Sunday, December 4, 2022

06.01.145 - சிவன் - இராமன் - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

இராமநவமி ஸ்பெஷல்!

2014-04-08

06.01.145 - சிவன் - இராமன் - சிலேடை

-------------------------------------------------------

ஏறு மரவுரியுந் தாங்கி இராவணன்தன்

வீறு கெடுத்த விறலுடையான் - நாறு

மலர்க்குழலி கூறுமான் மாய்வில்லான் திங்கள்

தலைக்கணிந்தான் தாசரதி தான்.


சொற்பொருள்:

ஏறு மரவுரியும் - 1. ஏறு, மரவுரியும்; / 2. ஏறும் அரவு உரியும்;

ஏறு - ஆண் சிங்கம் போன்றவன்; / இடபம்;

ஏறுதல் - மேலேறுதல்;

தாங்குதல் - சுமத்தல்; அணிதல்;

மரவுரி - மரப்பட்டையால் ஆன உடை;

உரி - தோல்;

வீறு - 1. வெற்றி; / 2. கருவம்; சிறப்பு;

விறல் - 1. வீரம்; / 2. வலிமை; (சிவனுக்குப் பொருள்கொள்ளும்போது, 'விரல்' என்பது சிலேடை நோக்கி 'விறல்' என்று வலித்தல் விகாரம் பெற்றது என்றும் கொள்ளலாம்);

கூறு - 1. கூறுதல்; / 2. பாகம்;

மான் - 1. மான் என்ற மிருகம்; / 2. பெரியோன்; தலைவன்;

மாய்வில்லான் - 1. மாய் + வில்லான் / 2. மாய்வு + இல்லான்;

மாய்த்தல் - கொல்லுதல்;

மாய்வு - சாவு;

தாசரதி - [தசரதர் புத்திரன்] இராமன்;


இராமன்:

ஏறு - ஆண் சிங்கம் போன்றவன்;

மரவுரியும் தாங்கி - மரவுரியும் தரித்தவன்; மரவுரியும் அணிந்து;

இராவணன்தன் வீறு கெடுத்த விறல் உடையான் - போரில் இராவணனை வென்றவன்;

நாறு மலர்க்குழலி கூறு மான் மாய் வில்லான் - வாசம் கமழும் கூந்தலை உடைய சீதை சொன்ன மானை (விரட்டிச் சென்று முடிவில் அதனைக்) கொன்ற வில்லை ஏந்தியவன்;

தாசரதி - தசரதன் மகனான இராமன்.


சிவன்:

ஏறும் அரவு உரியும் தாங்கி - ஏறும் அரவு தாங்கி, உரியும் தாங்கி - ஏறுகின்ற பாம்பைத் தாங்கியவன்; தோலையும் தரித்தவன்; (அரவு - அரவும் - உம்மைத்தொகை);

இராவணன்தன் வீறு கெடுத்த விறல் உடையான் - இராவணனின் கர்வத்தை (மலர்ப்பாத விரலை ஊன்றி நசுக்கி) அழித்த வலிமை உடையவன்; (சிவனுக்குப் பொருள்கொள்ளும்போது, 'விரல்' என்பது சிலேடை நோக்கி 'விறல்' என்று வலித்தல் விகாரம் பெற்றது என்றும் கொண்டு பொருள்கொள்ளக்கூடும்);

நாறு மலர்க்குழலி கூறு மான் - வாசம் கமழும் கூந்தலை உடைய உமையை ஒரு கூறாக உடைய தலைவன்;

மாய்வு இல்லான் - இறப்பு இல்லாதவன்;

திங்கள் தலைக்கு அணிந்தான் - சந்திரசேகரன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


1 comment:

  1. மிகவும் அருமையான பதிவு. சிவ சிவ . ராம ராம.

    ReplyDelete