Sunday, December 4, 2022

06.04.030 – சுந்தரர் துதி - அரும்பொருள் திகம்பரன்

06.04.030 – சுந்தரர் துதி - அரும்பொருள் திகம்பரன்

2014-07-12

06.04.030 - சுந்தரர் துதி - சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - 2014

------------------------------

(2 பாடல்கள்)

(வண்ணச்சந்த விருத்தம்;

"தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனம்" )

(பதஞ்சலி முனிவர் அருளிய நடராஜ ஸ்தோத்திரம் -

सदञ्चित मुदञ्चित निकुञ्चित पदं झलझलञ्चलित मञ्जु कटकम् -

ஸத³ஞ்சித முத³ஞ்சித நிகுஞ்சித பத³ம்ʼ ²லஜ²லஞ்சலித மஞ்ஜு கடகம் );


1)

அரும்பொரு டிகம்பர னவன்றரு பசும்பொனை இருந்திரை இடும்பின நறும்

கருங்குழ லிளங்கிளி நகும்படி குளந்தனி லளைந்துப திகஞ்சொலி உறும்

சுருங்கிய மருங்குல ணிசங்கிலி விரும்பிய திடஞ்சொல அரன்றனை மரம்

இருந்திடு மெனுங்கிழ மையுந்திக ழருந்தவ னவன்கழ னினைந்திட நலம்.


பதம் பிரித்து:

அரும்பொருள் திகம்பரன் நவன் தரு பசும்பொனை இரும்-திரை இடும்; பினம் நறும்

கருங்குழல் இளங்கிளி நகும்படி குளந்தனில் அளைந்து பதிகம் சொலி உறும்;

சுருங்கிய மருங்குல் அணி சங்கிலி விரும்பிய திடம் சொல அரன்-தனை மரம்

இருந்திடும் எனும் கிழமையும் திகழ் அரும் தவன்; அவன் கழல் நினைந்திட நலம்.


அடி-1-2: ஆற்றில் இட்டுக் குளத்தில் தேடியது;

அடி-3-4: திருவொற்றியூரில் சங்கிலியாருக்குச் சத்தியம் செய்யும்போது சிவனை மகிழமரத்தில் இருக்கச் சொன்னது;

இவ்வரலாறுகளைப் பெரியபுராணத்திற் காண்க;


அரும்பொருள் திகம்பரன் நவன் தரு பசும்பொனை இரும்-திரை இடும் - அரிய பொருளாகவும் நக்கனாகவும் என்றும் புதியவனாகவும் இருக்கும் சிவபெருமான் திருமுதுகுன்றத்தில் தந்த பன்னீராயிரம் பொன்னை அங்கே பெரிய அலைகளையுடைய மணிமுத்தாற்றில் இடுபவன்; (திகம்பரன் - சிவன்; நக்கன்); (திகம்பரனவன் - திகம்பரன் நவன் / திகம்பரன் அவன்); (நவன் - புதியவன்); (சுந்தரர் தேவாரம் - 7.72.2 - "புரமவை எரிதர வளைந்தவில் லினனவன்" - திரிபுரங்கள் எரியுமாறு வளைந்த வில்லை உடையவனும், புதியவனும்,); (திரை - அலை; நதி);

பினம் நறும் கருங்குழல் இளங்கிளி நகும்படி குளந்தனில் அளைந்து பதிகம் சொலி உறும் - பின்னர், மணங்கமழும் கரிய கூந்தலை உடைய, இளங்கிளி போன்ற பரவையார் ஏளனம் செய்து சிரிக்கும்படி திருவாரூரில் குளத்தில் துழாவித் தேடிக் காணாமல், பதிகம் பாடிப் பெறுபவன்; (பினம் - பின்னம் - இடைக்குறையாக வந்தது - பின்னர்); (அளைதல் - துழாவுதல்); (உறுதல் - அடைதல்); (பெரிய புராணம் - 12.29.132 - "பரவை தன்செய்ய வாயில்நகை தாராமே தாருமென");

சுருங்கிய மருங்குல் அணி சங்கிலி விரும்பிய திடம் சொல அரன்தனை மரம் இருந்திடும் எனும் கிழமையும் திகழ் அரும் தவன் - நுண்ணிடை உடைய அழகிய சங்கிலியாரை மணக்கவேண்டி அவர் விரும்பியபடி சத்தியம் செய்துதர, அரனை "மகிழ மரத்தில் இருப்பாய்" என்று சொல்லும் நட்புடைய அரிய தவத்தை உடையவன்; (மருங்குல் - இடை); (திடம் - உறுதி; சத்தியம்); (கிழமை - சினேகம்; உரிமை);

அவன் கழல் நினைந்திட நலம் - அத்தகைய அன்பன் சுந்தரன் திருவடிகளை நினைந்தால் நாம் நலம் பெறுவோம்.


இலக்கணக்குறிப்பு - செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்றில் உள்ள "உம்" விகுதி நிகழ்காலமும், எதிர்காலமும் உணர்த்தும். படர்க்கை ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின் பால் ஆகியவற்றில் மட்டுமே இது இடம்பெறும்.

(.டு) அவன் உண்ணும் (உண்கிறான் - உண்பான்), அவள் உண்ணும், அது உண்ணும், அவை உண்ணும்.



2)

புரந்தர னயன்கரி யவன்பல பெருந்தவ ரொடும்புக ழியம்பிடு வணம்

சிரந்திரை அலைந்திட அதன்புடை இலங்கிய இளம்பிறை அணிந்திடு சிவன்

நிரந்தர னணங்கொடு முறைந்திடு சிலம்பொரு கயந்தனி லடைந்தவ ரிகம்

பரந்தரு மருந்தமி ணிதஞ்சொல நினைந்திடு விடும்பிணி அலம்பவ பயம்.


பதம் பிரித்து:

புரந்தரன், அயன், கரியவன், பல பெரும் தவரொடும் புகழ் இயம்பிடு வணம்,

சிரம் திரை அலைந்திட அதன் புடை இலங்கிய இளம்பிறை அணிந்திடு சிவன்,

நிரந்தரன் அணங்கொடும் உறைந்திடு சிலம்பு ஒரு கயந்தனில் அடைந்தவர், இகம்

பரம் தரும் அரும் தமிழ் நிதம் சொல நினைந்திடு; விடும் பிணி, அலம், பவபயம்.


புரந்தரன், அயன், கரியவன், பல பெரும் தவரொடும் புகழ் இயம்பிடு வணம் - இந்திரன், பிரமன், திருமால், பல பெருமுனிவர்கள் எல்லாரும் புகழ்ந்து பேசும்படி; (புரந்தரன் - இந்திரன்); (அயன் - பிரமன்); (கரியவன் - திருமால்); (தவர் - தவசிகள்);

சிரம் திரை அலைந்திட அதன் புடை இலங்கிய இளம்பிறை அணிந்திடு சிவன் நிரந்தரன் அணங்கொடும் உறைந்திடு சிலம்பு ஒரு கயந்தனில் அடைந்தவர் - தலையில் கங்கை சுழன்று திரிய, அதன் பக்கத்தில் ஒளிவீசும் பிறைச்சந்திரனை அணியும் சிவபெருமான், அழிவின்றி என்றும் இருப்பவன், உமையோடு வீற்றிருக்கும் கயிலைமலையை ஓர் ஆனையின்மேல் ஏறிச்சென்று அடைந்தவர்; (திரை - நதி - கங்கை ஆறு); (புடை - பக்கம்); (இலங்குதல் - பிரகாசித்தல்); (நிரந்தரன் - என்றும் இருப்பவன்); (சிலம்பு - மலை - கயிலைமலை); (கயம் - கஜம் - யானை);

இகம் பரம் தரும் அரும் தமிழ் நிதம் சொல நினைந்திடு - அச்சுந்தரர் பாடியருளிய இம்மை மறுமை இன்பத்தைத் தரும் அரிய தமிழை நாள்தோறும் சொல்ல எண்ணுவாயாக; (இகம் பரம் தரும் - "இகத்தில் பரத்தினைத் தரும்" என்றும் பொருள்கொள்ளலாம்); (இகம் - இம்மை); (பரம் - மேலானது; மறுமை; முக்தி; வானுலகம்);

விடும் பிணி, அலம், பவபயம் - அப்படிச் செய்தால், பிணிகள், துன்பம், பவபயம் எல்லாம் நீங்கும்; (அலம் - துன்பம்);


பிற்குறிப்பு:

சுந்தரர் தேவாரம் - 7.100.9 -

இந்திரன் மால்பிரமன் னெழி லார்மிகு தேவரெல்லாம்

வந்தெதிர் கொள்ளஎன்னை மத்த யானை யருள்புரிந்து

மந்திர மாமுனிவர் இவன் ஆர்என எம்பெருமான்

நந்தமர் ஊரனென்றான் நொடித் தான்மலை உத்தமனே.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment