06.03 – மடக்கு
2015-02-14
06.03.063 - காவி - மலர்க்கண்ணி - மடக்கு
-------------------------
காவி அணிதவத்தோர் காண்பரனை எண்ணாதூன்
காவி உழல்கின்ற கல்நெஞ்சே - காவி
மலர்க்கண்ணி பங்கனை வார்சடைமேற் கொன்றை
மலர்க்கண்ணி சூடியைநீ வாழ்த்து.
பதம் பிரித்து:
காவி அணி தவத்தோர் காண் பரனை எண்ணாது, ஊன்
காவி உழல்கின்ற கல்நெஞ்சே, காவி
மலர்க்கண்ணி பங்கனை, வார்சடைமேல் கொன்றை
மலர்க்கண்ணி சூடியை நீ வாழ்த்து.
சொற்பொருள்:
காவி - 1. காவி நிற ஆடை; 2. சுமந்து; (காவுதல் - சுமத்தல்); 3. காவி - கருங்குவளைமலர்;
தவத்தோர் - தவம் உடையவர்கள்;
காண் பரனை - காண்கின்ற மேலானவனை;
ஊன் - உடம்பு ;
உழல்தல் - அலைதல்; சுழலுதல்;
மலர்க்கண்ணி - 1. மலர் போன்ற கண்ணை உடையவள்; 2. மலரால் ஆன கண்ணி என்ற மாலைவகை;
(அப்பர் தேவாரம் - 5.92.3 - "கொன்றைக் கடிமலர்க் கண்ணியான்");
(சம்பந்தர் தேவாரம் - 2.70.12 - "காவி மலர்புரையுங் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும்");
(சுந்தரர் தேவாரம் 7.68.3 - "காவியங் கண்ணி பங்கனைக்");
சூடி - சூடியவன்; (பிறைசூடி, மதிசூடி, என்று வருவனபோல் இங்கே கொன்றைமலர்க்கண்ணிசூடி);
காவி அணி தவத்தோர் காண் பரனை எண்ணாது - காவியுடை அணிந்த தவம் உடையவர்கள் ஆய்ந்து நாடுகின்ற (/ தரிசிக்கின்ற) பரமனை எண்ணாமல்;
ஊன் காவி உழல்கின்ற கல்நெஞ்சே - இந்த உடம்பை வீணே சுமந்து உழல்கின்ற கல்மனமே;
காவி மலர்க்கண்ணி பங்கனை - குவளைமலர் போன்ற கண் உடைய உமையை ஒரு பங்கில் உடையவனை;
வார்சடைமேல் கொன்றை மலர்க்கண்ணி சூடியை நீ வாழ்த்து - நீள்சடைமேல் கொன்றைமலரால் ஆன கண்ணியை (மாலையை) அணிந்த பெருமானை, நீ வாழ்த்துவாயாக;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment