Friday, December 23, 2022

05.34 – பொது - அருள்வான் வேலை விடமுண் மிடற்றான்

05.34 – பொது - அருள்வான் வேலை விடமுண் மிடற்றான்

2015-06-01

பொது - "அருள்வான் வேலை விடமுண் மிடற்றான்"

----------------------------------

(அறுசீர் விருத்தம் - "மா மா மா மா மா காய்" என்ற வாய்பாடு. 1-4-6 சீர்களில் மோனை)

(சம்பந்தர் தேவாரம் - 1.69.1 - "பூவார் மலர்கொண் டடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள்");

(சுந்தரர் தேவாரம் - 7.95.1 - "மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே");


1)

அமரர் குறையி ரக்க அவர்கட் கிரங்கி அறுமுகத்துக்

குமரன் தன்னைப் பயந்தாய் குழையார் காதா குரைகழலார்

கமல பாதா கலையார் கையாய் நெற்றிக் கண்ணுடைய

விமல என்பார்க் கருள்வான் வேலை விடமுண் மிடற்றானே.


"அமரர் குறையிரக்க அவர்கட்கு இரங்கி அறுமுகத்துக் குமரன் தன்னைப் பயந்தாய் - தேவர்கள் வேண்ட, அவர்களுக்கு இரங்கி முருகனை ஈன்றவனே; (குறையிரத்தல் - தன் குறை கூறி வேண்டுதல்);

குழைர் காதா - காதில் குழை அணிந்தவனே;

குரைகழல் ஆர் கமல பாதா - ஒலிக்கின்ற கழலை அணிந்த, தாமரை போன்ற பாதத்தை உடையவனே;

கலைர் கையாய் - மானை ஏந்திய கையினனே;

நெற்றிக்கண்டைய விமல" - நெற்றிக்கண்ணை உடைய விமலனே;

வேலை - 1. உத்தியோகம்; 2. கடல்;

என்பார்க்கு ருள்வான் வேலை விடம் உண் மிடற்றானே - இச்சொற்றொடர்க்கு இருவிதமாகப் பொருள்கொள்ளலாம் - 1) ....என்பார்க்கு, விடம் உண் மிடற்றான் அருள்வான் வேலை (உத்தியோகம்); 2) ....என்பார்க்கு, வேலை (கடல்) விடம் உண் மிடற்றான் அருள்வான்;

(அப்பர் தேவாரம் - 6.52.2 - "வேலை விடமுண்ட மிடற்றினான்காண்");

(சம்பந்தர் தேவாரம் - 3.49.10 - "... நஞ்சுண் கண்டன் நமச்சிவாயவே");


2)

காதார் குழையாய் உழையார் கையாய் நுதலிற் கண்ணுடையாய்

மாதோர் பங்கில் மகிழ்ந்தாய் வணங்கி நின்ற வான்மதியைப்

போதார் முடிமேற் புனைந்தாய் பொடியார் மேனிப் புண்ணியனே

வேதா என்பார்க் கருள்வான் வேலை விடமுண் மிடற்றானே.


காது ஆர் குழையாய் - காதில் குழை அணிந்தவனே;

உழை ஆர் கையாய் - கையில் மானை ஏந்தியவனே;

நுதலிற் கண் உடையாய் - நெற்றிக்கண்ணனே;

வணங்குதல் - தொழுதல்; வளைதல்;

வான்மதி - வான்+மதி / வால்+மதி; (வான் - வானம்; அழகு; வால் - வெண்மை);

போது ஆர் முடி - பூக்களை அணிந்த உச்சி;

பொடி - திருநீறு;


3)

நீரார் சடைமேல் அரவும் நிலவும் புனைந்த நின்மலனே

ஊரா னேறொன் றுடையாய் உமையாள் கணவா உம்பரெலாம்

ஏரார் மலரிட் டிறைஞ்ச இரங்கிப் புரமூன் றெரிசெய்த

வீரா என்பார்க் கருள்வான் வேலை விடமுண் மிடற்றானே.


நீர் ஆர் சடைமேல் அரவும் நிலவும் புனைந்த நின்மலனே - கங்கை பொருந்திய சடைமேல் பாம்பையும் சந்திரனையும் அணிந்த தூயனே;

ஊர் ஆனேறு ஒன்று உடையாய் - இடபவாகனனே; (ஊர்தல் - ஏறுதல்; ஏறிநடத்துதல்) ஆனேறு - இடபம்);

உமையாள் கணவா - உமைகோனே;

உம்பரெலாம் ர் ஆர் மலர் இட்டு இறைஞ்ச இரங்கிப் புரம் மூன்று எரிசெய்த வீரா - தேவரெல்லாம் அழகிய பூக்களைத் தூவி வணங்க, அவர்களுக்கு இரங்கி முப்புரத்தை எரித்த வீரனே; (உம்பர் - தேவர்); (ஏர் - அழகு);


4)

உடையாய்; நுதலில் ஓர்கண் உடையாய் கையில் ஒண்மழுவாட்

படையாய் மலையான் மகளோர் பங்கா கங்கை பாய்கின்ற

சடையாய் இமையோர் தலைவா சாம வேதா தனிவெள்ளை

விடையாய் என்பார்க் கருள்வான் வேலை விடமுண் மிடற்றானே.


உடையாய் - சுவாமியே; உடையவனே; (திருவாசகம் - திருச்சதகம் - 8.5.87 - "தாராய் உடையாய் அடியேற் குன்தா ளிணையன்பு");

நுதல் - நெற்றி;

ஒண் மழுவாட் படையாய் - ஒளிவீசும் மழுவாள் ஆயுதம் உடையவனே;

தனி வெள்ளை விடையாய் - ஒப்பற்ற வெள்ளை இடப ஊர்தி உடையவனே;


5)

வீந்தார் எலும்பைப் பூணும் விகிர்தா; போற்றி விரைமலர்த்தாள்

சார்ந்தார்க் கின்பம் தருவாய் சரமெய் காமன் தன்னாகம்

காய்ந்தாய் சடையிற் கங்கை கரந்தாய் நாகக் கச்சார்த்த

வேந்தே என்பார்க் கருள்வான் வேலை விடமுண் மிடற்றானே.


வீந்தார் எலும்பைப் பூணும் விகிர்தா - இறந்தவர்களாகிய பிரமவிஷ்ணுக்களது எலும்பை (கங்காளம்) அணிந்த விகிர்தனே; (வீதல் - சாதல்);

போற்றி விரைமலர்த்தாள் சார்ந்தார்க்கு இன்பம் தருவாய் - துதித்து மணம் கமழும் தாமரைத் திருவடியைச் சரணடைந்தவர்களுக்கு இன்பம் தருபவனே; (விரை - வாசனை);

சரம் எய் காமன்தன் ஆகம் காய்ந்தாய் - மலர்க்கணை தொடுத்த மன்மதன் உடலை எரித்தவனே;

சடையிற் கங்கை கரந்தாய் - சடையில் கங்கையை ஒளித்தவனே;

நாகக் கச்சு ஆர்த்த வேந்தே - பாம்பைக் கச்சாகக் கட்டிய அரசனே; (ஆர்த்தல் - கட்டுதல்; பூணுதல்); (வேந்து - வேந்தன் - அரசன்);


6)

உரித்தாய் மலைபோல் ஆனை ஒன்றை; அதன்தோல் உடல்மீது

தரித்தாய்; கங்கை தங்கும் சடையாய்; மலைவில் தனையேந்தி

எரித்தாய் எயில்கள் மூன்றை; எழுதா மறையீ ரிருவர்க்கு

விரித்தாய் என்பார்க் கருள்வான் வேலை விடமுண் மிடற்றானே.


எயில் - கோட்டை;

எழுதா மறை ஈரிருவர்க்கு விரித்தாய் - எழுதப்படாத வேதத்தின் பொருளைச் சனகாதியர் நால்வருக்கு உரைத்தவனே;


7)

நூலார் மார்பா பத்து நூறு பெயராய் நுனைமூன்றார்

வேலா திங்கள் விளங்க வேணி வைத்தாய் விடையூரும்

மூலா மூவா முதல்வா முக்கட் பரமா மூவரினும்

மேலாய் என்பார்க் கருள்வான் வேலை விடமுண் மிடற்றானே.


நூல் ஆர் மார்பா - மார்பில் பூணூல் அணிந்தவனே;

பத்து நூறு பெயராய் - ஆயிரம் நாமங்கள் உடையவனே;

நுனை மூன்று ஆர் வேலா - முத்தலைச் சூலத்தை ஏந்தியவனே; (நுனை - நுனி);

திங்கள் விளங்க வேணி வைத்தாய் - சந்திரனை ஒளிவீசும்படி சடையில் அணிந்தவனே; (விளங்குதல் - திகழ்தல்; பிரகாசித்தல்); (வேணி - சடை);

விடைரும் மூலா - இடபவாகனம் உடைய மூலனே; (மூலன் - அநாதிகாரணன்); (அப்பர் தேவாரம் - 6.15.6 - "மூலனாம் மூர்த்தியாம் முன்னே தானாம்" - மூலன் - முதற் பொருளாய் உள்ளவன்);

மூவா முதல்வா - என்றும் மூப்பு அடையாத முதல்வனே;

முக்கட் பரமா - முக்கண் உடைய பரமனே;

மூவரினும் மேலாய் - மும்மூர்த்திகளுக்கும் தலைவனே;


8)

முகில்போல் வண்ணன் கண்ணை முளரி போல முன்னிடவும்

திகிரிப் படையைத் தந்த சிவனே செய்ய திருவிரலின்

உகிரால் இலங்கை வேந்தன் உரத்தை நெரித்தாய் உண்பலிதேர்

விகிர்தா என்பார்க் கருள்வான் வேலை விடமுண் மிடற்றானே.


முகில் போல் வண்ணன் கண்ணை முளரி போல முன்டவும் திகிரிப்படையைத் தந்த சிவனே - மேகம் போன்ற நிறம் உடைய திருமால் தன் கண்ணைத் தோண்டித் தாமரைமலர் போலத் திருவடியில் இட்டு வழிபடு செய்ய, இரங்கிச் சக்கராயுதத்தை ஈந்தருளிய சிவனே; (இது திருவீழிமிழலைத் தலவரலாறு); (முகில் - மேகம்); (முளரி - தாமரை); (திகிரிப்படை - சக்கராயுதம்);

செய்ய - செய்யனே - சிவந்த நிறத்தினனே;

செய்ய திருவிரலின் உகிரால் இலங்கை வேந்தன் உரத்தை நெரித்தாய் - சிவந்த திருப்பாத விரல் நகத்தால் (அதனைக் கயிலைமலைமேல் ஊன்றி) இராவணன் மார்பை நசுக்கியவனே / வலிமையை நசுக்கி அழித்தவனே; (செய்ய - சிவந்த); (உகிர் - நகம்); (உரம் - மார்பு; வலிமை)' ("செய்ய" - என்ற சொல் இப்படி இருமுறை இயைத்துப் பொருள்காணவும் அமைந்தது);

உண்பலிதேர் விகிர்தா - பிச்சையேற்கும் விகிர்தனே;


9)

ஏடார் மலரான் திருமால் எங்கும் நேட எரியானாய்

தோடோர் காதில் திகழும் துணைவா தினமும் துணையடிச்சீர்

பாடாப் பணிவார் அகத்தாய் பார்த்த னுக்குப் படையீந்த

வேடா என்பார்க் கருள்வான் வேலை விடமுண் மிடற்றானே.


ஏடு ஆர் மலரான் திருமால் எங்கும் நேட எரினாய் - இதழ்கள் நிறைந்த தாமரைப்பூவில் உறையும் பிரமனும் திருமாலும் மேலும் கீழும் சென்று தேடுமாறு ஜோதி ஆனவனே; (ஏடு - பூவிதழ்); (நேடுதல் - தேடுதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.1.1 - ""ஏடுடைய மலரான்");

தோடு ஓர் காதில் திகழும் துணைவா - ஒரு காதில் தோடு அணிந்த (அர்த்தநாரீஸ்வரன்) துணைவனே;

தினமும் துணையடிச்-சீர் பாடாப் பணிவார் அகத்தாய் - தினமும் இரு திருவடிகளின் புகழைப் பாடிப் பணிபவர்கள் சிந்தையில் உறைபவனே; (துணை - இரண்டு); (பாடா - 'பாடி' என்ற பொருள் - செய்யா என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம்);

பார்த்தனுக்குப் படை ஈந்த வேடா - அருச்சுனனுக்குப் பாசுபதாஸ்திரம் அருளிய வேடனே;


10)

பொல்லா நெறியைச் சுவர்க்கம் புகுத்தும் என்று பொய்யுரைக்கும்

அல்லார் நெஞ்சக் கையர் அவர்சொல் மதியேல் அன்போடு

மல்லார் தோளெட் டுடைய மைந்தா திரிமும் மதிலெய்த

வில்லாய் என்பார்க் கருள்வான் வேலை விடமுண் மிடற்றானே.


பொல்லா நெறியைச் சுவர்க்கம் புகுத்தும் என்று பொய்ரைக்கும் - பொல்லாத நெறியைச் "சுவர்க்கத்தில் உம்மைப் புகுத்தும்" என்று பொய் சொல்கின்ற;

அல் ஆர் நெஞ்சக் கையர் அவர்சொல் மதியேல் - இருள் நிறைந்த உள்ளத்தை உடைய கீழோர்களது பேச்சை மதிக்கவேண்டா; (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);

அன்போடு, "மல் ஆர் தோள் எட்டு உடைய மைந்தா" - பக்தியோடு, "வலிமை மிக்க எட்டுத் தோள்கள் உடைய வீரனே;

திரி-மும்மதில் எய்த வில்லாய் - திரிந்த முப்புரங்களை எய்து அழித்த வில்லை ஏந்தியவனே; (பிறையாய் = பிறையைச் சூடியவனே என்பது போல், வில்லாய் - வில்லை ஏந்தியவனே); (சம்பந்தர் தேவாரம் - 2.20.8 - "பெரியாய் சிறியாய் பிறையாய் மிடறு கரியாய்");


11)

முத்தே மணியே தேனே மூவா மருந்தே முடிமீது

கொத்தார் கொன்றை புனைந்த கோனே இடபக் கொடியுடையாய்

அத்தா அன்பர் சித்தா ஆனஞ் சாடீ அனைத்திற்கும்

வித்தே என்பார்க் கருள்வான் வேலை விடமுண் மிடற்றானே.


மூவா மருந்தே - அமுதமே;

கொத்து ஆர் கொன்றை - கொன்றைமலர்க்கொத்து;

அத்தன் - தந்தை;

சித்தன் - சித்தத்தில் இருப்பவன்;

ஆன் அஞ்சு ஆடீ - பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்து பொருள்களால் அபிஷேகம் உடையவனே; (ஆனஞ்சு - ஆன் ஐந்து - பஞ்சகவ்வியம்);

வித்து - காரணன் என்னும் பொருளது; (அப்பர் தேவாரம் - 6.57.9 - "காற்றிசைக்குந் திசைக்கெல்லாம் வித்தே போற்றி");


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment