06.04.034 – சுந்தரர் துதி - பெண்கள் இருவர்
2015-07-23 ?
06.04.034 - சுந்தரர் துதி - சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - 2015
------------------------------
(3 பாடல்கள்)
(அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா மா காய்' என்ற வாய்பாடு)
(சுந்தரர் தேவாரம் 7.95.1 - "மீளா அடிமை")
1)
பெண்கள் இருவர் தம்மை மணக்கப் பிறந்து சூளொன்றால்
கண்கள் இரண்டும் இழந்து வாடிக் கதறிக் கசிந்துருகிப்
பண்கள் பாடிப் பார்வை பெற்றார் படர்பொற் சடையாற்கு
நண்பர் ஆன நாவ லூரர் நற்றாள் நம்துணையே.
சூள் - சபதம்;
பண்கள் பாடி - பண்ணோடு பொருந்திய பல பதிகங்கள் பாடி;
படர் பொற் சடையாற்கு நண்பர் ஆன நாவலூரர் - படரும் பொற்சடையை உடைய சிவனுக்குத் தோழரான, திருநாவலூரில் அவதரித்த சுந்தரர்;
(சுந்தரர் தேவாரம் - 7.54.1 - "ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய் ஒற்றி யூரெனும் ஊருறை வானே");
(சுந்தரர் தேவாரம் - 7.69.1 - "பரவிடும் அடியேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே");
(சுந்தரர் தேவாரம் - 7.95.2 - "மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே");
2)
எரியின் வண்ணத் தீசன் தாளை எண்ணித் தொண்டுகள்செய்
அரிய பத்தர் அவர்கட் கெல்லாம் அடிமை யானென்ற
பெரிய பதிகம் அருளிச் செய்தார் பிளிறு மதயானை
உரியன் தமரென் றுரைத்த நாவ லூரர் கழல்போற்றி.
எரியின் வண்ணத்து ஈசன் - தீப்போன்ற சிவந்த நிறம் உடைய சிவபெருமான்;
பெரிய பதிகம் - பெருமைமிக்க திருத்தொண்டத்தொகை என்ற பதிகம்;
பிளிறு மதயானை உரியன் "தமர்" என்று உரைத்த நாவலூரர் - ஆண்யானையின் தோலைப் போர்த்த சிவபெருமானால் "நம் தமர்" என்று சொல்லப்பெற்ற சுந்தரர்;
(சுந்தரர் தேவாரம் - 7.39.1 - திருத்தொண்டத்தொகை -
"தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்");
(சுந்தரர் தேவாரம் - 7.100.9 -
"மந்திர மாமுனிவர் இவன் ஆர்என எம்பெருமான்
நந்தமர் ஊரனென்றான் நொடித் தான்மலை உத்தமனே");
3)
சேடர் போற்று சிவனே வெருட்டிச் செல்வம் தனைப்பறிக்கும்
வேடர் வாழும் முருகன் பூண்டி மேய பெருமானே
ஆட வல்ல அடிகேள் இவ்வூர் அமர்ந்த தேனென்று
பாட வல்ல பரவை கேள்வர் பாத மலர்போற்றி.
சேடர் - பெரியோர்;
வெருட்டிச் செல்வம்தனைப் பறிக்கும் வேடர் வாழும் - அச்சுறுத்திப் பொருளைக் கொள்ளையடிக்கும் வேடர்கள் வாழ்கின்ற;
முருகன் பூண்டி மேய பெருமானே - திருமுருகன்பூண்டியில் வீற்றிருக்கும் பெருமானே;
ஆட வல்ல அடிகேள் - கூத்தாடும் ஈசனே; (அடிகேள் - அடிகள் என்பதன் விளி);
இவ்வூர் அமர்ந்தது ஏன் என்று பாட வல்ல - இந்த ஊரில் நீர் ஏன் இருக்கின்றீர் என்று பதிகம் பாடிய;
பரவை கேள்வர் பாத மலர்போற்றி - பரவை நாச்சியார் கணவரான சுந்தரருடைய மலர்ப்பாதங்களுக்கு வணக்கம்;
(சுந்தரர் தேவாரம் - 7.49.1 -
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவ லாமைசொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண் டாற லைக்குமிடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முரு கன்பூண்டி மாநகர்வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக் கிங்கிருந் தீர்எம்பி ரானீரே.
--- "எம்பெருமானிரே, ...இம் முருகன்பூண்டி, ... வேடுவர், ... அச்சுறுத்தி .... உடைகளைப் பறித்துக் கொள்ளும் இடம்; ... இங்கு ... நீர் எதன்பொருட்டு இருக்கின்றீர்"?)
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment