05.35 – கருவிலிக் கொட்டிட்டை - (கருவேலி)
2015-06-05
கருவிலிக் கொட்டிட்டை - (இக்காலத்தில் - கருவேலி)
------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(காய் காய் கருவிளம் காய் - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்")
1)
தவநால்வர்க் கறமுரைக்கத் தருவமர் சங்கரனார்
கவிநாலு மொழிகாழிக் கவுணியர்க் கருளீசர்
கவினாரும் பொழில்சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டைச்
சிவனார்தாள் பணிந்தாரைத் திருமகள் அகலாளே.
தவ நால்வர்க்கு அறம் உரைக்கத் தரு அமர் சங்கரனார் - சனகாதி முனிவர்களுக்கு வேதப்பொருளை உபதேசிக்கக் கல்லாலமரத்தின்கீழ் வீற்றிருக்கும் சங்கரர்; (தரு - மரம் - இங்கே கல்லால மரம்);
கவிநாலு மொழி காழிக் கவுணியர்க்கு அருள் ஈசர் - நாற்கவிராஜர், சீகாழியில் கௌண்டின்ய கோத்திரத்தில் அவதரித்த திருஞானசம்பந்தருக்கு அருளிய ஈசர்; (அருணகிரிநாதர் அருளிய திருவெழுகூற்றிருக்கை - "ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்");
கவின் ஆரும் பொழில் சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டைச் - அழகிய சோலை சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டையில் எழுந்தருளிய;
சிவனார்தாள் பணிந்தாரைத் திருமகள் அகலாளே - சிவபெருமானாரது திருவடியை வழிபடுவர்களை லட்சுமி நீங்கமாட்டாள்; (திருமகள் - இலக்குமி); (அகல்தல் - பிரிதல்; நீங்குதல்);
2)
கரஞ்சோரக் கடல்கடைந்தோர் கதறிட அவர்க்கிரங்கிப்
பெருஞ்சோகம் தீர்கண்டன் பிடிநடை உமைபங்கன்
கருஞ்சோலை புடைசூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டைப்
பரஞ்சோதி அடியாரைப் பழவினை பற்றாவே.
கரம் சோர - கைகள் களைப்புறும்படி; (சோர்தல் - தளர்தல்);
கடல் கடைந்தோர் - பாற்கடலைக் கடைந்த தேவர்கள்;
சோகம் - துக்கம்; துன்பம்; (ஆலகால விஷத்தால் ஏற்பட்ட துன்பம்);
பிடி நடை உமைபங்கன் - பெண்யானை போன்ற நடையை உடைய உமையை ஒரு பங்கில் உடையவன்;
கரும் சோலை - அடர்ந்த சோலை;
பரஞ்சோதி - மேலான ஜோதி;
3)
எயில்வேவ மலைவில்லால் எரிகணை ஒன்றெய்தான்
புயல்போலத் திகழ்கண்டன் பொருவிடை ஊர்தியினான்
கயல்பாயும் வயல்சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டைப்
பயில்வானைப் பணிவாரைப் பழவினை பற்றாவே.
எயில் வேவ மலை-வில்லால் எரி-கணை ஒன்று எய்தான் - முப்புரங்களும் வெந்து அழிய மேருமலையை வில்லாக ஏந்தி எரிக்கும் அம்பு ஒன்றை ஏவியவன்; (எயில் - கோட்டை - முப்புரம்);
புயல் - மேகம்;
பொருவிடை - போர்செய்யவல்ல எருது;
பயில்வானை - தங்கியவனை; (பயில்தல் - தங்குதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.16.1 - "மணஞ்சேரிப் பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.");
4)
மகனையருள் எனவானோர் வழிபட மயிலேறும்
குகனையருள் கண்ணுதலான் கொடிமிசை ஏறுடையான்
ககனமுயர் பொழில்சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டைப்
பகவனதாள் பணிவாரைப் பழவினை பற்றாவே.
குகன் - முருகன்;
கண்ணுதலான் - நெற்றிக்கண்ணன்;
கொடிமிசை ஏறு உடையான் - இடபக்கொடி உடையவன்;
ககனம் - விண்; ஆகாயம்;
பகவன தாள் - பகவானுடைய திருவடியை; (பகவன் - பகவான் - சிவன்); (அ - ஆறாம் வேற்றுமை உருபு);
5)
ஓரானை உரிமூடும் ஒருவனை முடிமீது
நீரானை நீறணிந்த நிமலனை விடையானைக்
காராரும் பொழில்சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டை
பேரானைப் பேசவல்லார் பிணிவினை நில்லாவே.
ஓர் ஆனை உரி மூடும் ஒருவன் - ஒரு யானையின் தோலை மார்புறப் போர்த்த ஒப்பற்றவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.15.1 - "கரி யுரிமூடிய ஒருவன்");
முடிமீது நீரானை - கங்காதரனை;
நீறு அணிந்த நிமலனை - திருநீற்றைப் பூசிய தூயனை;
விடையானைக் - இடபவாகனனை;
கார் ஆரும் பொழில் சூழ்ந்த - மேகங்கள் பொருந்தும் சோலை சூழ்ந்த; (கார் - மேகம்; கருமை);
கருவிலிக் கொட்டிட்டை பேரானைப் - கருவிலிக் கொட்டிட்டையை என்றும் நீங்காதவனை; (பேர்தல் - போதல்);
பேச வல்லார் பிணிவினை நில்லாவே - புகழவல்லவர்களுடைய பிணிகளும் வினைகளும் விலகும்;
6)
நாற்றமலர் இடுமாணி நடுக்குற நண்ணியவெங்
கூற்றுவனைக் குமைத்தபிரான் குழைதிகழ் காதுடையான்
காற்றினிலே மணங்கமழும் கருவிலிக் கொட்டிட்டை
ஏற்றனடி பணிவாரை இருவினை நலியாவே.
நாற்றமலர் இடு மாணி நடுக்குற நண்ணிய - வாசமலரைத் தூவி வழிபட்ட மார்க்கண்டேயர் அஞ்சும்படி அவரை நெருங்கிய; (நடுக்கு - நடுக்கம் - அச்சம்);
வெங் கூற்றுவனைக் குமைத்த பிரான் - கொடிய நமனை அழித்த தலைவன்; (குமைத்தல் - அழித்தல்); (பிரான் - தலைவன்);
ஏற்றன் - இடப வாகனன்;
7)
அந்திவண மேனியினான் அயிலுறு சூலத்தால்
அந்தகனைக் குத்தியவன் அரையினில் அரவார்த்தான்
கந்தமலி பொழில்சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டை
எந்தையடி பணிவாரை இருவினை நலியாவே.
அந்திவண மேனியினான் - அந்தி வண்ணத்துத் திருமேனி உடையவன் - மாலைக் காலத்துச் செவ்வானம் போன்ற நிறத்தை உடையவன்; (அப்பர் தேவாரம் - 5.28.1 - "அந்தி வண்ணமும் ஆவர் ஐயாறரே");
அயில்உறு சூலத்தால் அந்தகனைக் குத்தியவன் - கூர்மை பொருந்திய சூலத்தால் அந்தகாசுரனை மார்பில் குத்தியவன்; (அயில் - கூர்மை); (அந்தகன் - அந்தகாசுரன்); (அப்பர் தேவாரம் - 6.96.5 - "அந்தகனை அயிற்சூலத் தழுத்திக் கொண்டார்");
அரையினில் அரவு ஆர்த்தான் - பாம்பை அரைநாணாகக் கட்டியவன்;
கந்தமலி - வாசமிகுந்த;
8)
மழைநிறத்து வாளரக்கன் மணிமுடி பத்தடர்த்துப்
பிழைபொறுத்து வாளொடுநாள் பெரிதருள் செய்தபிரான்
கழனியிடைக் கயலுகளும் கருவிலிக் கொட்டிட்டை
அழனிறத்தன் அடியாரை அருவினை அடையாவே.
மழை நிறத்து வாள் அரக்கன் மணிமுடி பத்து அடர்த்துப் - கரிய நிறம் உடைய, கொடிய அரக்கனான இராவணனது கிரீடம் அணிந்த பத்துத் தலைகளையும் நசுக்கி; (மழை - மேகம்; கருமை); (வாள் - கொடுமை);
பிழை பொறுத்து வாளொடு நாள் பெரிதருள் செய்த பிரான் - குற்றத்தை மன்னித்து வாளும் ஆயுளும் மிகவும் அருள்புரிந்த தலைவன்; (திருமந்திரம் - 10.3.11.2 - "பெரிதருள் செய்து பிறப்பறுத் தானே");
கழனியிடைக் கயல் உகளும் கருவிலிக் கொட்டிட்டை - வயிலில் கயல்மீன்கள் பாய்கின்ற கருவிலிக் கொட்டிட்டையில் எழுந்தருளிய; (கழனி - வயல்); (உகள்தல் - தாவுதல்);
அழனிறத்தன் - அழல் நிறத்தன் - தீவண்ணன்;
9)
மண்ணிடந்த மாலுக்கும் மலருறை பிரமற்கும்
நண்ணலரி தாகியவன் நதியடை செஞ்சடையான்
கண்ணிறைந்த மலர்ப்பொழில்சூழ் கருவிலிக் கொட்டிட்டை
அண்ணலடி அடைந்தாரை அருவினை அடையாவே.
இடத்தல் - அகழ்தல்;
நண்ணல் அரிது ஆகியவன் - அடைவதற்கு அரியவன்;
நதி அடை செஞ்சடையான் - கங்கையை அடைத்த செஞ்சடையை உடையவன்;
கண்ணிறைந்த - கள் நிறைந்த;
10)
தெருவெங்கும் பொய்யொட்டிச் சிறுநெறிக் கழைக்கின்ற
பெருமிண்டர் பேச்சொழிமின் பிறையணி சடையெம்மான்
கருவண்டார் பொழில்சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டை
ஒருவன்றாள் பணிபத்தர் உயர்கதி பெறுவாரே.
தெரு-எங்கும் பொய் ஒட்டிச் சிறுநெறிக்கு அழைக்கின்ற பெரு-மிண்டர் பேச்சு ஒழிமின் - தெருவில் எங்கும் பொய்களைச் சுவர்களில் ஒட்டி விளம்பரம் செய்து புன்னெறிக்கு அழைக்கின்ற ஈனர்களது பேச்சை நீங்குங்கள்; (மிண்டர் - கல்நெஞ்சர்; அறிவில்லாதவர்); (மிண்டு - அறிந்து செய்யும் குற்றம்);
பிறை அணி சடை எம்மான் - சடையில் பிறையை அணிந்த எம் இறைவன்;
கருவண்டு ஆர் பொழில் சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டை - கரிய வண்டுகள் ரீங்காரம் செய்யும் சோலை சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டையில் எழுந்தருளிய;
ஒருவன் தாள் பணி பத்தர் உயர்கதி பெறுவாரே - ஒப்பற்றவனுடைய திருவடிகளை வணங்கும் பக்தர்கள் உயர்ந்த கதியை அடைவார்கள்;
11)
குருமணியாய் ஆலமர்ந்தான் குளிர்மதி அதனயலே
பருமணியார் நாகத்தைப் படர்சடை மேல்வைத்தான்
கருமணியார் கண்டத்தன் கருவிலிக் கொட்டிட்டை
அருமணிதாள் அடைந்தாரை அருவினை அடையாவே.
குருமணி - குருசிரேஷ்டன் - சிறந்த குரு - தட்சிணாமூர்த்தி;
ஆல் - ஆலமரம் (கல்லாலமரம்);
பரு மணி ஆர் நாகம் - பெரிய மணி (நாகரத்தினம்) திகழும் நாகப்பாம்பு;
கரு மணி ஆர் கண்டத்தன் - கரிய மணி பொருந்திய கண்டத்தை உடையவன் - நீலகண்டன்; (ஆர்தல் - பொருந்துதல்; ஒத்தல்); (அப்பர் தேவாரம் - 6.73.1 - "கருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய் .... பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்")
அருமணி - அரிய மணி போன்றவன்;
(அப்பர் தேவாரம் - 6.73.1 - "கருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய் .... பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்")
வி. சுப்பிரமணியன்
-------------- --------------
No comments:
Post a Comment