06.05 – பலவகை
2015-03-30
06.05.028 - இலிங்கபந்தம் - எங்கள் சிவன் என்று இயம்பு
-------------------------------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
எங்கு முழிபுரங்க ளெரியச் சரம்பிடித்தா
னங்கையதில் மான்மறியன் மன்னனெவ்வ மானநசி
செங்கண்வெள் ளேறுகந்த சேவகன் வானதி
தங்குபிறங் குஞ்சடையா னெங்கள்சிவ னென்றியம்பு.
பதம் பிரித்து:
எங்கும் உழி புரங்கள் எரியச் சரம் பிடித்தான்
அங்கையதில் மான்மறியன்; மன்னன்; எவ்வமான நசி,
செங்கண்-வெள் ஏறு உகந்த சேவகன்; வானதி
தங்கு பிறங்குஞ் சடையான் எங்கள் சிவன் என்று இயம்பு.
எங்கும் உழி புரங்கள் எரியச் சரம் பிடித்தான் - எவ்விடமும் அலைந்த முப்புரங்கள் எரியும்படி கையில் ஒரு கணையைப் பற்றியவன்; (உழிதல் - அலைதல்); (சரம் - அம்பு);
அங்கையதில் மான்மறியன் - கையில் மான்கன்றை ஏந்தியவன்; (மறி - கன்று);
மன்னன் - தலைவன்;
எவ்வமான நசி, செங்கண்-வெள் ஏறு உகந்த சேவகன் - (பக்தர்களது) துன்பத்தை அழிக்கின்ற, சினம் மிகுந்த வெள்ளை இடபத்தை ஊர்தியாக விரும்பிய வீரன்; (எவ்வம் - துன்பம்); (நசித்தல் - அழித்தல்); (சேவகன் - வீரன்);
வானதி தங்கு பிறங்கும் சடையான் எங்கள் சிவன் என்று இயம்பு - கங்கை தங்குகின்ற, ஓளி விசும் சடையை உடையவன் எங்கள் சிவபெருமான் என்று சொல்; (வானதி - கங்கை); (பிறங்குதல் - விளங்குதல்);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
Tags:
பொது, வெண்பா, மடக்கு,
No comments:
Post a Comment