Tuesday, December 13, 2022

06.01.147 - சிவன் - இட்டலி - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2015-02-01

06.01.147 - சிவன் - இட்டலி - சிலேடை

-------------------------------------------------------

வெண்மா விருப்பதால் மென்மலர்ப்ப தத்தினால்

கண்ணாரக் காணன்பர் வாயூறப் - பண்ணுவலம்

பெற்றதனால் விண்டு பெரிதேத்தும் சீருடைய

ஒற்றியரன் இட்டலி யோ.


சொற்பொருள்:

மாவிருப்பதால் - 1. மாவு இருப்பதால்; / 2a. மா விருப்பதால்; 2b. மா இருப்பதால்;

மா - விலங்கு; யானை;

விருப்பு - விருப்பம்;

இருப்பது - 1. உள்ளது; / 2. வீற்றிருத்தல்;

மென்மலர் - 1. மெல்லுகின்ற மலர் ; / 2. மென்மையான மலர்;

பதம் - 1. பக்குவம்; 2. பாதம்;

வாயூறுதல் - நீர் சுரத்தல்; (திருவெம்பாவை - 8.7.5 - "பாலூறு தேன்வாய்ப் படிறீ");

பண்ணுவலம் - 1. பண்ணுதல் + வலம்; 2. பண் நுவல் அம்;

நுவல்தல் - சொல்லுதல்;

அம் - அழகு; நீர்;

பெற்றதனால் - 1. உடையதால்; 2. பெற்று அதனால்; (பெற்று - பெற்றம் - இடபம்);

சீர் - பெருமை; இயல்பு;

விண்டு - 1. விள்ளுதல் - பிளத்தல்; சொல்லுதல்; 2. விஷ்ணு;

ஒற்றி - திருவொற்றியூர்;

- ஓகாரம் எதிர்மறை, வினா, அசைநிலை என்று பல பொருள்களில் வரும்.


இட்டலி:

வெண் மாவு இருப்பதால் - வெண்ணிற மாவு உடையதால்;

மெல் மலர்ப்பதத்தினால் - மென்று உண்ணக்கூடிய, பூப்போன்ற பக்குவம் உடையதால்; (மெல் + மலர் = மென்மலர்; இவ்விடத்தில் புணர்ச்சியால் லகர ஒற்று மகர ஒற்றாகத் திரியும்);

கண்ணாரக் காண் அன்பர் வாயூறப் பண்ணு வலம் பெற்றதனால் - கண்டு மகிழ்கின்றவர்களது வாயில் நீர் ஊறச்செய்யும் ஆற்றல் உடையதால்;

விண்டு பெரிதேத்தும் சீர் உடைய ... இட்டலி - உண்பவர்கள் அதனை விண்டு அதன் புகழை மிகவும் பேசவைக்கும் தன்மையுடைய இட்டலி; (விண்டு - வாய்திறந்து என்றும் பொருள்கொள்ளலாம்);


சிவன்:

வெண் மா விருப்பதால் / இருப்பதால் - வெண்ணிற இடபத்தை ஊர்தியாக விரும்புவதால்; வெள்ளை எருதின்மேல் வீற்றிருப்பதால்; ("மா = யானை" என்று கொண்டு, "ஐராவணம் என்ற வெள்ளையானையை உடையவன்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

(சுந்தரர் தேவாரம் - 7.100.5 - "வெள்ளை யானையின்மேல் என்னுடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே");

(அப்பர் தேவாரம் - 5.37.2 - "வெள்ளி மால்வரை போல்வதொர் ஆனையார்" - வெள்ளிமால்வரை போன்ற அயிராவணம் என்னும் ஒப்பற்ற ஆனையை உடையார்);

மென்மலர்ப்பதத்தினால் - மென்மையான மலர்போன்ற திருவடியால்;

கண்ணாரக் காண் அன்பர் வாயூறப் பண் நுவல் அம் பெற்றதனால் - தரிசிக்கும் பக்தர்கள் வாயில் அன்பு ஊறப் பண்கள் பாடிப் போற்றும் அழகு பெற்றதனால்;

விண்டு பெரிது ஏத்தும் சீருடைய ஒற்றி அரன் - விஷ்ணு மிகவும் போற்றுகின்ற பெருமையுடைய திருவொற்றியூரில் உறைகின்ற சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment