Saturday, January 30, 2016

02.67 – திருமழபாடி

02.67 – திருமழபாடி



2012-12-04
திருமழபாடி
------------------
(கலித்துறை - "தானன தான தானன தான தனதான" என்ற சந்தம்)
(சம்பந்தர் தேவாரம் - 1.98.1 - "நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு")



1)
ஆவினில் ஏறும் ஐயவென் றும்பர் அடிபோற்றிப்
பூவிட நஞ்சைப் போனகம் செய்து புரந்தானை
வாவிக ளோடு வார்பொழில் சூழ்ந்த மழபாடி
மேவிய வேந்தை மேவிவ ணங்க வினைவீடே.



ஆவினில் ஏறும் ஐயன்று - "இடப வாகனம் உடைய தலைவனே" என்று;
உம்பர் - தேவர்;
போனகம் செய்தல் - உண்ணுதல்;
புரத்தல் - காத்தல்;
வாவி - நீர்நிலை;
வார்பொழில் - உயர்ந்த சோலை;
மேவுதல் - 1) உறைதல்; 2) விரும்புதல்;
வேந்து - அரசன்;
வினை வீடு - வினை நீக்கம்;



2)
பெண்புடை யாகும் பெற்றியன் ஓர்வெண் பிறையோடு
தண்புனல் தன்னைத் தன்முடி வைத்த சடையண்ணல்
வண்புனல் பாயும் வயல்புடை சூழ்ந்த மழபாடிக்
கண்புனை நெற்றிக் கடவுளைப் போற்றல் கருமம்மே.



புடை - பக்கம்;
பெற்றி - தன்மை; பெருமை;
தண் புனல் - குளிர்ந்த நீர் - கங்கை;
வண் - வளப்பமான;
கண் புனை நெற்றிக் கடவுளை - நெற்றிக்கண்ணனை;
கருமம் - நாம் செய்தற்குரிய செயல்;
கருமம்மே - கருமமே - மகர ஒற்று விரித்தல் விகாரம்.



3)
முந்தலை ஊர்கள் மூன்றழல் மூண்டு முடிவெய்த
வெந்தலை அம்பை விட்டவன் வெள்ளை விடையேறி
வந்தலை மோதும் கொள்ளிடப் பாங்கர் மழபாடி
தந்தலை தாழ்த்தித் தொழுபவர் இங்குத் தவியாரே.



பதம் பிரித்து:
முந்து, அலை ஊர்கள் மூன்று அழல் மூண்டு முடிவு எய்த
வெம் தலை அம்பை விட்டவன்; வெள்ளை விடை ஏறி;
வந்து அலை மோதும் கொள்ளிடப் பாங்கர் மழபாடி
தம் தலை தாழ்த்தித் தொழுபவர் இங்குத் தவியாரே.


முந்து - முன்பு;
அலை ஊர்கள் மூன்று - திரியும் புரங்கள் மூன்று - முப்புரங்கள்;
வெம் தலை அம்பு - சுடுகின்ற நுனியை உடைய கணை;
விடுதல் - பிரயோகித்தல்;
பாங்கர் - பக்கம்;


முன்பு, திரியும் முப்புரங்களும் தீப்பற்றி அழியும்படி முனையில் தீயை உடைய கணையைத் தொடுத்தவன்; வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவன்; அலைமோதும் கொள்ளிட ஆற்றின் பக்கத்தில் உள்ள திருமழபாடியைத் தங்கள் தலையைத் தாழ்த்தி வணங்கும் பக்தர்கள் இவ்வுலகில் துன்பம் அடையமாட்டார்.



4)
கானலர் ஏவும் காமனைக் காய்ந்த கனற்கண்ணன்
தேனலர்க் கொன்றை திங்களும் சென்னித் திகழீசன்
வானம ளாவும் வண்பொழில் சூழ்ந்த மழபாடி
ஞானனை ஏத்த நலிவினை யான நணுகாவே.



கான் - வாசனை;
அலர் - பூ;
வானம் அளாவும் வண்பொழில் - வானத்தைத் தீண்டும் வளப்பமான சோலைகள்;
ஞானன் - ஞானஸ்வரூபி;
நலித்தல் - துன்புறுத்துதல் (To afflict, cause distress);
நலி வினை - நலிக்கும் வினை;
நணுகுதல் - நெருங்குதல் (To approach, draw nigh, arrive at);



5)
திங்களும் பாம்பும் திருமுடி மீது திகழ்பெம்மான்
கங்குலில் ஆடி கறைமலி கண்டன் கணநாதன்
மங்கையைப் பாகம் வைத்தும கிழ்ந்த மழபாடிச்
சங்கரன் தாளைச் சார்பவர்க் கின்பம் சதமாமே.



கங்குல் - இரவு; இருள்;
கங்குலில் ஆடி - நள்ளிரவில் ஆடுபவன்;
கறை மலி கண்டன் - நீலகண்டன்;
கணநாதன் - பூதகணங்கள் தலைவன்;
சதம் - நித்தியமானது (That which is perpetual, eternal);



6)
தூமலர் தூவித் தொழுமடி யாரின் துயர்நீக்கிச்
சேமம ளித்துக் காலனைச் செற்ற திருப்பாதன்
மாமறை நாவன் மாதொரு பாகன் மழபாடிக்
கோமக னாரின் நாமமு ரைக்கக் குறைபோமே.



தூ மலர் - தூய மலர்;
சேமம் - காவல்; நல்வாழ்வு;
செற்ற - அழித்த;
கோமகன் - அரசன்; தலைவன்;
இலக்கணக் குறிப்பு: பாதன், நாவன், பாகன், என்று சொல்லிப் பின்னர்க் கோமகனார் என்றது ஒருமை பன்மை மயக்கம்.
"கோமகன் நாரின் நாமம் உரைக்க" என்றும் பிரித்துப் பொருள்கொள்ளலாம் - 'தலைவன் நாமத்தை அன்பினால் உரைக்க'. (நார் - அன்பு);



7)
நெய்யணி சூலன் நிழல்மழு வாளன் நிலவோடு
பையர வூரும் படர்சடை அண்ணல் பசுவேறி
மையணி கண்டன் மான்விழி பங்கன் மழபாடிச்
செய்யவன் நாமம் சிந்தைசெய் வார்க்குத் திருவாமே.



நெய் அணி - நெய் பூசப்பெற்ற;
நிழல் - ஒளி;
பை அரவு ஊரும் - படம் உடைய நாகப்பாம்பு ஊருகின்ற;
பசு - எருது; (சம்பந்தர் தேவாரம் - 2.85.9 - "பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்");
மை - கருநிறம்;
செய்யவன் - செம்மேனியன்;



8)
ஆட்டிய வெற்பின் அடியில ரக்கன் அழவூன்றிப்
பாட்டினைக் கேட்டுப் படையருள் பண்பன் பரமேட்டி
வாட்டடங் கண்ணி பங்கமர் ஈசன் மழபாடி
நாட்டியம் ஆடி அடிதொழு தேத்த நலமாமே.



வெற்பு - மலை;
படை - ஆயுதம்; இங்கே, வாள்;
வாட்டடங்கண்ணி - வாள் தடம் கண்ணி - ஒளிவீசும் அகன்ற கண்கள் உடைய பார்வதி;
அமர்தல் - விரும்புதல்;
நாட்டியம் ஆடி - கூத்தன்;
நாட்டியம் ஆடி அடிதொழு தேத்த நலமாமே - ஆடிப் பாடி அடிதொழுதல் - (5.5.4 - "ஆடிப் பாடியண் ணாமலை கைதொழ ஓடிப் போகும்நம் மேலை வினைகளே.");


9)
மண்டனை உண்ட மாலொடு வேதன் மயலாலே
கண்டறி யாத கனலுரு வானைக் களியோடு
வண்டுகள் பாடும் வண்பொழில் சூழ்ந்த மழபாடி
அண்டனை அண்டும் அன்பரை அல்லல் அணுகாவே.



மண்டனை - மண் தனை - மண்ணை; பூமியை;
(அப்பர் தேவாரம் - 4.23.10 -
"மண்ணுண்ட மால வனு மலர்மிசை மன்னி னானும்
விண்ணுண்ட திருவு ருவம் விரும்பினார் காண மாட்டார்");
வேதன் - பிரமன்;
மயல் - மயக்கம் (Confusion; bewilderment; delusion);
(சம்பந்தர் தேவாரம் - 1.35.9 - "மருள்செய் திருவர் மயலாக அருள்செய் தவனா ரழலாகி..." - இருவர் மருள்செய்து மயலாக - மாலும் அயனும் அஞ்ஞானத்தால் மயங்க);
அண்டன் - உலகங்களை உடையவன்; கடவுள் (God, as Lord of the universe);
அண்டுதல் - சரண்புகுதல்; கிட்டுதல்;


மண்ணை உண்ட திருமாலும் பிரமனும் மயக்கத்தால் கண்டறிய ஒண்ணாத சோதியை, மகிழ்வோடு வண்டுகள் ரீங்காரம் செய்யும் வளம் மிக்க சோலைகள் சூழந்த மழபாடியில் உறையும் சர்வலோக நாயகனைச் சரணடைந்த பக்தர்களை அல்லல்கள் நெருங்கமாட்டா.



10)
அஞ்செழுத் தோத அஞ்சிடும் நெஞ்சர் அவர்கூறும்
வஞ்சனை வார்த்தை வலையினை நீங்கி வருவீரே
மஞ்சடை சோலை வயல்புடை சூழும் மழபாடி
நஞ்சடை கண்டன் நாமமு ரைக்க நலமாமே.



அஞ்செழுத்து ஓத அஞ்சிடும் - நமச்சிவாய என்ற திருவைந்தெழுத்தைச் சொல்ல மாட்டாத;
மஞ்சு அடை சோலை - வானளாவும் பொழில்;
நஞ்சு அடை கண்டன் - நீலகண்டன்;



11)
கண்ணிடந் திட்டுக் கைதொழு தேத்து கடல்வண்ணன்
எண்ணிய ஆழி இனிதருள் செய்த எரிவண்ணன்
மண்ணொடு விண்ணும் வந்தனை செய்யும் மழபாடி
அண்ணலை வாழ்த்தும் அடியவர் இன்பம் அடைவாரே.



இடத்தல் - தோண்டுதல்;
கடல்வண்ணன் - திருமால்;
ஆழி - சக்கரம்;
கண் இடந்து இட்டுக் கைதொழுது ஏத்து கடல்வண்ணன் எண்ணிய ஆழி - ஆயிரம் தாமரைப்பூக்களில் ஒரு பூக்குறையத் தன் மலர்க்கண்ணையே பூவாகத் தோண்டி எடுத்துத் திருவடியில் இட்டுப் பூசித்த விஷ்ணுவுக்கு அவன் விரும்பிய சக்கராயுதத்தை;
எரிவண்ணன் - தீவண்ணன் - செம்மேனியன்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு:
கலித்துறை - "தானன தான தானன தான தனதான" என்ற சந்தம்;
தானன என்ற இடத்தில் தனதன என்றும் வரலாம்;

2) சம்பந்தர் தேவாரம் - 1.98.1 -
நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு
ன்றுடையானை மையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளம் குளிரும்மே.


3) திருமழபாடி - வயிரத்தூண் நாதர் / வஜ்ஜிரஸ்தம்பேஸ்வரர் / வைத்யநாதர் - கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=438

-------------- --------------

No comments:

Post a Comment