Sunday, December 4, 2022

06.02.180 – விரிஞ்சிபுரம் - பழி மிகுகின்ற - (வண்ணம்)

06.02.180 – விரிஞ்சிபுரம் - பழி மிகுகின்ற - (வண்ணம்)

2014-03-15

06.02.180 - பழி மிகுகின்ற - விரிஞ்சிபுரம்

-------------------------

(வண்ணவிருத்தம்;

தனதன தந்த தனதன தந்த

தனதன தந்த .. தனதான )

(இருவினை அஞ்ச வருவினை கெஞ்ச - திருப்புகழ் - திருப்பந்தணைநல்லூர்)

(இருவினை அஞ்ச மலவகை மங்க - திருப்புகழ் - திருவண்ணாமலை)


பழிமிகு கின்ற படிமட நெஞ்சு

.. .. பலவிதம் உந்த .. அதனாலே

.. படிறுமொ ழிந்து வினைகள்பு ரிந்து

.. .. படுநர கங்கள் .. அடையாமல்

வழியென நின்று வரமருள் உன்றன்

.. .. மலரடி என்றும் .. மறவாமல்

.. மணமலி கின்ற தொடைபல கொண்டு

.. .. வழிபடு சிந்தை .. அருளாயே

சுழிநதி கொன்றை சுடர்விடு கின்ற

.. .. துணிமதி துன்று .. சடையானே

.. சுடுவிடம் உண்ட கருமணி கண்ட

.. .. சுரிகுழல் மங்கை .. ஒருகூறா

பொழிலிடை வண்டு மலரவை விண்டு

.. .. பொழிமது வுண்டு .. சுரமோதப்

.. புகழுரை அன்பர் விரவுவி ரிஞ்சி

.. .. புரமுறை கின்ற .. பெருமானே.


பதம் பிரித்து:

பழி மிகுகின்றபடி மடநெஞ்சு

.. .. பலவிதம் உந்த, அதனாலே

.. படிறு மொழிந்து, வினைகள் புரிந்து,

.. .. படுநரகங்கள் அடையாமல்,

வழி என நின்று வரம் அருள் உன்றன்

.. .. மலரடி என்றும் மறவாமல்,

.. மணம் மலிகின்ற தொடை பல கொண்டு

.. .. வழிபடு சிந்தை அருளாயே;

சுழி-நதி, கொன்றை, சுடர் விடுகின்ற

.. .. துணி-மதி துன்று சடையானே;

.. சுடு-விடம் உண்ட கரு-மணி கண்ட;

.. .. சுரி-குழல் மங்கை ஒரு கூறா;

பொழிலிடை வண்டு, மலர்-அவை விண்டு

.. .. பொழி-மது உண்டு, சுரம் ஓதப்,

.. புகழ் உரை அன்பர் விரவு விரிஞ்சி

.. .. புரம் உறைகின்ற பெருமானே.


பழி மிகுகின்றபடி மடநெஞ்சு பலவிதம் உந்த அதனாலே - பழிகள் மிகும்படி பேதைமனம் பலவாறு செலுத்த, அதனால்;

படிறு மொழிந்து, வினைகள் புரிந்து, படுநரகங்கள் அடையாமல் - பொய்கள் பேசித், தீவினைகள் செய்து, கொடிய நரகங்களைச் சென்றடையாமல்; (படிறு - பொய்; வஞ்சம்); (படு நரகம் - கொடிய நரகம்);

வழி என நின்று, வரம் அருள் உன்றன் மலரடி என்றும் மறவாமல் - செந்நெறியாக இருந்து வரங்கள் அருளும் உன்னுடைய மலர் போன்ற திருவடியை மறவாது;

மணம் மலிகின்ற தொடை பல கொண்டு வழிபடு சிந்தை அருளாயே - வாசம் நிறைந்த மாலைகள் (பூமாலை, தமிழ்ப்பாமாலை) பலவற்றினால் உன்னை வழிபடும் சிந்தையைத் தந்து அருள்வாயாக;

சுழி-நதி, கொன்றை, சுடர் விடுகின்ற துணி-மதி துன்று சடையானே - சுழிகளையுடைய கங்கையும், கொன்றை மலரும், பிரகாசிக்கின்ற பிறைச்சந்திரனும் நெருங்கித் திகழ்கின்ற சடையை உடையவனே; (சுழி - நீர்ச்சுழி); (துணி - துண்டம்; துணிமதி - பிறைச்சந்திரன்);

சுடு-விடம் உண்ட கரு-மணி கண்ட - சுட்டெரிக்கும் நஞ்சை உண்ட நீலகண்டனே;

சுரி-குழல் மங்கை ஒரு கூறா - சுருண்ட கூந்தலை உடைய உமையை ஒரு பாகமாக உடையவனே; (சுரிகுழல் - கடை குழன்ற கூந்தல் - சுருண்ட கூந்தல்); (திருவாசகம் - அருட்பத்து -8.29.1 - "சுரிகுழற் பணைமுலை மடந்தை பாதியே");

பொழிலிடை வண்டு, மலர் அவை விண்டு பொழி மது உண்டு சுரம் ஓத - சோலையில் வண்டுகள், பூக்கள் மலர்ந்து பொழிகின்ற மதுவை உண்டு, சுரங்களைப் பாட; (விள்ளுதல் - மலர்தல்); (சுரம் - ஸ்வரம் - இசை); (ஓதுதல் - பாடுதல்);

புகழ் உரை அன்பர் விரவு விரிஞ்சிபுரம் உறைகின்ற பெருமானே - துதிகளைப் பாடும் பக்தர்கள் சேரும் விரிஞ்சிபுரத்தில் உறைகின்ற பெருமானே; (விரவுதல் - கலத்தல்; அடைதல்; பொருந்துதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment