2018-03-31
P.427 - வக்கரை (திருவக்கரை)
---------------------------------
(அறுசீர் விருத்தம் - "விளம் விளம் விளம் விளம் மா தேமா" - தானனா தானனா தானனா தானனா தான தானா)
(சம்பந்தர் தேவாரம் - 2.79.1 - "பவனமாய்ச் சோடையாய்")
(சம்பந்தர் தேவாரம் - 3.92.1 - "மருந்தவை மந்திர மறுமைநன் னெறியவை")
முற்குறிப்புகள் - * சந்திரமௌலீஸ்வரர் - இத்தலத்து இறைவன் திருநாமம்;
* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்;
1)
வந்தன நரைதிரை வந்தன பிணிகளும் வலிமை குன்றிச்
சந்ததம் கவலையில் நொந்தனை; தீர்வழி சிந்தை செய்யாய்;
முந்தெயில் மூன்றெரி மூட்டிய மொய்ம்பனை மும்மு கத்து
மைந்தனை வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.
வந்தன நரை திரை - மயிர் வெளுத்தலும் தோல் சுருங்குதலும் வந்தடைந்தன; (திரை - தோற்சுருக்கம்);
வந்தன பிணிகளும் - பல நோய்களும் வந்தடைந்தன;
வலிமை குன்றிச் சந்ததம் கவலையில் நொந்தனை - உடல்-வலிமை அழிந்து, நீ ஓயாமல் கவலையில் வாடுகின்றாய்;
தீர் வழி சிந்தை செய்யாய் - கவலை தீரும் வழியை எண்ணுவாயாக;
முந்து எயில் மூன்று எரி மூட்டிய மொய்ம்பனை - முன்பு முப்புரங்களை எரித்த வீரனை; (மொய்ம்பன் - வீரன்; மொய்ம்பு - வலிமை);
மும்முகத்து மைந்தனை - மூன்று முகங்கள் காட்டும் இளைஞனை; (* திருவக்கரையில் சிவலிங்கத்தில் மூன்று முகங்கள் காணலாம்);
வக்கரைச் சந்திரமவுலியை வாழ்த்து நெஞ்சே - திருவக்கரையில் உறைகின்ற "சந்திரமவுலி" என்ற திருநாமம் உடைய ஈசனை, நெஞ்சே, நீ வாழ்த்துவாயாக; (மவுலி - கிரீடம்; சடைமுடி);
2)
நண்புடை யார்பலர் நானிலம் விட்டனர் நம்பு லன்கள்
பண்புகள் குன்றியோர் பாடையே றாமுனம் பற்ற தாகும்
வெண்பொடிப் பூசியை விண்ணவர் நாதனை மேகம் ஆரும்
வண்பொழில் வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.
நண்புடையார் பலர் நானிலம் விட்டனர் - நம்மேல் அன்பு உடையவர்கள் பலரும் (பெற்றோர், நண்பர்கள், சுற்றத்தார்) இவ்வுலகை நீங்கினார்கள்; (நண்பு - அன்பு; சினேகம்; உறவு); (நானிலம் - பூமி);
நம் புலன்கள் பண்புகள் குன்றி ஓர் பாடை ஏறாமுனம் - (முதுமை வந்தடைய) நம் புலன்களும் தன்மை குன்றி, (நமன் வரவால்) ஒரு பாடையின்மீது ஏறும் காலம் வந்தடைவதன் முன்பே;
பற்றது ஆகும் வெண்பொடிப் பூசியை - நம்மைக் காக்கும் துணையான திருநீற்றைப் பூசிய ஈசனை; (பற்று - பற்றுக்கோடு - ஆதாரம்; தஞ்சம்); (சம்பந்தர் தேவாரம் - 3.27.1 - "வெண்பொடிப் பூசியார்");
விண்ணவர்-நாதனை - தேவர்பெருமானை;
மேகம் ஆரும் வண்பொழில் வக்கரைச் சந்திரமவுலியை வாழ்த்து நெஞ்சே - மேகம் பொருந்துமாறு உயர்ந்த வளமிக்க சோலை சூழ்ந்த திருவக்கரையில் உறைகின்ற "சந்திரமவுலி" என்ற திருநாமம் உடைய ஈசனை, நெஞ்சே, நீ வாழ்த்துவாயாக;
3)
பார்மிசை வந்தபின் நாள்பல சென்றன பகட தேறிக்
கூர்மலி வேலொடு கூற்றடை யாமுனம் குஞ்சி மேலே
ஏர்மலி கொன்றையைச் சூடிய ஏந்தலை ஈடி லானை
வார்பொழில் வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.
பார்மிசை வந்த பின் நாள் பல சென்றன - பூமியில் இப்பிறப்பை அடைந்த பிறகு பல ஆண்டுகள் சென்றுவிட்டன;
பகடுஅது ஏறிக் கூர் மலி வேலொடு கூற்று அடையாமுனம் - எருமைக்கடாவின்மேல் ஏறிக், கூர்மையான சூலத்தை ஏந்தியபடி காலன் நம்மை வந்து அடைவதன் முன்னமே; (பகடு - எருமைக்கடா; அது - பகுதிப்பொருள் விகுதி);
குஞ்சிமேலே ஏர் மலி கொன்றையைச் சூடிய ஏந்தலை - திருமுடிமேல் அழகிய கொன்றையைச் சூடிய தலைவனை; (குஞ்சி - தலை); (ஏர் - அழகு); (மலிதல் - மிகுதல்);
ஈடு இலானை - ஒப்பற்றவனை;
வார்-பொழில் வக்கரைச் சந்திரமவுலியை வாழ்த்து நெஞ்சே - நீண்ட சோலைகள் சோலை சூழ்ந்த திருவக்கரையில் உறைகின்ற "சந்திரமவுலி" என்ற திருநாமம் உடைய ஈசனை, நெஞ்சே, நீ வாழ்த்துவாயாக; (வார்தல் - நீள்தல்);
4)
குயிலன குஞ்சியும் கொக்கென ஆனது கூர்மை மிக்க
அயிலுடைத் தூதுவர் ஆவிகொல் லாமுனம் அண்டர் கோனை
மயிலன சாயலாள் மலைமகள் பங்கனை மழுவி னானை
வயலணி வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.
குயில் அன குஞ்சியும் கொக்கு என ஆனது - குயில் போலக் கறுத்திருந்த தலைமயிரும் கொக்குப்போல் வெண்ணிறம் அடைந்தது; (அன - அன்ன - போல);
கூர்மை மிக்க அயிலுடைத் தூதுவர் ஆவி கொல்லா முனம் - கூரிய வேலினை ஏந்தும் எமதூதர்கள் வந்து உயிரைக் கொல்வதன் முன்பே;
அண்டர்-கோனை - தேவர்-தலைவனை;
மயில் அன சாயலாள் மலைமகள் பங்கனை - மயில் போன்ற சாயல் உடைய உமையை ஒரு பங்கில் உடையவனை;
மழுவினானை - மழுவை ஏந்தியவனை;
வயல் அணி வக்கரைச் சந்திரமவுலியை வாழ்த்து நெஞ்சே - வயல்கள் சூழ்ந்த திருவக்கரையில் உறைகின்ற "சந்திரமவுலி" என்ற திருநாமம் உடைய ஈசனை, நெஞ்சே, நீ வாழ்த்துவாயாக;
5)
உர(ம்)மலி தோள்களும் உறுதசை வற்றின உதற லோடு
சுர(ம்)மலி நோய்களும் உடலடை யாமுனம் துரிசி லானைச்
சிர(ம்)மலி மாலையைச் சென்னியிற் சூடிய தேவ தேவை
மர(ம்)மலி வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.
உரம் மலி தோள்களும் உறு தசை வற்றின - வலிமை மிக்க புஜங்களும் தசைகள் வற்றின;
உதறலோடு சுரம் மலி நோய்களும் உடல் அடையா முனம் - நடுக்கத்தோடு கூடிய ஜுரம் மிக்க நோய்கள் உடலை அடைவதன் முன்னமே;
துரிசு இலானைச் - குற்றமற்றவனை;
சிரம் மலி மாலையைச் சென்னியிற் சூடிய தேவதேவை - மண்டையோடுகளால் ஆன மாலையைத் தலையில் அணியும் தேவதேவனை;
மரம் மலி வக்கரைச் சந்திரமவுலியை வாழ்த்து நெஞ்சே - மரங்கள் மிக்க (சோலை சூழ்ந்த) திருவக்கரையில் உறைகின்ற "சந்திரமவுலி" என்ற திருநாமம் உடைய ஈசனை, நெஞ்சே, நீ வாழ்த்துவாயாக;
6)
மளமளென் றோடின மண்மிசை நாள்பல வயதும் ஏறித்
தளர்வடை யாமுனம் தண்புனல் தாங்கிய சடையி னானை
இளவிடை ஏறியை இருள்திகழ் கண்டனை ஈறி லானை
வளவயல் வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.
மளமளென்று ஓடின மண்மிசை நாள் பல - இம்மண்ணுலகில் பல நாள்கள் விரைந்து ஓடிவிட்டன;
வயதும் ஏறித் தளர்வு அடையா முனம் - வயதாகித் தளர்ச்சி அடைவதன் முன்னமே;
தண்-புனல் தாங்கிய சடையினானை - குளிர்ந்த கங்கையைச் சடையில் தரித்தவனை;
இளவிடை ஏறியை - இளமை திகழும் இடபத்தை வாகனமாக உடையவனை;
இருள் திகழ் கண்டனை - நீலகண்டனை;
ஈறு இலானை - அந்தம் இல்லாதவனை (= என்றும் உள்ளவனை); (ஈறு - அந்தம்);
வளவயல் வக்கரைச் சந்திரமவுலியை வாழ்த்து நெஞ்சே - வளம் மிக்க வயல்கள் சூழ்ந்த திருவக்கரையில் உறைகின்ற "சந்திரமவுலி" என்ற திருநாமம் உடைய ஈசனை, நெஞ்சே, நீ வாழ்த்துவாயாக;
7)
புன்புலாற் குடிலெரிப் புக்கழி யாமுனம் புற்ற ராவை
என்பினை ஆரமா ஏற்றருள் ஈசனை எம்பி ரானை
வன்புலித் தோலனை மாமலை வில்லியை மாசி லானை
மன்புகழ் வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.
புன்-புலால் குடில் எரிப் புக்கு அழியா முனம் - மாமிசத்தால் ஆன அற்பமான குடிலான இந்த உடம்பு தீயில் புகுந்து அழிவதன் முன்னம்;
புற்றராவை என்பினை ஆரமா ஏற்றருள் ஈசனை - புற்றில் வாழும் இயல்பை உடைய பாம்பையும் எலும்பையும் மாலையாக அணியும் ஈசனை; (அரா - பாம்பு); (என்பு - எலும்பு); (ஆரமா - ஆரமாக; கடைக்குறை விகாரம்);
எம்பிரானை - எம் தலைவனை;
வன்-புலித் தோலனை - கொடிய புலியின் தோலை ஆடையாக அணிந்தவனை;
மா-மலை வில்லியை - மேருமலையை வில்லாக ஏந்தியவனை;
மாசு இலானை - தூயவனை;
மன் புகழ் வக்கரைச் சந்திரமவுலியை வாழ்த்து நெஞ்சே - நிலைபெற்ற புகழையுடைய திருவக்கரையில் உறைகின்ற "சந்திரமவுலி" என்ற திருநாமம் உடைய ஈசனை, நெஞ்சே, நீ வாழ்த்துவாயாக; (பெரியபுராணம் - இயற்பகை நாயனார் புராணம் - 12.3.36 - "மன்புகழ் இளைசை மாறன் வளத்தினை வழுத்தலுற்றேன்");
8)
திண்பொலி தேகமும் தேய்ந்துகோல் பற்றியே சென்றி டாமுன்
வெண்பொடிப் பூசியைத் தசமுகன் தனையடர் விரலி னானைக்
கண்பொலி நெற்றியாற் காமனை நீறெழக் காய்ந்த தேவை
மண்புகழ் வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.
திண் பொலி தேகமும் தேய்ந்து கோல் பற்றியே சென்றிடாமுன் - வலிமை மிக்க இவ்வுடல் தேய்ந்து கைக்கோல் ஊன்றிச் செல்லும் காலம் வந்தடைவதன் முன்பே;
வெண்பொடிப் பூசியைத் - வெண்ணீற்றைப் பூசியவனை;
தசமுகன்தனை அடர் விரலினானைக் - இராவணனைத் திருப்பாத-விரலால் நசுக்கியவனை; (அடர்த்தல் - நசுக்குதல்);
கண் பொலி நெற்றியால் காமனை நீறு எழக் காய்ந்த தேவை - மன்மதனைச் சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணால் எரித்த தேவனை;
மண் புகழ் வக்கரைச் சந்திரமவுலியை வாழ்த்து நெஞ்சே - உலகு புகழும் திருவக்கரையில் உறைகின்ற "சந்திரமவுலி" என்ற திருநாமம் உடைய ஈசனை, நெஞ்சே, நீ வாழ்த்துவாயாக;
9)
திரமிலா வாழ்க்கையில் தினமிடர் உற்றனை சிந்தி நன்றே
பிரமனு(ம்) மாயனு(ம்) நேடிய சோதியைப் பெரிய மூன்று
புரமெரி செய்யவோர் பொன்மலைச் சிலைதரி பொற்பி னானை
வரமருள் வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.
திரம் இலா வாழ்க்கையில் தினம் இடர் உற்றனை - நிலையற்ற இவ்வாழ்க்கையில் தினமும் துன்பங்களை அடைந்தாய்; (திரம் - ஸ்திரம்);
சிந்தி நன்றே - நன்கு எண்ணிப்பார்; நல்லதையே சிந்திப்பாயாக;
பிரமனும் மாயனும் நேடிய சோதியைப் - பிரமனும் திருமாலும் தேடிய தீப்பிழம்பை; (நேடுதல் - தேடுதல்);
பெரிய மூன்று புரம் எரிசெய்ய ஓர் பொன்மலைச் சிலை தரி பொற்பினானை - பெரிய முப்புரங்களை எரிக்க மேருமலையை வில்லாக ஏந்திய பெருமை உடையவனை; (சிலை - வில்); (பொற்பு - அழகு; தன்மை);
வரம் அருள் வக்கரைச் சந்திரமவுலியை வாழ்த்து நெஞ்சே - வரங்கள் அருள்பவனான திருவக்கரையில் உறைகின்ற "சந்திரமவுலி" என்ற திருநாமம் உடைய ஈசனை, நெஞ்சே, நீ வாழ்த்துவாயாக;
10)
நிலைப்பிலா உடலிது தீப்புகா முனம்நினை நீடு வாழ்வாய்
பலப்பல பொய்யுரை பதகருக் கருளிலாப் பரனை என்றும்
உலப்பிலா ஒருவனை உமையவள் பங்கனை உம்ப ரானை
மலர்ப்பொழில் வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.
நிலைப்பு இலா உடல் இது தீப் புகா முனம் நினை நீடு வாழ்வாய் - நிலையற்ற இந்த உடல் நெருப்பில் புகுவதன் முன்பே நினைவாயாக; ஓங்கி வாழ்வாய்; (நிலைப்பு - ஸ்திரம்);
பலப்பல பொய் உரை பதகருக்கு அருள் இலாப் பரனை - பற்பல பொய்களைப் பேசும் கீழோருக்கு அருள் இல்லாத பரமனை; (பதகன் - பாவி; கீழோன்);
என்றும் உலப்பு இலா ஒருவனை - என்றும் இறத்தல் இல்லாத ஒப்பற்றவனை; (உலப்பு - அழிவு; சாவு);
உமையவள் பங்கனை - உமையொரு பாகனை;
உம்பரானை - வானவனை;
மலர்ப்பொழில் வக்கரைச் சந்திரமவுலியை வாழ்த்து நெஞ்சே - பூஞ்சோலை சூழ்ந்த திருவக்கரையில் உறைகின்ற "சந்திரமவுலி" என்ற திருநாமம் உடைய ஈசனை, நெஞ்சே, நீ வாழ்த்துவாயாக;
11)
அஞ்சிய வல்வினை ஆயின தீர்ந்துவான் அடைய வேண்டில்
செஞ்சுடர் வண்ணனைச் சேயிழை பங்கனைத் தேவர் உய்ய
நஞ்சினை உண்டிருள் கண்டனை நாணென நாகம் ஆர்த்த
மஞ்சனை வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.
அஞ்சிய வல்வினை ஆயின தீர்ந்து வான் அடைய வேண்டில் - நாம் அஞ்சுகின்ற வலிய வினையெல்லாம் அழிந்து, நாம் சிவலோக வாழ்வு பெறவேண்டும் என்றால்;
செஞ்சுடர் வண்ணனைச் - செந்தீப் போன்ற செம்மேனியனை;
சேயிழை பங்கனைத் - உமைபங்கனை; (சேயிழை - பெண்);
தேவர் உய்ய நஞ்சினை உண்டு இருள் கண்டனை - தேவர்கள் வாழ்வதற்காகத் தான் விஷத்தை உண்டதனால் கண்டம் கறுத்தவனை;
நாண் என நாகம் ஆர்த்த மஞ்சனை - (வில்லில் / அரையில்) நாணாக நாகப்பாம்பைக் கட்டிய வீரனை; (மஞ்சன் - மைந்தன் - வீரன்);
வக்கரைச் சந்திரமவுலியை வாழ்த்து நெஞ்சே - திருவக்கரையில் உறைகின்ற "சந்திரமவுலி" என்ற திருநாமம் உடைய ஈசனை, நெஞ்சே, நீ வாழ்த்துவாயாக;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment