Sunday, December 4, 2022

06.04.027 – திருநாவுக்கரசர் துதி - அணங்கவர் இரந்திட

06.04.027 – திருநாவுக்கரசர் துதி - அணங்கவர் இரந்திட

2014-04-19

06.04.027 - திருநாவுக்கரசர் துதி - திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - 2014

----------------------------------

(2 பாடல்கள்)

(வண்ணச்சந்த விருத்தம்;

"தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனம்" )

(பதஞ்சலி முனிவர் அருளிய நடராஜ ஸ்தோத்திரம் -

सदञ्चित मुदञ्चित निकुञ्चित पदं झलझलञ्चलित मञ्जु कटकम् -

ஸத³ஞ்சித முத³ஞ்சித நிகுஞ்சித பத³ம்ʼ ²லஜ²லஞ்சலித மஞ்ஜு கடகம் );


1)

அணங்கவ ரிரந்திட இரங்கிய அரன்றரு கொடும்பிணி அகன்றிட அரும்

மணங்கம ழுமின்றமி ழொடும்புய மடிந்தவ ரெலும்பணி பவன்றன பதம்

வணங்கிய வுடன்றுய ரொடுஞ்செடி பவங்கெட வரம்பெறு மருந்தவ ரமண்

கணங்கெட நிலம்பெரு நலம்பெற அரும்பணி புரிந்தவ ரிருங்கழ றொழும்.


பதம் பிரித்து:

அணங்கு அவர் இரந்திட இரங்கிய அரன் தரு கொடும் பிணி அகன்றிட, அரும்

மணம் கமழும் இன்-தமிழொடும், புயம் மடிந்தவர் எலும்பு அணிபவன்-தன பதம்

வணங்கியவுடன் துயரொடும் செடி பவம் கெட வரம் பெறும் அரும் தவர்; அமண்

கணம் கெட, நிலம் பெருநலம் பெற, அரும் பணி புரிந்தவர் இரும் கழல் தொழும்.


அணங்கு அவர் இரந்திட இரங்கிய அரன் தரு கொடும் பிணி - தம் தம்பி மீண்டும் சைவசமயத்திற்குத் திரும்பிவர வேண்டிய திலகவதியார்க்கு இரங்கித், தருமசேனனாக இருந்த அவர் தம்பிக்குச் சிவபெருமான் தந்த சூலைநோய்; (அணங்கு - இங்கே திலகவதியார்);

அரும் மணம் கமழும் இன்தமிழ் - 'அரும் தமிழ், மணம் கமழும் தமிழ், இன் தமிழ்' என்று இயைக்க;

புயம் மடிந்தவர் எலும்பு அணிபவன்-தன பதம் - புயத்தில் இறந்தவர் எலும்பைத் தாங்கும் சிவபெருமானுடைய திருவடியை; (கங்காளன் - Siva who wears garlands of bones); (தன - தன்+); (- ஆறாம் வேற்றுமையுருபு);

வணங்கியவுடன் துயரொடும் செடி பவம் கெட வரம் பெறும் அரும் தவர் - வணங்கியதும் சூலைநோயும் கொடிய பிறவிப்பிணியும் தீர வரம் பெற்ற அரிய தவமுடையவர்; (செடி - துன்பம்; தீமை); (பவம் - பிறவி); (தவர் - (தவன்) - தவம் உடையவர்);

அமண் கணம் கெட, நிலம் பெருநலம் பெற - சமணர் கூட்டம் அழியவும் மண்ணுலகு பெருநன்மை அடையவும்; (அமண் கணம் - சமணர்கள் கூட்டம்);

அரும் பணி புரிந்தவர் இரும் கழல் தொழும் - அரிய தொண்டு செய்த திருநாவுக்கரசரது பெருமைமிக்க திருவடிகளைத் தொழுங்கள்; (இருமை - பெருமை);


பிற்குறிப்புகள்:

1. இச்சந்தத்தைப் பெரும்பாலும் ஒத்த

"தனந்தன தனந்தன தனந்தன தனந்தன

தனந்தன தனந்தன ...... தனதான"

என்ற அமைப்பில் "தலங்களில் வருங்கன இலங்கொடு மடந்தையர்" என்ற திருப்புகழ் (தலம் - பெருங்குடி) உள்ளது.


2. இலக்கணக்குறிப்பு:

ல்+- புணர்ச்சி: ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கத்திலிருந்து: 153. தனிக்குற்றெழுத்தைச் சாராத ல ளக்கள், வருந் தகரந் திரிந்த விடத்து அல்வழியில், எழுவாய்த் தொடரிலும், விளித்தொடரிலும், உம்மைத் தொகையிலும், வினைமுற்றுத் தொடரிலும், வினைத்தொகையிலுங் கெடும்.

வேறொட்டான் (= வேல் தொட்டான்), தாடொழுதான் (= தாள் தொழுதான்) என இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாயவிடத்துக் கெடுமெனக் கொள்க.



2)

விலங்கலி லமர்ந்தவ னலந்தரு மிருங்கழ னிதந்தொழு தெழுந்திடு முளம்

இலங்கிய வரன்றிய சமண்கல ரிடும்விட மருந்தென உணும்படி வரும்

கலங்கிய வருந்திய பெருங்கரி கரங்கொடு பணிந்தடி வணங்கிவி லகும்

கலுங்கல மெனும்புக ழுறுந்தமி டரும்பெரி யரின்பத நினைந்திடு தினம்.


பதம் பிரித்து:

விலங்கலில் அமர்ந்தவன் நலம் தரும் இரும் கழல் நிதம் தொழுது எழுந்திடும் உளம்

இலங்கியவர்; அன்றிய சமண் கலர் இடும் விடம் மருந்து என உணும்படி வரும்;

கலங்கி அவர் உந்திய பெரும் கரி கரங்கொடு பணிந்து அடி வணங்கி விலகும்;

கலும் கலம் எனும் புகழ் உறும் தமிழ் தரும் பெரியரின் பதம் நினைந்திடு தினம்.


விலங்கலில் அமர்ந்தவன் நலம் தரும் இரும் கழல் நிதம் தொழுது எழுந்திடும் உளம்

இலங்கியவர் - கயிலைமலையானுடைய நன்மையளிக்கும் சிறந்த திருவடிகளைத் தினமும் தொழுதெழும் மனத்தை உடையவர்; (விலங்கல் - மலை; இங்கே கயிலைமலை); (இருமை - பெருமை; மேன்மை); (எழுதல் - உறக்கத்தினின்று விழித்தல்; மனம் கிளர்தல்);

அன்றிய சமண் கலர் இடும் விடம் மருந்து என உணும்படி வரும் - அவரைப் பகைத்த கீழோரான சமணர்கள் இட்ட நஞ்சும் அவருக்கு உண்ண அமுதமாகும்; (அன்றுதல் - பகைத்தல்; கோபித்தல்); (கலர் - கீழோர்); (மருந்து - அமுதம்);

கலங்கும் அவர் உந்திய பெரும் கரி கரங்கொடு பணிந்து அடி வணங்கி விலகும் - (அதனைக் கண்டு) கலங்கிய அச்சமணர்கள் ஏவிய பெரிய மதயானையும் அவரைத் துதிக்கையால் போற்றித் திருவடியை வணங்கி அகன்று செல்லும்; (கலங்குதல் - மனம் குழம்புதல்; மயங்குதல்; அஞ்சுதல்); (உந்துதல் - அனுப்புதல்; செலுத்துதல்);

கலும் கலம் எனும் புகழ் உறும் தமிழ் தரும் பெரியரின் பதம் நினைந்திடு தினம் - (கல்லோடு கட்டிக் கடலில் எறிந்தபொழுது அந்தக்) கல்லும் படகாகிக் கரையிற் சேர்ப்பிக்கும் புகழ் உடைய தேவாரம் பாடிய மகான் திருநாவுக்கரசரின் திருப்பாதத்தைத் தினமும் நினைப்பாயாக. (கலும் - கல்லும் - இடைக்குறையாக வந்தது); (கலம் - மரக்கலம்; படகு); (தமிடரும் - தமிழ் + தரும்); (பெரியர் - பெரியார் - இங்கே திருநாவுக்கரசர்);


இலக்கணக்குறிப்பு:

ழ்+- புணர்ச்சியில் டகரமாகத் திரியும். சில உதாரணங்கள்:

1) கந்தபுராணத்தின் முதற்பாட்டின் முதற்சீரில் 'திகழ் + தசக்கர' என்பது 'திகடசக்கர' என்று வருவதைக் காணலாம்.

2) சம்பந்தர் தேவாரம் - 3.86.10 -

"துகடுறு விரிதுகி லுடையவ ரமணெனும் வடிவினர்

விகடம துறுசிறு மொழியவை நலமில வினவிடல்

முகிடரு மிளமதி யரவொடு மழகுற முதுநதி

திகடரு சடைமுடி யடிகடம் வளநகர் சேறையே."

முகிழ் + தரு = முகிடரு. திகழ் + தரு = திகடரு. இவ்வாறு புணர்வதற்கு விதி வீரசோழியத்துக் காண்க.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment