05.33 – நன்னிலம்
2015-05-24
நன்னிலம்
------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்")
1)
வானவர்கள் தேனுருவில் வந்திக்கக் குறைதீர்த்தாய்
ஏனமருப் பணிமார்பா ஈரிருவர்க் காலதன்கீழ்
ஞானமருள் தேசிகனே நன்னிலத்துப் பெருங்கோயில்
தானமென நின்றவனே தமியேனைக் காத்தருளே.
* நன்னிலத்துத் தலபுராணச் செய்தி: விருத்திராசுரனின் துன்பம் தாளாமல் தேவர்கள் தேனீக்களாய் மாறியிருந்து வழிபட்ட தலம் ஆதலின் மதுவனம் என்று பெயர் பெற்றது;
வானவர்கள் தேன் உருவில் வந்திக்கக் குறை தீர்த்தாய் - தேவர்கள் தேனீ வடிவில் வந்து வழிபட அவர்களது குறையைத் தீர்த்தவனே; (தேன் - தேனீ); (வந்தித்தல் - வழிபடுதல்);
ஏன மருப்பு அணி மார்பா - பன்றிக்கொம்பை அணிந்த மார்பை உடையவனே; (ஏனம் - பன்றி); (மருப்பு - தந்தம்; கொம்பு);
ஈரிருவர்க்கு ஆல் அதன்கீழ் ஞானம் அருள் தேசிகனே - சனகாதியர் நால்வருக்குக் கல்லால மரத்தின்கீழ் உபதேசித்த குருவே;
நன்னிலத்துப் பெருங்கோயில் தானம் என நின்றவனே - நன்னிலத்துப் பெருங்கோயிலில் எழுந்தருளியவனே; (தானம் - ஸ்தானம் - உறைவிடம்; கோயில்); (நிற்றல் - தங்குதல்);
தமியேனைக் காத்தருளே - அடியேனைக் காத்தருள்க; (தமியேன் - துணையற்ற நான்);
2)
வாரியுமிழ் நஞ்சுகண்டு வானோர்கள் வந்திறைஞ்சக்
காரியலக் கண்டத்திற் கரந்தவனே காதலுடை
நாரியொரு கூறுடையாய் நன்னிலத்துப் பெருங்கோயில்
ஆரியனே அடிபோற்றும் அடியேனைக் காத்தருளே.
வாரி - கடல்;
கார் இயலக் கண்டத்தில் கரந்தவனே - கருமை திகழும்படி மிடற்றில் ஒளித்தவனே; (இயல்தல் - பொருந்துதல்; தங்குதல்);
காதலுடை நாரி - அன்புடைய உமையம்மை;
ஆரியன் - பெரியோன்; ஆசாரியன்;
3)
அங்கியினைக் கையேந்தி ஆடுகின்ற ஆரழகா
பொங்கரவும் வெண்மதியும் புனைந்தவனே கொம்பன்ன
நங்கையொரு பங்குடையாய் நன்னிலத்துப் பெருங்கோயில்
அங்கணனே அடிபோற்றும் அடியேனைக் காத்தருளே.
அங்கி - நெருப்பு;
ஆரழகன் - அரிய அழகையுடையவன்; (சம்பந்தர் தேவாரம் - 3.61.1 - "ஆதியன் ஆதிரையன் அன லாடிய ஆரழகன்");
கொம்பு அன்ன நங்கை - பூங்கொம்பு போன்ற உமையம்மை; (நங்கை - பெண்ணிற் சிறந்தவள்);
அங்கணன் - அருள்நோக்கம் உடையவன் - சிவன்;
4)
வம்புலவு கொன்றையினாய் வழிபட்ட சிலந்திதனைச்
செம்பியர்கோன் ஆக்குவித்தாய் சீராரும் சேவடியே
நம்பியவர்க் கன்புடையாய் நன்னிலத்துப் பெருங்கோயில்
எம்பெருமான் எருதேறீ இடர்தீர்த்துக் காத்தருளே.
வம்பு உலவு கொன்றையினாய் - மணம் கமழும் கொன்றையை அணிந்தவனே;
வழிபட்ட சிலந்திதனைச் செம்பியர்கோன் ஆக்குவித்தாய் - கோச்செங்கட்சோழ நாயனார் வரலாறு; (செம்பியன் - சோழன்);
சீர் ஆரும் சேவடியே நம்பியவர்க்கு அன்பு உடையாய் - சீர் மிக்க உன் சிவந்த திருவடிகளையே விரும்பியவர்களுக்கு அன்பு உடையவனே;
நன்னிலத்துப் பெருங்கோயில் எம்பெருமான் எருதேறீ - நன்னிலத்துப் பெருங்கோயிலில் எழுந்தருளிய எம்பெருமானே, இடபவாகனனே;
இடர் தீர்த்துக் காத்தருளே - துன்பத்தைத் தீர்த்து அடியேனைக் காத்தருள்க;
5)
சக்கரமாற் கீந்தவனே சடைமுடிமேற் கூவிளமும்
கொக்கிறகும் குராமலரும் குளிர்மதியும் அணிந்தவனே
நக்கெயில்கள் மூன்றெரித்தாய் நன்னிலத்துப் பெருங்கோயில்
முக்கணனே முடிவில்லா முன்வினையைத் தீர்த்தருளே.
சக்கரம் மாற்கு ஈந்தவனே - திருமாலுக்கு ஆழி அளித்தவனே;
கூவிளம் - வில்வம்;
கொக்கிறகு - கொக்கு வடிவுடைய குரண்டாசுரனை அழித்த அடையாளம்;
நக்கு எயில்கள் மூன்று எரித்தாய் - சிரித்துக் கோட்டைகள் மூன்றை எரித்தவனே;
6)
கள்ளாரும் மலரிட்டுக் கைதொழுத வான்வாழப்
புள்ளூரும் மால்எரிகால் பொருந்துமொரு கணையெய்து
நள்ளார்ஊர் மூன்றெரித்தாய் நன்னிலத்துப் பெருங்கோயில்
வள்ளால்ஊர் விடையுடையாய் வல்வினையைத் தீர்த்தருளே.
கள் ஆரும் மலர் இட்டுக் கைதொழுத வான் வாழப் - தேன் பொருந்திய பூக்களைத் தூவிக் கைகூப்பி வணங்கிய தேவர்கள் உய்யும்படி;
புள் ஊரும் மால் எரி கால் பொருந்தும் ஒரு கணை எய்து - கருடவாகனனான திருமால், தீ, வாயு இம்மூவரும் பொருந்திய ஓர் அம்பைச் செலுத்தி;
நள்ளார் ஊர் மூன்று எரித்தாய் - பகைவர்களது முப்புரங்களையும் எரித்தவனே;
நன்னிலத்துப் பெருங்கோயில் வள்ளால் - நன்னிலத்துப் பெருங்கோயிலில் எழுந்தருளிய வள்ளலே; (வள்ளல் என்பது விளியில் வள்ளால் என்று ஆகும்);
ஊர் விடை உடையாய் - ஊர்கின்ற இடபத்தை உடையவனே; (ஊர்தல் - ஏறிநடத்துதல்);
வல்வினையைத் தீர்த்தருளே - என் வலிய வினையைத் தீர்த்து அருள்க;
7)
முகமாறு திகழ்குகனை முன்தந்த முக்கணனே
மகனாகச் சண்டிக்கு வரம்தந்த மணிகண்டா
நகையால்மும் மதிலட்டாய் நன்னிலத்துப் பெருங்கோயிற்
பகவாஎன் பல்பிறவிப் பழவினையைத் தீர்த்தருளே
குகன் - முருகன்;
மகன் ஆகச் சண்டிக்கு வரம் தந்த மணிகண்டா - சண்டேசுர நாயனாரை மகனாக ஏற்றுக்கொண்ட நீலகண்டனே;
நகையால் மும்மதில் அட்டாய் - சிரிப்பால் முப்புரங்களை எரித்தவனே;
பகவா - பகவனே; (பகவன் - பகவான் - கடவுள்); (சம்பந்தர் தேவாரம் - 2.24.4 - "நாகேச்சுர நகருள் பகவா என வல்வினை பற்றறுமே");
பல்பிறவிப் பழவினை - பல பிறவிகளிற் செய்த பழைய வினைகள்; பல பிறவிகளைத் தரும் பழைய வினைகள்;
8)
மஞ்சடையும் மலையசைத்த வாளரக்கன் வாய்பத்தும்
கெஞ்சியழு திசைபாடக் கேட்டிரங்கி வரமீந்தாய்
நஞ்சடைமா மிடற்றினனே நன்னிலத்துப் பெருங்கோயிற்
செஞ்சடையாய் பெரியோனே செய்வினையைத் தீர்த்தருளே.
மஞ்சு - மேகம்;
வாள் அரக்கன் - கொடிய அரக்கன் - இராவணன்;
நஞ்சு அடை மா மிடற்றினனே - விடத்தை அடைத்த அழகிய கண்டத்தை உடையவனே;
செய்வினை - செய்த வினைகள்;
9)
வரியரவை நாணாக வரைவில்லிற் கோத்தவனே
அரிபிரமற் கரியவனே அடியவர்க்கா மதுரைதனில்
நரிபரிசெய் நாடகனே நன்னிலத்துப் பெருங்கோயிற்
பெரியவனே பிஞ்ஞகனே பிணிதீர்த்துக் காத்தருளே.
வரியரவு - வரிகளை உடைய பாம்பு;
வரை-வில் - மலையால் ஆன வில்;
நாடகன் - கூத்தன்;
அடியவர்க்கா மதுரைதனில் நரி பரி செய் நாடகனே - நரிகளைக் குதிரைகள் ஆக்கியதைத் திருவிளையாடற் புராணத்திற் காண்க;
பிஞ்ஞகன் - சிவபெருமான் திருநாமங்களுள் ஒன்று; (தலைக்கோலம் உடையவன்);
10)
வெள்ளமடை சடையானே வெண்பொடியை அணியாராய்க்
கள்ளமுரை கசடர்களுக் கருளில்லாக் கண்ணுதலே
நள்ளிருளில் நடிப்பவனே நன்னிலத்துப் பெருங்கோயில்
உள்ளவனே உனையன்றி ஒருதெய்வம் உள்கேனே.
வெள்ளம் அடை சடையானே - கங்கைப்புனலை அடைத்த சடையினனே;
வெண்பொடியை அணியாராய்க் - திருநீற்றைப் பூசாதவர்களாகி;
கள்ளம் உரை கசடர்களுக்கு அருள் இல்லாக் கண்ணுதலே - பொய்களையும் வஞ்ச வார்த்தைகளையும் பேசுகின்ற கீழோர்க்கு அருள் இல்லாத நெற்றிக்கண்ணனே;
நள்ளிருளில் நடிப்பவனே - நள்ளிருளில் கூத்தாடுபவனே;
உனை அன்றி ஒரு தெய்வம் உள்கேன் - உன்னையன்றி வேறொரு தெய்வத்தை எண்ணமாட்டேன்;
11)
பெண்ணாணாய் இறப்போடு பிறப்புமிலாப் பெருமையினாய்
மண்ணோடு நீரெரிகால் வானானாய் ஒருகணையால்
நண்ணார்முப் புரமெரித்தாய் நன்னிலத்துப் பெருங்கோயில்
அண்ணாமுக் கண்ணாஎன் அருவினையைத் தீர்த்தருளே.
பெண் ஆண் ஆய் - பெண்ணும் ஆணும் ஆகி;
மண்ணோடு நீர் எரி கால் வான் ஆனாய் - நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என ஐம்பூதங்கள் ஆனவனே;
நண்ணார் - பகைவர்;
அண்ணா - தந்தையே என்ற திசைச்சொல்; அண்ணல் என்பதன் விளியுமாம். (அண்ணால் என்ற விளி அண்ணா என மருவிற்று);
வி. சுப்பிரமணியன்
-------------- --------------
No comments:
Post a Comment