06.04.028 – திருஞான சம்பந்தர் துதி - வனம் தழுவிடும்
2014-04-22
06.04.028 - திருஞான சம்பந்தர் துதி - சம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - 2014
----------------------------------
(2 பாடல்கள்)
(வண்ணச்சந்த விருத்தம்;
"தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனம்" )
(பதஞ்சலி முனிவர் அருளிய நடராஜ ஸ்தோத்திரம் -
सदञ्चित मुदञ्चित निकुञ्चित पदं झलझलञ्चलित मञ्जु कटकम् -
ஸத³ஞ்சித முத³ஞ்சித நிகுஞ்சித பத³ம்ʼ ஜ²லஜ²லஞ்சலித மஞ்ஜு கடகம் );
1)
வனந்தழு விடுங்கழு மலந்தனி லலர்ந்தவ னிரைந்தழு திடும்பொழு துடன்
அனந்தந டிகன்புடை அமர்ந்தவ ளருந்தவ முதந்தர அயின்றபு கழன்
சினந்தெதி ரமண்பத ருரங்கெட அருந்தமி ழிரும்புன லெதிர்ந்திட விடும்
தினந்தின மவன்கழ னினைந்திட அறுந்துய ருறுந்திரு பெரும்புக ணலம்.
பதம் பிரித்து:
வனம் தழுவிடும் கழுமலந்தனில் அலர்ந்தவன்; இரைந்து அழுதிடும்பொழுது உடன்
அனந்த நடிகன் புடை அமர்ந்தவள் அருந்த அமுதம் தர அயின்ற புகழன்;
சினந்து எதிர் அமண் பதர் உரம் கெட, அரும் தமிழ் இரும் புனல் எதிர்ந்திட விடும்;
தினம் தினம் அவன் கழல் நினைந்திட, அறும் துயர், உறும் திரு பெரும்புகழ் நலம்.
வனம் தழுவிடும் கழுமலந்தனில் அலர்ந்தவன் - சோலை சூழ்ந்த சீகாழியில் உதித்தவன்; (வனம் - சோலை; அழகு); (அலர்தல் - மலர்தல்);
இரைந்து அழுதிடும்பொழுது உடன் அனந்த நடிகன் புடை அமர்ந்தவள் அருந்த அமுதம் தர அயின்ற புகழன் - உரத்து அழுத உடனே, முடிவில்லாத நடம் செய்யும் ஈசன் பங்கில் உறையும் உமை அளித்த ஞானப்பாலை உண்ட புகழாளன்; (அனந்த நடிகன் - முடிவில்லாத கூத்தன்; அனந்தம் - முடிவின்மை); (அயில்தல் - உண்ணுதல்);
சினந்து எதிர் அமண் பதர் உரம் கெட, அரும் தமிழ் இரும் புனல் எதிர்ந்திட விடும் - கோபித்து எதிர்த்த சமண வீணர்கள் வலிமை அழிய, அரிய தமிழைப் பெரிய வைகை நதியின் ஓட்டத்தை எதிர்த்துச்செல்லுமாறு விட்டவன்; (பதர் - பயனிலி - வீணன்); (உரம் - வலிமை); (குறிப்பு: பதர்கள் என்னாமல் பதர் என்று வந்தது ஒருமைபன்மை மயக்கம்);
தினம் தினம் அவன் கழல் நினைந்திட, அறும் துயர், உறும் திரு பெரும்புகழ் நலம் - தினந்தோறும் திருஞானசம்பந்தன் திருவடிகளை நினைந்தால், நம் துயரம் நீங்கும்; திருவும், மிகுந்த புகழும், நலமும் நம்மை வந்தடையும்;
2)
மடந்தையி னரந்தையை அறிந்தவ ணணங்கொரு புறந்திக ழரன்துணை யுடன்
விடந்தணி யவுந்தனை விரும்பவ னுடன்திரு மணம்புரி யவுந்தரு பவன்
குடந்தனி லிருந்தவு டலின்பொடி திரும்பவு மெழுந்தெழி லிலங்குவ டிவம்
அடைந்திட அரும்பதி கமன்றுரை இளங்களி றுபந்தன பதந்தொழ லிதம்.
பதம் பிரித்து:
மடந்தையின் அரந்தையை அறிந்து அவண், அணங்கு ஒரு புறம் திகழ் அரன் துணையுடன்,
விடம் தணியவும், தனை விரும்பு அவனுடன் திருமணம் புரியவும் தருபவன்;
குடந்தனில் இருந்த உடலின் பொடி திரும்பவும் எழுந்து எழில் இலங்கு வடிவம்
அடைந்திட அரும் பதிகம் அன்று உரை இளம் களிறு பந்தன பதம் தொழல் இதம்.
அடிகள் 1-2: திருமருகலில் வணிகனை விடம் தீர்த்து உயிர்ப்பித்த வரலாறு;
அடிகள் 3-4: மயிலாப்பூரில் பூம்பாவையை உயிர்ப்பித்த வரலாறு;
மடந்தையின் அரந்தையை அறிந்து அவண், அணங்கு ஒரு புறம் திகழ் அரன் துணையுடன்,
விடம் தணியவும், தனை விரும்பு அவனுடன் திருமணம் புரியவும் தருபவன் - (சம்பந்தர் திருமருகலில் தங்கியிருந்த சமயத்தில் ஒருநாள், வணிகன் மகள் ஒருத்தி, தன்னை மணக்க இருந்தவன் மடத்தில் இரவில் துயிலும்போது பாம்பு கடித்து இறக்க, அழுது புலம்பும் ஒலி கேட்டது. அங்குச் சென்ற புகலிவேந்தர் "பயப்படேல் நீ" என்று அபயம் தந்து, வரலாறு உணர்ந்து, அவன் விடம் தீர்ந்து எழுந்து நிற்கச்செய்தற்பொருட்டு அருளியது "சடையாய் எனுமால்" என்ற திருப்பதிகம். இச்சம்பவத்தை சுட்டியது இவ்வடி).
(அரந்தை - துன்பம்; துக்கம்); (அவண் - அவ்விடம்); (தனை - தன்னை - அவளை); (தான் - படர்க்கை ஒருமைப்பெயர் - அவன் / அவள் / அது - He, she or it); (தருதல் - ஈந்து அருளுதல்);
(இலக்கணக்குறிப்பு: "மூவிடப் பெயர்களில் தன்மை, முன்னிலை ஆகிய இடப்பெயர்கள் பால் (Gender) காட்டுவதில்லை; ஒருமை, பன்மை என்ற எண் (Number) வேறுபாட்டை மட்டுமே காட்டும். அதேபோலப் படர்க்கை இடப்பெயர்களும் ஒருமை, பன்மை என்ற எண் வேறுபாட்டை மட்டுமே காட்டும்.")
குடந்தனில் இருந்த உடலின் பொடி திரும்பவும் எழுந்து எழில் இலங்கு வடிவம் அடைந்திட அரும் பதிகம் அன்று உரை இளம் களிறு பந்தன பதம் தொழல் இதம் - (மயிலாப்பூரில் சிவநேசர்தம் மகளின் அஸ்தியை வைத்திருந்த குடத்தைக் கோயில்முன் வைத்து "மட்டிட்ட புன்னை" என்ற பதிகம் பாடிச் சம்பந்தர் அவளை மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பிய வரலாற்றைச் சுட்டியது இவ்வடி). அந்த இளம் களிறாகிய திருஞானசம்பந்தருடைய திருவடியைத் தொழுவது இதம் அளிக்கும்.
(பொடி - சாம்பல்); (களிறு - ஆண்யானை); (பந்தன - திருஞான சம்பந்தனுடைய; பந்தன் - திருஞானசம்பந்தன் என்பதன் ஏகதேசம் - ஒருபுடைப்பெயர்; அ - ஆறாம் வேற்றுமை உருபு); (இதம் - ஹிதம் - இன்பமானது; நன்மை; ஞானம்);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment