Wednesday, December 14, 2022

05.29 – சேத்திரக்கோவை

05.29 – சேத்திரக்கோவை

2015-04-12

05.29 - சேத்திரக்கோவை

------------------

(2014 டிசம்பரில் தரிசித்த தலங்களிற் சில தலங்கள் இப்பாடல்களில் இடம்பெறுகின்றன.)

(அறுசீர் விருத்தம் - காய் காய் காய் காய் மா தேமா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 2.72.1 - "பந்தார் விரன்மடவாள் பாகமா நாகம்பூண் டேற தேறி")


1)

வளமல்கு முதுகுன்றம் வயல்சூழ்ந்த திருவைகல் மாடக் கோயில்

குளிர்மல்கு பொழில்சூழ்ந்த கோழம்பம் நாள்தோறும் கும்பிட் டேத்தி

உளமுள்கும் அடியார்தம் ஊனம்தீர் பாம்புரம் உண்ணஞ் சத்தால்

களமல்கு கண்டத்தன் கருதிடங்கள் கைதொழுதால் கழியும் துன்பே.


* முதுமுகுன்றம் (விருத்தாசலம்), வைகல் மாடக்கோயில், திருக்கோழம்பம், திருப்பாம்புரம்.


உளம் உள்கும் - உள்ளத்தில் எண்ணும்;

ஊனம் - குறை, குற்றம்;

உண் நஞ்சத்தால் களம் மல்கு கண்டத்தன் - உண்ட விடத்தால் கருமை விளங்கும் கண்டம் உடையவன்; (களம் - கருமை);

கருது இடங்கள் - விரும்பி உறையும் தலங்கள்;

கழிதல் - முடிவடைதல்; அழிதல்; ஒழிதல்;

துன்பு - துன்பம்;


2)

சென்றடைந்தார் வினைதீர்க்கும் சிறுகுடி செல்வமருள் திருமீ யச்சூர்

தென்றலிலே மணங்கமழும் திருவம்பர்ப் பெருங்கோயில் தேவர் கட்கா

அன்றுவிடம் ஆர்ந்தவன்றன் அம்பர்மா காளம் அரையில் நாகம்

ஒன்றசைத்த உத்தமன்றன் உறைவிடங்கள் கைதொழுதால் உய்ய லாமே.


* திருச்சிறுகுடி, திருமீயச்சூர், அம்பர், அம்பர் மாகாளம்.


ஆர்தல் - உண்ணுதல்;

அசைத்தல் - கட்டுதல்;


3)

விண்ணிழி விமானம் விளங்குகின்ற திருவீழி மிழலை வண்டின்

பண்ணிசை வேதவொலி பயில்திலதைப் பதிவாளை பாயும் நீரார்

தண்வயல் சூழ்ந்திலங்கு சாட்டியக் குடிசெஞ் சடையின் மீது

வெண்மதி வைத்தபரன் விரும்பிடங்கள் கைதொழுதால் வினைகள் வீடே.


* திருவீழிமிழலை, திலதைப்பதி, திருச்சாட்டியக்குடி.


பயில்தல் - நிகழ்தல்; தங்குதல்;

வாளை பாயும் நீர் ஆர் தண்வயல் - வாளை மீன்கள் பாயும் நீர் நிறைந்த குளிர்ந்த வயல்கள்;


4)

அன்றாப்பே அரனுருவா அகமகிழ்ந்து வழிபட்ட அடிய வட்காக்

கன்றாப்பில் நின்றருள் கன்றாப்பூர் புள்ளினத்தின் கானத் தோசை

குன்றாத வலிவலம் குளிர்பொழில்சூழ் கைச்சினம் குரவம் சூடி

மன்றாடு மணிகண்டன் மகிழிடங்கள் கைதொழுதால் மகிழ லாமே.


* திருக்கன்றாப்பூர், திருவலிவலம், திருக்கைச்சினம்.


அன்று ஆப்பே அரன் உருவா அகம் மகிழ்ந்து வழிபட்ட அடியவட்காக் கன்று-ஆப்பில் நின்றருள் கன்றாப்பூர் - ஒரு பக்தைக்காகக் கன்றைக் கட்டும் ஆப்பில் எழுந்தருளிய திருக்கன்றாப்பூர்; (ஆப்பு - முளை);

புள்ளினத்தின் கானத்து ஓசை - பறவைகளின் பாட்டு ஓசை;

குரவம் சூடி மன்று ஆடு மணிகண்டன் - குராமலறைச் சூடி அம்பலத்தில் ஆடுகின்ற நீலகண்டன்;

மகிழ்தல் - 1) விரும்புதல்; 2) இன்புறுதல்;


இலக்கணக் குறிப்பு : அடியவட்காக என்பது அடியவட்கா என்று வருவது போன்ற இடங்களில் வல்லொற்று மிகும். உதாரணம்:

பெரியபுராணம் - 12.21.145 - "புல்லறிவிற் சமணர்க்காப் பொல்லாங்கு புரிந்தொழுகும்"

பெரியபுராணம் - - 12.28.740 - "காலனை மார்க்கண் டர்க்காக் காய்ந்தனை"


5)

கறையாரும் பொழில்சூழ்ந்த காறாயில் ஆரூரர் கசிந்து பாடி

இறைவாநெல் அட்டித்தா என்றிறைஞ்சு கோளிலி இன்த மிழ்ச்சொல்

மறவாத வாகீசர் மனமுருகிப் பாடியருள் வாய்மூர் வன்னி

பிறைசூடு பித்தனவன் பேணிடங்கள் கைதொழுதால் பெருகும் இன்பே.


* திருக்காறாயில் (திருக்காரவாசல்), திருக்கோளிலி (திருக்குவளை), திருவாய்மூர்.


கறை ஆரும் பொழில் - அடர்ந்த சோலை;

ஆரூரர் - சுந்தரமூர்த்தி நாயனார்; (சுந்தரர் தேவாரம் - 7.20.1 - "கோளிலி எம்பெருமான் குண்டை யூர்ச்சில நெல்லுப் பெற்றேன் ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே");

இன்-தமிழ்ச்சொல் மறவாத வாகீசர் - இனிய தமிழ்ப்பாமாலைகளைப் பாட மறவாத திருநாவுக்கரசர்; (அப்பர் தேவாரம் - 4.1.6 - "சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்");


6)

மாக்கதவம் தாழ்திறவாய் மாதேவா என்றென்று வாக்கின் மன்னர்

பாக்களிசைத் தடிபரவிப் பணிந்தேத்து மறைக்காடு பத்தர் வந்து

நாக்கொடுநற் றமிழ்மாலை நவிற்றகத்தி யான்பள்ளி ஞாலம் எல்லாம்

ஆக்கியழித் தருள்பெருமான் அமரிடங்கள் கைதொழுதால் அடையும் இன்பே.


* திருமறைக்காடு (வேதாரண்யம்), அகத்தியான்பள்ளி (அகஸ்தியாம்பள்ளி)


மாக்கதவம் - பெரிய கதவு;

என்றென்று - என்று பலமுறை;

வாக்கின் மன்னர் - திருநாவுக்கரசர்;

நவிற்றுதல் - சொல்லுதல்;

அமர் இடங்கள் - விரும்பி உறையும் தலங்கள்; (அமர்தல் - விரும்புதல்; உறைதல்);


7)

குரைகடலின் திரைமோதும் கோடிக் குழகர்வெண் கொக்கி னங்கள்

இரைதேரும் வயல்சூழ்ந்த எழில்விளமர் பேரெயில் இம்பர் வாழக்

கரவாது தருவயல்சூழ் நாட்டியத் தான்குடி கங்கை சூடி

வரைமாது பங்குடையான் மகிழிடங்கள் கைதொழுதால் மகிழ லாமே.


* கோடிக்குழகர் (குழகர்கோயில்), திருவிளமர் (திருவிளமல்), திருப்பேரெயில், நாட்டியத்தான்குடி.


இம்பர் வாழக் கரவாது தரு வயல் சூழ் - இவ்வுலகு வாழ வஞ்சமின்றி நெல்லைத் தரும் வயல் சூழ்ந்த; (இம்பர் - இவ்வுலகம்);

வரைமாது - மலைமகள்;


8)

நீடுவயல் சூழ்ந்தழகார் நெல்லிக்கா பூம்பொழில் நிறைந்த தெங்கூர்

வாடுநிலை அறப்பத்தர் வந்தடைகொள் ளிக்காடு மரக்க லங்கள்

ஆடுகடல் சூழ்நாகைக் காரோணம் அருவரைக்கீழ் அரக்க னாரைப்

பாடுவித் தருளிறைவன் பயிலிடங்கள் கைதொழுதால் பாசம் வீடே.


* திருநெல்லிக்கா (திருநெல்லிக்காவல்), திருத்தெங்கூர், திருக்கொள்ளிக்காடு, திருநாகைக் காரோணம் (நாகப்பட்டினம்).


நீடுவயல் - நீண்ட வயல்; நெல் நீள்கின்ற வயல்; (நீடுதல் - நீளுதல்; பரத்தல்); (சம்பந்தர் தேவாரம் - 1.131.3 - "சேறுலரா நீள்வயல்சூழ் முதுகுன்றமே"); (அப்பர் தேவாரம் - 5.72.7 - "நெல்லு நீள்வயல் நீலக் குடியரன்");

மரக்கலங்கள் ஆடு கடல் சூழ் நாகைக் காரோணம் - படகுகளும் கப்பல்களும் இயங்குகின்ற கடலால் சூழப்பெற்ற திருநாகை காரோணம்; (ஆடுதல் - அசைதல்; சஞ்சரித்தல்);

அருவரைக்கீழ் அரக்கனாரைப் பாடுவித்து அருள் இறைவன் - கயிலைமலையின் கீழே இராவணனை நசுக்கி அவனைப் பாடவைத்து அருள்செய்த இறைவன்; (இராவணனார் - ஆர் என்றது இகழ்ச்சிக் குறிப்பு ); (சம்பந்தர் தேவாரம் - 3.89.8 - "அடலெயிற் றரக்கனார் நெருக்கிமா மலையெடுத் தார்த்த வாய்கள்");

பாசம் வீடு - பாசநீக்கம் - மும்மலங்களிலிருந்து விடுபடுகை; (சம்பந்தர் தேவாரம் - 3.91.6 - "நீலமா மணிமிடற் றடிகளை நினைய வல்வினைகள் வீடே" - வீடு - விடுதலையாம். வீடு - முதனிலை திரிந்த தொழிற் பெயர்.);


9)

திங்கள் தவழ்மாடச் சிக்கல் திருத்தேவூர் திருக்கீழ் வேளூர்

கொங்கு கமழ்சோலை நன்னிலம்கொண் டீச்சரம் கொண்டல் வண்ணச்

சங்கக் கரத்தரியும் தாமரையா னுங்காணாத் தழல தான

அங்கண் அடிகள் அமர்பதிகள் கைதொழுதால் அடையும் இன்பே.


* சிக்கல், திருத்தேவூர், கீழ்வேளூர் (கீவளூர்), நன்னிலம், திருக்கொண்டீச்சரம் (திருக்கொண்டீஸ்வரம்)


திங்கள் தவழ் மாட - சந்திரன் தீண்டுமாறு உயர்ந்த மாடக்கோயிலான;

சிக்கல் திருத்தேவூர் திருக்கீழ்வேளூர் - இந்த மூன்று தலங்களும் மாடக்கோயில்கள்;

கொங்கு கமழ் சோலை நன்னிலம் கொண்டீச்சரம் - வாசம் கமழும் பொழில் சூழ்ந்த நன்னிலம் திருக்கொண்டீச்சரம்;

கொண்டல் வண்ணச் சங்கக் கரத்து அரி - முகில்வண்ணமும் சங்கு தரித்த கையும் உடைய திருமால்;

தாமரையான் - பிரமன்;

அமர் பதிகள் - விரும்பி உறையும் தலங்கள்;


10)

பொன்னளித்து விண்ணளிக்கும் புகலூர் திருமருகல் பொலிவு மிக்குத்

தென்னையொடு வயல்சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டை சிவனை எண்ணாப்

புன்னெறியர் சொல்கின்ற பொய்மதியாப் புந்தியினார் போற்று கின்ற

சென்னிமிசைப் பிறைப்பெம்மான் திகழ்பதிகள் கைதொழுதால் சேரும் இன்பே.


* திருப்புகலூர், திருமருகல், கருவிலிக் கொட்டிட்டை.


பொன்னளித்து விண்ணளிக்கும் புகலூர் - சுந்தர் பொன் பெற்ற தலம்; அப்பர் முக்தியடைந்த தலம்;

புந்தியினார் - அறிவு உடையவர்;


11)

பேணு பெருந்துறையும் நாலூரும் மயானமும் பெண்ணு மாகி

ஆணும் ஆயவன்றன் கொள்ளம்பூ தூரும் அளவில் லாத

தாணு உறைகின்ற தேதியூ ரும்கண்டு தலைவ ணங்கிப்

பேணும் அடியார்க்குப் பெருவினைநோய் நலிவில்லை பெருகும் இன்பே.


* திருப்பேணுபெருந்துறை, நாலூர், நாலூர் மயானம், திருக்கொள்ளம்பூதூர், தேதியூர்.


அளவு - எல்லை;

தாணு - தூண்; சிவன்;


பிற்குறிப்பு:

1. யாப்புக் குறிப்பு - அறுசீர் விருத்தம் - காய் காய் காய் காய் மா தேமா - என்ற வாய்பாடு;

காய்ச்சீர் வரும் இடத்தில் விளச்சீரோ மாச்சீரோ வரலாம்; அவ்விடத்தில் மா வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்;


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


No comments:

Post a Comment