05.46 – சாட்டியக்குடி
2015-07-30
சாட்டியக்குடி
(திருவாரூர்க்குத் தென்கிழக்கே 20 கிமீ தூரத்தில் உள்ள தலம்)
----------------------------------
(கலிவிருத்தம் - மா மா மா கூவிளம் - என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.23.1 - "மடையில் வாளை பாய மாதரார்")
1)
வேத நாவன் ஈர வேணியன்
காதல் மாதோர் பாகன் கண்ணுதல்
தாதை ஏர்கொள் சாட்டி யக்குடி
நாதன் அன்பர் வினைகள் நாசமே.
வேத நாவன் - வேதங்களை ஓதிய நாவை உடையவன்;
ஈர வேணியன் - கங்கையைச் சடையில் உடையவன்;
காதல் மாது ஓர் பாகன் - உமையை ஒரு பாகமாக உடையவன்;
கண்ணுதல் தாதை - நெற்றிக்கண்ணை உடைய தந்தை; (கண்ணுதல் - நெற்றிக்கண்ணன்); (தாதை - தந்தை); (கண்ணுதற்றாதை = கண்ணுதல் + தாதை);
ஏர்கொள் சாட்டியக்குடி நாதன் அன்பர் வினைகள் நாசமே - அழகிய திருச்சாட்டியக்குடியில் உறையும் தலைவனான சிவபெருமான் அடியவர்களுடைய வினைகள் அழியும்; (ஏர் - அழகு);
2)
சந்தத் தமிழை மகிழும் சங்கரன்
அந்தி வண்ணத் தழகன் ஐங்கரன்
தந்தை ஏர்கொள் சாட்டி யக்குடி
எந்தை அன்பர்க் கிடர்கள் இல்லையே.
சங்கரன் - நன்மை செய்பவன்;
அந்தி வண்ணத்து அழகன் - செந்நிறத்து மேனி உடைய அழகன்;
ஐங்கரன் தந்தை - ஐந்து கைகளையுடைய கணபதிக்குத் தந்தை;
எந்தை - எம் தந்தை;
3)
மெய்யில் நீறு பூசும் வேதியன்
செய்யன் மதனை நீறு செய்தவன்
தையல் பங்கன் சாட்டி யக்குடி
ஐயன் அன்பர்க் கல்லல் இல்லையே.
நீறு - திருநீறு; சாம்பல்;
வேதியன் - வேதத்தைச் சொன்னவர்; வேதத்தின் பொருளாவார்; வேதத்தில் விளங்குபவர்; வேதித்தல் - வேறுபடுத்துதல் என்று கொண்டு உரைத்தலுமாம்.
செய்யன் - செம்மேனியன்;
மதனை - மன்மதனை;
தையல் பங்கன் - அர்த்தநாரீஸ்வரன்; (தையல் - பெண்);
ஐயன் - தலைவன்;
4)
மழவெள் விடையன் வாச மாமலர்க்
குழலி பாகம் ஆகும் கொள்கையான்
தழலின் உருவன் சாட்டி யக்குடிக்
குழகன் அன்பர்க் கின்பம் கூடுமே.
மழ வெள் விடையன் - இள வெண் இடபத்தை ஊர்தியாக உடையவன்;
கந்த மாமலர்க் குழலி பாகம் ஆகும் கொள்கையான் - வாசமலர்களை அணீந்த கூந்தலை உடைய உமையை ஒரு பாகமாகக் கொள்ளும் கொள்கை உடையவன்;
தழலின் உருவன் - சோதி வடிவினன்; செந்நிறத்தன்;
குழகன் - இளைஞன்; அழகன்;
5)
ஓத்தை ஓதி ஓம்பு மாணியைக்
காத்துப் பாசம் ஏந்து காலனைச்
சாய்த்த பாதன் சாட்டி யக்குடித்
தீர்த்தன் அன்பர் செல்வர் ஆவரே.
ஓத்தை ஓதி ஓம்பு மாணியைக் காத்துப் - வேதத்தை ஓதி வழிபட்ட மார்க்கண்டேயரைக் காத்து; (ஓத்து - வேதம்); (ஓம்புதல் - பேணுதல்);
பாசம் ஏந்து காலனைச் சாய்த்த பாதன் - பாசத்தை ஏந்தும் எமனைக் காலால் உதைத்தவன் (சாய்த்தல் - அழித்தல்; தோல்வியுறச் செய்தல்);
தீர்த்தன் - பரிசுத்தமானவன்;
செல்வர் ஆவரே - செல்வங்கள் பெறுவார்கள்; (அப்பர் தேவாரம் - 5.65.1 - "தேவர் கோவினும் செல்வர்கள் ஆவரே"); (சம்பந்தர் தேவாரம் - 3.49.6 - "பகர்வரேல் சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் நந்தி நாமம் நமச்சிவாயவே.");
6)
கடலின் நஞ்சைக் கண்டம் இட்டவன்
சுடலைப் பொடியைப் பூசு சுந்தரன்
சடையன் ஏர்கொள் சாட்டி யக்குடி
விடையன் அன்பர் வினைகள் வீடுமே.
கடலின் நஞ்சு - பாற்கடலினின்று எழுந்த ஆலகால விடம்;
சுடலைப் பொடி - சுடுகாட்டுச் சாம்பல்;
விடையன் - இடப வாகனன்;
வீடும் - அழியும்;
7)
கால காலன் திங்கட் கண்ணியன்
நீல கண்டன் நெற்றிக் கண்ணினன்
சால அழகன் சாட்டி யக்குடிச்
சூலன் அன்பர்க் கில்லை துன்பமே.
திங்கட் கண்ணியன் - சந்திரனை முடிக்கு அணியும் மாலையாக ஏற்றவன்; (கண்ணி - தலையில் அணியும் மாலைவகை);
சால அழகன் - மிக அழகு உடையவன்;
சூலன் - சூலபாணி;
8)
சிலையைப் பேர்த்தான் பத்துச் சென்னிவாய்
அலற ஊன்றி அருள்செய் அங்கணன்
தலையில் ஆற்றன் சாட்டி யக்குடித்
தலைவன் அன்பர் வினைகள் சாயுமே.
சிலையைப் பேர்த்தான் - கயிலைமலையைப் பெயர்த்த இராவணனுடைய; (சிலை - மலை);
பத்துச் சென்னிவாய் அலற - பத்துத் தலைகளில் இருந்த வாய்கள் எல்லாம் அலறும்படி;
ஊன்றி அருள்செய் அங்கணன் - ஒரு விரலை இட்டு நசுக்கிப் பின்னர் அருள்செய்த அருட்கண் உடையவன்;
தலையில் ஆற்றன் - கங்காதரன்;
சாட்டியக்குடித் தலைவன் அன்பர் வினைகள் சாயுமே - திருச்சாட்டியக்குடியில் உறைகின்ற தலைவனான சிவபெருமானது பக்தர்களது வினைகள் அழியும்; (சாய்தல் - அழிதல்; தோற்றோடுதல்); (அப்பர் தேவாரம் - 5.19.8 - "கங்கை யானுறையுங் கரக்கோயிலைத் தங்கையால் தொழுவார் வினை சாயுமே");
9)
மாலுக் கயனுக் கரிய மாவழல்
கோல மார்பிற் கொன்றைத் தாரினன்
சாலப் பழையன் சாட்டி யக்குடிச்
சூலப் படையன் தொண்டர்க் கின்பமே.
மாலுக்கு அயனுக்கு அரிய மா அழல் - திருமால் பிரமன் இவர்களுக்கு அறிய ஒண்ணாத பெரிய சோதி;
கோல மார்பிற் கொன்றைத் தாரினன் - அழகிய மார்பில் கொன்றைமாலை அணிந்தவன்;
சாலப் பழையன் - மிகவும் தொன்மையானவன்;
சாட்டியக்குடிச் சூலப் படையன் தொண்டர்க்கு இன்பமே - திருச்சாட்டியக்குடியில் உறையும் சூலபாணியின் தொண்டர்களுக்கு இன்பமே;
10)
வழியை மாற்ற இழிவு வார்த்தைகள்
மொழியும் மூர்க்கர் தம்மை நீங்குமின்
உழுவை உரியன் சாட்டி யக்குடி
தொழவல் வினையற் றின்பம் சூழுமே.
மூர்க்கன் - மூடன்;
உழுவை உரியன் - புலித்தோல் அணிந்தவன்; (உழுவை - புலி); (உரி - தோல்);
சாட்டியக்குடி தொழ வல்வினை அற்று இன்பம் சூழுமே - திருச்சாட்டியக்குடியில் உறையும் சிவபெருமானை வணங்கினால் வல்வினைகள் தீர்ந்து இன்பம் பெருகும்;
11)
பனிவெண் மலையன் சீறு பாந்தளும்
குனிவெண் பிறையும் குலவு சென்னியன்
தனியன் ஏர்கொள் சாட்டி யக்குடி
இனியன் அன்பர்க் கில்லை துன்பமே.
பனி வெண் மலையன் - பனி சூழ்ந்த கயிலைமலையில் உறைபவன்;
சீறு பாந்தளும் குனி வெண் பிறையும் குலவு சென்னியன் - சீறும் பாம்பும் வளைந்த பிறைச்சந்திரனும் சேர்ந்து இருக்கும் திருமுடி உடையவன்; (பாந்தள் - பாம்பு); (குனிதல் - வளைதல்);
தனியன் - ஒப்பற்றவன்;
ஏர்கொள் சாட்டியக்குடி இனியன் அன்பர்க்கு இல்லை துன்பமே - அழகிய திருச்சாட்டியக்குடியில் உறையும் சிவபெருமான் அன்பர்களுக்குத் துன்பம் இல்லை;
பிற்குறிப்புகள் :
சாட்டியக்குடி - வேதநாதர் கோயில் : https://www.kamakoti.org/tamil/tiruvasagam17.htm
திருவிசைப்பாவில் இத்தலத்திற்கு ஒரு பதிகம் உள்ளது - 9.15 - "பெரியவா கருணை".
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment