Tuesday, December 27, 2022

05.50 – கோடி - (குழகர் கோயில்)

05.50 – கோடி - (குழகர் கோயில்)

2015-09-04

கோடி - (குழகர் கோயில்)

(வேதாரண்யத்திற்குத் தெற்கே உள்ள தலம். இக்காலத்தில் "குழகர் கோயில்")

–---------------------------------------------------------------

(12 பாடல்கள்)

(அறுசீர்ச் சந்த விருத்தம் - "தான தான தானனா தான தான தானனா" என்ற சந்தம்)

(சம்பந்தர் தேவாரம் - 3.53.1 - "வானைக் காவல் வெண்மதி")

(சம்பந்தர் தேவாரம் - 2.99.1 - "இன்று நன்று நாளைநன்று");


1)

விரைகொள் பூக்கள் தூவியும் வேறு தொண்டு மேவியும்

கரையும் நெஞ்ச ராய்நிதம் கைகள் கூப்பு வார்க்கருள்

அரையன் என்றும் பூரணன் ஆல மர்ந்த ஆரணன்

குரைகொள் ஓதம் வந்தெறி கோடி மேய கூத்தனே.


விரைகொள் பூக்கள் தூவியும் வேறு தொண்டு மேவியும் - வாசமலர்களைத் தூவியும் வேறு தொண்டுகள் விரும்பிச் செய்தும்; (விரை - வாசனை); (மேவுதல் - விரும்புதல்);

கரையும் நெஞ்சராய் நிதம் கைகள் கூப்புவார்க்கு அருள் - உருகும் மனம் உடையவர்கள் ஆகித் தினமும் கைகூப்பி வணங்கும் பக்தர்களுக்கு அருள்கின்ற;

அரையன் - அரசன்;

என்றும் பூரணன் = எப்பொழுதும் முழுமையானவன்; (அரையன் பூரணன் - சொல்லமைப்பால் முரண்தொடை);

ஆல் அமர்ந்த ஆரணன் - கல்லால மரத்தின்கீழ் இருக்கும் வேதப்பொருளானவன்; (ஆரணம் - வேதம்);

குரைகொள் ஓதம் வந்து எறி கோடி மேய கூத்தன் - ஒலிக்கின்ற அலைகள் வந்து மோதுகின்ற திருக்கோடியில் எழுந்தருளியிருக்கும் கூத்தப்பெருமான்; (குரை - ஒலி); (ஓதம் - கடல்அலை);


2)

ஒளிரும் நீறு சாந்தமாம் உண்மை அன்பர் கட்கெலாம்

எளியன் வெள்ளை ஏறமர் ஈசன் ஏழை அஞ்சவே

களிறெ திர்ந்த போதினிற் கையி னாலு ரித்தவன்

குளிரும் ஓதம் வந்துலாம் கோடி மேய கூத்தனே.


ஒளிரும் நீறு சாந்தம் ஆம் உண்மை அன்பர்கட்கு-லாம் எளியன் - ஒளி வீசும் திருநீறே சந்தனம் ஆகும் மெய்யடியார்களால் எளிதில் அடையப்பெறுபவன்; (சாந்தம் - சந்தனம்);

வெள்ளை ஏறு அமர் ஈசன் - வெள்ளை எருதை வாகனமாக விரும்பியவன்;

ஏழை அஞ்சவே களிறு எதிர்ந்த போதினில் கையினால் உரித்தவன் - உமை அஞ்சும்படி யானை வந்து போர் செய்தபொழுது அதன் தோலைக் கையால் பற்றி உரித்தவன்; (ஏழை - உமை); (எதிர்தல் - எதிர்த்தல்);

குளிரும் ஓதம் வந்துலாம் கோடி மேய கூத்தனே - குளிர்ந்த அலைகள் வந்து உலவுகின்ற திருக்கோடியில் எழுந்தருளியிருக்கும் கூத்தப்பெருமான்;


3)

நீல கண்டன் ஆர்கழல் நெஞ்சில் என்றும் எண்ணிடு

பாலன் அஞ்ச வந்துவன் பாசம் வீசு கூற்றுயிர்

கால வேவு தைத்தவன் கையில் மான்த ரித்தவன்

கோல நீல வேலைசூழ் கோடி மேய கூத்தனே.


ஆர் கழல் - ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடி;

பாலன் - மார்க்கண்டேயர்;

வன் பாசம் வீசு கூற்று உயிர் காலவே உதைத்தவன் - வலிய பாசத்தை வீசிய காலனை உயிர் கக்குமாறு உதைத்தவன்; (காலுதல் - கக்குதல்); (அப்பர் தேவாரம் - 4.38.2 - "காலனைக் கால வைத்தார்");

கோல நீல வேலை - அழகிய கரிய கடல்;


4)

தவள நீற்ற ராய்த்தலை தாழ்த்தும் அன்பர் நெஞ்சினன்

பவளம் ஒத்த செஞ்சடைப் பானி லாவை வைத்தவன்

துவளு கின்ற பூங்கொடி தோன்று கின்ற மெல்லிடைக்

குவளைக் கண்ணி பங்கினன் கோடி மேய கூத்தனே.


தவள நீற்றராய் - வெண் திருநீற்றைப் பூசியவர்கள் ஆகி; (தவளம் - வெண்மை);

செஞ்சடைப் பானிலாவை வைத்தவன் - செஞ்சடையில் பால் போன்ற நிலாவை அணிந்தவன்; (பானிலா - பால்+நிலா);

துவளுகின்ற பூங்கொடி தோன்றுகின்ற மெல்லிடைக் குவளைக் கண்ணி பங்கினன் - துவளும் பூங்கொடி போன்ற மெலிந்த இடையையும் குவளை மலர் போன்ற கண்ணையும் உடைய உமையை ஒரு பாகமாக உடையவன்;


5)

அம்பை ஏவு மன்மதன் ஆகம் நீறு செய்தவன்

வம்பு நாறு பூவினால் மாலை கட்டி வாழ்த்துவார்

வெம்ப வத்தை வீட்டுவான் வேதம் ஓது நாவினன்

கொம்ப னாளொர் கூறினன் கோடி மேய கூத்தனே.


மன்மதன் ஆகம் நீறு செய்தவன் - காமனது உடம்பைச் சாம்பலாக்கியவன்;

வம்பு நாறு பூவினால் - மணம் கமழும் பூக்களால்;

வெம்-பவத்தை வீட்டுவான் - கொடிய பிறவிப்பிணியைத் தீர்ப்பான்;

கொம்பு அனாள் ஒர் கூறினன் - பூங்கொம்பு போன்ற உமையை ஒரு கூறாக உடையவன்; (ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்); (சம்பந்தர் தேவாரம் – 2.112.3 - "மங்கைகூறினன்");


6)

வாயி னால்வ ழுத்துவார் வாதை நல்கு வல்வினை

நோயி லாது வாழவே நோக்கு வான ருட்கணால்

தாயி னல்ல சங்கரன் தன்னை எண்ணு வார்மனம்

கோயி லாக நின்றவன் கோடி மேய கூத்தனே.


பதம் பிரித்து:

வாயினால் வழுத்துவார் வாதை நல்கு வல்வினை

நோய் இலாது வாழவே நோக்குவான் அருட்கணால்;

தாயின் நல்ல சங்கரன்; தன்னை எண்ணுவார் மனம்

கோயிலாக நின்றவன்; கோடி மேய கூத்தனே.


வாதை நல்கு வல்வினை - துன்பம் தரும் வலிய வினைகள்;

நோக்குவான் அருட்கணால் - அருட்கண்ணால் நோக்குவான்;


7)

சமயம் ஆறும் ஆக்கினான் தாளை நாளும் ஏத்திடும்

தமரை வானம் ஏற்றுவான் சாம வேதி சக்கரம்

கமலக் கண்ணற் கீந்தவன் கைகள் பன்னி ரண்டுடைக்

குமர னைப்ப யந்தவன் கோடி மேய கூத்தனே.


சமயம் ஆறும் ஆக்கினான் - ஷண்மதங்களை ஆக்கியவன்;

தாளை நாளும் ஏத்திடும் தமரை வானம் ஏற்றுவான் - தினமும் திருவடியை வாழ்த்தும் அடியவர்களைச் சிவலோகத்திற்கு ஏற்றுபவன்; (தமர் - அடியவர்);

சாம வேதி - சாமவேதம் ஓதுபவன்;

சக்கரம் கமலக்கண்ணற்கு ஈந்தவன் - சக்கராயுதத்தைத் திருமாலுக்குக் கொடுத்தவன்;

கைகள் பன்னிரண்டுடைக் குமரனைப் பயந்தவன் - முருகனைப் பெற்றவன்; (பயத்தல் - To beget, generate, give birth to; பெறுதல்);


8)

வானி லோடு தேர்நிலம் வந்த தாற்பொ ருப்பெடு

கோனி ராவ ணன்தலைக் கொத்த டர்த்த தாளினான்

தேனி லாவு கொன்றையார் சென்னி மீது நாகமும்

கூனி லாவும் வைத்தவன் கோடி மேய கூத்தனே.


வானில் ஓடு தேர் நிலம் வந்ததால் பொருப்பு எடு கோன் இராவணன் தலைக்கொத்து அடர்த்த தாளினான் - ஆகாயத்தில் பறந்து செல்லும் தேர் ஓடாமல் கீழே இறங்கியதால், கயிலைமலையைப் பெயர்த்து வீச முயன்ற அரக்கர்கோன் இராவணனது பத்துத் தலைகளையும் நசுக்கிய திருவடியினன்; (பொருப்பு - மலை);

தேன் நிலாவு கொன்றை ஆர் சென்னி மீது நாகமும் கூன் நிலாவும் வைத்தவன் - தேன் திகழும் கொன்றைமலரை அணிந்த திருமுடிமேல் பாம்பையும் வளைந்த பிறைச்சந்திரனையும் வைத்தவன்; (கூன் - வளைந்த);


9)

கடிமி குந்த போதினான் கண்ணன் நேட மாவழல்

வடிவ தாகி ஓங்கினான் வார மாகி வாழ்த்திடும்

அடியர் நெஞ்சில் நின்றவன் அண்டர் அஞ்சி வேண்டவும்

கொடிய நஞ்சை உண்டவன் கோடி மேய கூத்தனே.


கடி மிகுந்த போதினான் கண்ணன் நேட மா அழல் வடிவது ஆகி ஓங்கினான் - வாசனை மிக்க தாமரைப்பூவில் உறையும் பிரமனும் திருமாலும் தேடும்படி பெரிய ஜோதி ஆகி ஓங்கியவன்; (நேட - தேட); (அழல் - தீ);

வாரம் ஆகி வாழ்த்திடும் அடியர் நெஞ்சில் நின்றவன் - அன்பு உடையவர்கள் ஆகித் துதிப்பவர்கள் மனத்தில் இருப்பவன்; (வாரம் - அன்பு);

அண்டர் - தேவர்கள்;


10)

வஞ்ச நெஞ்சர் சொல்லிடும் வார்த்தை யில்ம யங்கிடேல்

அஞ்செ ழுத்தை ஓதினார் அல்லல் நீக்கும் அங்கணன்

தஞ்ச மென்று தாள்பணி தண்ம திக்கி ரங்கினான்

குஞ்சி மீது கொன்றையான் கோடி மேய கூத்தனே.


வஞ்ச நெஞ்சர் சொல்லிடும் வார்த்தையில் மயங்கிடேல் - மனத்தில் வஞ்சனை உடையவர்கள் சொல்லும் வார்த்தைகளில் மயங்காதே;

அஞ்செழுத்தை ஓதினார் அல்லல் நீக்கும் அங்கணன் - திருவைந்தெழுத்தை ஓதுபவ்ர்களது துன்பத்தைத் தீர்க்கும் அருட்கண்ணன்; (அங்கணன் - அருட்கண் உடையவன்);

தஞ்சம் என்று தாள் பணி தண்-மதிக்கு இரங்கினான் - திருவடியில் சரண்புகுந்த குளிர்ந்த சந்திரனுக்கு இரங்கியவன்;

குஞ்சி மீது கொன்றையான் - தலையில் கொன்றைமலரை அணிந்தவன்; (குஞ்சி - உச்சிமயிர்; தலை);


11)

இன்று நேற்று நாளையாய் என்றும் உள்ள எம்பிரான்

மன்றி லாடி வார்கழல் வான கத்து ளோரெலாம்

சென்று வாழ்த்த மூவெயில் தீயில் வேவ வில்லெனக்

குன்றை ஏந்து கையினான் கோடி மேய கூத்தனே.


மன்றில் ஆடி - தில்லையம்பலத்தில் ஆடுபவன்;

வானகத்து உளோர் எலாம் - தேவர்களெல்லாம்;

மூ எயில் - முப்புரம்;

வில்னக் குன்றை ஏந்து கையினான் - கையில் மேருமலையை வில்லாக ஏந்தியவன்;


12)

பறைகள் ஆர்த்துப் பாரிடம் பாட நட்டம் ஆடுவான்

கறைகொள் கண்டன் வேணியிற் கங்கை சூடி அன்பராய்

நறைகொள் நற்ற மிழ்த்தொடை நாளும் ஓது நாவினர்

குறைகள் தீர்த்த கொள்கையான் கோடி மேய கூத்தனே.


பறைகள் ஆர்த்துப் பாரிடம் பாட நட்டம் ஆடுவான் - பறைகளை ஒலித்துப் பூதங்கள் பாடத் திருநடம் செய்பவன்; (பாரிடம் - பூதகணங்கள்); (நட்டம் - கூத்து);

கறைகொள் கண்டன் - நீலகண்டன்;

வேணியில் கங்கைசூடி அன்பராய் - சடையில் கங்கையை அணிந்த பெருமானுக்குப் பத்தர்கள் ஆகி;

நறைகொள் நற்றமிழ்த்தொடை நாளும் ஓது நாவினர் - மணம் மிக்க நல்ல தமிழ்ப்பாமாலைகளைத் தினமும் பாடி வழிபடுபவர்களது;

குறைகள் தீர்த்த கொள்கையான் - குறைகளைத் தீர்த்து அருள்பவன்;

கோடி மேய கூத்தனே - திருக்கோடியில் உறைகின்ற கூத்தன்;


பிற்குறிப்புகள் :

1. கோடி - தலப்பெயர்க் குறிப்பு:

  • தருமை ஆதீன உரையிற் காண்பது : திருமறைக்காட்டு எல்லையின் கோடியில் இருக்கும் அழகராதல் பற்றி, இங்கு உள்ள பெருமான், "கோடிக் குழகர்" எனப் படுவர். அவரது பெயரே, பின்னர் அத்தலத்திற்கும் ஆயிற்று. அக்கடற்கரையையும், "கோடிக்கரை" என்பர்.

  • சுந்தரர் தேவாரம் - 7.32.5 - "கொய்யார்பொழிற் கோடியே கோயில்கொண் டாயே";

  • அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் - "நீலமுகி லானகுழல் ... குழகர் கோடிநகர் மேவிவளர் பெருமாளே" - குழகர் என்னும் திருநாமத்துடன் சிவபெருமான் வீற்றிருக்கும் கோடி என்னும் தலத்தில் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே;


2. யாப்புக் குறிப்பு:

  • அறுசீர்ச் சந்த விருத்தம் - "தான தான தானனா தான தான தானனா" என்ற சந்தம்.

    • 1, 4 சீர்களில் தான என்பது தனன என்றும் வரலாம்.

    • 2, 5 சீர்களில் தான என்பது ஒரோவழி தனன என்று வரும்.

    • 3, 6 சீர்களில் தானனா என்பது ஒரோவழி தனதனா என்று வரலாம்.

  • (சம்பந்தர் தேவாரம் - 3.53.1 - "வானைக் காவல் வெண்மதி மல்கு புல்கு வார்சடைத்")

  • (சம்பந்தர் தேவாரம் - 2.99.1 - "இன்று நன்று நாளைநன் றென்று நின்ற விச்சையால்");


வி. சுப்பிரமணியன்

-------------------


No comments:

Post a Comment