Monday, December 26, 2022

05.45 – நாலூர் மயானம் (திருமெய்ஞ்ஞானம்)

05.45 – நாலூர் மயானம் (திருமெய்ஞ்ஞானம்)

2015-07-30

நாலூர் மயானம் - (ஞானபரமேஸ்வரர் கோயில் - நாலூர் திருமெய்ஞ்ஞானம்)

(இத்தலம் கும்பகோணம் - குடவாசல் இடையே உள்ளது.)

------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.47.1 - "மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்")


1)

ஒளிருமதி செஞ்சடைமேல் உடையவனே ஒருமலைபோற்

களிறுதனை உரித்தவனே கார்மேகக் கண்டத்தாய்

நளிர்வயலிற் கயலுகளும் நாலூர் மயானத்தாய்

குளிர்மலரால் அடிபணிந்தேன் குறைதீர்த் தருளாயே.


ஒளிருமதி செஞ்சடைமேல் உடையவனே - ஒளிரும் திங்களைச் சிவந்த சடையின்மீது தரித்தவனே; (சம்பந்தர் தேவாரம் - 2.17.6 - "ஒளிரும் பிறையும் முறுகூ விளவின் தளிருஞ் சடைமே லுடையா னிடமாம்");

ஒரு மலை போல் களிறுதனை உரித்தவனே - ஒரு மலை போன்ற ஆண்யானையின் தோலை உரித்தவனே;

கார்மேகக் கண்டத்தாய் - கரிய மேகம் போன்ற கண்டம் உடையவனே;

நளிர் வயலில் கயல் உகளும் நாலூர் மயானத்தாய் - குளிர்ந்த வயலில் கயல்மீன்கள் தாவும் நாலூர் மயானம் என்ற தலத்தில் உறைபவனே; (நளிர்தல் - குளிர்தல்);

குளிர் மலரால் அடி பணிந்தேன் குறை தீர்த்து அருளாயே - குளிர்ந்த பூக்களைத் தூவி உன் திருவடியைப் பணிகின்ற அடியேனுடைய குறைகளைத் தீர்த்து அருள்வாயாக;


2)

நீரையடை சடைமீது நிலவணிந்தாய் நறுங்கொன்றைத்

தாரையணி மார்பினனே தனிவெள்ளே றொன்றுடையாய்

நாரையிரை தேர்வயல்சூழ் நாலூர் மயானத்தாய்

பேரையுரைத் தடிபணிந்தேன் பிணிதீர்த் தருளாயே.


நீரை அடை சடைமீது நிலவு அணிந்தாய் - கங்கையை அடைத்த சடையின்மேல் சந்திரனை அணிந்தவனே;

நறுங்கொன்றைத் தாரை அணி மார்பினனே - மணம் கமழும் கொன்றைமாலையை மார்பில் அணிந்தவனே;

தனி வெள் ஏறு ஒன்று உடையாய் - ஒப்பற்ற, வெண்ணிறம் உடைய, எருதை வாகனமாக உடையவனே;

நாரைரை தேர் வயல் சூழ் நாலூர் மயானத்தாய் - நாரைகள் இரைதேரும் வயல்கள் சூழ்ந்த நாலூர் மயானம் என்ற தலத்தில் உறைபவனே;

பேரைரைத்து அடி பணிந்தேன் பிணி தீர்த்து அருளாயே - உன் திருநாமத்தைச் சொல்லி உன் திருவடியைப் பணிகின்ற அடியேனுடய பிறவிப்பிணியைத் தீர்த்து அருள்வாயாக;


3)

நின்னாமம் மறவாது நினைமாணி இறவாமல்

எந்நாளும் நிலைத்திருக்க இருங்கூற்றை உதைத்தவனே

நன்னீரார் வயல்சூழ்ந்த நாலூர் மயானத்தாய்

பன்னாளும் அடிபணிந்தேன் பவம்தீர்த் தருளாயே.


மாணி - அந்தணச் சிறுவன் - மார்க்கண்டேயர்;

இரும் கூற்று - பெரிய கரிய காலன்; (இருமை - பெருமை; கருமை);

நன்னீர் ஆர் வயல் - நல்ல நீர் நிறைந்த வயல்;

பன்னாளும் - பல நாள்களும்;

பவம் - பிறவி;


4)

மெல்லிடையாள் பங்கினனே வேணிமிசைக் கூவிளத்தாய்

அல்லிலரு நடமாடீ ஆனஞ்சும் உகந்தவனே

நல்லிசையார் பொழில்சூழ்ந்த நாலூர் மயானத்தாய்

சொல்லரிய புகழுடையாய் துயர்தீர்த் தருளாயே.


மெல்டையாள் பங்கினனே - மெலிந்த இடையை உடைய உமையை ஒரு பங்கில் உடையவனே;

வேணிமிசைக் கூவிளத்தாய் - சடைமீது வில்வம் புனைந்தவனே; (வேணி - சடை); (கூவிளம் - வில்வம்);

அல்லில் அரு நடம் ஆடீ - இருளில் அரிய கூத்து ஆடுபவனே;

ஆனஞ்சும் உகந்தவனே - பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்து பொருள்களை விரும்புபவனே - பஞ்சகவ்வியத்தால் அபிஷேகம் விரும்பியவனே;

நல் இசை ஆர் பொழில் சூழ்ந்த நாலூர் மயானத்தாய் - (வண்டுகள் செய்யும்) இனிய இசை ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்த நாலூர் மயானம் என்ற தலத்தில் உறைபவனே;

சொல்லரிய புகழுடையாய் - சொல்ல அரிய புகழை உடையவனே;

துயர் தீர்த்து அருளாயே - என் துயரை நீக்கி அருள்வாயாக;


5)

ஆறுமலர் அரவமணி அஞ்சடைமேல் மதியுடையாய்

நீறுதிகழ் நெற்றியனே நிகரில்லாப் பெற்றியனே

நாறுமலர்ப் பொழில்சூழ்ந்த நாலூர் மயானத்தாய்

ஏறுடையாய் அடிபணிந்தேன் இடர்தீர்த் தருளாயே.


ஆறு மலர் அரவம் அணி அம் சடைமேல் மதி உடையாய் - கங்கை, பூக்கள், நாகம் இவற்றை அணிந்த அழகிய சடையின்மேல் சந்திரனை அணிந்தவனே;

நிகர் இல்லாப் பெற்றியனே - ஒப்பில்லாத பெருமை உடையவனே;

நாறு மலர்ப்பொழில் - மணம் கமழும் பூக்கள் நிறைந்த சோலை;

ஏறு உடையாய் - இடப வாகனனே;


6)

ஓவாதுன் பெயர்நினைந்த உத்தமர்வா கீசருக்கு

மேவார்கள் பிணிகல்லே விரிகடலிற் கரைசேர்க்கும்

நாவாயாக் கியநம்பா நாலூர் மயானத்தாய்

பாவாலுன் பதம்பணிந்தேன் பழவினைதீர்த் தருளாயே.


ஓவாது உன் பெயர் நினைந்த உத்தமர் வாகீசருக்கு - எப்போதும் உன் திருநாமத்தை நினைந்த திருநாவுக்கரசருக்கு;

மேவார்கள் பிணி கல்லே - பகைவர்கள் அவரைக் கடலில் ஆழ்த்துவதற்காகக் கட்டிய கல்லே;

விரிகடலிற் கரைசேர்க்கும் நாவாய் ஆக்கிய நம்பா - விரிந்த கடலில் கரைசேர்க்கும் படகு ஆக்கிய நம்பனே; (நம்பன் - விரும்பப்படுபவன்); (நாவாய் - மரக்கலம்);

பாவால்ன் பதம் பணிந்தேன் - தமிழ்ப் பாடல்களால் உன் திருவடியை வணங்கினேன்;

பழவினை தீர்த்து அருளாயே - என் பழைய வினையைத் தீர்த்து அருள்க;


7)

அறைகடலில் அன்றெழுந்த அருவிடத்தை அமுதுசெய்த

கறைமிடறா ஆலின்கீழ் மறைவிரித்த கண்ணுதலாய்

நறைமலரார் பொழில்சூழ்ந்த நாலூர் மயானத்தாய்

பிறைமதியாய் அடிபணிந்தேன் பிணிதீர்த் தருளாயே.


அறைகடல் - அலைகள் ஒலிக்கும் கடல்;

கறைமிடறா - நீலகண்டனே; (சம்பந்தர் தேவாரம் - 2.23.1 - "மழையார் மிடறா");

ஆலின்கீழ் மறை விரித்த கண்ணுதலாய் - கல்லால மரத்தின்கீழ் வேதப்பொருளை உபதேசித்த நெற்றிக்கண்ணனே; (நுதல் - நெற்றி);


8)

தேரிறங்கச் சினந்துபெரும் சிலையசைத்த அரக்கனுக்குப்

பேரிலங்க விரலூன்றி அழவைத்த பெருமானே

நாரிபங்கு மகிழ்கின்ற நாலூர் மயானத்தாய்

ஏரிலங்கும் அடிபணிந்தேன் இடர்தீர்த் தருளாயே.


தேர் இறங்க - வானிற் செல்லும் தேர் ஓடாமல் தரையில் இறங்கியதும்;

சிலை - மலை - கயிலைமலை;

அரக்கனுக்குப் பேர் இலங்க - தசமுகனுக்கு இராவணன் என்ற பெயர் விளங்கும்படி; (இராவணம் - rāvaṇam - Crying, screaming - அழுகை);

நாரி - பெண்;

ஏர் இலங்கும் - அழகு விளங்கும்; (ஏர் - அழகு);


9)

உச்சியடி காணவயன் ஓதவணன் நேடிமிக

அச்சமுற அளவில்லா அழலானாய் மதுமலரை

நச்சுமளி மெச்சுபொழில் நாலூர் மயானத்தாய்

இச்சையொடு கழல்தொழுதேன் இடர்தீர்த் தருளாயே.


உச்சி அடி காண அயன் ஓதவணன் நேடி மிக அச்சமுற அளவு இல்லா அழல் ஆனாய் - முடியையும் அடியையும் காண்பதற்குப் பிரமனும் கடல்வண்ணம் உடைய திருமாலும் தேடி மிக அஞ்சும்படி எல்லையற்ற சோதி ஆனவனே; (அயன் - பிரமன்); (ஓதம் - கடல்); (நேடுதல் - தேடுதல்);

மதுமலரை நச்சும் அளி மெச்சு பொழில் நாலூர் மயானத்தாய் - தேன் உடைய பூக்களை விரும்பும் வண்டுகள் புகழ்ந்து பாடும் சோலை சூழ்ந்த நாலூர் மயானம் என்ற தலத்தில் உறைபவனே; (நச்சுதல் - விரும்புதல்); (அளி - வண்டு); (மெச்சுதல் - புகழ்தல்);

இச்சையொடு கழல் தொழுதேன் இடர்தீர்த்து அருளாயே - விரும்பி உன் திருவடிகளை வழிபடும் அடியேனுடைய இடர்களைத் தீர்த்து அருள்வாயாக; (அப்பர் தேவாரம் - 4.66.1 - "இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மை நச்சுவார்க் கினியர் போலும் நாகவீச் சரவ னாரே" - இச்சை - உள்ளன்பு);


10)

தக்கவழி அறியாமல் தருக்கியலை வார்க்கில்லாய்

தக்கனது வேள்விதனைத் தகர்த்தவனே தேரேறி

நக்கரண்கள் மூன்றெரித்தாய் நாலூர் மயானத்தாய்

அக்கணிந்தாய் அடிபணிந்தேன் அல்லல்தீர்த் தருளாயே.


தக்க வழி அறியாமல் தருக்கி அலைவார்க்கு இல்லாய் - செல்லத்தக்க நெறியை அறியாமல் ஆணவத்தோடு அலைகின்றவர்களுக்கு இல்லாதவனே;

தக்கனது வேள்விதனைத் தகர்த்தவனே - தக்கன் செய்த யாகத்தை அழித்தவனே;

தேர் ஏறி நக்கு அரண்கள் மூன்று எரித்தாய் - தேவர்கள் செய்த தேரில் ஏறிச், சிரித்தே முப்புரங்களையும் எரித்தவனே; (நகுதல் - சிரித்தல்);

அக்கு அணிந்தாய் - எலும்பை அணிந்தவனே; (அக்கு - எலும்பு; உருத்திராக்கம்);


11)

உள்ளுமடி யார்மனத்தில் உகந்துறையும் உத்தமனே

துள்ளுமொரு மான்மழுவாள் துடியேந்தும் பெருமானே

நள்ளிருளில் நடமாடும் நாலூர் மயானத்தாய்

தெள்ளுநதிச் சடையானே தீவினைதீர்த் தருளாயே.


உள்ளும் அடியார் மனத்தில் உகந்து உறையும் உத்தமனே - தியானிக்கும் பக்தர் மனத்தில் விரும்பி உறையும் உத்தமனே;

துள்ளும் ஒரு மான், மழுவாள், துடி ஏந்தும் பெருமானே - துள்ளும் மான் ஒன்று, மழு, உடுக்கை இவற்றையெல்லாம் கையில் ஏந்துகின்ற பெருமானே;

நள்ளிருளில் நடம் ஆடும் நாலூர் மயானத்தாய் - ஊழிக்காலத்தில் திருநடம் செய்பவனே, நாலூர் மயானம் என்ற தலத்தில் உறைபவனே;

தெள்ளு நதிச் சடையானே தீவினை தீர்த்து அருளாயே - தெளிந்த கங்கையாற்றைச் சடையில் அணிந்தவனே; என் தீவினைகளைத் தீர்த்து அருள்வாயாக;


பிற்குறிப்புகள்:

1) யாப்புக் குறிப்பு: நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா. அடிதோறும் 4 காய்ச்சீர். ஆங்காங்கே விளச்சீரோ மாச்சீரோ வரல் ஆம். அப்படி மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.

2) நாலூர் மயானம் - தேவாரப் பாடல் பெற்ற தலம்.

(இவ்வூரில் இன்னொரு பகுதியில் வேறொரு கோயில் உள்ளது - நாலூர் "பலாசவனநாதர் கோயில்". அது தேவார வைப்புத்தலம்).


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


No comments:

Post a Comment