Thursday, December 22, 2022

05.31 – வலிவலம்

05.31 – வலிவலம்

2015-05-09

வலிவலம் (திருவலிவலம்)

------------------

(அறுசீர் விருத்தம் - "விளம் விளம் விளம் விளம் மா தேமா" - தானனா தானனா தானனா தானனா தான தானா)

(சம்பந்தர் தேவாரம் - 2.79.1 - "பவனமாய்ச் சோடையாய் நாவெழாப் பஞ்சுதோய்ச் சட்ட வுண்டு")


1)

அளவிலா வல்வினை அற்றுநல் லின்பமே ஆக வேண்டில்

இளநிலாச் சென்னிமேல் ஏற்றவன் வெள்விடை ஏறும் எந்தை

வளைவிலா மாமலை ஏந்திய மன்னவன் வாழ்த்து வார்க்கு

வளமெலாம் நல்கிடும் வலிவலத் தரனைநீ மறவல் நெஞ்சே.


அற்று - தீர்ந்து; (அறுதல் - இல்லாமற் போதல்; தீர்தல்);

நல்லின்பமே - மிக்க இன்பம்; (சுந்தரர் தேவாரம் - 7.97.10 - "வானோர்உலகில் சாலநல் லின்பமெய்தித் தவ லோகத் திருப்பவரே"); (நல்ல - நன்மையான. 2. மிக்க);

வளைவிலா - வளைத்த வில்லாக;

வலிவலத் தரனை - திருவலிவலத்தில் உறையும் சிவபெருமானை;

மறவல் - மறவாதே; (அல் - எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி); (சுந்தரர் தேவாரம் - 7.50.6 - "மறவல் நீ ... ... பொன்புனஞ் சூழ்புன வாயிலே" = மனமே, நீ ... புனங்களில் பொன் நிறைந்து காணப்படுகின்ற திருப்புனவாயில் அதனை மறவாது நினை);


நெஞ்சே! எல்லையற்ற தீவினைகள் எல்லாம் தீர்ந்து மிக்க இன்பமே விளைய வேண்டினால், இளம்பிறையைச் சூடியவனும், வெண்ணிற இடபத்தை வாகனமாக உடைய எம் தந்தையும், வளைத்த வில்லாக மேருமலையை ஏந்திய தலைவனும், போற்றுபவர்களுக்கு எல்லா வளங்களையும் அளிப்பவனும், திருவலிவலத்தில் உறைபவனுமான சிவபெருமானை நீ மறவாதே!


2)

தீர்விலாத் தீவினை தீர்ந்துநல் லின்பமே சேர வேண்டில்

நீர்நிலாச் சென்னியான் நெற்றிமேற் கண்ணினான் நித்தல் ஏத்திச்

சீர்பரா வன்பரைக் காத்துவன் கூற்றினைச் செற்ற காலன்

மார்பரா மாலையான் வலிவலத் தரனைநீ மறவல் நெஞ்சே.


தீர்வு இலா - முடிவு இல்லாத; (தீர்வு - Removal, separation; நீங்குகை);

நீர் நிலாச் சென்னியான் - கங்கையையும் சந்திரனையும் முடிமேல் ஏற்றவன்;

நித்தல் - தினமும்;

சீர்பராவன்பரை - சீர் பராவு அன்பரை - புகழ் பாடுகின்ற மார்க்கண்டேயரை; (பராவுதல் - பரவுதல் - புகழ்தல்);

வன்கூற்றினைச் செற்ற காலன் - கொடிய நமனை உதைத்த சேவடியான்;

மார்பரா மாலையான் - மார்பு அரா மாலையான் - மார்பில் பாம்பை மாலையாகப் பூண்டவன்;


3)

வழுவெலாம் நீங்கிநல் லின்பமே வாழ்வினில் மல்க வேண்டில்

அழுதுவா னோரெலாம் ஆர்கழல் போற்றவும் ஆலம் உண்டு

பழுதிலா அமுதமீந் தருளினான் பாவையோர் பங்கன் அங்கை

மழுவினான் சோலைசூழ் வலிவலத் தரனைநீ மறவல் நெஞ்சே.


வழு - குற்றம்; பாவம்;

மல்குதல் - மிகுதல்; பெருகுதல்;

ஆர்கழல் - ஒலிக்கின்ற கழலை அணிந்த திருவடி; (ஆர்த்தல் - ஒலித்தல்);

பழுது - குற்றம்;

அங்கை மழுவினான் - கையில் மழுவை ஏந்தியவன்;


4)

தாளலா காவிடர் செய்வினை யாவுமே சாய வேண்டில்

வேளைநீ றாக்கிய வேதியன் ஆதியன் வேத கீதன்

கோளரா கூவிளம் கொன்றையார் சென்னியான் கோல மார்பில்

வாளரா மாலையான் வலிவலத் தரனைநீ மறவல் நெஞ்சே.


தாளல் ஆகா இடர்செய் வினை யாவும் - தாங்க ஒண்ணாத துன்பம் செய்கின்ற தீவினை எல்லாம்;

சாய்தல் - அழிதல்;

வேள் - மன்மதன்;

வேதியன் - மறைமுதல்வன்; (CKS அவர்களின் பெரிய புராண உரையில் "நீற்றால்நிறை வாகிய" என்ற பாடல் விளக்கத்திற் காண்பது: - வேதத்தைச் சொன்னவன்; வேதத்தின் பொருள் ஆனவன்; வேதத்தில் விளங்குபவன்; வேதித்தல் - வேறுபடுத்துதல் என்று கொண்டு உரைத்தலுமாம். அழித்தலாவது வேறுபடுத்தலேயாம்.);

வேத கீதன் - மறைகளைப் பாடுகின்றவன்; (அப்பர் தேவாரம் - 4.62.1 - "வேதியா வேத கீதா");

கோள் அரா - கொடிய பாம்பு; கொலைத்தொழிலையுடைய பாம்பு; விழுங்குதலை உடைய பாம்பு.;(கோள் - வலிமை; கொள்ளுதல்);

கூவிளம் - வில்வம்;

ஆர்தல் - பொருந்துதல்;

கோல மார்பில் - அழகிய மார்பில்;

வாள் அரா - ஒளியுடைய பாம்பு; (வாள் - ஒளி; கொடுமை; கொல்லுதல்);


5)

தீதையே நல்கிடும் தீவினை யாவுமே தீர வேண்டில்

காதையார் குழையினான் காலிலார் கழலினான் காத லோடு

போதையார் தூவிநின் றேத்தினும் இன்னருள் புரியும் ஈசன்

மாதையோர் கூறுடை வலிவலத் தரனைநீ மறவல் நெஞ்சே.


தீது - துன்பம்;

காதையார் குழையினான் - காதிற் குழை அணிந்தவன்; (சம்பந்தர் தேவாரம் - 3.24.2 - "போதையார் பொற்கிண்ணத் தடிசில்... காதையார் குழையினன்");

காதலோடு போதை யார் தூவிநின்று ஏத்தினும் - பக்தியோடு பூக்களைத் தூவி எவர் வழிபட்டாலும்;

மாதை ஓர் கூறுடை - பார்வதியை ஒரு பாகமாக உடைய;


6)

பாசமார் கையுடைத் தூதுவர் நண்ணிடார் பாவ மெல்லாம்

நாசமாய் நன்மையே உற்றிட வேண்டினால் நாக நாணன்

நேசமார் மங்கையோர் பங்கினன் நிகரிலா நீல கண்டன்

வாசமார் சோலைசூழ் வலிவலத் தரனைநீ மறவல் நெஞ்சே.


பாசம் ஆர் கையுடைத் தூதுவர் நண்ணிடார் - பாசத்தைக் கையில் பற்றிய எமதூதர்கள் நெருங்கமாட்டார்; (அப்பர் தேவாரம் - 5.86.1 - "காலபாசம் பிடித்தெழு தூதுவர் பாலகர் விருத்தர் பழையார் எனார்");

நாக நாணன் - பாம்பை அரைநாணாகக் கட்டியவன்; முப்புரம் எரித்தபோது வில்லில் பாம்பை நாணாகக் கட்டியவன்;

நிகர் இலா நீலகண்டன் - ஒப்பற்ற நீலகண்டத்தை உடையவன்;


7)

பழையவல் வினையெலாம் பாறிநல் லின்பமே பல்க வேண்டில்

குழையையோர் காதினிற் காட்டினான் காட்டினிற் கூத்தன் நீற்றன்

மழவிடை ஊர்தியான் மான்மறிக் கையினான் மார்பில் நூலன்

மழைநுழை சோலைசூழ் வலிவலத் தரனைநீ மறவல் நெஞ்சே.


பழைய வல்வினையெலாம் பாறி நல் இன்பமே பல்க வேண்டில் - பழைய வலிய வினையெல்லாம் அழிந்து நல்ல இன்பமே மிக வேண்டுமானால்; (பாறுதல் - அழிதல்); (பல்குதல் - மிகுதல்); (சுந்தரர் தேவாரம் - 7.97.10 - "வானோர் உலகில் சாலநல் லின்பமெய்தித் தவ லோகத் திருப்பவரே");

காட்டினிற் கூத்தன் - சுடுகாட்டில் ஆடுபவன்;

மழை நுழை சோலை சூழ் - மேகம் நுழைகின்ற பொழில்கள் சூழ்ந்த; (மழை - மேகம்);


8)

அஞ்சிட வந்தடை வினைகள்தீர்ந் தின்பமே ஆக வேண்டில்

வெஞ்சினத் தசமுகன் வீரிட மலைமிசை விரலை ஊன்றி

செஞ்சடை மேலிளம் திங்களைச் சூடிய தேவ தேவன்

மஞ்சடை சோலைசூழ் வலிவலத் தரனைநீ மறவல் நெஞ்சே.


தசமுகன் - பத்துத்தலைகளையுடைய இராவணன்;

வீரிடுதல் - திடீரெனக் கத்துதல்;

மலைமிசை விரலை ஊன்றி - கயிலைமலைமேல் திருப்பாத விரல் ஒன்றை ஊன்றியவன்; (ஊன்றி - ஊன்றியவன்; பிறைசூடி - பிறையைச் சூடியவன், விடையேறி - விடைமேல் ஏறியவன், முதலியனவற்றை ஒத்த பிரயோகம்);

மஞ்சு அடை சோலை - மேகம் அடைகின்ற பொழில்;


9)

மண்டுவல் வினையெலாம் மாய்ந்துவாழ் நாளெலாம் மகிழ வேண்டில்

விண்டுவும் வேதனும் நேடுமா றோங்கினான் வெவ்வி டத்தை

உண்டுகண் டத்தினில் வைத்தவன் நான்மறை ஓது நாவன்

வண்டுபண் செய்பொழில் வலிவலத் தரனைநீ மறவல் நெஞ்சே.


மண்டுதல் - திரளுதல்; மிகுதல்; நெருங்குதல்;

விண்டு - விஷ்ணு; (நம்பியாண்டார் நம்பி அருளிய கோயில் திருப்பண்ணியர் விருத்தம் - 11.32.49 - "விளவைத் தளர்வித்த விண்டுவும் தாமரை மேலயனும் அளவிற்கு அறியா வகைநின்ற");

வேதன் - பிரமன்;

நேடுமாறு - தேடும்படி;

வெவ்விடம் - கொடிய நஞ்சு;


10)

வம்பராய் நாள்தொறும் வஞ்சமே பேசுவார் வார்த்தை நீங்கி

உம்பரார் நாதனே ஒண்மலர்ப் பாதனே உவம னில்லாய்

சம்புவே என்பவர்க் கின்பமே நல்குவான் சாம வேதன்

வம்புலாம் சோலைசூழ் வலிவலத் தரனைநீ மறவல் நெஞ்சே.


வம்பர் - வீணர்கள்; பயனற்றவர்; துஷ்டர்;

உம்பரார் - தேவர்கள்;

ஒண்மலர்ப் பாதன் - ஒளிபொருந்திய மலர்போன்ற திருவடிகளை உடையவன்;

உவமன் இல்லாய் - ஒப்பற்றவனே; (உவமன் - உவமை); (அப்பர் தேவாரம் - 6.97.10 - "ஓரூர னல்லன் ஓருவம னில்லி");

சம்பு - சுகத்தைத் தருபவன் - சிவன்;

சாம வேதன் - சாமவேதம் ஓதுபவன்;

வம்புலாம் சோலைசூழ் - வம்பு உலாம் சோலை சூழ் - மணம் கமழும் பொழில்கள் சூழ்ந்த; (உலாம் - உலாவும்; உலாவுதல் - இயங்குதல்; வியாபித்தல்; சூழ்தல்);


11)

ஊனுடைப் பிறவியில் ஆர்த்திடும் வினைகள்தீர்ந் துய்ய வேண்டில்

தேனுடை மலர்களால் தேவர்கள் போற்றிசெய் செய்ய பாதன்

கூனுடை வான்பிறை குஞ்சிமேற் புற்றராக் கூட வைத்தான்

வானடை சோலைசூழ் வலிவலத் தரனைநீ மறவல் நெஞ்சே.


ஊனுடைப் பிறவியில் ஆர்த்திடும் வினைகள் தீர்ந்து உய்ய வேண்டில் - புலால் உடம்பில் பிறக்கச்செய்யும் வினைகளெல்ல்லாம் தீர்ந்து நாம் உய்வதற்கு; (சம்பந்தர் தேவாரம் - 3.21.4 - "ஊனுடைப் பிறவியை அறுக்க உன்னுவீர்"): (ஊன் - மாமிசம்; உடம்பு); (ஆர்த்தல் - பிணித்தல்; கட்டுதல்);

தேனுடை மலர்களால் தேவர்கள் போற்றிசெய் செய்ய பாதன் - வசமலர்களால் வானவர்கள் வழிபடும் சேவடியை உடையவன்; (செய்ய பாதன் - சிவந்த திருவடியை உடையவன்);

கூனுடை வான்பிறை குஞ்சிமேற் புற்றராக் கூட வைத்தான் - வளைந்த அழகிய பிறைச்சந்திரனைத் திருமுடிமேல் பாம்போடு ஒன்றாக வைத்தவன்; (கூன் - வளைவு); (வான் - அழகு; வானம்); (குஞ்சி - தலை); (புற்றரா - புற்றில் வாழும் தன்மையுடைய பாம்பு ); (கூடுதல் - ஒன்றுசேர்தல்;

வான் அடை சோலைசூழ் வலிவலத்து அரனை நீ மறவல் நெஞ்சே - வானளாவும் பொழில்களால் சூழப்பெற்ற திருவலிவலத்தில் உறைகின்ற சிவபெருமானை, நெஞ்சே நீ மறவாதே;


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


No comments:

Post a Comment