Thursday, December 22, 2022

06.02.183 – பாம்பணி - திருப்பாதாளீச்சரம் - ஆராத காதலால் - (வண்ணம்)

06.02.183 – பாம்பணி - திருப்பாதாளீச்சரம் - ஆராத காதலால் - (வண்ணம்)


2015-05-16

06.02.183 - ஆராத காதலால் - (பாம்பணி - திருப்பாதாளீச்சரம்)

(இக்கால வழக்கில் "பாமணி". இத்தலம் மன்னார்குடிக்கு அருகே உள்ளது)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தானான தான தானான தான

தானான தான .. தனதான )

(மாலாசை கோப மோயாதெ நாளு - திருப்புகழ் - விராலிமலை)


ஆராத காத லானாம மோதி

.. .. ஆளாகி வாழ .. அருளாயே

.. ஆனேற தேறு நாதாவ ராவை

.. .. ஆர்நாண தாக .. உடையானே

தாராக நாக மாரூரும் வேட

.. .. தாயோடு தாதை .. யுமிலாதாய்

.. தாளாத ஆல மார்தேவ தேவ

.. .. சாவாத ஈச .. அலைமோதும்

நீராரும் வேணி ஓர்கூறு நாரி

.. .. நேயாநி லாவை .. அணிவோனே

.. நேர்வாரி லாத கோனேப ராவி

.. .. நீர்தூபம் வாச .. மலரோடு

பாரார்க ளோடு வானோர்க ளேத்து

.. .. பாதாவி ராவி .. னடமாடீ

.. பாணார ஊது காலாறு நாடு

.. .. பாதாளில் மேய .. பெருமானே.


பதம் பிரித்து:

ஆராத காதலால் நாமம் ஓதி

ஆள் ஆகி வாழ அருளாயே;

ஆன்-ஏறு-அது ஏறும் நாதா; அராவை

ஆர்-நாண்-அதாக உடையானே;


தார்-ஆக நாகம் மார் ஊரும் வேட;

தாயோடு தாதையும் இலாதாய்;

தாளாத ஆலம் ஆர்-தேவதேவ;

சாவாத ஈச; அலைமோதும்


நீர் ஆரும் வேணி, ஓர் கூறு நாரி

நேயா; நிலாவை அணிவோனே;

நேர்வார் இலாத கோனே; பராவி

நீர் தூபம் வாச மலரோடு


பாரார்களோடு வானோர்கள் ஏத்து

பாதா; இராவில் நடமாடீ;

பாண் ஆர ஊது காலாறு நாடு

பாதாளில் மேய பெருமானே.


ஆராத காதலால் நாமம் ஓதி ஆள் ஆகி வாழ அருளாயே - மிகுந்த அன்பால் உன் திருநாமத்தை ஓதித் தொண்டனாகி நான் வாழ அருள்வாயாக; (ஆர்தல் - திருப்தியாதல்); (ஆள் ஆதல் - அடிமை பூணுதல்); (அப்பர் தேவாரம் - 6.67.1 - "ஆளான அடியவர்கட் கன்பன்)";

ஆன்-ஏறு-அது ஏறும் நாதா - இடபவாகனம் உடைய தலைவனே; (ஆன் ஏறு - இடபம்);

அராவை ஆர்-நாண்-அதாக உடையானே - பாம்பை நாணாகக் கட்டியவனே; (அரைநாணாகக் கட்டியது; முப்புரம் எரித்தபோது வில்லில் நாணாகப் பாம்பைக் கட்டியது); (அரா - பாம்பு); (ஆர்த்தல் - பிணித்தல்; கட்டுதல்);

தார்-ஆக நாகம் மார் ஊரும் வேட - மாலை போலப் பாம்பு மார்பில் ஊர்கின்ற கோலம் உடையவனே; (தார் - மாலை); (மார் - மார்பு); (வேடன் - வேடம் உடையவன்; வேடம் - கோலம்);


தாயோடு தாதையும் இலாதாய் - தாயும் தந்தையும் இல்லாதவனே; (தாதை - தந்தை);

தாளாத ஆலம் ஆர்-தேவதேவ - தாங்க ஒண்ணாத ஆலகால விஷத்தை உண்டருளிய தேவதேவனே; (தாளுதல் - பொறுத்தல்); (ஆர்தல் - உண்ணுதல்);

சாவாத ஈச - என்றும் இறப்பு இல்லாத ஈசனே;

அலைமோதும் நீர் ஆரும் வேணி, ஓர் கூறு நாரி நேயா - அலை மோதுகின்ற கங்கை பொருந்திய சடையையுடைய, ஒரு பாகமாக உமையை விரும்பியவனே; (ஆர்தல் - பொருந்துதல்); (வேணி - சடை); (நாரி - பெண் - இங்கே உமை); (நேயன் - அன்பன்);

நிலாவை அணிவோனே - சந்திரனை அணிந்தவனே;

நேர்வார் இலாத கோனே - ஒப்பு ஆகின்றவர் எவரும் இல்லாத தலைவனே; (நேர்வார் - ஒப்பு ஆகின்றவர்); (கோன் - தலைவன்);

பராவி நீர் தூபம் வாச மலரோடு பாரார்களோடு வானோர்கள் ஏத்து பாதா - நீர், தூபம், வாசம் கமழும் பூக்கள் இவற்றால் மண்ணுலகினரும் விண்ணுலகினரும் போற்றி வணங்கும் திருவடியினனே; (பராவுதல் - புகழ்தல்; வணங்குதல்); (பாரார் - உலகத்தவர்);

இராவில் நடமாடீ - நள்ளிருளில் கூத்து ஆடுபவனே; (இரா - இரவு);

பாண் ஆர ஊது காலாறு நாடு பாதாளில் மேய பெருமானே - பண் பொருந்த ஒலிக்கின்ற வண்டுகள் நாடுகின்ற (சோலை சூழ்ந்த) பாம்பணியில் உள்ள பாதாளீச்சரத்தில் உறைகின்ற பெருமானே; (பாண் - பாட்டு; பண் என்பதன் நீட்டல் விகாரம் என்றும் கருதல் ஆம்); (ஊதுதல் - வண்டுகள் ஒலித்தல்); (காலாறு - வண்டு); (பாதாளில் - பாதாளீச்சரத்தில்); (சுந்தரர் தேவாரம் - 7.93.9 - "பாணார் குழலும் முழவும் விழவில் சேணார் நறையூர்ச் சித்தீச்சரமே"); (சம்பந்தர் தேவாரம் - 1.108.1 - "பன்னிய பாடலினா னுறைகோயில் பாதாளே." - சிவபெருமான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்);


பிற்குறிப்பு:

தலப்பெயர்க் குறிப்பு: CKS பெரியபுராண உரையிலிருந்து:

"பாமணி" - "பாம்பணி" என வழங்கப்படுகின்றது; "பாதாளே" என்பது பதிகத்துட் கண்ட பெயர். பாதாள உலகத்தினின்றும் ஆதிசேடனது தம்பியாகிய தனஞ்சயன் என்னும் அரவு பிலத்தின் வழியே வந்து பூசித்துப் பேறுபெற்ற பதியாதலின் அத்தொடர்புபற்றிப் பாதாள் எனப்பட்டது என்ப.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment