Tuesday, December 27, 2022

05.47 – கைச்சினம் - (கச்சனம்)

05.47 – கைச்சினம் - (கச்சனம்)

2015-08-03

கைச்சினம் - (இக்காலத்தில் - கச்சனம்)

(திருவாரூர் திருத்துறைப்பூண்டி இடையே உள்ள தலம்)

------------------

(வெண்டளையால் அமைந்த கட்டளைக் கலிவிருத்தம். கீழே பிற்குறிப்பைக் காண்க)

(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.18.1 - "ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை")

(திருமந்திரம் - 10.9.8.2 - "சிவசிவ என்கிலர்");


1)

முயலகன் மேல்திருத் தாள்வைத்த நாதன்

மயலறு நாலு மறைவிரி போதன்

செயல்களொர் ஐந்தினன் செவ்வழல் வண்ணன்

கயலுகள் செய்யணி கைச்சினத் தானே.


முயலகன் மேல் திருத்தாள் வைத்த நாதன் - (அப்பர் தேவாரம் - 6.90.9 - "தருக்கழிய முயலகன்மேல் தாள்வைத் தானை");

மயல் அறு நாலு மறை விரி போதன் - அறியாமையைப் போக்கும் நான்கு வேதங்களை உப்தேசித்த குரு (தட்சிணாமூர்த்தி);

செயல்கள் ஒர் ஐந்தினன் - பஞ்சகிருத்தியம் செய்பவன்; (பஞ்சகிருத்தியம் - படைத்தல், காத்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்கள்);

செவ்வழல் வண்ணன் - செந்தழல் போன்ற செம்மேனியன்;

கயல் உகள் செய் அணி கைச்சினத்தானே - கயல்மீன்கள் பாயும் வயல் சூழ்ந்த திருக்கைச்சினத்தில் உறையும் ஈசன்;


2)

செவிகளில் தோடு குழைதிகழ் தேவன்

அவிர்சடைக் கங்கை அடைத்தருள் அண்ணல்

புவியினர் விண்ணவர் போற்றும் புராணன்

கவினுறு காவணி கைச்சினத் தானே.


செவிகளில் தோடு குழை திகழ் தேவன் - ஒரு காதில் தோடும் ஒரு காதில் குழையும் அணிந்த கடவுள்;

அவிர்சடைக் கங்கை அடைத்தருள் அண்ணல் - ஒளிவீசும் சடையில் கங்கையை அடைத்து அருளிய பெருமான்; (அவிர்தல் - பிரகாசித்தல்);

புவியினர் விண்ணவர் போற்றும் புராணன் - மனிதரும் தேவரும் தொழும் பழையவன்;

கவின் உறு கா அணி கைச்சினத்தானே - அழகிய சோலைகள் சூழ்ந்த திருக்கைச்சினத்தில் உறையும் ஈசன்; (கவின் - அழகு); (கா - சோலை);


3)

குனிந்தவெண் திங்களான் கொல்புலித் தோலன்

முனிந்துவெங் கூற்றுதை முக்கணன் நாகம்

புனைந்தவன் போற்றிப் புதுமலர் தூவிற்

கனிந்தருள் செய்பவன் கைச்சினத் தானே.


குனிந்த வெண் திங்களான் - வளைந்த வெண்பிறையை அணிந்தவன்; (அப்பர் தேவாரம் - 6.15.7 - "திருமுடித் திங்க ளானாம்");

முனிந்து - சினந்து; கோபித்து;

வெங்கூற்று உதை காலன் - கொடிய நமனை உதைத்தவன்;


4)

படிமிசை வீழ்ந்து பணிந்தெழு வார்க்குச்

செடியுடை வல்வினை தீர்த்தருள் செய்வான்

வடியுடைச் சூலம் மழுப்படை ஏந்தி

கடிமலர் ஆர்பொழிற் கைச்சினத் தானே.


படிமிசை - நிலத்தின்மேல்;

செடியுடை வல்வினை - கீழ்மையை உடைய வல்வினை; (அப்பர் தேவாரம் - 6.61.2 - "செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பாய் என்றும்");

வடி உடைச் சூலம் மழுப்படை ஏந்தி - கூர்மை உடைய சூலமும் மழுவாயுதமும் ஏந்துபவன்; (வடி - கூர்மை);

கடி மலர் ஆர் பொழில் - வாசமலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த;


5)

காமனை நீறுசெய் கண்ணமர் நெற்றியன்

தூமறை நாவன் சுரர்தொழு நாயகன்

மாமலர் இன்மது மாந்திய வண்டினம்

காமரம் செய்பொழிற் கைச்சினத் தானே.


காமனை நீறு செய் கண் அமர் நெற்றியன் - மன்மதனைச் சாம்பலாக்கிய நெற்றிக்கண்ணன்;

தூமறை நாவன் - தூய வேதங்களை ஓதியவன்;

சுரர் தொழு நாயகன் - தேவர்கள் வணங்கும் தலைவன்;

மாமலர் இன்மது மாந்திய வண்டினம் காமரம் செய் பொழிற் கைச்சினத்தானே - சிறந்த பூக்களில் இனிய தேனை உண்ட வண்டுகள் இசை பாடும் சோலைகள் சூழ்ந்த திருக்கைச்சினத்தில் உறையும் ஈசன்; (மாந்துதல் - உண்ணுதல்); (காமரம் - இசை; சீகாமரம் என்ற பண்ணின் பெயர் முதற்குறை விகாரம்);


6)

தண்மதி கூவிளம் தாங்கு சடையினன்

விண்மகிழ் வெய்த விடத்தினை உண்டவன்

உண்மையில் உள்ளவன் பெண்மயில் பங்கினன்

கண்மலர் ஆர்பொழிற் கைச்சினத் தானே.


தண்மதி - குளிர்ந்த சந்திரன்;

கூவிளம் - வில்வம்;

விண் - தேவர்கள்;

பெண்மயில் பங்கினன் - பெண்மயில் போன்ற உமையை ஒரு பங்காக உடையவன்;

கள் மலர் ஆர் பொழில் - தேன் நிறைந்த பூக்கள் நிறைந்த சோலை; (கண்மலர் = கள் + மலர்);


7)

மெய்யிற் பொடியினைப் பூசி வினைகெடப்

பொய்யில் மனத்தொடு பொன்னடி போற்றுதல்

செய்யில் அருளரன் செஞ்சடைக் கொன்றையன்

கையில் மழுவினன் கைச்சினத் தானே.


பொடி - திருநீறு;

பொய் இல் மனத்தொடு - பொய்ம்மை இல்லாத மனத்தோடு;

பொன்னடி போற்றுதல் செய்யில் அருள் அரன் - பொன்னடியைப் போற்றினால் அருளும் ஹரன்;

செஞ்சடைக் கொன்றையன் - செஞ்சடையில் கொன்றையை அணிந்தவன்;


8)

அருவரை பேர்த்த அரக்கனார் வாய்கள்

ஒருபதும் வீரிட ஓர்விரல் ஊன்றித்

திருவருள் செய்த சிவனெரு தேறி

கருமணி கண்டத்தன் கைச்சினத் தானே.


அருவரை பேர்த்த அரக்கனார் வாய்கள் ஒருபதும் வீரிட ஓர்விரல் ஊன்றித் - அரிய மலையான கயிலையைப் பெயர்த்த இராவணனுடைய பத்து வாய்களும் வீரிட்டுக் கத்தி அழும்படி திருவடி விரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கி;

திருவருள் செய்த சிவன் - (பின் அவன் பாடிய இசையைக் கேட்டு இரங்கி) அருள்புரிந்த சிவபெருமான்;

எருது ஏறி - இடப வாகனன்;

கருமணி கண்டத்தன் - கரிய மணியைக் கண்டத்தில் உடையவன்;


9)

மாலயன் காணற் கரியவன் வார்சடை

மேலணி கொன்றையன் வெண்பொடி முப்புரி

நூலணி மார்பினன் நோயிலன் மூப்பிலன்

காலனைக் காய்ந்தவன் கைச்சினத் தானே.


மால் அயன் காணற்கு அரியவன் - திருமால் பிரமனால் காண ஒண்ணாதவன்;

வார்சடைமேல் அணி கொன்றையன் - நீள்சடைமேல் அழகிய கொன்றையை அணிந்தவன்;

வெண் பொடி முப்புரி நூல் அணி மார்பினன் - திருநீறும் பூணூலும் அணிந்த மார்பை உடையவன்;

நோய் இலன் மூப்பு இலன் - நோயும் மூப்பும் இல்லாதவன்;

காலனைக் காய்ந்தவன் கைச்சினத்தானே - கூற்றுவனை உதைத்தவன் திருக்கைச்சினத்தில் உறையும் ஈசன்;


10)

கண்ணிலர் காட்டு வழியைக் கருதிடேல்

நண்ணிய அன்பர்க்கு நல்லவன் நம்சிவன்

எண்ணில் பெயரினன் எண்ணில் வடிவினன்

கண்ணில் நெருப்பினன் கைச்சினத் தானே.


கண்ணிலர் காட்டு வழியைக் கருதிடேல் - குருடர்கள் காட்டுகின்ற நெறியை மதிக்கவேண்டா;

நண்ணிய அன்பர்க்கு நல்லவன் நம் சிவன் - சரண் புகுந்த பக்தர்களுக்கு நன்மை செய்பவன் நம் சிவபெருமான்;

எண் இல் பெயரினன் எண் இல் வடிவினன் - எண்ணற்ற நாமங்களும் எண்ணற்ற வடிவங்களும் உடையவன்;

கண்ணில் நெருப்பினன் - நெற்றிக்கண்ணில் தீயை உடையவன்;


11)

பண்திகழ் பாடல்கள் பாடிப் பரவிடில்

விண்திகழ் விப்பவன் வெள்விடை ஊர்தியன்

பெண்திகழ் மேனியன் பின்னு சடையினன்

கண்திகழ் நெற்றியன் கைச்சினத் தானே.


பண் திகழ் பாடல்கள் பாடிப் பரவிடில் - தேவாரம் முதலிய பாமாலைகளைப் பாடிப் துதித்தால்;

விண் திகழ்விப்பவன் - விண்ணில் திகழ வைப்பவன் - வானுலக வாழ்வை அளிப்பவன்;

வெள்விடை ஊர்தியன் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவன்;

பெண் திகழ் மேனியன் - உமைபங்கன்;

பின்னு சடையினன் - முறுக்கிய சடையை உடையவன்;

கண் திகழ் நெற்றியன் - நெற்றிக்கண்ணன்;

கைச்சினத்தானே - திருக்கைச்சினத்தில் உறையும் ஈசன்;


பிற்குறிப்புகள்:

1) யாப்புக் குறிப்பு -

  • வெண்டளையால் அமைந்த கட்டளைக் கலிவிருத்தம்.

  • அடிகள் இடையேயும் வெண்டளை பயிலும்.

  • "விளங்காய்"ச் சீர்கள் இல்லாத அமைப்பு;

  • கட்டளை அடிகள். அடிக்குப் 12 எழுத்துகள். அடிகள் நேரசையில் தொடங்கினால் ஈற்றடியில் 11 எழுத்துகள்

  • திருமந்திரம் இவ்வகை யாப்பு.


2) இவ்வகை அமைப்பில்: சில உதாரணங்கள்:

  • திருநாவுக்கரசர் தேவாரம் - 4.18.1 - "ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை"

  • திருமந்திரம் - 10.9.8.2 - "சிவசிவ என்கிலர்";

  • திருமந்திரம் - 10.1.19.2 - "யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை"


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


No comments:

Post a Comment