம் - அழகு); (துவர் - பவளம்; சிவப்பு);

வான் பிறையும் துணை ஆகிட நதி வேணியில் ஏந்திய ஏந்தல் எனும் புகழோனே - அழகிய பிறைச்சந்திரனோடு கங்கையையும் சடையில் தாங்கிய ஏந்தல் என்ற புகழை உடையவனே; (வான் - அழகு; வானம்); ((வான்பிறையும் - உம் - எச்சவும்மை; அசையாகவும் கொள்ளலாம்); (வேணி - சடை); (ஏந்தல் - பெருமையிற்சிறந்தோன்);


கடி மா மலர் சொரி தேனினை மாந்திட வேண்டி, விதந்து அறுகால் இனம் இசைபாடுதல் ஓங்கிட வான் தடவும் கவின் ஆர் பொழில், மணி நீர் வயல் சூழ்ந்திடு மாந்துறை எம் பெருமானே - வாசமலர்கள் சொரிகின்ற தேனை உண்ண விரும்பி வண்டினங்கள் சிறப்பாகப் புகழ்ந்து பாடுகின்ற ரீங்காரம் மிக, மேகம் வந்து வருடுகின்ற அழகிய சோலைகளும், தெளிந்த நீர் பாயும் வயல்களும் சூழும் மாந்துறையில் எழுந்தருளிய எம் பெருமானே; (கடி - வாசனை); (மாந்துதல் - உண்ணுதல்; குடித்தல்); (விதத்தல் - சிறப்பாக எடுத்துச்சொல்லுதல்); (அறுகால் - வண்டு); (தடவுதல் - வருடுதல்); (கவின் - அழகு);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment