05.40 – கண்டீஸ்வரம் (நெல்லிக்குப்பம் அருகே)
2015-06-23
கண்டீஸ்வரம்
(ஹஸ்ததாளாம்பிகை சமேத நடனபாதேஸ்வரர் கோயில்)
(இத்தலம் கடலூர் - பண்ருட்டி இடையே நெல்லிக்குப்பம் அருகே உள்ளது)
------------------
(அறுசீர் விருத்தம் - "மா மா காய்" என்ற அரையடி வாய்பாடு.)
(சுந்தரர் தேவாரம் - 7.53.1 - "மருவார் கொன்றை மதிசூடி")
(அப்பர் தேவாரம் - 4.15.1 - "பற்றற் றார்சேர் பழம்பதியைப்")
1)
முதலில் தோன்றி முளைத்தானும் மூவாச் சாவாப் பெருமானும்
அதளை அரையில் அசைத்தானும் ஆலம் உண்ட மிடற்றானும்
மதனை எரித்த தீவணனும் வணங்கும் அன்பர்க் கினியானும்
கதலித் தோட்டம் புடைசூழ்ந்த கண்டீச் சரத்துக் கண்ணுதலே.
முதலில் தோன்றி முளைத்தானும் - எல்லாப் பொருள்களுக்கும் முற்பட்டு என்றும் இயற்கையாகவே விளங்குபவனும்; (அப்பர் தேவாரம் - 6.55.9 - "மூவாய் பிறவாய் இறவாய் போற்றி முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி" -- 'முளைத்துத் தோன்றினாய்' என மாற்றி, 'உளனாய் விளங்கினாய்' என்றுரைக்க);
மூவாச் சாவாப் பெருமானும் - மூத்தலும் சாதலும் இல்லாத பெருமானும்;
அதளை அரையில் அசைத்தானும் - தோலை ஆடையாக அரையில் கட்டியவனும்; (அதள் - தோல்); (அசைத்தல் - கட்டுதல்);
ஆலம் உண்ட மிடற்றானும் - விடந்த உண்ட கண்டனும்; (மிடறு - கண்டம்);
மதனை எரித்த தீவணனும் - மன்மதனை எரித்த, தீப்போன்ற செம்மேனி உடையவனும்; (மதன் - மன்மதன்); (தீவணன் - தீவண்ணன் என்பது இடைக்குறையாக வந்தது);
வணங்கும் அன்பர்க்கு இனியானும் - வழிபடும் பக்தர்களுக்கு இனிமை பயப்பவனும்;
கதலித் தோட்டம் புடை சூழ்ந்த கண்டீச்சரத்துக் கண்ணுதலே - வாழைத்தோட்டம் சூழ்ந்த திருக்கண்டீஸ்வரத்தில் உறைகின்ற நெற்றிக்கண்ணன்; (கதலி - வாழை); (கண்ணுதல் - நெற்றிக்கண்ணன்);
2)
வரியார் புலித்தோல் உடையானும் மறையின் பொருளாய் நின்றானும்
பெரியார் நாளும் மறவாது பேணு கின்ற பெருமானும்
பரிவோ டேத்திப் பணிகின்ற பத்தர்க் கென்றும் இனியானும்
கரிகா டரங்கா நடமாடும் கண்டீச் சரத்துக் கண்ணுதலே.
வரி ஆர் புலித்தோல் உடையானும் - வரிகளை உடைய புலியின் தோலை உடையாக உடையவனும்;
பெரியார் - கற்றுணர்ந்த பெரியோர்கள்;
பரிவு - அன்பு;
கரிகாடு அரங்கா - சுடுகாடே நடமாடும் அரங்கமாக;
3)
முனமும் மதில்கள் செந்தீயில் மூழ்க ஓரம் பெய்தானும்
சினவெள் விடைமேல் வருவானும் திங்கள் திகழும் சடையானும்
புனலும் பூவும் கொண்டடியைப் போற்றும் அன்பர்க் கினியானும்
கனலை ஏந்தி நடமாடும் கண்டீச் சரத்துக் கண்ணுதலே.
முனம் மும்மதில்கள் செந்தீயில் மூழ்க ஓர் அம்பு எய்தானும் - முன்பு முப்புரங்கள் நெருப்பில் மூழ்கும்படி ஒரு கணையை ஏவியவனும்;
கனல் - நெருப்பு;
4)
பணங்கள் பூண்டு தலையேந்திப் பலிக்குப் பல்லூர் உழல்வானும்
அணங்கொர் பங்கு மகிழ்ந்தானும் அவிர்புன் சடைமேற் புனலானும்
மணங்கொள் மலர்கள் பலதூவி வணங்கும் அன்பர்க் கினியானும்
கணங்கள் சூழ நடமாடும் கண்டீச் சரத்துக் கண்ணுதலே.
பணங்கள் பூண்டு தலை ஏந்திப் பலிக்குப் பல்லூர் உழல்வானும் - பாம்புகளை அணிந்து, மண்டையோட்டை ஏந்திப் பிச்சைக்காகப் பல ஊர்களில் திரிபவனும்; (பணம் - நாகப்பாம்பு; பாம்பின் படம்); (பலி - பிச்சை);
அணங்கு ஒர் பங்கு - உமையை ஒரு பங்காக; (ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்);
அவிர் புன் சடை - ஒளிவீசும் செஞ்சடை; (அவிர்தல் - பிரகாசித்தல்; புன்மை - புகர் நிறம் - tawny colour); (அப்பர் தேவாரம் - 5.36.5 - "பூவுலாஞ் சடைமேற் புனல் சூடினான்");
மணங்கொள் மலர்கள் - வாசனை பொருந்திய பூக்கள்;
கணங்கள் - பூதகணங்கள்;
5)
தொழில்கள் ஐந்து புரிவானும் தோற்றம் அந்தம் இல்லானும்
சுழல்கள் மிக்க கங்கைதனைச் சுடர்பொற் சடையிற் கரந்தானும்
நிழல்கொள் மழுவாள் உடையானும் நினைவார்க் கென்றும் இனியானும்
கழல்கள் ஆர்க்க நடமாடும் கண்டீச் சரத்துக் கண்ணுதலே.
தொழில்கள் ஐந்து - பஞ்சகிருத்தியம் - சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபவம், அனுக்கிரஹம் என்ற கடவுளின் ஐந்தொழில்;
சுடர்பொற்சடை - சுடர் பொன் சடை - ஒளிவிடுகின்ற பொன்போலும் திருச்சடை;
நிழல்கொள் மழுவாள் - ஒளியுடைய மழுவாயுதம்;
கழல்கள் ஆர்க்க நடம் ஆடும் - கழல்கள் ஒலிக்கக் கூத்தாடும்;
6)
வேலை விடத்தை உண்டானும் வேழம் தன்னை உரிசெய்து
தோலைப் போர்த்துக் கொண்டானும் தூநீ றணிந்த சுந்தரனும்
மாலை யாகத் தமிழ்சாத்தி வணங்கும் அன்பர்க் கினியானும்
காலை உயர்த்தி நடமாடும் கண்டீச் சரத்துக் கண்ணுதலே.
* நடனபாதேஸ்வரர் - கண்டீஸ்வரத்தில் இறைவன் திருநாமம்.
வேலை விடம் - கடல் நஞ்சு;
வேழம் - யானை;
உரிசெய்து - உரித்து;
சாத்துதல் - அணிதல்; (சம்பந்தர் தேவாரம் - 3.8.11 - "சந்தமெல்லாம் அடிச் சாத்தவல்ல மறை ஞானசம்பந்தன செந்தமிழ்");
7)
மடமென் கொடியாள் பங்கினனும் வனத்தில் தவஞ்செய் பார்த்தனுக்குப்
படையொன் றளிக்க வேட்டுவனாய்ப் பன்றிப் பின்செல் பசுபதியும்
விடையொன் றேறும் பெருமானும் விரும்பும் அன்பர்க் கினியானும்
கடையொன் றில்லா நடமாடும் கண்டீச் சரத்துக் கண்ணுதலே.
மடமென் கொடியாள் - இள மென்கொடி போன்ற உமையம்மை;
படை ஒன்று அளிக்க - பாசுபதாஸ்திரத்தைக் கொடுக்க;
கடை - முடிவு (End, termination, conclusion); எல்லை (Limit, boundary);
கடை ஒன்று இல்லா நடம் ஆடும் - முடிவில்லாத திருநடம் ஆடும்; (கடை - முடிவு); (சம்பந்தர் தேவாரம் - 2.115.11 - "அந்தமில்லா அனலாடலானை");
8)
உரத்தை உன்னி மலையெடுத்தான் உரக்க அழுமா றொருவிரலால்
நெரித்துப் பின்னர் இசைகேட்டு நீண்ட வாழ்நாள் தந்தானும்
சிரத்தில் ஐயம் தேர்வானும் சிந்தித் தெழுவார்க் கினியானும்
கரத்தைக் கவித்து நடமாடும் கண்டீச் சரத்துக் கண்ணுதலே.
உரத்தை உன்னி மலை எடுத்தான் உரக்க அழுமாறு ஒரு விரலால் நெரித்துப் - தன் வலிமையையே நினைத்துக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் ஓலமிட்டு அழும்படி ஒரு விரலால் அவனை நசுக்கி; (உரம் - வலிமை); (உன்னுதல் - எண்ணுதல்); (உரக்க - குரலோங்க);
பின்னர் இசை கேட்டு நீண்ட வாழ்நாள் தந்தானும் - பின், அவன் பாடிய இசையைக் கேட்டு இரங்கி அவனுக்கு நீண்ட ஆயுளைத் தந்தவனும்;
சிரத்தில் ஐயம் தேர்வானும் - பிரமனது மண்டையோட்டில் பிச்சையெடுப்பவனும்; (ஐயம் - பிச்சை);
சிந்தித்து எழுவார்க்கு இனியானும் - துயிலெழும்போதே சிவபெருமானை எண்ணும் பக்தர்களுக்கு இனியவனும்; (சம்பந்தர் தேவாரம் - 3.85.3 - "சிந்தித் தெழவல்லார் தீரா வினைதீர்க்கும் நந்தி");
கரத்தைக் கவித்து நடம் ஆடும் கண்டீச்சரத்துக் கண்ணுதலே - கையை வளைத்துக் கூத்து ஆடுகின்ற, திருக்கண்டீஸ்வரத்தில் உறைகின்ற நெற்றிக்கண்ணன்;
9)
பூணற் கேன மருப்போடு புற்ற ராவும் மகிழ்ந்தானும்
கோணற் பிறையார் சடையானும் குளிர்தா மரையான் அரிநேடி
நாணத் தீயாய் நின்றானும் நம்பு வாருக் கெளியானும்
காணற் கரிய நடமாடும் கண்டீச் சரத்துக் கண்ணுதலே.
பூணற்கு ஏன மருப்போடு புற்று-அராவும் மகிழ்ந்தானும் - பூண்பதற்கு பன்றிக் கொம்பையும் புற்றில் வாழும் தன்மையுடைய பாம்பையும் விரும்புபவனும்;
கோணல் பிறை ஆர் சடையானும் - வளைந்த பிறைச்சந்திரன் பொருந்திய சடையை உடையவனும்;
குளிர் தாமரையான் அரி நேடி நாணத் தீயாய் நின்றானும் - குளிர்ந்த தாமரைமேல் இருக்கும் பிரமனும் திருமாலும் தேடி (அடிமுடி காணாமல்) நாணும்படி சோதியாக உயர்ந்தவனும்;
நம்புவாருக்கு எளியானும் - விரும்பும் பக்தர்களுக்கு எளியவனும்; (நம்புதல் - விரும்புதல்);
காணற்கு அரிய நடம் ஆடும் கண்டீச்சரத்துக் கண்ணுதலே - காண்பதற்கு அரிய அற்புதக் கூத்தாடுகின்ற, திருக்கண்டீச்சரத்தில் உறைகின்ற நெற்றிக்கண்ணன்.
10)
மெய்யை உணரா தவம்பேசும் வீணர்க் கென்றும் இல்லானும்
பையை உடைய பாம்பருகே பால்வெண் மதியம் புனைந்தானும்
பொய்யைக் கடிந்த மனத்தினராய்ப் போற்றும் அன்பர்க் கினியானும்
கையைக் கவித்து நடமாடும் கண்டீச் சரத்துக் கண்ணுதலே.
மெய்யை உணராது அவம் பேசும் வீணர்க்கு என்றும் இல்லானும் - உண்மையை உணராமல் பழித்துப் பேசுகின்ற கீழோர்க்கு என்றும் அருள் இல்லாதவனும்;
பையை உடைய பாம்பு அருகே பால்-வெண்-மதியம் புனைந்தானும் - நாகப்பாம்பின் அருகே பால் போன்ற வெண்பிறையை அணிந்தவனும்; (பை - பாம்பின் படம்);
பொய்யைக் கடிந்த மனத்தினராய்ப் போற்றும் அன்பர்க்கு இனியானும் - பொய்யை விலக்கிய மனம் உடையவர்கள் ஆகி வழிபடும் பக்தர்களுக்கு இனிமை பயப்பவனும்; (கடிதல் - விலக்குதல்);
கையைக் கவித்து நடம் ஆடும் கண்டீச்சரத்துக் கண்ணுதலே - கையை வளைத்துக் கூத்து ஆடுகின்ற, திருக்கண்டீஸ்வரத்தில் உறைகின்ற நெற்றிக்கண்ணன்;
11)
திங்கட் கண்ணிச் சடையானும் தேவி பங்கில் உடையானும்
செங்கட் சோழன் ஆகவொரு சிலந்திக் கருள்செய் பெருமானும்
எங்கட் கருளாய் இறைவாவென் றேத்தும் அடியார்க் கினியானும்
கங்குற் கானில் நடமாடும் கண்டீச் சரத்துக் கண்ணுதலே.
திங்கட் கண்ணிச் சடையானும் - திங்களைத் தலையில் அணியும் மாலையாகச் சடையில் அணிந்தவனும்; (கண்ணி - தலையில் அணியும் மாலை);
தேவி பங்கில் உடையானும் - உமைபங்கனும்;
செங்கட்சோழன் ஆக ஒரு சிலந்திக்கு அருள்செய் பெருமானும் - திருவானைக்காவில் வழிபட்ட ஒரு சிலந்தியைக் கோச்செங்கட்சோழனாகப் பிறப்பித்த பெருமானும்;
"எங்கட்கு அருளாய் இறைவா" என்று ஏத்தும் அடியார்க்கு இனியானும் - "இறைவனே! எங்களுக்கு அருள்புரிவாயாக" என்று துதிக்கும் அடியவர்களுக்கு இனியவனும்;
கங்குற் கானில் நடமாடும் - இரவில் சுடுகாட்டில் நடம் செய்கின்ற; (கங்குல் - இரவு; கான் - சுடுகாடு); (சுந்தரர் தேவாரம் - 7.47.2 - "கங்குற் புறங்காட் டாடீ"); (சம்பந்தர் தேவாரம் - 1.70.1 - "கானத்திரவில் எரிகொண்டாடுங் கடவுள்");
கண்டீச்சரத்துக் கண்ணுதலே - திருக்கண்டீஸ்வரத்தில் உறைகின்ற நெற்றிக்கண்ணன்;
பிற்குறிப்புகள்:
1) திருக்கண்டீஸ்வரம் - ஹஸ்ததாளாம்பிகை சமேத நடனபாதேஸ்வரர் கோயில் - இந்தக் கோயில், கடலூர் பண்ருட்டி இடையே நெல்லிக்குப்பம் என்ற ஊரை அடுத்து உள்ளது.
2) இந்தக் கோயிலில் பலகையில் - வடுகூர் என்ற பாடல் பெற்ற தலம் இது என்று எழுதியிருக்கக் காணலாம். ஆனால், விழுப்புரம் புதுச்சேரி இடையே உள்ள "திருவாண்டார் கோயில்" என்ற தலத்தையே "வடுகூர்" என்று மற்ற நூல்களெல்லாம் கூறுகின்றன.
வி. சுப்பிரமணியன்
-------------- --------------
No comments:
Post a Comment