05.41 – தேவூர்
2015-06-26
தேவூர்
(திருவாரூர் அருகு உள்ள தலம்)
------------------
(சந்தக் கலிவிருத்தம் - "தானதன தானதன தானதன தானா" என்ற சந்தம்) (திருவிராகம் அமைப்பு)
(சம்பந்தர் தேவாரம் - 2.29.1 - திருவிராகம் - "முன்னிய கலைப்பொருளு மூவுலகில் வாழ்வும்")
1)
சுட்டபொடி சாந்தமென மார்பிலணி தூயன்
வட்டணைகள் இட்டுநடம் ஆடுமெரி வண்ணன்
சிட்டரொடு தேவர்தொழு செல்வனணி தேவூர்
இட்டமென நின்றவனை ஏத்தவரும் இன்பே.
சுட்டபொடி சாந்தம் என மார்பில் அணி தூயன் - வெந்த வெண்ணீற்றைச் சந்தனம்போல் மார்பில் பூசும் தூயவன்;
வட்டணைகள் இட்டு நடம் ஆடும் எரி வண்ணன் - வட்டணை என்னும் நாட்டிய வகைகளைச் செய்து திருநடனம் செய்யும் தீவண்ணன்; (வட்டணை - வட்டம்; தாளம் போடுதலுமாம்); (சம்பந்தர் தேவாரம் - 3.75.4 - "கொட்டமுழ விட்டவடி வட்டணைகள் கட்டநட மாடிகுலவும்");
சிட்டரொடு தேவர் தொழு செல்வன் - சிட்டர்களும் தேவர்களும் வணங்குகின்ற செல்வன்; (சிட்டர் - பெரியோர்; சான்றோர்);
அணி தேவூர் இட்டம் என நின்றவனை ஏத்த வரும் இன்பே - அழகிய தேவூரில் விரும்பி உறையும் சிவபெருமானைத் துதித்தால் இன்பம் வந்தடையும்;
2)
வெய்யவிடம் வேலையெழ அஞ்சியடை விண்ணோர்
உய்யவமு தாவதனை உண்டமணி கண்டன்
செய்யினிடை மீனுகளும் ஏருடைய தேவூர்
ஐயனடி போற்றுமடி யாரடைவர் இன்பே.
வெய்ய விடம் வேலை எழ - கொடிய நஞ்சு கடலில் தோன்றவும்;
அஞ்சி அடை விண்ணோர் உய்ய - அஞ்சி வந்து சரணடைந்த தேவர்கள் உய்யுமாறு;
அமுதா அதனை உண்ட மணிகண்டன் - அமுதம்போல் அந்த நஞ்சை உண்ட நீலகண்டன்; (அமுதா - அமுதாக);
செய்யினிடை மீன் உகளும் ஏர் உடைய தேவூர் - வயல்களில் மீன்கள் தாவும் அழகு உடைய தேவூரில் உறைகின்ற; (செய் - வயல்); (உகளுதல் - தாவுதல்); (ஏர் - அழகு; நன்மை);
ஐயன் அடி போற்றும் அடியார் அடைவர் இன்பே - பெருமானைத் துதிக்கும் அன்பர்கள் இன்புறுவார்கள்;
3)
ஆறுடைய செஞ்சடையன் அஞ்சொலுமை மங்கை
கூறுடைய கொள்கையினன் நீறுதிகழ் மார்பன்
சேறுடைய தண்கழனி சூழ்ந்தவணி தேவூர்
ஏறுடைய ஈசனடி ஏத்தவரும் இன்பே.
அம் சொல் உமைமங்கை கூறு உடைய கொள்கையினன் - அழகிய மொழி பேசும் பார்வதியை ஒரு பாகமாக உடையவன்;
சேறு உடைய தண்-கழனி சூழ்ந்த அணி தேவூர் - சேரு திகழும் குளிர்ந்த வயல் சூழ்ந்த அழகிய தேவூரில் உறைகின்ற;
4)
நாறலரை எய்ம்மதனை நீறதுசெய் நாதன்
கூறவரு மாண்புடையன் நாரியொரு கூறன்
சீறரவு செஞ்சடையில் ஊருமிறை தேவூர்
ஏறமரும் ஈசனடி ஏத்தவரும் இன்பே.
நாறு அலரை எய்ம் மதனை நீறது செய் நாதன் - மணம் கமழும் பூவை அம்பாக எய்யும் மன்மதனைச் சாம்பலாக்கிய தலைவன்;
கூற அரும் மாண்பு உடையன் - சொல்வதற்கு அரிய பெருமை உடையவன்;
நாரி ஒரு கூறன் - அர்த்தநாரீஸ்வரன்;
சீறு அரவு செஞ்சடையில் ஊரும் இறை - சீறுகின்ற பாம்பு செஞ்சடையில் ஊருகின்ற இறைவன்;
தேவூர் ஏறு அமரும் ஈசன் அடி ஏத்த வரும் இன்பே - தேவூரில் உறைகின்ற இடபவாகனன் ஆன சிவபெருமானது திருவடிகளைப் போற்றினால் இன்பம் வந்தடையும்;
5)
நீருலவு வேணியனை நீறுபுனை மானைக்
காருலவு மாமிடறு காட்டிதனை வண்டார்
சீருலவு சோலைபுடை சூழ்ந்தஅணி தேவூர்
ஏருலவு கொன்றையனை ஏத்தவரும் இன்பே.
வேணி - சடை;
மான் - பெரியோன்;
கார் உலவு மா மிடறு காட்டிதனை - அழகிய கரிய கண்டத்தைக் காட்டுபவனை - நீலகண்டனை;
சீர் - அழகு; பெருமை;
ஏர் - அழகு;
6)
மூவரணம் ஆரழலில் மூழ்கவெரி அம்பை
ஏவவலன் ஒண்மழுவும் மான்மறியும் ஏந்தி
தேவரொடு மாமுனிவர் சென்றுதொழு தேவூர்ச்
சேவகன சேவடிகள் ஏத்தவரும் இன்பே.
மூ அரணம் ஆர் அழலில் மூழ்க எரி அம்பை ஏவ வலன் - முப்புரங்களும் தீயில் மூழ்கும்படி தீக்கணையைச் செலுத்த வல்லவன்;
ஒண் மழுவும் மான் மறியும் ஏந்தி - ஒளிவீசும் மழுவையும் மான்கன்றையும் ஏந்தியவன்;
சேவகன சேவடிகள் - வீரனுடைய சேவடிகள்; (சேவகன் - வீரன்); (அ - ஆறாம் வேற்றுமை பன்மை உருபு); (அப்பர் தேவாரம் - 4.21.7 - "செல்வனசேவடி சிந்திப்பார்");
7)
நான்மறையை ஓதுதிரு நாவுடைய முக்கட்
கோன்மதுர வாக்கினளொர் கூறுமகிழ் அண்ணல்
தேன்மலரை நாடியளி பாடுமணி தேவூர்
வான்பிறையன் வார்கழலை வாழ்த்தவரும் இன்பே.
* மதுரபாஷிணி - இத்தலத்து இறைவி திருநாமம்;
முக்கட் கோன் - முக்கண் உடைய தலைவன்;
மதுரவாக்கினள் ஒர் கூறு மகிழ் அண்ணல் - மதுரபாஷிணியை ஒரு பங்கில் உடைய அண்ணல்; (ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்);
அளி - வண்டு;
வான் பிறையன் - அழகிய பிறைச்சந்திரனை அணிந்தவன்;
8)
அத்தனுறை மாமலையை ஆட்டியவ ரக்கன்
கத்தவிரல் ஊன்றியவன் அத்தியுரி போர்த்தான்
தெத்தெனன என்றுசிறை வண்டிசைசெய் தேவூர்ப்
பித்தனரு நட்டனடி பேணவரும் இன்பே.
அத்தன் உறை மாமலையை ஆட்டிய அரக்கன் கத்த விரல் ஊன்றியவன் - நம் தந்தையான சிவபெருமான் உறையும் கயிலையைப் பெயர்த்த இராவணன் கத்தும்படி விரலை ஊன்றி அவனை நசுக்கியவன்; (அத்தன்- தந்தை);
அத்தி உரி போர்த்தான் - யானைத்தோலைப் போர்த்தவன்;
தெத்தெனன என்று சிறை வண்டு இசைசெய் தேவூர் - தெத்தெனன என்று சிறகுகளை உடைய வண்டுகள் இசையெழுப்புகின்ற தேவூரில் உறைகின்ற;
பித்தன் அரு நட்டன் அடி பேண வரும் இன்பே - பித்தனும் அரிய நடம் ஆடும் கூத்தனுமான சிவபெருமானது திருவடியைப் போற்றினால் இன்பம் வந்தடையும்;
9)
மாலினொடு நேடுதிரு மால்பிரமன் எய்தார்
ஆலினடி ஞானமுரை ஆசிரியன் நீரிற்
சேலினொடு வாளைகுதி செய்யுமணி தேவூர்ச்
சூலனடி போற்றியெழு தொண்டரிலர் துன்பே.
மாலினொடு நேடு திருமால் பிரமன் எய்தார் - அறியாமையோடு தேடிய திருமாலும் பிரமனும் அடையமாட்டார்கள்; (மால் - அறியாமை); (திருமால் - விஷ்ணு);
ஆலினடி ஞானம் உரை ஆசிரியன் - கல்லால மரத்தின்கீழ் இருந்து நால்வேதங்களின் பொருளை விரித்து ஞானத்தைப் போதித்த குரு;
நீரில் சேலினொடு வாளை குதி செய்யும் அணி தேவூர் - நீர்நிலைகளில் சேல் மீன்களும் வாளை மீன்களும் குதிக்கின்ற அழகிய தேவூரில் உறைகின்ற;
சூலன் அடி போற்றி எழு தொண்டர் இலர் துன்பே - சூலபாணியின் திருவடியை வணங்கி எழுகின்ற தொண்டர்கள் துன்பம் இல்லாதவர்கள்;
10)
புன்மொழிகள் நாளுமுரை புல்லருரை கொள்ளேல்
அன்பருயிர் காத்துநமன் மார்பிலுதை அண்ணல்
தென்பொழிலில் வாசமலர் நாறுமணி தேவூர்
என்பணியும் ஈசனடி ஏத்தவரும் இன்பே.
புன்மொழிகள் நாளும் உரை புல்லர் உரை கொள்ளேல் - இழிந்த சொற்களைத் தினமும் பேசுகின்ற கீழோர்களது சொற்களை மதிக்கவேண்டா; (புல்லர் - கீழோர்);
அன்பர் உயிர் காத்து நமன் மார்பில் உதை அண்ணல் - மார்க்கண்டேயரைக் காத்துக் காலனை மார்பில் உதைத்த பெருமான்;
தென் பொழிலில் வாசமலர் நாறும் - அழகிய சோலையில் வாசப்பூக்கள் மணம் வீசும்;
அணி தேவூர் என்பு அணியும் ஈசன் அடி ஏத்த வரும் இன்பே - அழகிய தேவூரில் உறைகின்ற எலும்பை அணியும் ஈசன் திருவடியைத் துதித்தால் இன்பம் வந்தடையும்;
11)
அங்கமணி கின்றபரன் அஞ்சடையின் மீது
திங்களது வாழவருள் செய்தசிவன் எந்தை
செங்கணிறை அன்பினொடு செய்தவுயர் தேவூர்
மங்கையொரு பங்கனடி வாழ்த்தவரும் இன்பே.
அங்கம் அணிகின்ற பரன் - கங்காளன்; (அங்கம் - எலும்பு);
அஞ்சடையின்மீது திங்களது வாழ அருள் செய்த சிவன் எந்தை - அழகிய சடைமேல் சந்திரன் வாழ அருள்புரிந்த சிவன், எம் தந்தை; (அஞ்சடை - அம் சடை - அழகிய சடை);
செங்கண் இறை அன்பினொடு செய்த உயர் தேவூர் - கோச்செங்கட்சோழன் பக்தியோடு கட்டிய மாடக்கோயிலான தேவூரில் உறைகின்ற;
மங்கை ஒரு பங்கன் அடி வாழ்த்த வரும் இன்பே - உமைபங்கன் திருவடியை வாழ்த்தினால் இன்பம் வந்தடையும்;
வி. சுப்பிரமணியன்
-------------- --------------
No comments:
Post a Comment