Monday, December 26, 2022

05.44 – கொள்ளம்பூதூர்

05.44 – கொள்ளம்பூதூர்

2015-07-26

கொள்ளம்பூதூர்

(இத்தலம் குடவாசலுக்குத் தெற்கே உள்ளது)

------------------

(எண்சீர்ச் சந்தவிருத்தம் - தான தானா தான தானா தான தானா தான தானா - என்ற சந்தம்)

(சுந்தரர் தேவாரம் - 7.6.1 - "படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப்");


1)

மூல நாதர் காழி யார்க்கு

.. முள்ளி யாற்றில் ஓடம் செல்லக்

கோல தாகத் தமிழ்ந யந்தார்

.. கொடிய நஞ்சை அமுது செய்து

நீல மேற்ற மாமி டற்றர்

.. நெருப்பு வண்ணர் நெஞ்சின் மீது

கோல நீற்றர் குளிர்பொ ழில்சூழ்

.. கொள்ளம் பூதூர்க் குழக னாரே.


மூல நாதர் - ஆதி மூர்த்தி;

காழியார்க்கு முள்ளியாற்றில் ஓடம் செல்லக் கோலதாகத் தமிழ் நயந்தார் - கொள்ளம்பூதூர் ஈசனைத் தரிசிக்க ஆவலோடு வந்த திருஞானசம்பந்தருக்கு இரங்கி, அவர் பாடிய பதிகமே ஆற்றுவெள்ளத்தில் ஓடத்தைச் கோல் போலச் செலுத்திக் கரையை அடைய அருளியவர்; (* ஊருக்குப் பக்கத்தில் முள்ளியாறு எனப்படும் வெட்டாறு ஓடுகின்றது); (சம்பந்தர் தேவாரம் - 3.6.1 - "கொட்டமே கமழுங் கொள்ளம்பூதூர்" - பதிகப் பாடலையும் பதிக வரலாற்றையும் காண்க);

கொடிய நஞ்சை அமுது செய்து நீலம் ஏற்ற மா மிடற்றர் - கொடிய விடத்தை உண்டு கருமை ஏற்ற அழகிய கண்டத்தர்;

நெருப்பு வண்ணர் நெஞ்சின் மீது கோல நீற்றர் - தீவண்ணர்; மார்பில் அழகிய வெண்ணீறு பூசியவர்;

குளிர்பொழில்சூழ் கொள்ளம்பூதூர்க் குழகனாரே - குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருக்கொள்ளம்பூதூரில் உறையும் அழகரான சிவபெருமானார்.


2)

வல்ல வாறு தொண்டு செய்து

.. வாழ்த்து கின்ற அன்பர்க் கென்றும்

இல்லை என்று சொல்ல கில்லார்

.. எயில்கள் வேவக் கையில் மேரு

வில்லை ஏந்தி நின்ற வீரர்

.. வேணி தன்னுட் கங்கை நீரர்

கொல்லை ஏற்றர் குளிர்பொ ழில்சூழ்

.. கொள்ளம் பூதூர்க் குழக னாரே.


வல்லவாறு - இயன்ற வகையில்;

சொல்ல கில்லார் - சொல்லமாட்டார்;

எயில்கள் - முப்புரங்கள்;

வேணி தன்னுள் கங்கை நீரர் - சடையினுள் கங்கை நீரை உடையவர்;

கொல்லை ஏற்றர் - இடப வாகனர்; (அப்பர் தேவாரம் - 5.33.1 - "கொல்லை யேற்றினர்" - கொல்லை ஏறு - முல்லை நிலத்துக்குரிய இடபம்);


3)

தொண்டு செய்து துணைம லர்த்தாள்

.. தொழுது போற்றி வாழ்த்து வார்கள்

பண்டு செய்த பாவ மெல்லாம்

.. பறையு மாறு நல்கும் ஐயர்

உண்டி யாகப் பிச்சை கொள்ளும்

.. உம்பர் நாதர் மிடறு தன்னில்

கொண்டல் வண்ணர் குளிர்பொ ழில்சூழ்

.. கொள்ளம் பூதூர்க் குழக னாரே.


துணைமலர்த்தாள் - மலர்போன்ற இரு திருவடிகள்; (துணை - இரண்டு);

பண்டு - முன்பு;

பறையுமாறு நல்கும் ஐயர் - அழியும்படி அருள்புரியும் தலைவர்; (பறைதல் - அழிதல்); (சம்பந்தர் தேவாரம்- 1.28.3 - "எம் ஐயர் சோற்றுத் துறைசென் றடைவோமே");

உண்டி - உணவு;

உம்பர் நாதர் - தேவர் கோன்;

மிடறு தன்னில் கொண்டல் வண்ணர் - கண்டத்தில் மேகம் போன்ற நிறம் உடையவர்;


4)

அமரர் போற்றும் ஆதி மூர்த்தி

.. அறமு ரைக்க ஆல நீழல்

அமரும் அண்ணல் அரவு தன்னை

.. அரையில் ஆர்த்த அரிய வேடர்

சமர்பு ரிந்து சூர பன்மன்

.. தன்னை வென்ற மஞ்ஞை ஊர்திக்

குமரன் அத்தர் குளிர்பொ ழில்சூழ்

.. கொள்ளம் பூதூர்க் குழக னாரே.


அமரர் - தேவர்கள்;

அறம் உரைக்க ஆல நீழல் அமரும் அண்ணல் - கல்லால மரத்தின்கீழ் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி;

அரவு தன்னை அரையில் ஆர்த்த அரிய வேடர் - நாகப்பாம்பை அரையில் அரைநாணாகக் கட்டிய அரிய கோலத்தை உடையவர்; (ஆர்த்தல் - கட்டுதல்); (வேடர் - வேடத்தை உடையவர் - கோலத்தை உடையவர்);

சமர் புரிந்து சூரபன்மன் தன்னை வென்ற மஞ்ஞை ஊர்திக் குமரன் அத்தர் - போர் புரிந்து சூரபதுமனை வென்ற, மயில்வாகனம் உடைய முருகனுக்குத் தந்தையார்; (சமர் - போர்); (மஞ்ஞை - மயில்); (அத்தன் - தந்தை); (சம்பந்தர் தேவாரம் - 2.28.10 - "கருவூருள் ஆனிலை அத்தர் பாதம் அடைந்து வாழ்மினே");


5)

செய்த வத்தைக் கண்டும் எண்ணம்

.. சிறிது மின்றி வாச அம்பை

எய்த வேளை நீறு செய்தார்

.. ஈர மிக்க வேணி யாரை

வைத தக்கன் வேள்வி செற்றார்

.. மலர வன்றன் தலையில் ஒன்றைக்

கொய்து கந்தார் குளிர்பொ ழில்சூழ்

.. கொள்ளம் பூதூர்க் குழக னாரே.


செய் தவத்தைக் கண்டும், எண்ணம் சிறிதும் இன்றி வாச அம்பை எய்த வேளை நீறு செய்தார் - தாம் செய்யும் தவத்தைப் பார்த்த பின்னும் கொஞ்சமும் யோசியாமல் வாசமலர்க்கணை எய்த மன்மதனைச் சாம்பல் ஆக்கியவர்; (வேள் - மன்மதன்);

ஈர மிக்க வேணியாரை வைத தக்கன் வேள்வி செற்றார் - இரக்கம் மிக்கவரும் கங்கையைச் சடையில் உடையவரும் ஆன பெருமானாரை இகழ்ந்த தக்கன் செய்த வேள்வியை அழித்தவர்; (ஈரம் - தயை; நீர்ப்பற்று); (வேணி - சடை; ஆறு); (வைதல் - நிந்தித்தல்); (செறுதல் - அழித்தல்);

மலரவன்தன் தலையில் ஒன்றைக் கொய்து உகந்தார் - பிரமன் சிரங்களில் ஒன்றை அறுத்தவர்; (மலரவன் - தாமரையிலிருப்பவன் - பிரமன்);


6)

இமைக்கும் போதில் எயில்கள் மூன்றும்

.. எரியில் மூழ்க நகைசெய் ஈசர்

உமைக்கு வாமம் உடைய பண்பர்

.. உண்ப லிக்குத் திரியும் இன்பர்

"சமர்த்த னேகா" என்ற மாணி

.. சங்கை நீக்கிக் கூற்று தன்னைக்

குமைத்த காலர் குளிர்பொ ழில்சூழ்

.. கொள்ளம் பூதூர்க் குழக னாரே.


இமைக்கும் போதில் - நொடியளவு நேரத்தில்;

வாமம் - இடப்பக்கம்;

"சமர்த்தனே கா" என்ற மாணி சங்கை நீக்கிக் கூற்று தன்னைக் குமைத்த காலர் - "வல்லவனே! காத்தருளாய்" என்ற மார்க்கண்டேயருடைய அச்சத்தைப் போக்கி, நமனை அழித்த காலகாலர்; (சமர்த்தன் - வல்லவன்); (சங்கை - அச்சம்); (குமைத்தல் - அழித்தல்);

(திருமுறையில் சதுரன் / சதுரா முதலிய பிரயோகங்களைக் காணலாம். சம்பந்தர் தேவாரம் - 1.33.2 - "சடையார் சதுரன் முதிரா மதிசூடி"); (சதுரன் - 1. Able, clever person; சமர்த்தன்);


7)

அடியில் வாச மலர்கள் தூவும்

.. அன்பர் நெஞ்சில் கோயில் கொண்டு

மிடியை நீக்கி இன்பம் ஈவார்

.. வேத நாவர் தேவ தேவர்

முடியில் ஆற்றர் வெள்ளை நீற்றர்

.. முக்க ணெந்தை வென்றி மிக்க

கொடியில் ஏற்றர் குளிர்பொ ழில்சூழ்

.. கொள்ளம் பூதூர்க் குழக னாரே.


அடியில் - திருவடியில்;

மிடி - வறுமை; துன்பம்;

முடியில் ஆற்றர் - கங்காதரர்;

வென்றி மிக்க கொடியில் ஏற்றர் - இடபச் சின்னம் பொறித்த வெற்றிக்கொடி உடையவர்; (வென்றி - வெற்றி);


8)

குன்று பேர்த்தான் தனைநெ ரித்துக்

.. குருதி வெள்ளம் ஓட வைத்தார்

மன்றில் ஆடு மாந டத்தர்

.. வலிய நஞ்சை உண்ட கண்டர்

என்று கொல்லும் நாள தென்றே

.. எண்ணு கூற்றைக் காய்ந்த பாதர்

கொன்றை மார்பர் குளிர்பொ ழில்சூழ்

.. கொள்ளம் பூதூர்க் குழக னாரே.


குன்று பேர்த்தான்-தனை நெரித்துக் குருதி வெள்ளம் ஓட வைத்தார் - கயிலையைப் பெயர்த்த இராவணனை நசுக்கி, அவனது இரத்தவெள்ளம் ஓடச்செய்தவர்; (நெரித்தல் - நசுக்குதல்);

மன்றில் ஆடு மா நடத்தர் - மன்றில் ஆடும் திருநடம் உடையவர்;

லிய நஞ்சை உண்ட கண்டர் - கொடிய நஞ்சை உண்ட கண்டத்தை உடையவர்;

என்று கொல்லும் நாளது என்றே எண்ணு கூற்றைக் காய்ந்த பாதர் - "எந்த நாள் ஒருவரைக் கொல்லும் நாள்" என்பதையே எண்ணுகின்ற காலனைத் திருவடியால் உதைத்தவர்; (காய்தல் - கோபித்தல்; அழித்தல்);

கொன்றை மார்பர் - மார்பில் கொன்றை மாலையை அணிந்தவர்;


9)

அன்று மாலும் அயனும் நேட

.. அளவி லாத அழல தாகி

நின்ற ஈசர் சென்னி மீது

.. நிலவு நாகம் ஒன்ற வைத்தார்

பன்றி எய்து பார்த்த னுக்குப்

.. படைய ளித்தார் புரமெ ரித்த

குன்ற வில்லர் குளிர்பொ ழில்சூழ்

.. கொள்ளம் பூதூர்க் குழக னாரே.


அன்று மாலும் அயனும் நேட அளவு இலாத அழலது ஆகி நின்ற ஈசர் - முற்காலத்தில் திருமாலும் பிரமனும் தேடுமாறு, எல்லையற்ற சோதியாகி நின்ற ஈசனார்;

சென்னி மீது நிலவு நாகம் ஒன்ற வைத்தார் - தம் முடிமீது திங்களும் பாம்பும் சேர்ந்திருக்கும்படி வைத்தவர்;

பன்றி எய்து பார்த்தனுக்குப் படை அளித்தார் - ஒரு பன்றியை எய்து அருச்சுனனுக்குப் பாசுபதாஸ்திரம் கொடுத்தவர்;

புரம் எரித்த குன்ற வில்லர் - முப்புரங்களை எரிக்க மேருமலையை வில்லாக ஏந்தியவர்; (அப்பர் தேவாரம் 4.66.8 - "பருப்பத வில்லர் போலும்");


10)

வம்பர் இங்கே கேப்பை யில்நெய்

.. வடிதல் காணீர் வம்மின் என்பார்

நம்ப வேண்டா நீறு பூசி

.. நாமம் ஓதில் நன்மை நல்கும்

செம்பொ னாரும் செய்ய மேனிச்

.. செல்வர் நூலார் மார்பில் ஏனக்

கொம்ப ணிந்தார் குளிர்பொ ழில்சூழ்

.. கொள்ளம் பூதூர்க் குழக னாரே.


வம்பர் "இங்கே கேப்பையில் நெய் வடிதல் காணீர், வம்மின்" என்பார் - "இங்கே கேப்பையில் நெய் வடிகின்றது; வாருங்கள்" என்று சில வீணர்கள் அழைப்பார்கள்; (கேப்பை - கேழ்வரகு); (கேப்பையின்னெய் - னகர ஒற்று விரித்தல் விகாரம்);

நம்ப வேண்டா - அப்பொய்களை மதிக்க வேண்டா;

நீறு பூசி நாமம் ஓதில் நன்மை நல்கும் - திருநீற்றைப் பூசித், திருவைந்தெழுத்தை ஓதினால் நமக்கு இன்னருள் புரிந்து நலம் செய்கின்ற;

செம்பொன் ஆரும் செய்ய மேனிச் செல்வர் - செம்பொன் போன்ற சிவந்த திருமேனியை உடைய செல்வர்; (ஆர்தல் - ஒத்தல்);

நூல் ஆர் மார்பில் ஏனக் கொம்பு அணிந்தார் - பூணூல் அணிந்தவர்; முப்புரிநூல் பொருந்திய மார்பில் பன்றிக்கொம்பை அணிந்தவர்; (நூல் - பூணூல்; நூலார் - பூணூலை அணிந்தவர்); (ஆர்தல் - பொருந்துதல்); (ஏனம் - பன்றி);


11)

நறைமி குந்த மலர்க ளிட்டு

.. நாளு மேத்தில் நன்மை செய்வார்

மறைவி ரிக்க ஆல மர்ந்தார்

.. மலைப யந்த மங்கை பங்கர்

கறையி லங்கு திருமி டற்றர்

.. கபால மேந்தி ஊணி ரந்தும்

குறையி லாதார் குளிர்பொ ழில்சூழ்

.. கொள்ளம் பூதூர்க் குழக னாரே.


நறை மிகுந்த மலர்கள் இட்டு நாளும் ஏத்தில் நன்மை செய்வார் - தேன் நிறைந்த பூக்களைத் தூவித் தினந்தோறும் துதித்தால் நன்மை செய்பவர்;

மறை விரிக்க ஆல் அமர்ந்தார் - வேதப்பொருளை உபதேசிக்கக் கல்லால மரத்தடியை நாடியவர்; (விரித்தல் - விளக்கியுரைத்தல்); (ஆல் - கல்லாலமரம்); (அமர்தல் - விரும்புதல்; இருத்தல்);

மலை பயந்த மங்கை பங்கர் - மலைக்கு மகளான உமையை ஒரு பாகமாக உடையவர்; (பயத்தல் - to give birth to; பெறுதல்);

கறை இலங்கு திரு மிடற்றர் - கருமை திகழும் கண்டத்தை உடையவர் - நீலகண்டர்;

கபாலம் ஏந்தி ஊண் இரந்தும் குறை இலாதார் - கையில் பிரமனது மண்டையோட்டை ஏந்தி உணவை யாசித்தாலும் ஒரு குறையும் இல்லாதவர்;

குளிர்பொழில்சூழ் கொள்ளம்பூதூர்க் குழகனாரே - குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருக்கொள்ளம்பூதூரில் உறையும் அழகரான சிவபெருமானார்.


பிற்குறிப்புகள்:

1. யாப்புக் குறிப்பு:

எண்சீர்ச் சந்தவிருத்தம் - தான தானா தான தானா தான தானா தான தானா - என்ற சந்தம்.

ஒற்றைப்படைச் சீர்களில் - (அதாவது 1-3-5-7-ஆம் சீர்களில்) - தான என்பது தனன என்றும் வரலாம்.

தான – குறில் / குறில்+ஒற்று என்ற அமைப்பில் முடியும் மாச்சீர்;

தானா - தேமாச்சீர்;


2. சுந்தரர் தேவாரம் - 7.6.1 - "படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப் பாய்பு லித்தோல் அரையில் வீக்கி";


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


No comments:

Post a Comment