Tuesday, December 13, 2022

06.03.062 - என்னாவாய் - அஞ்சேல் - மடக்கு

06.03 – மடக்கு

2014-10-25

06.03.062 - என்னாவாய் - அஞ்சேல் - மடக்கு

-------------------------

என்னாவாய் நீயே எருதேறீ முக்கண்ணா

என்னாவாய் ஒன்றுடையாய் எண்ணாய்நீ - என்னாவாய்

அஞ்சேல் அனகண்ணி நாதன் அடிபரவில்

அஞ்சேல் எனவருவான் ஆங்கு.


பதம் பிரித்து:

"என் நாவாய் நீயே! எருதேறீ! முக்கண்ணா!"

என்னா வாய் ஒன்று உடையாய்; எண்ணாய், நீ என் ஆவாய்?!

அம் சேல் அன கண்ணி நாதன் அடி பரவில்

"அஞ்சேல்" என வருவான் ஆங்கு.


சொற்பொருள்:

என்னாவாய் - 1. என் நாவாய் (நாவாய் - மரக்கலம்); 2. என்னா வாய்; 3. என் ஆவாய்;

அஞ்சேல் - 1. அம் சேல் (அழகிய சேல்மீன்); 2. அஞ்சாதே;

சேல் அன கண்ணி - சேல் அன்ன கண்ணி - சேல் மீன் போன்ற கண்களையுடைய உமாதேவியார்;

நாதன் - தலைவன்; கணவன்;

ஆங்கு - அவ்விடத்தில்; அச்சமயத்தில்; அசைச்சொல்;


"என் நாவாய் நீயே! எருதேறீ! முக்கண்ணா!" என்னா வாய் ஒன்று உடையாய் - "என் பிறவிக்கடல் கடப்பிக்கும் மரக்கலம் நீயே! இடபவானனே! முக்கண்ணனே!" என்று சொல்லாத வாயை உடையாய்;

எண்ணாய் நீ என் ஆவாய் - நீ என்ன ஆவாய் என்று எண்ணிப் பாராய்!

அம் சேல் அன கண்ணி நாதன் அடி பரவில் "அஞ்சேல்" என வருவான் ஆங்கு - அழகியசேல் மீன்போன்ற கண்ணை உடைய உமைக்கு நாதன் திருவடியைப் போற்றினால், அவன் அஞ்சேல் என்று வந்தருள்வான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment