Monday, July 28, 2025

V.051 - தீயா நீடு மான் - மாலைமாற்று

2018-03-15

V.051 - தீயா நீடு மான் - மாலைமாற்று

---------------------------------

(குறள்வெண்செந்துறை) (மாலைமாற்று - Palindrome)


தீயா நீடு மானாவாய் மாதுவாமா

மாவாது மாய்வானா மாடு நீயாதீ.


பதம் பிரித்து:

தீயா நீடு மான் ஆவாய்; மாது வாமா;

மா வாது மாய் வானா; மாடு நீ, ஆதீ.


தீயா நீடு மான் ஆவாய் - ஜோதியாகி உயர்ந்த தலைவன் ஆனவனே; (தீயா - தீயாகி; "தீயா = தீயனே = தீயை ஏந்தியவனே" என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (நீடுதல் - நீளுதல்); (மான் - பெரியோன்);

மாது வாமா - இடப்பக்கம் பெண் ஆனவனே; (வாமம் - இடப்பக்கம்);

"… நீடு மான் ஆவாய் மாது வாமா" - "ஆவாய்" என்பதை இடைநிலைத் தீவகமாகக் கொண்டு, "நீடு மான் ஆவாய், ஆவாய் மாது, வாமா" என்று கொண்டும் பொருள்கொள்ளல் ஆம்; (வாமன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று); (அப்பர் தேவாரம் - 6.22.2 - "பெண்ணானை ஆணானைப் பேடியானை"); (அப்பர் தேவாரம் - 4.37.2 - "நெய்த்தானம் என்னும் செறிபொழிற் கோயில் மேய வாமனை");

மா வாது மாய் வானா - (அரி பிரமன் செய்த) பெரிய வாதினை முற்றுவித்த வானனே; (வானன் - பரமாகாசம் எனப்படும் சிவலோகத்துள்ளான்; ஆகாயத்தை வடிவாகக் கொண்டவன் என்றும் கொள்ளல் ஆம்); (அப்பர் தேவாரம் - 5.4.2 - "வானனைம் மதி சூடிய மைந்தனைத்"); (அப்பர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன் சோதி வானவன்");

மாடு நீ, ஆதீ - ஆதியே, நீயே செல்வம்! (மாடு - செல்வம்); (அப்பர் தேவாரம் - 4.63.3 - "நின் பாதம் அல்லால் மற்றொரு மாடிலேனே"); (திருவாசகம் - அதிசயப் பத்து - 8.26.1 - "வைப்பு மாடென்று");


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment