Tuesday, December 13, 2022

06.03.061 - பணியாரம் - பூண்டானஞ்சு - மடக்கு

06.03 – மடக்கு

2014-10-24

06.03.061 - பணியாரம் - பூண்டானஞ்சு - மடக்கு

-------------------------

பணியாரம் உண்பதற்கே நாவுடையார் பாடிப்

பணியாரம் பொற்சடையான் பாதம் - பணியாரம்

பூண்டானஞ் சாடும் புனிதன்பேர் நாவேநீ

பூண்டானஞ் சுள்ளவினை போம்.


பதம் பிரித்து:

பணியாரம் உண்பதற்கே நா உடையார், பாடிப்

பணியார் அம் பொற்சடையான் பாதம்; பணி-ஆரம்

பூண்டு ஆனஞ்சு ஆடும் புனிதன் பேர், நாவே, நீ

பூண்டால் நஞ்சு உள்ள வினை போம்.


சொற்பொருள்:

பணியாரம் - 1. ஒருவகைத் தின்பண்டம்; 2. பணியார் + அம்; 3. பணி+ஆரம் (பாம்பு மாலை);

பூண்டானஞ்சு - 1. பூண்டு ஆன் அஞ்சு; 2. பூண்டால் நஞ்சு;

ஆன் அஞ்சு - பஞ்சகவ்வியம் - பால், தயிர், நெய், முதலியன;

நஞ்சு உள்ள வினை போம் - 1. உள்ள வினை நஞ்சு போம்; 2. "நஞ்சை உள்ளடக்கிய வினை" - "நமக்குக் கெடுதல் செய்யும் தீயவினை" என்றும் கொள்ளலாம்;

நஞ்சு - நைந்து - மெலிந்து;


பணியாரம் உண்பதற்கே நாவுடையார் பாடிப் பணியார் அம் பொற்சடையான் பாதம் - அழகிய பொற்சடையான் திருவடிகளைச் சிலர் பாடிப் பணியமாட்டார்; (அவர்கள்) உணவை ருசிப்பதற்கே நாவை உடையவர்கள்;

பணி ஆரம் பூண்டு ஆன் அஞ்சு ஆடும் புனிதன் பேர், நாவே, நீ பூண்டால் நஞ்சு உள்ள வினை போம் - பாம்பை மாலையாக அணிந்து, பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்து பொருள்களால் அபிஷேகம் ஏற்கும் தூயவன் திருநாமத்தை, நாவே, நீ அணிந்தால் உள்ள வினைகள் நைந்து அழியும்.

(சம்பந்தர் தேவரம் - 1.91.4 - "உய்யல் உறுவீர்காள் ஐயன் ஆரூரைக் கையினால் தொழ நையும் வினைதானே");

(அப்பர் தேவாரம் - 5.5.5 - "...ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ ஓடிப் போம்நம துள்ள வினைகளே");


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment