06.04.029 – மாணிக்க வாசகர் துதி - குருந்தடி அமர்ந்த
2014-06-28
06.04.029 - மாணிக்க வாசகர் துதி - மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மகம் - 2014
----------------------------------------
(வண்ணச்சந்த விருத்தம்;
"தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனம்" )
(பதஞ்சலி முனிவர் அருளிய நடராஜ ஸ்தோத்திரம் -
सदञ्चित मुदञ्चित निकुञ्चित पदं झलझलञ्चलित मञ्जु कटकम् -
ஸத³ஞ்சித முத³ஞ்சித நிகுஞ்சித பத³ம்ʼ ஜ²லஜ²லஞ்சலித மஞ்ஜு கடகம் );
குருந்தடி அமர்ந்தகு ரவன்றன பதந்தனை நினைந்துரு குநெஞ்சின ருரம்
பொருந்திய பெரும்புர வியின்றொகை தொடர்ந்திட இவர்ந்தடை அரன்சசி தரன்
கருந்திரை விடந்தனை அருந்திய பரன்சிறு பிரம்படி கொளும்படி வரும்
பெருந்தவ ரிருந்தமி ழதன்பொரு ளறிந்தனு தினஞ்சொல விடும்பவ பயம்.
பதம் பிரித்து:
குருந்து அடி அமர்ந்த குரவன்-தன பதந்தனை நினைந்து உருகு நெஞ்சினர்; உரம்
பொருந்திய பெரும் புரவியின் தொகை தொடர்ந்திட இவர்ந்து அடை அரன், சசிதரன்,
கரும் திரை விடந்தனை அருந்திய பரன் சிறு பிரம்படி கொளும்படி வரும்
பெரும் தவர் இரும் தமிழ் அதன் பொருள் அறிந்து அனுதினம் சொல விடும் பவபயம்.
குருந்து அடி அமர்ந்த குரவன்-தன பதந்தனை நினைந்து உருகு நெஞ்சினர் - (திருப்பெருந்துறையில்) குருந்தமரத்தின்கீழ் அமர்ந்து அருளிய சற்குருவினது திருவடியை எண்ணி உருகிய நெஞ்சை உடையவர்; (குரவன் - குரு); (தன - தன்+அ; அ - ஆறாம் வேற்றுமையுருபு);
உரம் பொருந்திய பெரும் புரவியின் தொகை தொடர்ந்திட இவர்ந்து அடை அரன் - வலிய பெரிய குதிரைகளின் கூட்டம் பின் தொடர, ஒரு குதிரையின்மீது ஏறி வந்த ஹரன்; (உரம் - வலிமை); (தொகை - கூட்டம்; விலங்குகளின் திரள்); (இவர்தல் - ஏறுதல்);
சசிதரன், கரும் திரை விடந்தனை அருந்திய பரன் - பிறைசூடி, கரிய கடல்விடத்தை உண்ட பரமன்;
சிறு பிரம்படி கொளும்படி வரும் பெருந்தவர் - அச்சிவபெருமான் மதுரையில் பாண்டியன் கைப்பிரம்பால் அடி ஏற்குமாறு வருவான்; (அப்படி அவனை வரவழைத்த) அத்தகைய பெரும் தவத்தை உடையவர்;
இரும் தமிழ் அதன் பொருள் அறிந்து அனுதினம் சொல விடும் பவபயம் - அந்த மாணிக்கவாசகர் அருளிய பெருமை மிக்க தமிழாகிய திருவாசகத்தைப் பொருள் உணர்ந்து தினந்தோறும் சொன்னால், பிறவிச்சுழல் அச்சம் நீங்கும். (சசிதரன் - சந்திரனைத் தலையில் தரித்தவன்); (திரை - கடல்); (இருமை - பெருமை); (பவபயம் - பிறவிச்சுழல் அச்சம்; பவம் - பிறவி);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment