05.30 – கோளிலி
2015-05-02
05.30 - கோளிலி (திருக்கோளிலி - இக்கால வழக்கில் - திருக்குவளை)
------------------
(கலிவிருத்தம் - "தானன தானதனா தானன தானதனா")
(சுந்தரர் தேவாரம் - 7.83.1 - "அந்தியும் நண்பகலும் அஞ்சுப தம்சொல்லி")
1)
நாவினில் நற்பெயரை நாளும் அணிந்தவர்தம்
தீவினை தீர்த்தருளும் சேவகன் எம்பெருமான்
மூவிலை வேலுடையான் மூப்பொடு நோயுமிலான்
கூவிள மாலையினான் கோளிலி மேயவனே.
நாவினில் நற்பெயரை நாளும் அணிந்தவர்தம் தீவினை தீர்த்தருளும் சேவகன் எம்பெருமான் - தங்கள் நாக்கில் திருநாமத்தைத் தினமும் அணிந்தவர்களது பாவத்தைத் தீர்த்து அருளும் வீரம் எம்பெருமான்; (நற்பெயர் - திருநாமம்); (சேவகன் - வீரன்);
மூவிலைவேல் உடையான் - திரிசூலத்தை ஏந்தியவன்;
மூப்பொடு நோயும் இலான் - முதுமை, நோய் இவையெல்லாம் இல்லாதவன்;
கூவிள மாலையினான் - வில்வமாலை அணிந்தவன்; (கூவிளம் - வில்வம்); (தொங்கல் - மாலை); (அப்பர் தேவாரம் - 6.3.1 - "வெறிவிரவு கூவிளநல் தொங்க லானை");
கோளிலி மேயவனே - திருக்கோளிலியில் எழுந்தருளிய ஈசன்;
2)
தேன்மலர் கொண்டுநிதம் சேவடி போற்றிடுவார்
வான்பிணி தீர்த்தருளும் வைத்தியன் எம்பெருமான்
மான்மழு ஏந்தியவன் வாளர வச்சடைமேல்
கூன்பிறை சூடியவன் கோளிலி மேயவனே.
வான்பிணி - பெரும்பிணி - பெரிய தீராத நோய்கள்; (அப்பர் தேவாரம் - 5.77.3 - "பிறப்பு மூப்புப் பெரும்பசி வான்பிணி இறப்பு நீங்கியிங் கின்பம்வந் தெய்திடும்");
வாள்-அரவச்-சடை - கொடிய / ஒளி பொருந்திய பாம்பு இருக்கும் சடை;
கூன்-பிறை - வளைந்த பிறைச்சந்திரன்;
3)
நீள நினைந்துருகும் நேசர்கள் வானுலகம்
ஆள அருள்புரியும் அன்புடை எம்பெருமான்
வேளை விழித்தெரிசெய் வேதியன் அஞ்சடைமேல்
கோளர வம்புனைவான் கோளிலி மேயவனே.
நீள நினைந்து - எப்போதும் எண்ணி; (சுந்தரர் தேவாரம் - 7.20.1 - "நீள நினைந்தடியேன் உனை நித்தலுங் கைதொழுவேன்");
நேசர் - அன்பர்; பக்தர்; (அப்பர் தேவாரம் - 6.65.2 - "நேசன்காண் நேசர்க்கு");
வேள் - மன்மதன்;
அம் சடை - அழகிய சடை;
கோள்-அரவம் - கொல்லும் தன்மையுடைய பாம்பு;
4)
பண்திகழ் பாடலொடு பன்மலர் கொண்டுதொழும்
தொண்டர்கள் தொல்வினைதீர் தூயவன் எம்பெருமான்
அண்டர் தமக்கிரங்கி ஆழ்கடல் நஞ்சணியாக்
கொண்ட மிடற்றொருவன் கோளிலி மேயவனே.
பண்டிகழ் - பண் திகழ் - இசை பொருந்திய;
தொல்வினை - பழவினை;
அண்டர் - தேவர்கள்;
நஞ்சு அணியாக் கொண்ட மிடற்று ஒருவன் - விடத்தை அணியாகக் கொண்ட கண்டத்தை உடைய ஒப்பற்றவன்; (அணியா - அணியாக);
5)
மண்டிய அன்பினொடு வார்கழல் ஏத்திடுவார்
பண்டை வினைத்தொகுதி பாற்றி நலந்தருவான்
வண்டமர் பூங்குழலாள் வாமம் மகிழ்ந்தபரன்
கொண்டல் மிடற்றொருவன் கோளிலி மேயவனே.
* வண்டமர் பூங்குழலி - இத்தலத்து இறைவி திருநாமம்;
மண்டுதல் - மிகுதல்;
பண்டை வினைத்தொகுதி - பழைய வினைக்கூட்டம்; (திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - 8.6.6 - "வினையின் தொகுதி ஒறுத்தெனை ஆண்டுகொள்");
பாற்றுதல் - அழித்தல்; நீக்குதல்;
வண்டு அமர் பூங்குழலாள் - வண்டுகள் மொய்த்திடும் கூந்தலையுடைய உமையம்மை;
கொண்டல் மிடற்று ஒருவன் - மேகம் போன்ற கண்டத்தை உடைய ஒப்பற்றவன்;
6)
தளிபல கண்டுதொழும் தன்னடி யார்க்கெளியன்
பிளிறு களிற்றுரிவை போர்த்த பெரும்பெருமான்
ஒளிர்மதி யோடுரகம் ஊர்ந்திடும் உச்சியினான்
குளிர்பொழில் சூழ்ந்தழகார் கோளிலி மேயவனே.
தளி - கோயில்;
பிளிறு களிற்று உரிவை - பிளிறிய யானையின் தோல்;
பெரும்பெருமான் - மஹாதேவன்;
(திருவாசகம் - அடைக்கலப் பத்து - 8.24.3 - "பெரும்பெருமான் என் பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத் தரும் பெருமான்");
ஒளிர்மதி - ஒளிர்கின்ற திங்கள்;
உரகம் - பாம்பு;
ஊர்தல் - நகர்தல்; அடர்தல்;
உச்சி - தலை;
7)
பாட்டுக ளாற்பரவும் பத்தர்கள் வல்வினையை
ஓட்டி அருள்புரியும் உத்தமன் நச்சரவன்
நாட்டமொர் மூன்றுடைய நாயகன் ஓர்கணையால்
கோட்டைகள் நீறுசெய்தான் கோளிலி மேயவனே.
பாட்டுகளால் பரவும் பத்தர்கள் வல்வினையை ஓட்டி அருள்புரியும் உத்தமன் - பாட்டுகள் பாடித் துதிக்கும் பக்தர்களது வலிய வினையைத் தீர்த்து அருளும் பெருமான்; (பரவுதல் - புகழ்தல்; துதித்தல்); (ஓட்டுதல் - நீங்கச்செய்தல்; அழித்தல்); (சுந்தரர் தேவாரம் - 7.91.1 - பாட்டும் பாடிப் பரவித் திரிவார் ஈட்டும் வினைகள் தீர்ப்பார்);
நச்சரவன் - விடப்பாம்பை அணிந்தவன்;
நாட்டம் - கண்;
ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்;
கோட்டைகள் நீறுசெய்தான் - முப்புரங்களை எரித்துச் சாம்பல் ஆக்கியவன்;
8)
அன்று மலைக்குமகள் அஞ்சிட மாகயிலைக்
குன்றெறி மிண்டனது கொட்டம் அழிக்கவிரல்
ஒன்றினை ஊன்றியவன் ஒண்பிறை மத்தமலர்
கொன்றை அணிந்தபிரான் கோளிலி மேயவனே.
அன்று மலைக்குமகள் அஞ்சிட மா-கயிலைக் குன்று எறி மிண்டனது கொட்டம் அழிக்க விரல் ஒன்றினை ஊன்றியவன் - முன்பு உமை அஞ்சும்படி கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற அறிவிலி இராவணனது செருக்கை அழிக்கத் திருப்பாத விரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கியவன்; (மலைக்குமகள் - பார்வதி); (கயிலைக்குன்று - கயிலைமலை); (மிண்டன் - கல்நெஞ்சன்; திண்ணியன்; அறிவிலி - இங்கே, இராவணன்); (கொட்டம் - செருக்கு; சேஷ்டை);
ஒண்-பிறை மத்தமலர் கொன்றை அணிந்த பிரான் - ஒளியுடைய பிறைச்சந்திரன், ஊமத்தமலர், கொன்றை இவற்றையெல்லாம் சூடிய பெருமான்; (மத்தமலர் - ஊமத்தமலர்);
கோளிலி மேயவனே - திருக்கோளிலியில் எழுந்தருளிய ஈசன்;
9)
உம்பரில் ஏறியயன் உச்சியை நண்ணகிலான்
அம்புய நேத்திரனும் அண்ண கிலாவொளியான்
நம்பிய வர்க்கெளியன் நான்மறை ஓதியவன்
கொம்பனை யாள்கொழுநன் கோளிலி மேயவனே.
உம்பரில் ஏறி அயன் உச்சியை நண்ணகிலான் - வானில் உயர்ந்து சென்றும் பிரமனால் முடியைக் காண ஒண்ணாதவன்; (உம்பர் - ஆகாயம்); (நண்ணுதல் - கிட்டுதல்); (கில் - ஆற்றலுணர்த்தும் இடைநிலை);
அம்புய நேத்திரனும் அண்ணகிலா ஒளியான் - தாமரைக்கண்ணனான திருமாலால் அடைய ஒண்ணாத ஒளிவடிவினன்; (அம்புயம் - அம்புஜம் - தாமரை); (நேத்திரம் - கண்); (அண்ணுதல் - கிட்டுதல்); (ஒளியான் - ஜோதி வடிவினன்);
ஒளியான், நம்பியவர்க்கு எளியன் - தன்னை ஒளித்துக்கொள்ளமட்டான், விரும்புகின்ற பக்தர்களால் எளிதில் அடையப்படுபவன்; ("ஒளியான்" என்பதை இடைநிலைத் தீவகமாக முன்னும் பின்னும் கூட்டி இப்படிப் பொருள்கொள்ளல் ஆம்); (ஒளியான் - ஒளித்துக்கொள்ளாதவன்);
நான்மறை ஓதியவன் - நால்வேதங்களைப் பாடியருளியவன்;
கொம்பனையாள் கொழுநன் - பூங்கொம்பு போன்ற அழகிய உமைக்குக் கணவன்;
கோளிலி மேயவனே - திருக்கோளிலியில் எழுந்தருளிய ஈசன்;
10)
பொக்கம் உரைத்துழலும் புல்லர்சொல் விட்டொழிமின்
அக்கரம் அஞ்சுசொலும் அன்பர் அகத்துறைவான்
முக்கணன் அக்கணியும் மூர்த்தி இருஞ்சடைமேல்
கொக்கிற கும்புனைவான் கோளிலி மேயவனே.
பொக்கம் உரைத்துழலும் புல்லர்சொல் விட்டொழிமின் - பொய்களே பேசித் திரியும் கீழோர் பேச்சை விட்டு விலகுங்கள்; (பொக்கம் - பொய்; வஞ்சகம்); (ஒழிமின் - நீங்குங்கள்);
அக்கரம் அஞ்சு சொலும் அன்பர் அகத்து உறைவான் - திருவைநந்தெழுத்தை ஓதும் பக்தர்கள் நெஞ்சில் உறைகின்றவன்; (அக்கரம் அஞ்சு - பஞ்சாட்சரம் - திருவைந்தெழுத்து); (அகம் - நெஞ்சு);
முக்கணன் அக்கு அணியும் மூர்த்தி - நெற்றிக்கண்ணன், எலும்பை அணிபவன்; (அக்கு - எலும்பு);
இருஞ்சடைமேல் கொக்கிறகும் புனைவான் - கொக்கு வடிவில் நின்ற குரண்டாசுரனை அழித்து அவன் இறகினைப் பெரிய சடையில் சூடியவன்; கொக்கிறகு என்று ஒரு மலரும் உண்டு; (இரும் சடை - பெரிய சடை);
கோளிலி மேயவனே - திருக்கோளிலியில் எழுந்தருளிய ஈசன்;
11)
மட்டவிழ் மாமலர்கள் இட்டு வணங்கியவர்
இட்டம் எலாமருளும் எந்தை திரிந்தபுரம்
சுட்ட வரைச்சிலையன் தோற்பறை பூதகணம்
கொட்ட நடம்புரிவான் கோளிலி மேயவனே.
மட்டு அவிழ் மாமலர்கள் இட்டு வணங்கியவர் இட்டம் எலாம் அருளும் எந்தை - வாசமலர்களைச் திருவடியில் இட்டு வழிபடும் பக்தர்கள் விரும்பிய வரங்களையெல்லாம் அருளும் எம் தந்தை; (மட்டு - தேன்; வாசனை); (அவிழ்தல் - சொட்டுதல்; மலர்தல்);
திரிந்த புரம் சுட்ட வரைச்சிலையன் - எங்கும் பறந்து அலைந்த முப்புரங்களை ஓரம்பால் எய்து எரித்த மேருமலைவில்லை ஏந்தியவன்; (வரை- மலை); (சிலை - வில்);
தோற்பறை பூதகணம் கொட்ட நடம் புரிவான் - தோலால் ஆன பறை முதலிய வாத்தியங்களைப் பூதகணங்கள் முழக்கக் கூத்தாடுபவன்; (திருப்புகழ் - திருச்சிராப்பள்ளி - "அங்கை நீட்டி.. ..தோற்பறை கொட்டக் கூளிகள்...."); (கொட்டுதல் - முழக்குதல்);
கோளிலி மேயவனே - திருக்கோளிலியில் எழுந்தருளிய ஈசன்;
பிற்குறிப்பு:
1. யாப்புக் குறிப்பு - கலிவிருத்தம் - "தானன தானதனா தானன தானதனா" என்ர சந்தம்;
அடியினுள் வெண்டளை பயிலும்.
தானன வருமிடத்தில் தான வரலாம்; அப்படி வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.
தானதனா என்ற இடம் ஒரோவழி தானானா என்றும் வரலாம்.
அரையடி முடிவில் வகையுளி வரக்கூடாது.
வி. சுப்பிரமணியன்
-------------- --------------
No comments:
Post a Comment