Saturday, December 24, 2022

05.38 – மணவாள நல்லூர்

05.38 – மணவாள நல்லூர்

2015-06-10

மணவாள நல்லூர்

(திருவீழிமிழலைக்குத் தென்மேற்கே, தேதியூர், இரவாஞ்சேரி இவற்றை அடுத்து உள்ள ஊர்)

------------------

(12 பாடல்கள்)

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்")


1)

எயில்வேவ மலைவில்லில் எரிகணையைக் கோத்தமைந்தன்

மயிலேறு குகன்தாதை மழுவாளன் இலைமூன்றார்

அயில்வேலன் அமருமிடம் அரிசிலதன் தென்கரையில்

வயல்சூழ்ந்து வளமாரும் மணவாள நல்லூரே.


எயில் வேவ மலை-வில்லில் எரி-கணையைக் கோத்த மைந்தன் - முப்புரங்களும் வெந்து அழிய மேருவில்லில் தீக்கணையைக் கோத்த வீரன்; (எயில் - கோட்டை); (மைந்தன் - வீரன்);

மயில் ஏறு குகன் தாதை - மயில்வாகனம் உடைய முருகனுக்கு அப்பன்; (குகன் - முருகன்); (தாதை - தந்தை);

மழுவாளன் - மழுவை ஏந்தியவன்;

இலைமூன்று ஆர் அயில்-வேலன் அமரும் இடம் - இலைபோல மூன்று முனைகளை உடைய கூர்மையான சூலத்தை ஏந்தியவன் விரும்பி உறையும் தலம்; (இலை - Blade of a weapon; ஆயுதவலகு); (அமர்தல் - விரும்புதல்);

அரிசில்-தன் தென்கரையில் வயல் சூழ்ந்து வளம் ஆரும் மணவாள நல்லூரே - அரிசிலாற்றின் தெற்கே வயல் சூழ்ந்து வளம் நிறையும் மணவாள நல்லூர்; (அரிசில் - அரசலாறு);


2)

தினங்கடியார் மலர்தூவிச் சேவிப்பார்க் கன்புடையான்

மனங்கலைக்க ஐந்துமலர் வாளிதொடு மன்மதனை

அனங்கனெனச் செய்தவனூர் அரிசிலதன் தென்கரையில்

வனங்களிடைக் குயில்கூவு மணவாள நல்லூரே.


தினம் - தினந்தோறும்;

கடி ஆர் மலர் - வாசனை பொருந்திய பூக்கள்;

வாளி - அம்பு;

தொடு - தொடுக்கின்ற; எய்கின்ற;

அனங்கன் - உடல் அற்றவன்; உருவம் அற்றவன்;

வனம் - நந்தவனம்; ஊர்சூழ் சோலை;


3)

குளமாகும் கண்ணோடு கும்பிடுவார்க் கொருநாளும்

இளையாத நிலையீவான் எருதேறும் எம்பெருமான்

வளையாரும் முன்கையாள் வாமத்தன் மகிழுமிடம்

வளமாரும் வயல்சூழ்ந்த மணவாள நல்லூரே.


ஒருநாளும் - எந்நாளும்;

இளையாத - துன்பம் இல்லாத; (இளைத்தல் - மெலிதல்; சோர்தல்);

வளை ஆரும் முன்கையாள் வாமத்தன் - வளையல் அணிந்த முன்கையை உடைய உமையை இடப்பக்கத்தில் உடையவன்;

மகிழ்தல் - விரும்புதல்;


4)

பண்டொருவேட் டுவனாகிப் பாண்டவனுக் கருள்புரிந்தான்

வண்டறையும் கொன்றையொடு மதிபுனையும் வார்சடையன்

எண்டிசையோர் ஏத்துகின்ற ஈசனிடம் அரிசிலதன்

வண்டிரைகள் எற்றுகின்ற மணவாள நல்லூரே.


பண்டு ஒரு வேட்டுவன் ஆகிப் பாண்டவனுக்கு அருள்புரிந்தான் - முன்பு ஒரு வேடன் கோலத்தில் அருச்சுனனுக்கு அருளியவன்; (பண்டு - முன்பு); (வேட்டுவன் - வேடன்); (பாண்டவன் - அருச்சுனன்);

வண்டு அறையும் கொன்றையொடு மதி புனையும் வார்-சடையன் - வண்டுகள் ஒலிக்கும் கொன்றைமலரையும் சந்திரனையும் அணிந்த நீள்சடை உடையவன்; (அறைதல் - ஒலித்தல்); (வார்தல் - நீள்தல்);

எண்-திசையோர் ஏத்துகின்ற ஈசன் இடம் - உலகத்தவர் துதிக்கின்ற ஈசன் உறையும் தலம்;

அரிசில்-தன் வண்-திரைகள் எற்றுகின்ற மணவாள நல்லூரே - அரிசிலாற்றின் வளமுடைய அலைகள் மோதுகின்ற மணவாள நல்லூர்; (திரை - அலை); (எற்றுதல் - மோதுதல்);


5)

முந்தாகி நடுவாகி முடிவாகும் முக்கண்ணன்

வெந்தார்வெண் பொடிபூசி வென்றிவிடைக் கொடியுடையான்

பந்தாரும் விரலாளைப் பாகமகிழ் பரமனிடம்

வந்தார்கள் மகிழ்கின்ற மணவாள நல்லூரே.


முந்து - ஆதி;

முடிவு - அந்தம்;

வெந்தார் வெண்பொடி பூசி - இறந்து எரிக்கப்பட்டவர்களது வெள்ளிய சாம்பலைப் பூசியவன்; (அப்பர் தேவாரம் - 6.6.10 - "வெந்தார் சுடலைநீ றாடும்மடி"); (சுந்தரர் தேவாரம் - 7.24.7 - "வெந்தார் வெண்பொடியாய்");

வென்றி - வெற்றி;

பந்து ஆரும் விரலாள் - பந்தாடும் விரலை உடைய உமையம்மை; (சம்பந்தர் தேவாரம் - 2.72.1 - "பந்தார் விரல்மடவாள் பாகமா");


6)

அலைபுரிந்த சடையுடையான் அவமதித்த தக்கனது

தலையரிந்து தண்டித்தான் தண்மதியத் துண்டத்தான்

இலைவிரும்பி இட்டாலும் ஏற்றருளும் எளியவனூர்

மலர்விரிந்து மணநாறும் மணவாள நல்லூரே.


அலைபுரிந்த சடை உடையான் - கங்கையின் அலை மிகுந்த சடையை உடையவன்; கங்கை அலையை முறுக்கிய சடையில் உடையவன்; (புரிதல் - விரும்புதல்; மிகுதல்; முறுக்குக்கொள்ளுதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.52.4 - "அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா");

அரிதல் - அறுத்தல்;

தண்-மதியத் துண்டத்தான் - குளிந்த பிறைச்சந்திரனை அணிந்தவன்;

எளியவன் - சுலபமாக அடையப்படுபவன்;

இலை விரும்பி இட்டாலும் ஏற்றருளும் எளியவன் - விரும்பி இலையையே இட்டாலும் அதனை ஏற்று அருள்கின்றவன்; எளிதில் அடையப்படுபவன்; (அப்பர் தேவாரம் - 4.72.5 - "எளியவர் அடியர்க் கென்றும் இன்னம்பர் ஈசனாரே"); (சுந்தரர் தேவாரம் - 7.94.9 - "இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு நிலையா வாழ்வை நீத்தார்");


7)

புரையில்லாப் பெற்றியினான் புகழ்பாடிப் பணிவோர்க்குக்

கரையில்லாக் கருணையினான் காலனுக்கும் காலனவன்

வரையில்லாப் பெருமையினான் மாற்றார்தம் மதிலெய்த

வரைவில்லான் மகிழுமிடம் மணவாள நல்லூரே.


புரை - ஒப்பு; குற்றம்;

பெற்றி - தன்மை;

கரைல்லாக் கருணையினான் - அளவு கடந்த கருணை உடையவன்; (கரை - எல்லை); (சேந்தனார் அருளிச்செய்த திருவிசைப்பா - 9.5.2 - "கரையிலாக் கருணைமா கடலை");

காலனுக்கும் காலன் - காலகாலன்; (அப்பர் தேவாரம் - 5.57.5 - "காலனாகிய காலற்குங் காலனை");

வரைல்லாப் பெருமையினான் - எல்லையற்ற பெருமை உடையவன்; (வரை - எல்லை);

மாற்றார் - பகைவர்;

மாற்றார்தம் மதில் எய்த வரை-வில்லான் - பகைத்த அசுரர்களது முப்புரங்களை (ஒரு கணையால்) எய்த, மலையை வில்லாக ஏந்தியவன்; (வரை - மலை);


8)

தேர்தரையில் இறங்கியதால் சினந்துமலை அசைத்தானை

ஓர்விரலின் நுதியூன்றி ஓலமிடக் கேட்டவற்குப்

பேர்கொடுத்த பெருமானார் பிறைமதியும் கூவிளமும்

வார்சடைவைத் துகந்தாரூர் மணவாள நல்லூரே.


நுதி - நுனி;

ஓலமிடக் கேட்டவற்கு - ஓலமிடக் கேட்டு அவனுக்கு; (அவற்கு - அவன்+கு - அவனுக்கு);

பேர் கொடுத்த - இராவணன் (அழுதவன்) என்ற பெயரைக் கொடுத்த; (அப்பர் தேவாரம் - 6.96.11 - "இராவணனென் றவனைப்பேர் இயம்பக் கொண்டார்");

கூவிளம் - வில்வம்;

உகந்தார் - உகந்தவர் - மகிழ்ந்தவர்;


9)

செங்கமலத் துறைவானும் திருமாலும் அறியாத

பொங்கழலாய் நின்றபரன் புன்சடையிற் புனல்கரந்தான்

அங்கையினில் அனலேந்தி அருநடஞ்செய் அம்பலவன்

மங்கையொரு பங்கனிடம் மணவாள நல்லூரே.


செங்கமலத்துறைவானும் திருமாலும் அறியாத பொங்கு அழலாய் நின்ற பரன் - செந்தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் விஸ்ஹ்ணுவும் அறியாத ஓங்கும் சோதியாகி நின்ற பரமன்;

புன்சடையில் புனல் கரந்தான் - செஞ்சடையில் கங்கையை ஒளித்தவன்; (புன்சடை - செஞ்சடை); (புனல் - கங்கை); (கரத்தல் - மறைத்தல்);

அங்கையினில் அனல் ஏந்தி அருநடம் செய் அம்பலவன் - கையில் தீயை ஏந்தி அரிய கூத்து ஆடும் சிற்றம்பலவன்;

மங்கைரு பங்கன் இடம் மணவாள நல்லூரே - உமைபங்கன் உறையும் தலம் மணவாள நல்லூர்;


10)

இறையறியார் பொய்யுரையை எந்நாளும் தவிராத

கறையுடையார் அவர்சொல்லைக் கருதேன்மின் அடிதொழுவார்

குறைகளையும் சிவபெருமான் குருவாகி ஆலின்கீழ்

மறைவிரித்தான் மகிழுமிடம் மணவாள நல்லூரே.


இறை அறியார் - கடவுளை அறியாதவர்கள்; கொஞ்சமும் அறியாதவர்கள்; (இறை - 1. இறைவன்; 2. சிறிது; கொஞ்சம்);

பொய்யுரையை எந்நாளும் தவிராத கறைடையார் - எப்பொழுதும் பொய்யையே சொல்கின்ற குற்றம் உடையவர்கள்; (கறை - குற்றம்; களங்கம்);

அவர் சொல்லைக் கருதேன்மின் - அவர்களது பேச்சை மதியாதீர்கள்; (கருதேன்மின் - கருதேல்+மின் - நீங்கள் கருதவேண்டா); (மின் - முன்னிலை ஏவல் பன்மை விகுதி);

அடி தொழுவார் குறை களையும் சிவபெருமான் - திருவடியை வணங்கியவர்களது குறைகளைத் தீர்க்கும் சிவபெருமான்;

குருவாகி ஆலின்கீழ் மறை விரித்தான் மகிழும் இடம் மணவாள நல்லூரே - குரு ஆகிக் கல்லால மரத்தடியில் வேதத்தை உபதேசித்தவன் உறையும் தலம் மணவாள நல்லூர்; (விரித்தல் - விளக்கியுரைத்தல்);


11)

நம்புமடி யாரவர்க்கு நல்லனவே நல்குமரன்

வெம்புலியின் தோலையரை வீக்கியவன் வேணிமிசை

அம்புலியை அணிந்தானூர் அரிசிலதன் தென்கரையில்

வம்புலவு பொழில்சூழ்ந்த மணவாள நல்லூரே.


நம்பும் அடியார் அவர்க்கு நல்லனவே நல்கும் அரன் - விரும்பித் தொழும் பக்தர்களுக்கு நல்லவற்றையே அளிக்கும் ஹரன்;

வெம் புலியின் தோலை ரை வீக்கியவன் - கொடிய புலித்தோலை அரையில் கட்டியவன்; (வீக்குதல் - கட்டுதல்);

வேணிமிசை அம்புலியை அணிந்தான் ஊர் - சடைமேல் சந்திரனை அணிந்தவன் உறையும் தலம்;

அரிசில்-தன் தென்கரையில் வம்பு உலவு பொழில் சூழ்ந்த மணவாள நல்லூரே - அரிசிலாற்றின் தெற்கே மணம் கமழும் சோலை சூழ்ந்த மணவாள நல்லூர்;


12)

நட்டமிடு கழல்போற்றி நற்றமிழால் பரவடியார்

கட்டமெலாம் தீர்த்தருள்வான் கயற்கண்ணி ஒருபங்கன்

சுட்டபொடி சாந்தமெனத் தோளிலங்கு சுந்தரனூர்

மட்டலரார் பொழில்சூழ்ந்த மணவாள நல்லூரே.


* மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் - மணவாள நல்லூர்க் கோயில் இறைவி இறைவன் திருநாமங்கள்;


நட்டம் இடு கழல் போற்றி நற்றமிழால் பரவு அடியார் கட்டமெலாம் தீர்த்தருள்வான் - கூத்தாடும் திருவடியைப் போற்றி, நல்ல தமிழ்ப்பாமாலைகளைப் பாடித் துதிக்கும் பக்தர்களது கஷ்டங்களைத் தீர்த்து அருள்பவன்; (நட்டம் - கூத்து); (கட்டம் - கஷ்டம்);

கயற்கண்ணி ஒரு பங்கன் - உமைபங்கன்; (கயற்கண்ணி - கயல் மீன் போன்ற கண் உடையவள் - மீனாக்ஷி);

சுட்ட பொடி சாந்தம் எனத் தோள் இலங்கு சுந்தரன் ஊர் - திருநீறு சந்தனம்போல் புஜத்தில் திகழ்கின்ற அழகன் உறையும் தலம்; (பொடி - சாம்பல்); (சாந்தம் - சந்தனம்); (சுந்தரன் - அழகுள்ளவன்; சுந்தரேசன்);

மட்டு அலர் ஆர் பொழில் சூழ்ந்த மணவாள நல்லூரே - வாசமலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த மணவாள நல்லூர்; (மட்டு - தேன்; வாசனை); (அலர் - மலர்);


பிற்குறிப்புகள்:

1) மணவாள நல்லூர் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷகம் 2015-06-29 அன்று நிகழவிருந்ததை ஒட்டி எழுதிய பதிகம் இது.

2) This temple's location - coordinates - for Google Map: 10°55'51.9"N 79°33'05.9"E = 10.931082, 79.551626)


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


No comments:

Post a Comment