Saturday, December 24, 2022

05.37 – தேவூர்

05.37 – தேவூர்

2015-06-09

தேவூர்

(திருவாரூர் அருகு உள்ள தலம்)

------------------

(12 பாடல்கள்)

(கலிவிருத்தம் - "மாங்கனி மாங்கனி மாங்கனி மா" என்ற வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்")

(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா");


1)

ஊனார்தலை ஏந்தித்திரி ஒருவன்பொர வந்த

கானார்கரி உரிபோர்த்தவன் கருமாமணி கண்டன்

தேனார்பொழில் புடைசூழ்தரு தேவூருறை கின்ற

மானார்கரன் அடிவாழ்த்திட மறவேல்மட நெஞ்சே.


ஊன் ஆர் தலை ஏந்தித் திரி ஒருவன் - புலால் பொருந்திய மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பலிக்கு உழலும் ஒப்பற்றவன்;

பொர வந்த கான் ஆர் கரி உரி போர்த்தவன் - போர்செய்ய வந்த காட்டில் வாழும் யானையின் தோலைப் போர்த்தவன்; (பொருதல் - போர்செய்தல்); (உரி - தோல்);

கரு மா மணி கண்டன் - கரிய அழகிய மணியைக் கண்டத்தில் உடையவன்;

தேன் ஆர் பொழில் புடை சூழ்தரு தேவூர் உறைகின்ற - வண்டினம் முரல்கின்ற சோலைகள் சூழ்ந்த தேவூரில் உறைகின்ற; (சூழ்தரு - சூழ்); (தருதல் - ஒரு துணைவினை);

மான் ஆர் கரன் அடி வாழ்த்திட மறவேல் மட நெஞ்சே - கையில் மானை ஏந்திய சிவபெருமான் திருவடியை வாழ்த்த மறவாதே பேதைமனமே; (மறவேல் - மறவாதே); (ஏல் - எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி);


2)

அறையுங்கடல் உமிழ்நஞ்சினை அமுதேயென உண்ட

கறைதங்கிய கண்டத்தினன் கண்ணார்நுதல் அண்ணல்

சிறைவண்டிசை பாடும்பொழில் தேவூருறை கின்ற

இறைவன்கழல் இணைவாழ்த்திட எண்ணாய்மட நெஞ்சே.


அறைதல் - ஒலித்தல்;

கண் ஆர் நுதல் - கண் பொருந்திய நெற்றி;

சிறை வண்டு - இறகுகள் உடைய வண்டு;

எண்ணாய் - எண்ணுவாயாக;


3)

வெங்கண்விடை ஊருஞ்சிவன் விண்ணோர்க்கொரு தலைவன்

எங்குந்திரி புரமூன்றினை எய்தானொரு கணையால்

செங்கண்ணிறை தொழுதேத்திய தேவூருறை கின்ற

கங்கைச்சடை முடியான்கழல் கருதாய்மட நெஞ்சே.


வெம்கண் விடை ஊரும் சிவன் - சினம் மிக்க கண்களையுடைய ஆனேற்றை ஊர்தியாகக் கொண்டருளும் சிவபெருமான்;

செங்கண் இறை - கோச்செங்கட்சோழன்; (இறை - அரசன்);


* தேவூரில் உள்ள மாடக்கோயில் கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட பல மாடக்கோயில்களுள் ஒன்று.


4)

ஊணாவிடு பலிநாடிய ஒருவன்பட அரவை

நாணாவசை நம்பன்மறை நால்வர்க்குரை குரவன்

சேணார்பொழில் புடைசூழ்தரு தேவூருறை கின்ற

பூணாவர வுடையான்கழல் போற்றாய்மட நெஞ்சே.


ஊணாடுபலி நாடிய ஒருவன் - பிச்சையேற்று உழலும் ஒப்பற்றவன்; (ஊணா - ஊணாக - உணவாக); (இடுபலி - பிச்சை);

பட அரவை நாணாசை நம்பன் - படம் திகழும் பாம்பை (வில்லில் நாணாக / ) அரைநாணாகக் கட்டிய நம்பன்;

மறை நால்வர்க்குரை குரவன் - சனகாதியர் நால்வருக்கு வேதங்களை விரித்துரைத்த குரு;

சேண் ஆர் பொழில் புடை சூழ்தரு தேவூர் உறைகின்ற - உயர்ந்த சோலை சூழ்ந்த தேவூரில் உறைகின்ற; (சேண் - ஆகாயம்; உயரம்);

பூணா அரவுடையான் கழல் போற்றாய் மட நெஞ்சே - பூணாகப் பாம்புகளை அணிந்தவனது திருவடியைப், பேதைமனமே நீ போற்றுவாயாக;


5)

பூவேந்திய அடியாரொடு புகழுந்தமிழ் மாலை

நாவேந்திய புலவர்க்கிடர் நண்ணாநிலை தருவான்

தேவேந்திரன் வழிபாடுசெய் தேவூருறை கின்ற

சேவூர்ந்தவன் அடிபேணுதல் செய்யென்மட நெஞ்சே.


ஒடு - எண்ணுப்பொருளில் வரும் இடைச்சொல்;

தேவேந்திரன் வழிபாடுசெய் தேவூர் - இந்திரன் வழிபட்ட தலம் இது;

சே ஊர்ந்தவன் - இடப வாகனன்; (சே - எருது);


6)

எங்கும்பட அரவந்திகழ் ஈசன்விடை யேறி

சங்கம்புனை தையற்கிடம் தந்தான்விரி சடையன்

தெங்கம்பொழில் புடைசூழ்தரு தேவூருறை கின்ற

அங்கம்புனை ஐயன்கழல் அடையாய்மட நெஞ்சே.


பட அரவம் - படத்தையுடைய பாம்பு - நாகம்;

விடையேறி - இடபவாகனன்;

சங்கம் புனை தையல் - கைவளையல் அணிந்த உமையம்மை;

தெங்கம்பொழில் - தென்னஞ்சோலை;

அங்கம் புனை ஐயன் - எலும்பை அணிகின்ற தலைவன் - கங்காளன்;


7)

மாறாதவன் மலரம்புடை மதனைப்பொடி செய்தான்

நீறாடிய திருமேனியன் நிழலார்மழு வாளன்

சேறார்வயல் புடைசூழ்தரு தேவூருறை கின்ற

ஏறார்கொடி இறைவன்கழல் எண்ணாய்மட நெஞ்சே.


மாறாதவன் - மெய்ப்பொருள்; என்றும் இருப்பவன்; (மாறுதல் - வேறுபடுதல்; இல்லையாதல்);

மலரம்புடை மதனைப் பொடி செய்தான் - மலர்க்கணை உடைய காமனைச் சாம்பலாக்கியவன்; (மதன் - மன்மதன்);

நீறு ஆடிய திருமேனியன் - திருமேனியில் திருநீற்றைப் பூசியவன்;

நிழல் ஆர் மழுவாளன் - ஒளிவீசும் மழுவாள் ஏந்தியவன்; (நிழல் - ஒளி);

ஏறு ஆர் கொடி இறைவன் - இடபக்கொடியை உடைய கடவுள்;


8)

முன்னம்வரை பெயர்மூடனை முடிபத்திற ஊன்றிப்

பின்னின்னிசை அதுகேட்டருள் பெருமான்பெயர் தந்தான்

செந்நெல்வயல் புடைசூழ்தரு தேவூருறை கின்ற

மன்னன்தழல் வண்ணன்கழல் மறவேல்மட நெஞ்சே.


முன்னம் வரை பெயர் மூடனை முடி பத்து இற ஊன்றிப் - முன்பு கயிலைமலையைப் பெயர்த்த கொடியவனும் அறிவிலியுமான இராவணனை அவனது பத்துத் தலைகளும் நெரியும்படி ஒரு பாதவிரலை ஊன்றி; (வரை - மலை); (இறுதல் - முறிதல்; கெடுதல்);

பின் இன்னிசை அது கேட்டு அருள் பெருமான் பெயர் தந்தான் - பிறகு அவன் இன்னிசை பாடக் கேட்டு இரங்கிய பெருமான் அவனுக்கு இராவணன் என்ற பெயரைக் கொடுத்தவன்; (இசையது - இசை; அது - பகுதிப்பொருள் விகுதி); (சுந்தரர் தேவாரம் - 7.68.9 - "தோள்கள் இருபதுந் நெரித்தின்னிசை கேட்டு வலங்கை வாளொடு நாமமுங் கொடுத்த வள்ளலை")

செந்நெல்வயல் புடைசூழ்தரு தேவூர் உறைகின்ற மன்னன் - சிறந்த நெல் விளையும் வயல் சூழ்ந்த தேவூரில் உறைகின்ற தலைவன்;

தழல் வண்ணன் கழல் மறவேல் மட நெஞ்சே - தீவண்ணன் திருவடியைப், பேதைமனமே நீ மறத்தல் இன்றிப் போற்றுவாயாக;


9)

வெறியார்மலர் மேலான்அரி விண்ணேறியும் அகழ்ந்தும்

அறியாவணம் எரியாயுயர் அடிகள்புலி அதளன்

செறிவான்பொழில் புடைசூழ்தரு தேவூருறை கின்ற

மறிமான்கரன் அடிவாழ்த்திட மறவேல்மட நெஞ்சே.


வெறி ஆர் மலர் மேலான் - வாசமிக்க தாமரைமேல் உறையும் பிரமன்;

புலி அதளன் - புலித்தோலை அணிந்தவன்; (அதள் - தோல்);

செறி-வான்-பொழில் - அடர்ந்த அழகிய உயர்ந்த சோலை; (வான் - ஆகாயம்; பெருமை; அழகு);

மறிமான் கரன் - மான் கன்றைக் கையில் ஏந்தியவன்; (மறி - கன்று); (சம்பந்தர் தேவாரம் - 3.60.7 - "மறிமான் ஒரு கையதோர் கைமழுவாள்");


10)

வெண்ணீறது பூசார்உரை வெற்றுச்சொலை விடுமின்

பண்ணார்மொழி உமையாளொரு பங்கில்மகிழ் பரமன்

திண்ணார்மதில் புடைசூழ்தரு தேவூருறை கின்ற

கண்ணார்நுதல் அண்ணல்கழல் கையால்தொழ இன்பே.


வெண்ணீறது பூசார் உரை வெற்றுச் சொலை விடுமின் - திருநீற்றைப் பூசாதவர்கள் சொல்லும் பொருளற்ற வார்த்தைகளை மதிக்கவேண்டா; (வெண்ணீறு அது - "அது" பகுதிப்பொருள் விகுதி);

பண் ஆர் மொழி உமையாள் ஒரு பங்கில் மகிழ் பரமன் - பண் போலும் இனிய மொழியை உடைய உமையம்மையை ஒரு பாகத்தில் விரும்பிய பரமன்; (சம்பந்தர் தேவாரம் - 2.82.1 - "பண்ணி லாவிய மொழியுமை பங்கனெம் பெருமான்");

திண் ஆர் மதில் - வலிய மதில்;

கண் ஆர் நுதல் அண்ணல் - நெற்றிக்கண் உடைய கடவுள்;

இன்பு - இன்பம்;


11)

கையிற்றழல் ஏந்தும்பரன் கரிகானிடை ஆடி

வையத்தினர் வானத்தினர் வந்தித்திடு தேவன்

செய்யிற்கயல் விளையாடிடு தேவூருறை கின்ற

மையைப்புனை கண்டன்கழல் மறவேல்மட நெஞ்சே.


கையில் தழல் ஏந்தும் பரன் - கரத்தில் தீயை ஏந்திய பரமன்;

கரிகானிடை ஆடி - சுடுகாட்டில் ஆடுபவன்;

வையத்தினர் வானத்தினர் வந்தித்திடு தேவன் - மண்ணோரும் விண்ணோரும் வணங்கும் தேவன்; (வந்தித்தல் - வணங்குதல்); (* வியாழன், இந்திரன், குபேரன், சூரியன் முதலிய தேவர்கள் வழிபட்ட தலம் இது);

செய்யில் கயல் விளையாடிடு தேவூர் உறைகின்ற - வயலில் கயல்மீன்கள் விளையாடுகின்ற தேவூரில் உறைகின்ற;

மையைப் புனை கண்டன் கழல் மறவேல் மட நெஞ்சே - நீலகண்டனது திருவடியைப், பேதைமனமே நீ மறத்தல் இன்றிப் போற்றுவாயாக; (மை - கருநிறம்; கருமேகம்; இருள்) (சம்பந்தர் தேவாரம் - 1.15.1 - "மையாடிய கண்டன்");


12)

வானீரடை சடைமேல்மதி வளரும்படி வைத்தான்

பானீர்கொடு தொழுதேத்திய பாலற்கருள் தந்தை

தேனார்மொழி உமைகோனணி தேவூருறை கின்ற

வானோர்தொழு வள்ளல்கழல் வாழ்த்தாய்மட நெஞ்சே.


வான்நீர் அடை சடைமேல் மதி வளரும்படி வைத்தான் - ஆகாயகங்கையை அடைத்த சடையின்மீது சந்திரனை என்றும் அழியாமல் இருக்கும்படி சூடியவன்;

பால் நீர்கொடு தொழுதேத்திய பாலற்கு அருள் தந்தை - பால் நீர் இவற்றால் வழிபாடு செய்த சிறுவனுக்கு அருள்செய்த தந்தை; (பாலன்+கு = பாலற்கு = பாலனுக்கு); (இது சண்டேசுர நாயனாருக்கு அருளியதைச் சுட்டும்; மார்க்கண்டேயருக்கு அருளியது என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (பெரிய புராணம் - சண்டேசுர நாயனார் புராணம் - 12.20.54 - "அடுத்த தாதை இனியுனக்கு நாம்என் றருள்செய் தணைத்தருளி");

தேன் ஆர் மொழி உமைகோன் - தேன் போன்ற இனிய மொழி பேசும் உமைக்குத் தலைவன்; (* மதுரபாஷிணி - இத்தல இறைவி திருநாமம்);

அணி தேவூர் உறைகின்ற - அழகிய தேவூரில் உறைகின்றவனும்;

வானோர் தொழு வள்ளல் கழல் வாழ்த்தாய் மடநெஞ்சே - தேவர்களால் தொழப்படுபவனும் வள்ளலுமான சிவபெருமான் திருவடியைப், பேதைமனமே, நீ வாழ்த்துவாயாக;


பிற்குறிப்பு:

மதுரபாஷிணி - Discussion of the Sanskrit grammar behind the formation of the name "मधुरभाषिणी" : https://avg-sanskrit.org/2012/11/06/


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


No comments:

Post a Comment