Saturday, December 24, 2022

05.39 – கொள்ளம்பூதூர்

05.39 – கொள்ளம்பூதூர்

2015-06-22

கொள்ளம்பூதூர்

(இத்தலம் குடவாசலுக்குத் தெற்கே உள்ளது)

------------------

(அறுசீர் விருத்தம் - "விளம் மா தேமா" என்ற அரையடி வாய்பாடு)

(திருநேரிசை அமைப்பு) (அப்பர் தேவாரம் - 4.62.1 - "வேதியா வேத கீதா")


1)

காலனார் கையிற் சிக்கிக் கடுநர கடையா முன்னம்,

சூலமார் கையி னானே சுரர்தொழ நஞ்சை உண்டு

நீலமார் கண்டத் தானே நெல்வயல் புடைய ணிந்த

கோலமார் கொள்ளம் பூதூர்க் குழகனே அருள்செய் யாயே.


காலனார் கையில் சிக்கிக் கடுநரகு அடையா முன்னம் - காலன் கையில் அகப்பட்டுக் கொடிய நரகத்தைச் சென்றடைவதன் முன்னரே; (கடுநரகு - கொடிய நரகம்);

சூலம் ஆர் கையினானே - சூலபாணியே; (ஆர்தல் - பொருந்துதல்);

சுரர் தொழ நஞ்சை உண்டு நீலம் ஆர் கண்டத்தானே - தேவர் இறைஞ்ச இரங்கி ஆலகாலத்தை உண்டு கருமை பொருந்திய கண்டத்தை உடையவனே; (சுரர் - தேவர்); (கோலம் - அழகு);

நெல்வயல் புடைணிந்த கோலம் ஆர் கொள்ளம்பூதூர்க் குழகனே - நெல்வயல் சூழ்ந்த அழகிய கொள்ளம்பூதூரில் எழுந்தருளிய அழகனே; (குழகன் - இளைஞன்; அழகன்);

அருள் செய்யாயே - அருள்வாயாக;


2)

அயிலுறு சூலம் ஏந்தி அந்தகன் அடையா முன்னம்,

எயிலவை மூன்றும் வேவ எரிகணை எய்த வீரா

கயிலைமா மலைய மர்ந்த கடவுளே சோலை தன்னிற்

குயிலொலி கொள்ளம் பூதூர்க் குழகனே அருள்செய் யாயே.


அயில் உறு சூலம் - கூர்மையான சூலாயுதம்;

அந்தகன் - எமன்; (அப்பர் தேவாரம் - 4.107.6 - "சூலமும் பாசமுங் கொண்டு தொடர்ந்தடர்ந் தோடிவந்த காலனைக் காய்ந்த பிரான்");

எயில் - கோட்டை;

சோலை தன்னிற் குயில் ஒலி - பொழில்களில் குயில்கள் ஒலிக்கின்ற;


3)

அளிமலி காழி வேந்தர் ஆற்றினைக் கடக்க வேண்டி

ஒளியுரு ஆன உன்னை ஓதவும் தமிழ்க்கி ரங்கி

எளிதினில் ஓடம் ஆற்றின் எதிர்க்கரை சேரச் செய்த

குளிர்பொழிற் கொள்ளம் பூதூர்க் குழகனே அருள்செய் யாயே.


அளி மலி - அன்பு மிகுந்த; அருள் மிகுந்த; (அப்பர் தேவாரம் - 6.66.9 - "அளியானை அண்ணிக்கும் ஆன்பால் தன்னை" - அளியான் - கருணையுடையவன்);

காழி வேந்தர் - சீகாழியில் அவதரித்த தலைவர் திருஞான சம்பந்தர்; (பெரியபுராணம் - 12.28.481 - "கற்றவர்கள் தொழுதேத்துங் காழி வேந்தர்");

எதிர்க்கரை - மறுகரை;


* திருஞான சம்பந்தர் "கொட்டமே கமழும்" என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார். ஆற்றுவெள்ளத்தில் ஓடம் தானே ஓடி மறுகரைக்கு ஞானசம்பந்தரை அழைத்துச் சென்றது. இவ்வரலாற்றைப் பெரியபுராணத்திற் காண்க.


4)

ஏத்தினார் கட்கி ரங்கி இடும்பைகள் ஆன எல்லாம்

தீர்த்துவான் அளிப்பாய் என்று செப்பிடக் கேட்டு வந்தேன்

தீர்த்தனே சென்னி மீது திங்களைச் சூடி ஆடும்

கூத்தனே கொள்ளம் பூதூர்க் குழகனே அருள்செய் யாயே.


ஏத்தினார்கட்கு இரங்கி இடும்பைகள் ஆன எல்லாம் தீர்த்து - போற்றுவார்களுக்குப் பரிந்து துன்பத்தையெல்லாம் தீர்த்து; (இடும்பை - துன்பம்);

வான் அளிப்பாய் என்று செப்பிடக் கேட்டு - வானுலக வாழ்வு அளிப்பாய் என்று பெரியோர் சொல்லக் கேட்டு; (சம்பந்தர் தேவாரம் - கொள்ளம்பூதூர்ப் பதிகம் - 3.6.11 - "இன்றுசொல் மாலைகொண் டேத்த வல்லார்போய் என்றும் வானவரோ டிருப்பாரே");

தீர்த்தன் - தூயவன்;


5)

பரவிவா னோர்கள் எல்லாம் பதமலர் பணிய அன்று

வரைவிலால் மதில்கள் எய்த மைந்தனே மங்கை பங்கா

கரவிலா தன்பர்க் கீயும் கையினாய் கல்லால் நீழற்

குரவனே கொள்ளம் பூதூர்க் குழகனே அருள்செய் யாயே.


பரவுதல் - புகழ்தல்;

வரைவிலால் - வரைவில்லால் - மேருமலை என்ற வில்லால்; (வரை - மலை);

மைந்தன் - வீரன்;

கரவு இலாது அன்பர்க்கு ஈயும் கையினாய் - ஒளித்தல் இன்றிப் பக்தர்களுக்கு வரம் கொடுக்கும் கையை உடையவனே;

கல்லால் நீழற் குரவனே - கல்லால மரத்தின்கீழ் இருக்கும் குருவே; (குரவன் - குரு);


6)

துஞ்சினார் நீற ணிந்த சுந்தரா கண்டம் தன்னில்

நஞ்சினாய் அரையில் நாக நாணனே மலையான் மங்கை

அஞ்சவோர் கரியு ரித்தாய் அணிமதி விளங்கு கின்ற

குஞ்சியாய் கொள்ளம் பூதூர்க் குழகனே அருள்செய் யாயே.


துஞ்சினார் நீறு - இறந்தவர்களுடைய சாம்பல் - சுடலைப்பொடி; (துஞ்சுதல் - சாதல்);

கண்டம் தன்னில் நஞ்சினாய் - கண்டத்தில் நஞ்சை அடைத்தவனே - நீலகண்டனே;

அரையில் நாக நாணனே - பாம்பை அரைநாணாகக் கட்டியவனே;

கரி உரித்தாய் - யானையை உரித்தவனே;

அணி - அழகு;

குஞ்சி - தலை; ஆடவர் தலைமயிர்;


7)

புற்றரா வோடு திங்கள் பொற்சடை மீத ணிந்தாய்

நெற்றிமேல் ஒற்றைக் கண்ணில் நெருப்பினைக் காட்டும் ஈசா

பெற்றமூர் பெற்றி யானே பெருங்கரி உரிவை போர்த்த

கொற்றவா கொள்ளம் பூதூர்க் குழகனே அருள்செய் யாயே.


புற்றரா - புற்றில் வாழும் தன்மை உடைய பாம்பு;

நெற்றிமேல் ஒற்றைக் கண் - நெற்றிக்கண்; (அப்பர் தேவாரம் - 6.97.5 - "நெற்றிமேல் ஒற்றைக்கண் முற்றும் உண்டோ");

பெற்றம் ஊர் பெற்றியானே - இடபத்தின்மேல் ஏறிச் செல்லும் பெருமை மிக்கவனே; (பெற்றம் - எருது); (ஊர்தல் - ஏறிச் செலுத்துதல்); (பெற்றி - பெருமை; இயல்பு);

பெரும் கரி உரிவை போர்த்த கொற்றவா - பெரிய யானையின் தோலைப் போர்த்த அரசனே; (உரிவை - தோல்);


8)

ஓடிமா மலைய சைத்தான் ஒருபது தலைநெ ரித்தாய்

வாடியாழ் வாசித் தேத்த மகிழ்ந்தொரு வாள ளித்தாய்

ஆடினாய் அம்ப லத்தில் அழகிய நாச்சி யோடு

கூடினாய் கொள்ளம் பூதூர்க் குழகனே அருள்செய் யாயே.


* அழகிய நாச்சியார் (சௌந்தரநாயகி) - இத்தலத்து இறைவி திருநாமம்;


ஓடி மா மலைசைத்தான் ஒருபது தலை நெரித்தாய் - ஓடிக் கயிலையைப் பெயர்த்த இராவணனது பத்துத் தலைகளை நசுக்கியவனே; (ஒருபது - பத்து);

வாடி யாழ் வாசித்து ஏத்த மகிழ்ந்து ஒரு வாள் அளித்தாய் - (பின் அவன்) வருந்தி, யாழை எடுத்து இன்னிசை பாடித் துதிக்க, மகிழ்ந்து அவனுக்குச் சந்திரஹாஸம் என்ற வாளை அளித்தவனே; (சம்பந்தர் தேவாரம் - 3.24.8 - "அரக்கனார் .... நீடியாழ் பாடவே கருக்குவாள் அருள்செய்தான்");

ஆடினாய் அம்பலத்தில் - சிற்றம்பலத்தில் ஆடியவனே;

அழகிய நாச்சியோடு கூடினாய் - சௌந்தரநாயகியோடு கூடியவனே; (நாச்சி - தலைவி); (சுந்தரர் தேவாரம் - 7.54.8 - "கூடினாய் மலைமங்கையை");

கொள்ளம்பூதூர்க் குழகனே - கொள்ளம்பூதூரில் எழுந்தருளிய அழகனே;

அருள் செய்யாயே - அருள்வாயாக;


9)

அடியிணை தேடி மண்ணை அகழ்ந்தஅக் கேழ லோடு

முடியினைக் காண்ப தற்கு முயன்றஅப் புள்ளும் நாண

முடிவிலா எரியாய் நின்ற முதல்வனே இடபம் காட்டும்

கொடியினாய் கொள்ளம் பூதூர்க் குழகனே அருள்செய் யாயே.


அடியிணை - இருதிருவடிகள்;

கேழல் - பன்றி - இங்கே, பன்றி உருவிற் சென்ற திருமால்;

புள் - பறவை - இங்கே, அன்னப் பறவை உருவிற் சென்ற பிரமன்;

நாண - நாணும்படி;

முடிவு இலா எரியாய் நின்ற முதல்வனே - எல்லையற்ற சோதியாகி நின்ற முதல்வா; (எரி - தீ; சோதி);

இடபம் காட்டும் கொடியினாய் - இடபக்கொடி உடையவனே;


10)

ஆறலா மார்க்கம் தன்னை அருநெறி என்ற ழைப்பார்

நீறிலா நெற்றி யோர்சொல் நீங்குவீர் நம்பிப் பேர்கள்

கூறியார் கும்பிட் டாலும் கொம்பன இடையி னாளோர்

கூறனார் கொள்ளம் பூதூர்க் குழகனார் அருள்செய் வாரே.


ஆறு அலா மார்க்கம் தன்னை அருநெறி என்று அழைப்பார் - நெறியல்லா நெறியை (அவநெறியை) அரிய மார்க்கம் என்று கூப்பிடுபவர்கள்; (ஆறு அலா மார்க்கம் - அறுசமயங்களுக்கு மாறுபட்ட புறச்சமயம் என்றும் கொள்ளலாம்); (ஆறு - வழி; 6 என்ற எண்); (அழைத்தல் - கூப்பிடுதல்);

நீறு இலா நெற்றியோர் சொல் நீங்குவீர் - திருநீறு பூசாத நெற்றியை உடையவர்கள் சொல்லும் பேச்சை நீங்குங்கள்;

நம்பிப் பேர்கள் கூறி யார் கும்பிட்டாலும் - எப்படிப்பட்டவரே ஆயினும் விரும்பி ஈசன் திருப்பெயர்களைச் சொல்லிக் கும்பிட்டால்; (நம்புதல் - விரும்புதல்);

கொம்பு அன இடையினாள் ஓர் கூறனார் - பூங்கொம்பு போன்ற இடையை உடைய உமையை ஒரு கூறாக உடையவர்; (அன - அன்ன என்பது இடைக்குறையாக வந்தது);

கொள்ளம்பூதூர்க் குழகனார் - கொள்ளம்பூதூரில் எழுந்தருளிய அழகர்;

அருள் செய்வாரே - அருள்புரிவார்;


* "நம்பிப், பேர்கள் கூறி, யார் கும்பிட்டாலும் .... அருள்செய்வார்" - சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.49 - நமச்சிவாயப் பதிகப் பாடல்கள் 5, 6, 7 இவற்றின் கருத்தினைக் காண்க;


11)

குழைமனத் தினர்கள் ஆகிக் கூவிளம் தூவிப் போற்றில்,

உழையினன் ஓர்க ரத்தில், ஒப்பிலி நஞ்சை உண்டு

மழையன மணியி லங்கு மாமிடற் றெந்தை, சங்கக்

குழையினன், கொள்ளம் பூதூர்க் குழகனார் அருள்செய் வானே.


குழை மனத்தினர்கள் ஆகிக் கூவிளம் தூவிப் போற்றில் - உருகுகின்ற மனம் உடையவர்கள் ஆகி, வில்வத்தைத் தூவி வழிபட்டால்; (கூவிளம் - வில்வம்); (போற்றில் - போற்றினால்);

உழையினன் ஓர் கரத்தில் - ஒரு கையில் மானை ஏந்தியவன்; (உழை - மான்);

ஒப்பிலி - ஒப்பு இலி - ஒப்பற்றவன்;

நஞ்சை உண்டு மழை அன மணி இலங்கு மா மிடற்று எந்தை - விடத்தை உண்டு மேகம் போன்ற கருமணி விளங்குகின்ற அழகிய கண்டத்தை உடைய எந்தை - நீலகண்டன்; (மழை - மேகம்; கருமை);

சங்கக் குழையினன் - சங்கினால் ஆன குழையைக் காதில் அணிந்தவன்;

கொள்ளம் பூதூர்க் குழகன் ஆர்-அருள் செய்வான் - கொள்ளம்பூதூரில் எழுந்தருளியிருக்கும் அழகன் அரிய திருவருளைச் செய்வான்; (ஆர் அருள் - அரிய கருணை; பூரணகருணை); (ஆர் - அரிய; அருமையான); (ஆர்தல் - நிறைதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.24.8 - "ஓயாத அரக்கனொடிந் தலற நீயா ரருள்செய்து நிகழ்ந்தவனே");


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


No comments:

Post a Comment