2018-12-25
P.462 - இடையாறு
-------------------------
(கலிவிருத்தம் - மா மாங்காய் மா மாங்காய் - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - "கற்றாங் கெரியோம்பி")
1)
புனிதன் கழலும்பர் போற்ற ஒருகுன்றைக்
குனிவில் எனவேந்திக் கூடார் புரமெய்தான்
தனியன் உமைபங்கன் தாளை மறவாதார்க்
கினியன் உறைகோயில் எழில்கொள் இடையாறே.
புனிதன் - தூயவன்;
கழல் உம்பர் போற்ற ஒரு குன்றைக் குனி-வில் என ஏந்திக் கூடார்-புரம் எய்தான் - திருவடியைத் தேவர்கள் வழிபட, அவர்களுக்கு இரங்கி ஒரு மலையை வளைக்கின்ற வில்லாக ஏந்திப் பகைவர்களது முப்புரங்களை எய்தவன்; (உம்பர் - தேவர்கள்); (குனித்தல் - வளைத்தல்); (கூடார் - பகைவர்);
தனியன், உமைபங்கன் - ஒப்பற்றவன், உமையை ஒரு பங்கில் உடையவன்;
தாளை மறவாதார்க்கு இனியன் உறை-கோயில் எழில்கொள் இடையாறே - தன் திருவடியை எப்பொழுதும் நினைந்து போற்றும் பக்தர்களுக்கு இனிமை பயக்கின்ற சிவபெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்;
2)
மறையின் பொருள்நால்வர் மகிழ விரிசெய்தான்
அறையும் கடல்நஞ்சை ஆர்ந்த அருளாளன்
பறையின் ஒலியோங்கப் படுகா னிடையாடும்
இறைவன் உறைகோயில் எழில்கொள் இடையாறே.
மறையின் பொருள் நால்வர் மகிழ விரி-செய்தான் - வேதப்பொருளைச் சனகாதியர் நால்வருக்கு உபதேசித்தவன்;
அறையும் கடல் நஞ்சை ஆர்ந்த அருளாளன் - ஒலிக்கின்ற கடலில் எழுந்த விடத்தை உண்ட (/உண்டு அணிந்த) அருளாளன்; (ஆர்தல் - உண்தல்; அணிதல்);
பறையின் ஒலி ஓங்கப் படுகானிடை ஆடும் - பறையின் ஓசை பெருகச் சுடுகாட்டில் ஆடுகின்ற;
இறைவன் உறை-கோயில் எழில்கொள் இடையாறே - சிவபெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்;
3)
அம்மால் தொழுதேத்த ஆழி அருள்செய்தான்
கைம்மா உரிபோர்த்தான் கசியும் அடியார்தம்
வெம்மா வினையெல்லாம் வீட்டி நலம்நல்கும்
எம்மான் உறைகோயில் எழில்கொள் இடையாறே.
அம்-மால் தொழுதேத்த ஆழி அருள்செய்தான் - விஷ்ணு செய்த வழிபாட்டிற்கு மகிழ்ந்து சக்கராயுதத்தை ஈந்தவன்; (அ - பண்டறிசுட்டு); (ஆழி - சக்கரம்);
கைம்மா உரி போர்த்தான் - யானைத்தோலைப் போர்த்தவன்; (கைம்மா - யானை); (உரி - தோல்);
கசியும் அடியார்தம் வெம்-மா-வினையெல்லாம் வீட்டி நலம் நல்கும் - உள்ளம் கசிந்து வழிபடும் பக்தர்களது கொடிய பெரிய வினைகளையெல்லாம் அழித்து நன்மை புரிகின்ற; (வீட்டுதல் - அழித்தல்);
எம்மான் உறை-கோயில் எழில்கொள் இடையாறே - எம்பெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்;
4)
கந்த மலர்சூடும் கற்றைச் சடையின்மேல்
இந்து தனைவைத்த ஈசன் இளவேற்றன்
அந்தம் முதலில்லான் அடியார் மிடிதீர்க்கும்
எந்தை உறைகோயில் எழில்கொள் இடையாறே.
கந்தமலர் சூடும் கற்றைச்-சடையின்மேல் - வாசமலர்களைச் சூடிய கற்றைச்சடைமீது;
இந்துதனை வைத்த ஈசன் இள-ஏற்றன் - சந்திரனை வைத்த ஈசன், இளைய எருதை வாகனமாக உடையவன்; (இந்து - சந்திரன்);
அந்தம் முதல் இல்லான் - முதலும் முடிவும் இல்லாதவன்;
அடியார் மிடி தீர்க்கும் எந்தை உறை-கோயில் எழில்கொள் இடையாறே - பக்தர்களது துன்பத்தைத் தீர்க்கும் சிவபெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்;
5)
ஆய்ந்த மலரைந்தை அம்பா உடையானைக்
காய்ந்த நுதல்நாட்டம் காட்டும் இறைகங்கை
பாய்ந்த சடையண்ணல் பலிதேர்ந் துழல்கின்ற
ஏந்தல் உறைகோயில் எழில்கொள் இடையாறே.
ஆய்ந்த மலர் ஐந்தை அம்பா உடையானைக் காய்ந்த நுதல்-நாட்டம் காட்டும் இறை - சிறந்த பூக்கள் ஐந்தை அம்பாக உடைய மன்மதனைச் சுட்டெரித்த நெற்றிக்கண் காட்டும் இறைவன்; (அம்பா - அம்பாக; கடைக்குறை விகாரம்); (நுதல் - நெற்றி); (நாட்டம் - கண்);
கங்கை பாய்ந்த சடை அண்ணல் - கங்கையைச் சடையில் தரித்தவன்;
பலி தேர்ந்து உழல்கின்ற ஏந்தல் உறை-கோயில் எழில்கொள் இடையாறே - பிச்சையேற்றுத் திரிகின்ற தலைவனான சிவபெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்; (பலி - பிச்சை);
6)
கூற்றைக் குமைகாலன் கூனற் பிறைசூடும்
ஆற்றுச் சடையண்ணல் அங்கை மழுவாளன்
போற்றித் தொழுதார்தம் பொல்லா வினைதீர்க்கும்
ஏற்றன் உறைகோயில் எழில்கொள் இடையாறே.
கூற்றைக் குமை காலன் - நமனை அழித்த காலகாலன்; (குமைத்தல் - அழித்தல்);
கூனல்-பிறை சூடும் ஆற்றுச்-சடை அண்ணல் - வளைந்த பிறையைக் கங்கை பாயும் சடையின்மேல் சூடிய தலைவன்; (கூனல் - வளைவு);
அங்கை மழுவாளன் - கையில் மழுவை ஏந்தியவன்;
போற்றித் தொழுதார்தம் பொல்லா-வினை தீர்க்கும் - போற்றி வணங்கும் அன்பர்களது தீவினைகளைத் தீர்க்கின்ற;
ஏற்றன் உறை-கோயில் எழில்கொள் இடையாறே - இடபவாகனனான சிவபெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்;
7)
நெய்தேன் தயிராடும் நிமலன் மணிபோல
மைதான் திகழ்கண்டன் மலரோன் சிரமொன்றைக்
கொய்தான் மலைவில்லாக் கொண்டு புரமூன்றை
எய்தான் உறைகோயில் எழில்கொள் இடையாறே.
நெய் தேன் தயிர் ஆடும் நிமலன் - நெய், தேன், தயிர் இவற்றால் அபிஷேகம் செய்யப்பெறும் தூயவன்;
மணி போல மைதான் திகழ் கண்டன் - ஆலகாலம் ஒரு மணி போலக் கண்டத்தில் திகழ்கின்றவன்;
மலரோன் சிரம் ஒன்றைக் கொய்தான் - பிரமனது தலைகளில் ஒன்றைக் கிள்ளியவன்;
மலை வில்லாக் கொண்டு புரமூன்றை எய்தான் உறை-கோயில் எழில்கொள் இடையாறே - மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எய்த சிவபெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்; (வில்லா - வில்லாக);
8)
தொட்டு மலைபேர்த்த துட்டன் அழவூன்று(ம்)
நட்டன் நரையேற்றன் நல்ல இசைகேட்டு
மட்டில் வரமீந்த வள்ளல் மலைமங்கை
இட்டன் உறைகோயில் எழில்கொள் இடையாறே.
தொட்டு மலைபேர்த்த துட்டன் அழ ஊன்று(ம்) நட்டன் - கைகளால் பற்றிக் கயிலைமலையைப் பெயர்த்த துஷ்டனான இராவணன் வலியால் துடித்து அழும்படி பாதவிரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கிய கூத்தன்; (நட்டன் - கூத்தன்);
நரையேற்றன் - வெண்மையான எருதை வாகனமாக உடையவன்; (நரை - வெண்மை);
நல்ல இசை கேட்டு மட்டு-இல் வரம் ஈந்த வள்ளல் - பின் அவன் பாடிய இனிய கீதத்தைக் கேட்டு அவனுக்கு அளவற்ற வரம் தந்த வள்ளல்; (மட்டு இல் - அளவு இல்லாத);
மலைமங்கை இட்டன் உறை-கோயில் எழில்கொள் இடையாறே - மலைமகளுக்கு நேயனான சிவபெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்; (இட்டன் - இஷ்டன்);
9)
பிரமன் அரிநேடிப் பிறகு துதிசெய்ய
வரையில் எரியென்ற வடிவில் வருநாதன்
பரவை விடமுண்ணி பல்லில் தலையேந்தும்
இரவன் உறைகோயில் எழில்கொள் இடையாறே.
பிரமன் அரி நேடிப் பிறகு துதிசெய்ய வரை-இல் எரி என்ற வடிவில் வரும் நாதன் - பிரமனும் திருமாலும் தேடிப் பின்னர்ப் போற்றி வணங்கும்படி எல்லையில்லாத ஜோதி என்ற உருவில் வந்த தலைவன்; (நேடுதல் - தேடுதல்); (வரை - எல்லை); (எரி - தீ);
பரவை-விடம் உண்ணி - கடல்விடத்தை உண்டவன்; (பரவை - கடல்);
பல் இல் தலை ஏந்தும் இரவன் உறை-கோயில் எழில்கொள் இடையாறே - பற்கள் உதிர்ந்த மண்டையோட்டைக் கையில் ஏந்தி யாசிக்கின்ற சிவபெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்; (இரவன் - பிச்சை இரப்பவன்); (அப்பர் தேவாரம் - 4.41.3 - "பல்லில்வெண்தலை கையேந்திப் பல்லிலம் திரியும் செல்வர்"); (சம்பந்தர் தேவாரம் - 1.51.4 - "பல்லிலோடு கையிலேந்தி"); (அப்பர் தேவாரம் - 5.34.2 - "இரவனை இடுவெண்தலை ஏந்தியை");
10)
ஏசு மொழிபேசும் எத்தர் தமைநீங்கும்
வாச மலர்தூவி வாழ்த்தும் அடியார்க்கு
நேசன் சுடுநீற்றன் நித்தன் நடமாடும்
ஈசன் உறைகோயில் எழில்கொள் இடையாறே.
ஏசு-மொழி பேசும் எத்தர்தமை நீங்கும் - பழித்துப் பேசும் வஞ்சகர்களை நீங்குங்கள்; (எத்தர் - ஏமாற்றுபவர்);
வாசமலர் தூவி வாழ்த்தும் அடியார்க்கு நேசன் - மணம் கமழும் மலர்களைத் தூவி வணங்கும் பக்தர்களுக்கு அன்பு உடையவன்;
சுடுநீற்றன், நித்தன் - வெந்த வெண்ணீற்றைப் பூசியவன், அழிவற்றவன்;
நடம் ஆடும் ஈசன் உறை-கோயில் எழில்கொள் இடையாறே - கூத்தாடும் ஈசனான சிவபெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்;
11)
கல்லால் தொழுதாலும் கடியார் மலராக்கொள்
நல்லான் தமிழ்பாடி நம்பி அடைவார்கட்கு
எல்லாம் அருள்கின்ற எந்தை கரவென்றும்
இல்லான் உறைகோயில் எழில்கொள் இடையாறே.
கல்லால் தொழுதாலும் கடி ஆர் மலராக்கொள் நல்லான் - கல்லை எறிந்து வழிபட்டாலும் வாசமலராக ஏற்று அருளும் நல்லவன்; (* சாக்கியநாயனார் வரலாற்றைக் காண்க);
தமிழ் பாடி நம்பி அடைவார்கட்கெல்லாம் அருள்கின்ற எந்தை - தேவாரம் திருவாசகம் முதலிய பாமாலைகளைப் பாடி விரும்பி அன்போடு சரணடைந்தவர்களுக்கெல்லாம் அருள்செய்யும் எம் தந்தை; (நம்பி அடைவார்கட் கெல்லாம் அருள்கின்ற = 1. அடி அடைந்தவர்கள் எத்தகையவரே ஆயினும் அருள்கின்ற; 2. அடி அடைந்தவர்களுக்கு அவர்கள் விரும்பிய எல்லா வரங்களையும் அருள்கின்ற);
கரவு என்றும் இல்லான் உறை-கோயில் எழில்கொள் இடையாறே - வஞ்சமின்றி வழங்குகின்ற சிவபெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்; (கரவு - ஒளித்தல்; வஞ்சம்);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment