Saturday, December 24, 2022

06.04.033 – மாணிக்க வாசகர் துதி - பெருந்துறை தன்னில்

06.04.033 – மாணிக்க வாசகர் துதி - பெருந்துறை தன்னில்

2015-06-09

06.04.033 - மாணிக்க வாசகர் துதி - மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மகம் - 2015

----------------------------------------


1) --- நேரிசை வெண்பா ---

பெருந்துறை தன்னிற் குருந்தமர்ந் தானை

அருந்துணை அண்ணலை அன்பால் - இருந்தமிழால்

ஏத்திய வாதவூர் ஏந்தல் இணையடியை

வாழ்த்தல் மயல்தீர் மருந்து.


பெருந்துறை தன்னில் குருந்து அமர்ந்தானை - திருப்பெருந்துறையில் குருந்தமரத்தடியில் வீற்றிருந்தவனை; (குருந்து - குருந்தமரம்);

அரும் துணை அண்ணலை - அரிய துணை ஆகிய பெருமானை;

அன்பால் இரும் தமிழால் ஏத்திய - அன்போடு சிறந்த தமிழால் துதித்து வழிபட்ட; (இருமை - பெருமை);

வாதவூர் ஏந்தல் இணையடியை வாழ்த்தல் மயல் தீர் மருந்து - திருவாதவூரில் அவதரித்த மாணிக்கவாசகரது இரு திருவடிகளை வாழ்த்துதல் நம் அறியாமையைத் தீர்க்கின்ற மருந்து; (ஏந்தல் - பெருமையிற் சிறந்தோன்); (மயல் - அறியாமை; மயக்கம்);


2)

அரியன் பெரியன் அடியார்க் கெளியன்

நரியைப் பரிசெய்த நம்பன் - கரியமணி

கண்டன் கழற்கே கசிந்தமணி வாசகர்சொல்

மண்டுவினை நோய்க்கு மருந்து.


அரியன் பெரியன் அடியார்க்கு எளியன் - அரியவன், பெரியவன், அன்பர்க்கு எளியவன்;

நரியைப் பரி செய்த நம்பன் - நரியைக் குதிரை ஆக்கிய நம்பன்; (நம்பன் - சிவன் திருநாமம்; விரும்பத்தக்கவன்);

கரிய மணிகண்டன் கழற்கே கசிந்த - நீலமணியைக் கண்டத்தில் உடைய பெருமான் திருவடிக்கே கசிந்து உருகிய;

மணிவாசகர் சொல் மண்டு வினைநோய்க்கு மருந்து - மாணிக்கவாசகரது பாடல்கள் நமது பெருவினை என்ற நோய்க்கு மருந்து; (மண்டுதல் - திரளுதல்; மிகுதல்; நெருக்கித் தாக்குதல்);


3)

திருவா சகமென்ற தேறலைத் தந்த

அருளாளர் வாதவூர் அண்ணல் - இருதாள்

பெருவாதை நல்கநமைப் பின்னே தொடர்ந்து

வருதீ வினைதீர் மருந்து.


திருவாசகம் என்ற தேறலைத் தந்த அருளாளர் வாதவூர் அண்ணல் இருதாள் - திருவாசகம் என்ற தேனை நமக்கு அருளிய மாணிக்கவாசகரது இரு திருவடிகள்; (தேறல் - தேன்);

பெருவாதை நல்க நமைப் பின்னே தொடர்ந்து வரு தீவினை தீர் மருந்து - பெருந்துன்பம் தர நம்மைப் பின்தொடர்கின்ற தீவினையைத் தீர்க்கின்ற மருந்து; (வாதை - துன்பம்); (நமை - நம்மை);


4) --- இன்னிசை வெண்பா ---

கொல்விடமுண் டானைக் குருவெனப் பெற்றவர்

செல்வழி காட்டும் திருவா சகமுரைத்த

செல்வரணி வாதவூர்ச் செம்மல் திருவடிகள்

வல்வினைக்கு நல்ல மருந்து.


பதம் பிரித்து:

கொல்-விடம் உண்டானைக் குரு எனப் பெற்றவர்,

செல்வழி காட்டும் திருவாசகம் உரைத்த

செல்வர், அணி வாதவூர்ச் செம்மல் திருவடிகள்

வல்வினைக்கு நல்ல மருந்து.


செல்வழி - செல்லும் நெறி;

செம்மல் - பெருமையிற் சிறந்தோன்;

அணி - அழகிய;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment