06.02.182 – அம்பர் (அம்பல்) - பந்தித்தருவினை - (வண்ணம்)
2015-05-06
06.02.182 - பந்தித்தருவினை - அம்பர் (இக்கால வழக்கில் - அம்பல்)
-------------------------
(வண்ணவிருத்தம்;
தந்தத் தனதன தந்தத் தனதன
தந்தத் தனதன .. தனதான )
(வஞ்சத் துடனொரு - திருப்புகழ் - திருச்செந்தூர்)
பந்தித் தருவினை இங்குற் றிடவுயர்
.. .. பண்பற் றனுதினம் .. மயலாலே
.. பண்டிக் குணவிட எண்டிக் குழல்வுறு
.. .. பந்தொத் தலமரும் .. அடியேனும்
சந்தத் தமிழது நின்பொற் கழலிடு
.. .. சம்பத் தினையுற .. அருளாயே
.. சண்பைக் கவுணியர் இம்பர்க் குதவிய
.. .. சங்கத் தமிழ்மகிழ் .. செவியானே
வந்தித் தடைசுர ரின்புற் றமுதுண
.. .. வங்கக் கடல்விடம் .. நுகர்வோனே
.. வண்டுற் றிடுகுழல் வஞ்சிக் கொடியிடை
.. .. மங்கைக் கினியவ .. இளநாகம்
அந்திப் பிறையணி செம்பொற் சடையின
.. .. அங்கைத் தலமதில் .. மழுவாளா
.. அஞ்சொற் கிளிபயில் அம்பர்ப் பதியினில்
.. .. அன்பர்க் கருளிடு .. பெருமானே.
பதம் பிரித்து:
பந்தித்து அருவினை இங்கு உற்றிட, உயர்
பண்பு அற்று, அனுதினம் மயலாலே
பண்டிக்கு உணவு இட எண்-திக்கு உழல்வுறு
பந்து ஒத்து அலமரும் அடியேனும்,
சந்தத் தமிழது நின் பொற்கழல் இடு
சம்பத்தினை உற அருளாயே;
சண்பைக் கவுணியர் இம்பர்க்கு உதவிய
சங்கத்தமிழ் மகிழ் செவியானே;
வந்தித்து அடை சுரர் இன்புற்று அமுது உண,
வங்கக் கடல்-விடம் நுகர்வோனே;
வண்டு உற்றிடு குழல் வஞ்சிக்கொடி-இடை
மங்கைக்கு இனியவ; இளநாகம்,
அந்திப் பிறை அணி செம்பொற்சடையின;
அங்கைத்-தலமதில் மழுவாளா;
அஞ்சொற் கிளி பயில் அம்பர்ப் பதியினில்
அன்பர்க்கு அருளிடு பெருமானே.
பந்தித்தருவினை இங்கு உற்றிட, உயர் பண்பு அற்று, அனுதினம் மயலாலே - பிணித்துள்ள அரிய வினைகளால் இங்குப் பிறவி அடைய, நற்குணம் இன்றித், தினமும் அறியாமையால்; (பந்தித்தருவினை - பந்தித்த அருவினை; "பந்தித்த" என்பதன் ஈற்று அகரம் தொக்கது; தொகுத்தல் விகாரம்); (பந்தித்தல் - பிணித்தல்; கட்டுதல்); (உறுதல் - அடைதல்; இருத்தல்); (மயல் - அறியாமை);
பண்டிக்கு உணவு இட எண்-திக்கு உழல்வுறு பந்து ஒத்து அலமரும் அடியேனும் - வயிற்றுக்கு உணக்காக எட்டுத்திசையிலும் சுழலும் பந்து போல அலைந்து வருந்தும் நானும்; (பண்டி - வயிறும் உடல்); (உழல்தல் - சுழல்தல்; அலைதல்); (அலமருதல் - சுழலுதல்; அஞ்சுதல்; வருந்துதல்);
சந்தத் தமிழது நின் பொற்கழல் இடு சம்பத்தினை உற அருளாயே - சந்தத்தமிழ்ப் பாமாலைகளை உன் பொன்னடியில் இடுகின்ற செல்வத்தை அடைய அருள்வாயாக; (சம்பத்து - செல்வம்); (சம்பந்தர் தேவாரம் - 1.80.5 - "சிற்றம்பல மேய செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே");
சண்பைக் கவுணியர் இம்பர்க்கு உதவிய சங்கத்தமிழ் மகிழ் செவியானே - சீகாழியில் கௌண்டின்ய கோத்திரத்தில் அவதரித்த திருஞான சம்பந்தர் இவ்வுலகோருக்கு நற்கதி அடைய உதவியாக அருளிய செழுந்தமிழை மகிழும் திருக்காது உடையவனே; (சண்பை - சீகாழி); (கவுணியர் - கௌண்டின்ய கோத்திரத்தில் அவதரித்தவர் - திருஞான சம்பந்தர்); (இம்பர் - இவ்வுலகு);
வந்தித்து அடை சுரர் இன்புற்று அமுது உண, வங்கக் கடல்-விடம் நுகர்வோனே - ; (வந்தித்தல் - வணங்குதல்); (சுரர் - தேவர்); (வங்கம் - மரக்கலம்; படகு); (வங்கக்கடல் - பாற்கடலில் படகுகள் இரா எனினும், கடலின் பொதுமைநோக்கிப் படகுகள் இருக்கும் கடல் என்று சொன்னது சாதியடை); (நுகர்தல் - அருந்துதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.29.6. - "வங்கமலியுங் கடல் விடத்தினை நுகர்ந்த அங்கணன்");
வண்டு உற்றிடு குழல் வஞ்சிக்கொடி-இடை மங்கைக்கு இனியவ - வண்டுகள் அடையும் கூந்தலும் வஞ்சிக்கொடி போன்ற இடையையும் உடைய உமைக்கு இனியவனே; (குழல் - கூந்தல்);
இளநாகம், அந்திப் பிறை அணி செம்பொற்சடையின - இளம் பாம்பையும் பிறைச்சந்திரனையும் அணிந்த செம்பொன் போன்ற சடையை உடையவனே;
அங்கைத்-தலமதில் மழுவாளா - கையில் மழுவை ஏந்தியவனே; (அங்கைத் தலம் - கை);
அஞ்சொற் கிளி பயில் அம்பர்ப் பதியினில் அன்பர்க்கு அருளிடு பெருமானே - அழகிய சொற்களைப் பேசும் கிளிகள் ஒலிக்கின்ற (சோலை சூழ்ந்த) திரு-அம்பர் என்ற தலத்தில் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள்புரியும் பெருமானே; (அஞ்சொல் - அம் சொல் - அழகிய சொல்); (பயில்தல் - ஒலித்தல்; தங்குதல்); (பதி - தலம்);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment