Monday, July 28, 2025

P.428 - வக்கரை (திருவக்கரை) - பொடியாடிய பெருமானருள்

2018-04-04

P.428 - வக்கரை (திருவக்கரை)

---------------------------------

(கலிவிருத்தம் - மாங்கனி மாங்கனி மாங்கனி மா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை உமையாளொடும்");

(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீ");


முற்குறிப்புகள் - * வடிவாம்பிகை - திருவக்கரையில் இறைவி திருநாமம்.

* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்.


1)

பொடியாடிய பெருமானருள் புரியாயெனும் உம்பர்

மிடிநீங்கிட மதில்மூன்றெரி மேருச்சிலை யானை

வடிவாம்பிகை மணவாளனை மணிவக்கரை யானைக்

கடிமாமலர் தூவித்தொழக் கழலும்வினை தானே.


"பொடிடிய பெருமான்; ருள் புரியாய்" னும் உம்பர் மிடி நீங்கிட மதில்மூன்று எரி- மேருச்சிலையானை - "திருநீற்றைப் பூசிய பெருமானே! அருள்க" என்ற தேவர்களது துன்பம் தீர, முப்புரங்களை எரித்த மேருவில் ஏந்தியவனை; (பொடி - நீறு); (உம்பர் - தேவர்); (மிடி - துன்பம்); (சிலை - வில்);

வடிவாம்பிகை மணவாளனை - வடிவாம்பிகை என்ற திருநாமம் உடைய உமைக்குக் கணவனை;

மணி வக்கரையானை - அழகிய திருவக்கரையில் உறைபவனை; (மணி - அழகு); (அப்பர் தேவாரம் - 5.52.4 - "மைந்தர்போல் மணி நாகேச்சரவரே");

கடி-மாமலர் தூவித் தொழக் கழலும் வினைதானே - அழகிய வாசமலர்கள் தூவி வழிபட்டால் வினை நீங்கும்;


2)

படமாரர விளவெண்பிறை பயிலுஞ்சடை யானை

அடலேறமர் பெருமான்றனை அணிவக்கரை யானை

மடமானன வடிவாம்பிகை மணவாளனைக் கானில்

நடமாடியை நம்பித்தொழ நலியாவினை தானே.


படம் ஆர் அரவு இளவெண்பிறை பயிலும் சடையானை - படம் உடைய நாகமும் இள-வெண்-திங்களும் இருக்கும் சடையானை;

அடல்-ஏறு அமர் பெருமான்-தனை - வலிய எருதை வாகனமாக விரும்பிய பெருமானை; (அடல் - வலிமை); (அமர்தல் - விரும்புதல்);

அணி வக்கரையானை - அழகிய திருவக்கரையில் உறைபவனை; (அணி - அழகு);

மடமான் அன வடிவாம்பிகை மணவாளனைக் - இளமான் போன்ற வடிவாம்பிகை கணவனை; (அன - போன்ற);

கானில் நடமாடியை - சுடுகாட்டில் கூத்தாடுபவனை;

நம்பித் தொழ நலியா வினைதானே - விரும்பி வழிபட்டால் வினைகள் துன்புறுத்தமாட்டா; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கைவைத்தல்); (நலித்தல் - துன்புறுத்துதல்);


3)

அண்டாமணி கண்டாபுலி அதளாய்அரு நஞ்சை

உண்டாயெனும் மார்க்கண்டரின் உயிர்காத்தபி ரானை

வண்டார்குழல் வடிவாம்பிகை மணவாளனை மல்லார்

எண்டோளனைத் தொழுவார்தமை எய்தாவினை தானே.


"அண்டா மணிகண்டா புலி-அதளாய், - "அண்டனே, நீலகண்டனே, புலித்தோலனே";

அரு-நஞ்சை உண்டாய்" எனும் மார்க்கண்டரின் உயிர் காத்த பிரானை - "கொடிய நஞ்சை உண்டவனே" என்று போற்றிய மார்க்கண்டேயரது உயிரக் காத்த தலைவனை;

வண்டு ஆர் குழல் வடிவாம்பிகை மணவாளனை - வண்டுகள் பொருந்தி ஒலிக்கும் கூந்தலை உடைய வடிவாம்பிகை கணவனை; (ஆர்தல் - பொருந்துதல்; ஆர்த்தல் - ஒலித்தல்);

மல் ஆர் எண் தோளனைத் தொழுவார்தமை எய்தா வினைதானே - வலிமை மிக்க எட்டுப் புஜங்களை உடைய சிவபெருமானை வழிபடுபவர்களை வினைகள் அடையா; (மல் - வலிமை);


4)

பிணமாரிடு கானிற்பெரு நடமாடிடு பெற்றிக்

கணநாதனை மழுவாளனைக் கண்ணார்நுத லானை

மணமார்குழல் வடிவாம்பிகை மணவாளனைச் செந்தீ

வணவாகனை வாழ்த்தித்தொழ வல்லார்வினை விடுமே.


பிணம் ஆர் இடுகானில் பெருநடம் ஆடிடு பெற்றிக் கணநாதனை - பிணங்கள் நிறைந்த சுடுகாட்டில் திருநடம் செய்பவனைக், கணங்களுக்குத் தலைவனை; (பெற்றி - பெருமை; தன்மை);

மழுவாளனைக் - மழுவை ஏந்தியவனை;

கண் ஆர் நுதலானை - நெற்றிக்கண்ணனை;

மணம் ஆர் குழல் வடிவாம்பிகை மணவாளனைச் - வாசக்குழலியான வடிவாம்பிகை கணவனை;

செந்தீ-வண வாகனை வாழ்த்தித் தொழ வல்லார் வினை விடுமே - செந்தீப் போல் செம்மேனியனை வாழ்த்தி வழிபடுபவர்களது வினைகள் நீங்கும்; (தீவணவாகனை = 1. தீ வண்ண ஆகனை; 2. தீ வண்ண வாகனை); (ஆகன் - திருமேனியன்); (வாகன் - அழகுள்ளவன்); (ஆகம் - மேனி; மார்பு); (தொழவல்லார் வினை விடும் = 1. தொழுபவர்களது வினை நீங்கும்; 2. "தொழ வல் ஆர் வினை விடும்" - தொழுதால், வலிமை மிக்க வினைகள் நீங்கும்); (சம்பந்தர் தேவாரம் - 3.115.2 - "கோதில் நீறது பூசிடும் ஆகனே");


5)

முளைமாமதி புனையீசனை முனிவர்க்குயர் இன்பம்

விளைசேவடி கொடுகூற்றினை விழுமாறுதை தேவை

வளையாரிறை வடிவாம்பிகை மணவாளனை அலகில்

விளையாடியை வழிபட்டவர் வினையாயின விடுமே.


முளை-மா-மதி புனை ஈசனை - அழகிய பிறையை அணிந்த ஈசனை;

முனிவர்க்கு உயர் இன்பம் விளை சேவடிகொடு கூற்றினை விழுமாறு உதை தேவை - முனிவர்களுக்கு ( / மார்க்கண்டேயருக்குப்) பேரின்பம் தரும் சேவடியால் காலனை உதைத்த கடவுளை;

வளை ஆர் இறை வடிவாம்பிகை மணவாளனை - முன்கையில் வளையல் அணிந்த வடிவாம்பிகை கணவனை; (இறை - முன்கை);

அலகு இல் விளையாடியை வழிபட்டவர் வினை ஆயின விடுமே - எல்லையற்ற திருவிளையாடல் புரிபவனை வழிபடுபவர்களது வினைகள் நீங்கும்;


6)

வானோர்சொல வந்தம்பெறி மதியில்மதன் நீறு

தானாகிடப் பார்த்தான்றனைச் சடைமேற்பிறை யானை

மானேர்விழி வடிவாம்பிகை மணவாளனைக் கையில்

ஊனார்தலை ஒன்றேந்தியை ஓதக்கெடும் வினையே.


வானோர் சொல வந்து அம்பு எறி மதி இல் மதன் நீறுதான் ஆகிடப் பார்த்தான்தனைச் - தேவர்களது பேச்சைக் கேட்டு அதன்படி ஈசன்மேல் கணை எய்த அறிவற்ற மன்மதனைச் சாம்பல் ஆகுமாறு நெற்றிக்கண்ணால் நோக்கியவனை;

சடைமேல் பிறையானை - சந்திரமவுலியை; (* சந்திரமௌலீஸ்வரர் - இத்தலத்து இறைவன் திருநாமம்);

மான் ஏர் விழி வடிவாம்பிகை மணவாளனைக் - மான் போன்ற நோக்கு உடைய வடிவாம்பிகை கணவனை; (ஏர்தல் - ஒத்தல்);

கையில் ஊன் ஆர் தலை ஒன்று ஏந்தியை ஓதக் கெடும் வினையே - கையில் பிரமனது முடைநாறும் மண்டையோட்டை ஏந்தியவனைப் போற்றி வழிபட்டால் வினைகள் அழியும்;


7)

இன்பால்தயிர் நெய்யாடியை இளவெள்விடை யானைப்

பொன்போலொளிர் சடையான்தனைப் பொழில்வக்கரை யானை

வம்பார்குழல் வடிவாம்பிகை மணவாளனை நாளும்

நம்பாவென அன்பால்தொழ நலியாவினை தானே.


இன்-பால் தயிர் நெய் ஆடியை - இனிய பால், தயிர், நெய் இவற்றால் அபிஷேகம் செய்யப்பெறுபவனை;

இள-வெள்-விடையானைப் - இளைய வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவனை;

பொன் போல் ஒளிர் சடையான்தனைப் - பொன் போலத் திகழும் சடையை உடையவனை;

பொழில் வக்கரையானை - சோலை சூழ்ந்த திருவக்கரையில் உறைபவனை;

வம்பு ஆர் குழல் வடிவாம்பிகை மணவாளனை - வாசக்குழலியான வடிவாம்பிகை கணவனை; (வம்பு - வாசனை);

நாளும் நம்பா என அன்பால் தொழ நலியா வினைதானே - தினமும் பக்தியோடு, "நம்பனே" என்று அவன் திருநாமங்களைச் சொல்லி வழிபடுவாரை வினைகள் வருத்தமாட்டா; (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத் தக்கவன்);


8)

முன(ம்)மாமலை பேர்த்தானவன் முடிபத்திறக் கமலம்

அனதாள்விரல் இட்டான்றனை அணிவக்கரை யானை

வனமாமுலை வடிவாம்பிகை மணவாளனைப் போற்றித்

தின(ம்)மாமலர் இடுவார்தமைச் சேராவினை தானே.


முனம் மாமலை பேர்த்தான் அவன் முடி பத்து இறக் கமலம் அன தாள்விரல் இட்டான்தனை - முன்பு கயிலையைப் பெயர்த்த இராவணனது பத்துத்-தலைகளும் நசுங்கும்படி தாமரை போன்ற பாதத்தின் விரலை ஊன்றியவனை;

அணி வக்கரையானை - அழகிய திருவக்கரையில் உறைபவனை;

வன-மா-முலை வடிவாம்பிகை மணவாளனைப் போற்றித் - அழகிய பெரிய தனங்களை உடைய வடிவாம்பிகை கணவனைப் போற்றி; (வனம் - அழகு); (மா - அழகு; பெருமை);

தினம் மாமலர் இடுவார்தமைச் சேரா வினைதானே - தினமும் சிறந்த பூக்களை இட்டு வணங்கும் பக்தர்களை வினைகள் சேரமாட்டா;


9)

ஏரார்மலர் மேலானரி இவர்நேடியு(ம்) மேல்கீழ்

தேராவெரி ஆனான்றனைத் திருவக்கரை யானை

வாரார்முலை வடிவாம்பிகை மணவாளனைக் கண்ணில்

நீரார்தர நினைவார்வினை நில்லாதறும் உடனே.


ஏர் ஆர் மலர் மேலான் அரி இவர் நேடியும் மேல்கீழ் தேரா எரி ஆனான்தனைத் - அழகிய தாமரைமேல் உறையும் பிரமனும் திருமாலும் அடிமுடியைத் தேடியும் அறியாத சோதி ஆனவனை; (நேடுதல் - தேடுதல்); (தேர்தல் - அறிதல்);

திருவக்கரையானை - திருவக்கரையில் உறைபவனை;

வார் ஆர் முலை வடிவாம்பிகை மணவாளனைக் - முலைக்கச்சு அணிந்த வடிவாம்பிகை கணவனை;

கண்ணில் நீர் ஆர்தர நினைவார் வினை நில்லாது அறும் உடனே - கண்ணிர் மல்க நினைந்து வணங்குபவர்களது வினைகளெல்லாம் சீக்கிரம் அழியும்; (ஆர்தல் - நிறைதல்; தருதல் - ஒரு துணைவினை);


10)

நெஞ்சிற்கிறி மிக்கார்திரு நீற்றைப்புனைந் துய்யார்

வெஞ்சொற்களை விடுமின்பொழில் விரிவக்கரை யானை

வஞ்சிக்கொடி வடிவாம்பிகை மணவாளனைப் போற்றிச்

செஞ்சொற்றொடை இடுவார்தமைத் தீண்டாவினை தானே.


நெஞ்சில் கிறி மிக்கார் திருநீற்றைப் புனைந்து உய்யார் - நெஞ்சில் வஞ்சம் மிகுந்தவர் திருநீற்றை அணிந்து உய்யமாட்டார்; (கிறி - பொய்);

வெஞ்சொற்களை விடுமின் - அத்தகையோர் சொல்லும் கொடிய சொற்களைப் பொருளாகக் கொள்ளாமல் நீங்குங்கள்; (மின் - முன்னிலை ஏவற்பன்மை விகுதி);

பொழில் விரி-வக்கரையானை - சோலை பரந்த திருவக்கரையில் உறைபவனை;

வஞ்சிக்கொடி வடிவாம்பிகை மணவாளனைப் போற்றிச் - வஞ்சிக்கொடி போன்ற வடிவாம்பிகை கணவனைப் போற்றி;

செஞ்சொல்-தொடை இடுவார்தமைத் தீண்டா வினைதானே - பாமாலைகள் பாடி வணங்குபவர்களை வினைகள் தீண்டமாட்டா;


11)

இலையார்நுனை சூலப்படை ஏந்தும்பெரு மானைச்

சிலையாவொரு வரையேந்தியைத் திருவக்கரை யானை

மலையான்மகள் வடிவாம்பிகை மணவாளனைக் கங்கை

அலையார்சடை உடையான்றனை அடைவார்வினை அறுமே.


இலை ஆர் நுனை சூலப்படை ஏந்தும் பெருமானைச் - மூன்று இலை போன்ற நுனிகளை உடைய சூலாயுதத்தை ஏந்திய பெருமானை;

சிலையா ஒரு வரை ஏந்தியைத் - வில்லாக ஒரு மலையை ஏந்தியவனை; (சிலை - வில்; சிலையா - சிலையாக); (வரை - மலை);

திருவக்கரையானை - திருவக்கரையில் உறைபவனை;

மலையான்-மகள் வடிவாம்பிகை மணவாளனைக் - மலைமகளான வடிவாம்பிகை கணவனை;

கங்கை அலை ஆர் சடை உடையான்தனை அடைவார் வினை அறுமே - கங்கையைச் சடையில் உடையவனைச் சரணடைந்த அடியவர்களது வினைகள் அழியும்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment