05.36 – விளமர் - (விளமல்)
2015-06-06
விளமர் - (இக்காலத்தில் - விளமல்)
(திருவாரூர் அருகு உள்ள தலம்)
------------------
(வஞ்சித்துறை - "மா விளம்" என்ற வாய்பாடு - திருவிருக்குக்குறள் அமைப்பு)
(சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே")
1)
வெந்த நீறணி
எந்தை விளமரை
முந்தை வினையறச்
சிந்தி நெஞ்சமே.
வெந்த நீறு அணி - இச்சொற்றொடரைச் சிவபெருமானுக்கு அடைமொழியாகவும் கொள்ளலாம்; நெஞ்சுக்கு ஏவலாகவும் கொள்ளலாம்;
2)
நாயன் கையினில்
தீயன் விளமரில்
தூயன் தாள்தொழ
மாயும் வினைகளே.
நாயன் - தலைவன்; கடவுள்;
3)
புடையிற் பெண்ணினன்
விடையன் விளமரிற்
சடையன் தாள்தொழத்
தடைகள் நீங்குமே.
புடை - பக்கம்;
4)
நீரன் புரமெரி
வீரன் விளமரில்
ஈரன் தாள்தொழச்
சாரும் நன்மையே.
நீரன் - கங்காதரன்;
ஈரன் - தயை உடையவன்; (ஈரம் - இரக்கம்; கருணை; அன்பு);
தாள் தொழச் சாரும் நன்மையே - அப்பெருமானுடைய திருவடியைத் தொழுதால் நன்மை வந்தடையும்; (சார்தல் - சென்றடைதல்; பொருந்தியிருத்தல்);
5)
ஆடல் வல்லவன்
வேடன் விளமரிற்
சேடன் தாள்தொழ
வீடும் வினைகளே.
வேடன் - வேட்டுவன்; பல அருட்கோலங்கள் உடையவன்; (சுந்தரர் தேவாரம் - 7.13.5 - "துறையூர் வேடா உனை வேண்டிக்கொள்வேன் தவநெறியே");
சேடன் - உயர்ந்தவன்;
வீடும் - நீங்கும்;
6)
பாந்தள் மாலையன்
சாந்த நீறணி
வேந்தன் விளமரைச்
சூழ்ந்து வாழ்மினே.
பாந்தள் - பாம்பு;
சாந்த நீறு - சந்தனம்போல் திருநீறு; (சாந்தம் - சந்தனம்);
சூழ்ந்து வாழ்மினே - வலம்செய்து வாழுங்கள்; (சூழ்தல் - சுற்றிவருதல்; பிரதட்சிணம் செய்தல்); (வாழ்தல் - செழித்திருத்தல்); (ஏ - ஈற்றசை);
7)
வாச மாருதம்
வீசு விளமரில்
ஈசன் தாள்தொழ
நாசம் வினைகளே.
மாருதம் - காற்று - இங்கே தென்றல்;
8)
குன்றை ஆட்டினான்
கன்ற ஊன்றினான்
நின்ற விளமரைச்
சென்று சூழ்மினே.
குன்றை ஆட்டினான் கன்ற ஊன்றினான் - கயிலையைப் பெயர்க்க முயன்ற இராவணனை அவன் வரும்தும்படி ஊன்றி நசுக்கியவன்; (ஆட்டினாற் கன்ற ஊன்றினான் - ஆட்டினானைக் கன்ற ஊன்றினான்; இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருள் தெளிவு கருதி முதற்சொல்லின் ஈற்றில் உள்ள னகர ஒற்று றகர ஒற்றாகத் திரியும்); (கன்றுதல் - வருந்துதல்; நோதல்; வாடுதல்);
நின்ற - நிலையாகத் தங்கிய;
9)
எரியன் மாலயற்
கரியன் விளமரிற்
பிரியன் தாள்தொழப்
பிரியும் வினைகளே.
எரியன் - சோதி வடிவினன்;
மால் அயற்கு அரியன் - திருமாலுக்கும் பிரமனுக்கும் அடைய ஒண்ணாதவன்;
விளமரிற் பிரியன் - விளமரில் உறைகின்ற அன்பன்; (பிரியம் - அன்பு);
தாள் தொழப் பிரியும் வினைகளே - திருவடியைத் தொழுதால் வினைகள் நீங்கும்; (பிரிதல் - விட்டுநீங்குதல்; கட்டு அவிழ்தல்);
10)
தூற்று வாயினர்
கூற்றை விடுமினே
ஏற்றன் விளமரைப்
போற்றி உய்ம்மினே.
தூற்று வாயினர் - மறைநெறியைப் பழித்துப் பேசுவோர்;
கூற்று விடுமினே - பேச்சை பொருட்படுத்தவேண்டா; பேச்சை நீங்குங்கள்;
ஏற்றன் - இடப வாகனன்;
விளமரைப் போற்றி உய்ம்மினே - உறைகின்ற திருவிளமரைப் போற்றி உய்யுங்கள்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.93.1 - "பூந்துருத்தி பூந்துருத்தி என்பீ ராகில் பொல்லாப் புலால் துருத்தி போக்கலாமே"); (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.43.10 - "நல்ல நல்லம் எனும்பெயர் நாவினால் சொல்ல வல்லவர் தூநெறி சேர்வரே");
11)
எண்ணில் பெயரினன்
கண்ணில் தீயினன்
அண்ணல் விளமரை
நண்ணில் உய்தியே.
எண் இல் பெயரினன் - எண்ணற்ற நாமங்கள் உடையவன்;
கண்ணில் தீயினன் - நெற்றிக்கண்ணில் நெருப்பை உடையவன்;
அண்ணல் விளமரை நண்ணில் உய்தியே - அப்பெருமான் எழுந்தருளிய விளமரை அடைந்தால் (சென்று வழிபட்டால்) உய்வு பெறலாம்; (நண்ணில் - நண்ணினால் - அடைந்தால்); (உய்தி - உய்வு; ஈடேற்றம்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.43.2 - "நல்லம் நண்ணுதல் நன்மையே");
வி. சுப்பிரமணியன்
-------------- --------------
No comments:
Post a Comment